Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

பாரதி தம்பி, படம்: தி.விஜய்

Published:Updated:

''ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால், அங்கு ஒரு கலைஞனும் இருக்க வேண்டும். ஒரு கதை சொல்லி, ஒரு நடிகன், ஒரு கோமாளி, பள்ளிக்கு மிகவும் தேவை. பாடப் புத்தகங்களின் இறுக்கத்தில் இருந்து மாணவர்களின் மனங்களைத் தளர்த்தி இலகுவாக்கும்போதுதான்,  அவர்கள் எளிமையாகக் கற்க முடியும். இத்தகைய கலை வழிக் கல்வி குறித்து அரசு சிந்திக்க வேண்டும்'' என்கிறார் குழந்தைகள் நாடகக் கலைஞரும், புதுச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறை பேராசிரியருமான வேலுசரவணன். இவர் சொல்வது மிகவும் முக்கியமானது. தேர்வுகள் தரும் மன இறுக்கத்தில் இருந்து இதுபோன்ற கலைஞர்கள்தான் மாணவர்களைக் காப்பாற்ற முடியும். இன்னும் வேறு சில கோணங்களையும் இங்கு பதிவு செய்கிறார்கள் சில கல்வியாளர்கள்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

வே.வசந்தி தேவி (முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இன்றைய நவீன தாராளமய காலத்தில் பொதுப் பள்ளிகளின் தேவை முன்பைவிட அதிகரித்திருக்கிறது. காரணம், கல்வியில் ஏற்றத்தாழ்வுகள் இன்று மூர்க்கம் அடைந்துள்ளன. உலகிலேயே மிகுந்த ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பை இந்தியா கட்டி அமைத்திருக்கிறது. மார்க்கெட்டின் மகிமையை சித்தாந்தமாக ஏற்றுக்கொண்டுவிட்ட இந்த இந்தியாவில், காசுக்கு ஏற்ற கல்வி என்ற அவலம் நிலவும்போது, சாமானியரின் குழந்தைகள் தரமான, திறனளிக்கும் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை. அதே நேரம் உலகின் வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளிலும் அனைத்து குழந்தைகளும் வர்க்கப் பேதம் இல்லாமல் இலவசமாக, அருகில் இருக்கும் பொதுப் பள்ளியில்தான் படிக்கின்றனர். அங்கே பெரும்பாலும் தாய்மொழியில்தான் பாடங்கள் நடத்தப்படுகின்றன. செலவுகளை அரசே ஏற்றுக்கொள்கிறது. அந்த நாடுகள் அடைந்துள்ள பிரமாண்ட வளர்ச்சிக்கு, இத்தகைய கல்விமுறையும், அதன் மூலம் பெற்ற உற்பத்திப் பெருக்கமும்தான் காரணங்கள். மாறாக, நம்மைப்போல வணிகமயமான, தனியார்மயமான கல்வி அமைப்பின் மூலம் ஒரு நாடு முன்னேறவே முடியாது. மறுக்க இயலாத இந்த வரலாற்று அனுபவத்துக்கு இந்தியா மட்டும் விதிவிலக்கு அல்ல.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

இந்தியா, அனைத்து மனிதவள வளர்ச்சி குறியீடுகளிலும் மிகவும் தாழ்ந்து இருக்கிறது. மனிதவள வளர்ச்சியில், 174 நாடுகளில் இந்தியாவின் இடம் 136. இதற்கு முக்கியக் காரணம், அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த கல்வியை அளிக்கத் தவறியதுதான். இன்று இந்தியாவின் வலிமை அதன் demographic dividend. அதாவது மக்கள்தொகை அனுகூலம். உழைக்கும் வயது இளைஞரைப் பெரும் அளவில் கொண்டிருக்கும் நாடு இது. ஆனால், அதன் பலனை அடைய இயலாமல் தடுப்பது கல்வியும் திறன்களும் அனைத்து குழந்தைகளும் பெற இயலாத நிலைதான்.

தனியார்மய - வணிகமயக் கல்வி அமைப்பில் கல்வி நிலையங்களுக்குள் கடும் போட்டிகள் நிலவுகின்றன. இதனால் பாடத்திட்டச் சுமை நாளுக்கு நாள் உயர்கிறது. மூன்றாம் வகுப்பில் ஆறாம் வகுப்பு பாடங்களைக் கற்றுத்தருவதாக ஆசை காட்டுகின்றனர். இதில் மயங்கும் பெற்றோர்கள் எவ்வளவு செலவழித்தேனும் எப்பாடுபட்டேனும் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஒவ்வொரு வயதுக்கும் உகந்த ஒரு பாடத்திட்டம் இருக்கிறது. மூன்றாம் வகுப்பில் ஆறாம் வகுப்புக்கு உரியதைக் கற்பிப்பது தரமான கல்வி அல்ல; தரமற்ற கல்வி. வளர்ந்த நாடுகளில் இவ்வாறு நடந்தால், 'ஏன் எங்கள் குழந்தைகள் மேல் இந்தச் சுமையைச் சுமத்துகிறீர்கள்?’ என பெற்றோர் சண்டைக்கு வந்துவிடுவார்கள்!''

அ.மார்க்ஸ். (ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்.’)

''அறிவு, அறிதல், கல்வி என்பன குறித்த கண்ணோட்டங்கள் காலம்தோறும் மாறிவருகின்றன. நிகண்டுகள், காணி, மாகாணி வாய்ப்பாடுகள் ஆகியவற்றை மனப்பாடம் செய்வது சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலும்கூட வழக்கமாக இருந்தது. இன்று எதையும் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கற்றவர் என்பவர் எல்லாவற்றையும் தன் மூளைக்குள் ஏற்றிக்கொண்டவர் அல்ல; அது இன்று தேவையும் இல்லை. எல்லாவற்றையும் நீங்கள் உங்கள் சட்டைப் பைக்குள் வைத்துத் திரிய இயலும். ஒரு பொத்தானை அழுத்தினால் சங்க இலக்கியங்களில் இருந்து ஜெயகாந்தன் கதைகள் வரை பொலபொலவென உங்களின் ஆண்ட்ராய்டு செல் திரையில் உதிர்கின்றன. உலகின் எந்தப் பிரச்னை குறித்தும் ஒருசில நிமிடங்களில், ஆயிரமாயிரம் தரவுகளை உங்களுக்கு அள்ளித்தர கூகுள் தேவதை காத்திருக்கிறாள்.

இந்தப் புதிய சாத்தியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, இவை நம் மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்கிற சிந்தனை இன்று அவசியம். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்யும் கொடுமையில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள விடுதலையை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம்? நமது கல்வி நிலையங்கள் இத்தகைய சூழலில் எவ்விதம் மாற்றம்கொள்ள வேண்டும்? எல்லாவற்றையும்போல அறிவு என்பதும் நிரந்தரம் அல்ல; அதுவும் மாறிக்கொண்டே இருக்கும். அதுவும் ஒப்பீட்டு ரீதியானதே; அதுவும் முற்றுப் பெற்றுவிடுவது இல்லை என்ற சிந்தனை, இளம் உள்ளங்களில் பதிக்க, இப்போது வாய்ப்புகள் அதிகம் ஆகியுள்ளன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

'மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத’ பெரியார் ஈ.வெ.ரா கல்வி பற்றி சொன்னவை, இன்றைய சூழலில் புதிய பொலிவும் பொருத்தமும் பெறுகின்றன. 'கல்வி என்பது, மக்களுக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியைத் தர வேண்டும். அவர்களை எதைப் பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் சிந்தித்து முடிவுக்கு வருபவர்களாக ஆக்க வேண்டும்’ என்றார் அவர். யோசித்துப் பார்த்தால் பேருண்மைகள் எல்லாம் இத்தகைய முந்தைய நம்பிக்கைகள் மற்றும் பற்றுக்களில் இருந்து விடுபடும் தருணங்களிலேயே வாய்த்துள்ளன என்பது விளங்கும். மேல் இருந்து விழும் ஆப்பிள் கீழே விழுவது இயற்கைதானே என நியூட்டன் நினைத்திருந்தால், 'ஈர்ப்பு விசை’ குறித்த கருத்தாக்கம் உருவாகியிருக்குமா? நம்பிக்கைகளில் சுருண்டிருந்தால், பரிணாமத் தத்துவம் உருப்பெற்றிருக்குமா?

