Published:Updated:

“நான் விவசாயி மகள்!” இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் ‘ஐயமிட்டு உண்’ ஃப்ரிட்ஜ் ஃபாத்திமா ஜாஸ்மின்

“நான் விவசாயி மகள்!” இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் ‘ஐயமிட்டு உண்’ ஃப்ரிட்ஜ் ஃபாத்திமா ஜாஸ்மின்
“நான் விவசாயி மகள்!” இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் ‘ஐயமிட்டு உண்’ ஃப்ரிட்ஜ் ஃபாத்திமா ஜாஸ்மின்

“நான் விவசாயி மகள்!” இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் ‘ஐயமிட்டு உண்’ ஃப்ரிட்ஜ் ஃபாத்திமா ஜாஸ்மின்

''ன்னோட அப்பா ஒரு விவசாயி. 'ஊருக்கெல்லாம் படி அளக்குறவனோட கை என்னைக்குமே கொடுக்குற கையாத்தான் இருக்கணும்னு'ங்கிறது அவரோட எண்ணம். அவர் வண்டியில போகும் போது வழியில யாராவது உணவு இல்லாமலோ, உடை இல்லாமலோ சிரமப்பட்டா உடனே அவங்களுக்கு உதவி பண்ணுவாரு. அப்பாவோட அந்த குணம்தான் எனக்குள்ளும் இல்லாதவர்களுக்கு உதவி செய்யச்சொல்லி ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த ஊக்கம்தான் இன்றைக்கு 'ஐயமிட்டு உண்' என்ற இந்த திட்டத்தைத் தொடங்க வெச்சிருக்கு'' - குரலில் கனிவும் முகத்தில் கருணையும் வெளிப்பட புன்னகையோடு பேசுகிறார் ஐசா ஃபாத்திமா ஜாஸ்மின். 

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜாஸ்மின். பல் சீரமைப்பு மருத்துவரான இவர் பெசன்ட் நகரிலுள்ள ஒரு பொது இடத்தில் ஏழைகளுக்கு உதவும் வகையில் ஃபிரிட்ஜ் ஒன்றை வைத்திருக்கிறார். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பவர், அது பற்றிப் பேசினார். 

“எங்க வீட்டுல அம்மா அதிகமா சமைச்சுட்டாங்கன்னா உடனே அதை எடுத்துட்டுப் போய் வீட்டுக்கு பக்கத்துல பிளாட்ஃபார்ம்ல தங்கியிருக்கவங்ககிட்ட கொடுத்துட்டு வருவேன். இது தினமும் தொடர்ந்தது. ஒருநாள் நான் ரெகுலரா கொடுக்குறவங்க அந்த இடத்துல இல்லாம போக பைக் எடுத்தக்கிட்டு வேறு ஒரு இடத்துக்குப் போய் கொடுத்தேன். அப்போ அவங்க என்னைய ஒரு மாதிரி பார்த்தாங்க. 'ஏம்மா, அழுக்கு ட்ரெஸ் போட்டுட்டு பிளாட்பாரத்துல உக்காந்திருந்தா சாப்பாட்டுக்கு வழி இல்லாதவங்கன்னு நினைச்சியா?'னு கோவமாகக் கேட்க, எனக்கு தப்பு பண்ணிட்டோமோன்னு தோணுச்சு. அப்போதான் முடிவு பண்ணினேன்... உடையப் பார்த்து யாரையும் எடை போட்டுடக்கூடாது. உண்மையாவே ஒருவேளை உணவுகூட கிடைக்காதவங்க யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அவங்களுக்கு உதவணும்னு.  

ஆரோக்கிய உணவுகள் கிடைக்காம உலகிலுள்ள 80 கோடி மக்கள் பசியால் வாடுகிறார்கள்னு சொல்லுது ஐ.நா அறிக்கை. ஆனா நாமோ வீட்டிலும் சரி, பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட விஷேசங்களின்போதும் சரி... சகட்டு மேனிக்கு உணவுகளை வீணாக்குறோம். எங்கேயோ வாழ்றவங்களை பத்தி நாம ஏன் கவலைப்படணும்னு பலரும் நினைக்குறாங்க. ஆனா, அவங்களெல்லாம் நம்ம கண்ணுக்கு முன்னாடியேதான் இருக்குறாங்க. உணவோ, இல்லை உடையோ அதிகமா இருக்குறவங்க இல்லாதவங்களுக்கு கொண்டுபோகுற பாலமா செயல்படணும்னு முடிவு பண்ணிதான் ஐயமிட்டு உண் என்ற இந்த திட்டத்தைத் தொடங்கினேன். 'ஐயமிட்டு உண்' என்பதன் பொருள், பகிர்ந்து உண்ணுதல்'' என்கிறார்.

