Published:Updated:

இந்த உலகமே ப்ளாக் ஹோலின் குழந்தைதான்... பிக் பேங்கின் ஃப்ளாஷ்பேக் கதை!

இந்த உலகமே ப்ளாக் ஹோலின் குழந்தைதான்... பிக் பேங்கின் ஃப்ளாஷ்பேக் கதை!
இந்த உலகமே ப்ளாக் ஹோலின் குழந்தைதான்... பிக் பேங்கின் ஃப்ளாஷ்பேக் கதை!

இந்த உலகமே ப்ளாக் ஹோலின் குழந்தைதான்... பிக் பேங்கின் ஃப்ளாஷ்பேக் கதை!

இருட்டு. ஒளியின்மையா இருட்டு அல்லது இருட்டு என்ற ஒன்று தனித்தன்மையுடன் வெளிச்சத்தைப் போல் விரிந்திருக்கிறதா? அப்படி என்றால் ஒளி என்ற ஒன்று எங்கிருந்து உருவானது? ஒன்றுமில்லாத அருவத்தில் இருந்தா? ஏதோ ஆன்மீக தர்க்கமாகவும், தத்துவ கோட்பாடாகவும் தோன்றும் இதை, உண்மையில் அறிவியல் பூதக்கண்ணாடி கொண்டு பார்த்திட வேண்டும். கடவுள் பூமியை படைத்தார் என்று பொதுவான கருத்து ஒன்றை முன்வைக்கும் போது, அறிவியல் ஆர்வலர்கள் அந்தக் கடவுளை யார் படைத்தார் என்று எதிர்வாதம் புரிவார்கள். அதே போல், பிக் பேங்கால் (அதிர்வெடித் தத்துவம்) உலகம் உருவானது என்று விஞ்ஞானிகள் விளக்கும் போது, அதற்கு முன்னால் என்ன இருந்தது என்ற கேள்வி எழாமல் இருப்பது இல்லை. விடையில்லா கேள்வியாக மிதந்து கொண்டிருந்த அதற்கு தற்போது விடை கிடைத்து விட்டதாய் விளக்கம் தர விழைகிறார்கள் விஞ்ஞானிகள்.

கருந்துளை பிரசவித்த பிரபஞ்சம்

இயற்பியலாளர்கள் ஆராய்ச்சி படி பிக் பேங் தியரியால் உலகம் உருவானது கிட்டத்தட்ட 13-15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன். அப்படியானால் அந்த பிக் பேங் எப்படி வந்தது? அதற்கு முன் என்ன இருந்தது? நேஷனல் ஜியோக்ராஃபிக்கின் புதிய ஆராய்ச்சியின் இயற்பியலாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் அளித்த விளக்கத்தில், “ஒரு மிகப்பெரிய கருந்துளையில் இருந்து தான் நமது அண்டம் உருவாகியுள்ளது. அதிலிருந்து வெளியே வரும்போது நிகழ்ந்ததுதான் பிக் பேங். அதற்கு முன் நம் அண்டம் ஒரு பேரண்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். அதிலிருந்து பிரிந்து வந்திருக்கலாம். அதற்கான பாதைகளாக இந்தக் கருந்துளைகள் செயல்பட்டிருக்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

இன்னமும் நிரூபிக்கப்படாத இந்தத் தியரியை “சாத்தியமான ஒன்று தான்” என்று கூறி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளார் நியூ ஹேவன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இயற்பியலாளர் டாக்டர். நிக்கோடெம் போப்லவ்ஸ்கி (Dr. Nikodem Poplawski). அவர் ’தி மதர் நேச்சர் நெட்வொர்க்’ என்ற இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “மரண பொறிகள் என்று அழைக்கப்படும் இந்தக் கருந்துளைகள் ஒரு வாக்வம் கிளீனரை போல் செயல்படுகின்றன. அதனுள் இழுக்கப்பட்ட வெளிச்சம் கூட வெளியேறிவிட முடியாத சிறை அது. நிச்சயம் ஒவ்வொரு அண்டத்தின் மையப்பகுதியாக அவையே இருக்கும். நம் பால்வெளி அண்டத்தின் நடுவிலும் கருந்துளை ஒன்று நிச்சயம் இருக்கும். கருந்துளையின் நிறை அதிகரிக்கும் பொழுது, சிங்குலாரிட்டியின் எல்லையைக் கடக்கும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் உள்ளிருக்கும் அனைத்தையும் துப்பி விடுகிறது. அவற்றின் உள்ளே இருந்து வெளியே மீண்டு வந்தது தான் நம் அண்டமே!” என்று தெரிவித்துள்ளார்.

பிக் பவுன்ஸ் தியரி

போப்லவ்ஸ்கி அவர்களின் கூற்றுப்படி மற்ற கோள்களை போலவே கருந்துளைகளும் சுழன்று கொண்டு தான் இருக்கின்றன. அதுவும் ஒளியின் வேகத்திற்கு நிகராக சுழன்று கொண்டிருக்கின்றன. இதனால் அவை முறுக்கப்படுகின்றன, சுருக்கப்படுகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பல முனை அழுத்தத்தால், வெடிக்கத் தொடங்குகின்றன. அதை பிக் பேங் என்று அழைப்பதை விட பிக் பவுன்ஸ் என்று அழைப்பதே சரி.

ஸ்ட்ரிங் தியரி

இது இப்படியிருக்க டாக்டர். மிச்சியோ காக்கு (Dr. