Published:Updated:

''உலகத்திலேயே கொடுமையானது... இறுதிச் சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாம போறது!" - ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் நீலா

''உலகத்திலேயே கொடுமையானது... இறுதிச் சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாம போறது!" - ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் நீலா
''உலகத்திலேயே கொடுமையானது... இறுதிச் சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாம போறது!" - ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் நீலா

''உலகத்திலேயே கொடுமையானது... இறுதிச் சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாம போறது!" - ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் நீலா

ம்பத்தைந்து வயது நீலாவுக்குப் பல ஆன்மாக்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று சொன்னால், அது மிகையில்லை. சென்னை, தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் 'உத்ரா உதவும் சேவை மையம்’ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் நீலா. ''இன்னும் ஓடிட்டே இருக்கேன். இதே உடல் பலத்தை கடவுள் தொடர்ந்து கொடுத்தால் போதும். ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்யும் பணியைச் செய்துட்டே இருப்பேன்!'' என்கிறவர் வார்த்தைகளில் அவ்வளவு திருப்தி. 

''எனக்குச் சொந்த ஊர், திருச்சி. சின்ன வயசிலேயே உதவும் மனப்பான்மையோடு வளர்க்கப்பட்டேன். திருச்சி ஹோலி கிராஸ் பள்ளிக்கூடத்தில் படிக்கறப்பவே ஒரு டீமை உருவாக்கினேன். முதியோர்கள், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் ஆகியோரைத் தேடிப்போய் உதவிகளைச் செய்வோம். படிப்பு ஒரு பக்கம், சேவை ஒரு பக்கம் என பிஸியாக இருந்தேன். பி.யு.சி., படிக்கும்போதே திருமணம் முடிஞ்சு, சென்னைக்கு வந்துட்டேன். என் கணவர் பிசினஸ்மேன். அவர் துணையோடு பலருக்கும் உதவி செய்ய ஆரம்பிச்சேன். ஆனாலும், என் சேவையில் மனசுக்கு முழு திருப்தி கிடைக்காத மாதிரியே இருந்துச்சு. 

2004-ம் வருஷம் ஒருநாள் ராத்திரி 8 மணி இருக்கும். எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு மூதாட்டி ரோட்டில் படுத்திருந்தாங்க. 'யார் நீங்க என்னாச்சு?’னு கேட்டேன். 'எதையும் கேட்காதே’னு அழுதவங்க, கோபத்தோடு கிளம்பிட்டாங்க. நிதானமா யோசிச்சப்போ, 'நமக்கு யாரும் இல்லையே' என்கிற உணர்வுதான் அவங்களின் கோபத்துக்கும் அழுகைக்கும் காரணம்னு புரிஞ்சது. 'ஒரு மூணாவது மனுஷி நம்மைப் பார்த்து பரிதாபப்படறாளே' எனவும் நினைச்சு இருக்கலாம். இது நடந்த இருபதாவது நாள், அந்தம்மா ரோட்டோரமா இறந்து கிடந்தாங்க. அதைப் பார்த்ததும் மனசெல்லாம் பாரமாயிடுச்சு. 'உலகத்திலேயே மிகவும் துயரமானது, இறுதிச் சடங்கு செய்யவும் நமக்கு ஆள் இல்லையே என்கிற நினைப்புதான். இது மரணத்தைவிடக் கொடூரமானது. நம்ம உறவுக்குச் செய்யும் சடங்குகளைவிட, பேர் தெரியாதவங்களுக்குச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியும் புண்ணியமும் பெருசுதானே. உடனே, ஹாஸ்பிட்டல் வரைக்கும் போய், அந்தம்மாவின் சடலத்தை வாங்கிவந்து ஈமச் சடங்குகளைச் செஞ்சேன். அவங்க ஆத்மா சாந்தி அடையும்ங்கிற நம்பிக்கையோடு அன்னிக்கு ராத்திரி தூங்கப்போனேன். பொதுவாக, இரவில் சரியா தூக்கம் இல்லாத எனக்கு, அன்னிக்கு அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் வந்துச்சு. விடிஞ்சதும், 'நாம செஞ்ச நல்ல காரியம்தான் நிம்மதி கொடுத்து தூங்க வெச்சுருக்கு'னு உணர்ந்தேன். இதைத் தொடரணும்னு முடிவெடுத்தேன்'' என்கிற நீலா, அன்றிலிருந்தே இறந்தவர்களை அடக்கம் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறார். 

''சென்னையில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன், ஹாஸ்பிட்டல், தொண்டு நிறுவனங்கள் எனப் பல இடங்களில் என் நம்பரைக் கொடுத்தேன். 'அனாதைப் பிணம், இறுதிக் காரியங்கள் செய்ய வசதியில்லாத குடும்பம்னு எதுவா இருந்தாலும் தகவல் சொல்லுங்க’னு சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமா அழைப்புகள் வர ஆரம்பிச்சது. அப்படி அழைப்பு வரும்போது, எவ்வளவு வேலையாக இருந்தாலும் நிறுத்திட்டு கிளம்பிடுவேன். உரிய வகையில் சடலங்களை அடக்கம் பண்ண நடவடிக்கை எடுப்பேன். போகும்போதே கற்பூரம், தேங்காய், பழம், துணி, மாலை எல்லாம் வாங்கிட்டுப் போயிடுவேன். என் வீட்டை வாடகைக்கு விட்டதில் கிடைக்கும் தொகையில்தான் இந்தச் செலவுகளைச் சமாளிச்சேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம், என் சேவையைத் தெரிஞ்சுக்கிட்டு வேறு சிலரும் கைகொடுக்க முன்வந்தாங்க. 2005-ம் வருஷம், 'உத்ரா உதவும் சேவை மையம்’ ஆரம்பிச்சு, தொண்டு நிறுவனமா மாத்தினேன். இத்தனை வருஷ அனுபவம், இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்யும் பலத்தைக் கொடுத்திருக்கு'' என்கிறார் நீலா. 

இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு விருதுகள் தேடி வந்துள்ளன. வீட்டைவிட்டு விரட்டப்பட்ட முதியோர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கான கவுன்சலிங்கையும் செய்கிறார் நீலா. இதற்காக, தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று, நம்பிக்கை அளிக்கிறார். ''ஒருமுறை திண்டுக்கல்லில் கவுன்சலிங் முடிச்சதும், மூன்று பெண்கள் மேடைக்கு வந்து, 'இனி வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தற்கொலைக்கு முடிவுக்குப் போகமாட்டோம்'னு எழுதிக்கொடுத்தாங்க. என் கையைப் பிடிச்சு அழுததை மறக்கவே முடியாது. அந்த மனமாற்றம்தான் நான் விரும்பும் பரிசு'' என்கிறார் நீலா

அடுத்த கட்டுரைக்கு