ஆரம்பத்தில் இப்படியொரு திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஃபாத்திமா முடிவு செய்ததும் பலரிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், 'இதெல்லாம் சரியா வராது. அதெப்படி நீ ஒரு ஃபிரிட்ஜ கொண்டு போய் ரோட்டுல வைப்ப. இட வாடகை, கரண்டு பில்னு உன்னால எப்படி சமாளிக்க முடியும்?' என்று அனைவரும் எதிர்மறையாகத்தான் பேசியிருக்கிறார்கள். ஆனாலும், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனியாளாக முயன்று இதை செயல்படுத்தியிருக்கிறார். கடந்த சுதந்திர தினத்தன்று இதை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தவருக்கு எந்த உதவியும் கிடைக்காமல் போகவே, 20 ஆம் தேதிவரை முயற்சி தள்ளிப்போயிருக்கிறது. 

''நான் இருபதாம் தேதி காலை திறக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனா முதல் நாள் மாலை, எல்லாம் சரியாக இருக்கானு பார்த்துட்டு இருந்தப்போ, அந்த வழியா வந்த ஒருவர் தன் கையில் வைத்திருந்த பழங்களை ஃபிரிட்ஜில் வெச்சிட்டுப் போய்ட்டார். நல்லது செய்ய எதற்கு நாளும் கிழமையும்னு புரிய, அந்த நிமிஷமே அது பயன்பாட்டுக்கு வந்துடுச்சு. 

இதுவரை  நான் நினைச்ச மாதிரியே இந்தத் திட்டம் நல்லபடியா போய்க்கிட்டு இருக்கு. இனியும் இது தொடர்ந்து சிறப்பா செயல்படணும்னா அது மக்கள்கிட்டதான் இருக்கு. எல்லோரும் தங்களோட பொறுப்பை உணர்ந்து இல்லாதவர்களுக்கு போய்ச் சேரட்டும் என்ற நினைப்போடு உதவணும். எனக்கு மக்கள் மேல முழு நம்பிக்கை இருக்கு. இதன் மூலமா நிச்சயம் இல்லாதவர்கள் பயனடைவார்கள்” என்கிறார் ஃபாத்திமா. 

“நான் இந்தத் திட்டத்தை ஆரம்பித்த அன்றிலிருந்தே சாப்பாடு எடுத்து வந்து வைக்கிறேன்'' என்ற சுஜாதா ரவி, ''தினமும் இந்த வழியாகப் போகும்போது இந்த ஃபிரிட்ஜிலிருந்து யாராவது சாப்பாட்டை எடுத்து சாப்பிடுவதைப் பார்க்கிறேன். அடுத்த வேளை உணவுக்காக யாரிடமும் கையேந்தாமல் இங்கு வந்து உரிமையோடு எடுத்துச் சாப்பிடுவதைப் பார்க்கும்போது மனசு நிறைவா இருக்கு. புத்தகங்களும் உடைகளும்கூட இங்க இருக்கு'' என்றார். 

“இது ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம்'' என்ற புனிதா, ''எத்தனையோ பேர் வீடுகள்ல குப்பையா சேத்து வெச்சிருக்குற பொருட்களை வீணா தூரப்போடுறாங்க. அதுக்கு பதிலா இப்படி கொண்டு வந்து வைக்கும்போது தேவைப்படுறவங்க அதை எடுத்துப்பாங்க. நான் என் வீட்டுல இருக்குற புத்தகங்களைக் கொண்டு வந்து வைக்குறேன். ஏழைப் பசங்க அதை எடுத்துப்பாங்கங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. இந்த திட்டத்தைக் கொண்டு வந்த அந்த அம்மாவை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல. மக்களும் இதோட அருமை தெரிஞ்சு இதை சரியா பயன்படுத்தணும்” என்றார். 

நல்லதோர் முயற்சி... பரவட்டும்! 

அடுத்த கட்டுரைக்கு