இவற்றை எல்லாம் பள்ளிகளின் நான்கு சுவர்களுக்குள் எவ்வாறு சாத்தியம் ஆக்குவது?  கல்வி குறித்த காலத்துக்கு ஒவ்வாத பழமையான சிந்தனைகளை முதலில் உதறி எறிய வேண்டும். கற்பித்தலை 'உரையாடலாக’ மாற்ற வேண்டும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொலைவு இருக்கக் கூடாது. பாடநூல்களின் ஆதிக்கம் குறைய, சுய சிந்தனையைக் கூட்டும் வகையில் அவை வடிவமைக்கப்பட வேண்டும். விரிந்த பாரம்பர்யம் உள்ள நம் தமிழ், நவீன சிந்தனைகளை எல்லாம் உள்ளடக்கியுள்ள ஆங்கிலம் இரண்டும் நமக்கு வேண்டும்!''

சுடரொளி. (அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மத்தியில் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர்.)  

''எந்த ஓர் அமைப்புக்கும் ஒழுக்கமும் ஒழுங்கு விதிகளும் தேவைதான். அது, பாகுபாடுகள் அற்றதாக, சமூக ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால், நமது பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் ஒழுங்கு விதிகள் ஆண்டான்-அடிமை மனோபாவத்தின் மிச்சங்களாக இருக்கின்றன. கை கட்டிப் பேசும் பழக்கம் இன்றும் பள்ளிகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. அதுவும் பின்னால் கை கட்டிப் பேசினால், அது திமிர். முன்னால் கை கட்டிப் பேசுவதுதான் ஒழுக்கம். ஆசிரியரிடம் பேசும்போது ஒரு குழந்தை எதற்கு கை கட்ட வேண்டும்? அது எவ்வளவு பெரிய உளவியல் வன்முறை தெரியுமா? பிஞ்சு மனதில் அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் இந்தக் கை கட்டும் பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

அதேபோல பள்ளிகளில் கேள்வி கேட்கக்கூடாது எனக் கருதுகின்றனர். 'குழந்தை எப்படி டீச்சர் பிறக்குது?’ என ஒரு பையன் வகுப்பில் கேட்டுவிட்டான். உண்மையிலேயே அவன் தெரியாமல்தான் கேட்கிறான். நம் ஒவ்வொருவரின் மனதிலும் குழந்தைப் பருவத்தில் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். கேட்டால் அவனுக்கு உரிய விளக்கத்தை சொல்ல வேண்டும். ஆனால் அந்த ஆசிரியை, கேள்விக்கேட்ட பையனை 'இந்த வயசுலயே இப்படி எல்லாம் அசிங்கமாப் பேசுறியா?’ என வகுப்பிலேயே அடித்தார். இதுபோன்ற தண்டனைகளினால் குழந்தைகள் மனதில் எழும் எண்ணற்ற கேள்விகள் கேட்கப்படாமலேயே முடங்கிவிடுகின்றன. அவர்களின் கேள்வி கேட்கும் உரிமையை அடியோடு மறுக்கிறது நமது வகுப்பறை.

'கூடக்கூட பேசாதே’ என்பது பிள்ளைகளிடம் ஆசிரியர்கள் சொல்லும் இன்னொரு வாக்கியம். அதாவது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டால் குழந்தை அதை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். விளக்கம் சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால், 'அது என்ன கூடக்கூடப் பேசுற பழக்கம்? இதை எங்கு இருந்து கத்துக்கிட்ட?’ என அடக்குமுறை ஏவப்படும்.

இப்படி ஒரு பள்ளியின் ஒழுங்கு விதிகள் அனைத்துமே மாணவர்களின் ஆளுமையைச் சிதைத்து, அவர்களிடம் அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுப்பதாக இருக்கின்றன. 'மாடு மாதிரி உழைக்க வேண்டும். கேள்வி கேட்கக் கூடாது. தன் உரிமை என்றாலும் அதைக் கேட்கக் கூடாது. மொத்தத்தில் கடமையைச் செய்ய வேண்டும்; பலனை எதிர்பார்க்கக் கூடாது’ என்பதுதான் இன்றைய சமூக அமைப்பு. இதற்கு ஏற்ற மனநிலையுடன் மாணவர்களைத் தயாரிக்கும் பணிதான் இன்றைய வகுப்பறைகளில் நடைபெறுகிறது. ஆசிரியர்கள் நினைத்தால் இதை மாற்ற முடியும் என்றாலும், அவர்களும் இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்தின் பிரதிநிதிகளே. நமது பாடத்திட்டத்திலும் இதுபோன்ற சிந்தனைக்கு இடம் இல்லை.''

ஸ்ரீதரன். (அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், வட சென்னைப் பகுதியின் தலித் குழந்தைகள் மத்தியில் களப்பணியாற்றி வருபவர்.)

அவர்களின் குடியிருப்புகள் பெரும்பாலும் ஓர் அறை வீடுதான். அதாவது படுக்கை அறை, சமையல் அறை எனத் தனித்தனியே எதுவும் இல்லை. ஒரே ஓர் அறை, அதுதான் வீடு. அதுவும் மிக நெருக்கமாக இருக்கும். ஒரு வீட்டுக்கான இடத்தில் ஆறேழு வீடுகள் இருக்கும். இந்த நெருக்கடி காரணமாக அருகில் உள்ள வீடுகளில் எது நடந்தாலும் அது குழந்தைகளைப் பாதிக்கும். ஒரு வருடத்தில் நான்கு குழந்தைகளின் பெற்றோர்களேனும் விபத்து, குடி என ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுகின்றனர். இது பிள்ளைகளை நேரடியாகப் பாதிக்கிறது. இதுபோன்ற மரணங்கள், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள், திருவிழாக்கள் என வருடத்தின்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

பல நாட்களில் இந்தக் குறுகிய குடியிருப்புப் பகுதிகளில் பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து பாட்டுப் போடுவது இவர்களின் கலாசாரம். அந்த நெருக்கடியிலும் சத்தத்திலும் மாணவர்கள் எப்படிப் படிக்க முடியும்? 'நாளைக்கு டெஸ்ட். வீட்ல படிச்சுட்டு வந்திடுங்க’ என வீட்டுப்பாடம் கொடுக்கும்போது, இவர்கள் எப்படிப் படிக்க முடியும்?

10-ம் வகுப்பில் கணிசமான தேர்ச்சி விகிதத்தைக் காட்டுவதற்காக ஒன்பதாம் வகுப்பில் பல மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அதன் பிறகு படிப்பது இல்லை; கூலி வேலைக்குச் செல்கின்றனர். அடுத்தது காதல். நான் பணிபுரியும் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட13 பெண் குழந்தைகளுக்கு, 18 வயதுக்கு முன்பே திருமணம் நடந்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டு, அனைத்து வகையிலும் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் தலித் குழந்தைகள்!''

சமூகத்தின் ஒவ்வோர் அடுக்கிலும் எவ்வளவு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நாம் உணரவாவது செய்கிறோமா?

- பாடம் படிப்போம்...    

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 24

''நான் பணியாற்றும் பள்ளி சௌகார் பேட்டையில் இருக்கிறது. எங்கள் பள்ளி உள்பட சுற்றியுள்ள பள்ளிகள் அனைத்திலும் படிப்பதில் முக்கால்வாசி குழந்தைகள், பின்தங்கிய பொருளாதார நிலையில் இருக்கும் தலித் குழந்தைகள். அவர்களின் பெற்றோர்கள் துப்புரவுப் பணியாளர்கள்; தெருவோர வியாபாரிகள்; தினக் கூலிகள். அவர்களுக்கு தங்கள் குழந்தையின் படிப்பு பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது. பெற்றோர்கள் அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவதால் பெரும்பாலான பிள்ளைகளுக்கு டீ, பிஸ்கட்தான் காலை உணவு. இதனால் 12 மணிக்கு எல்லாம் தலைவலி வந்து அவதிப்படுகின்றனர். அவர்களால் பாடங்களைக் கவனிக்க முடிவது இல்லை.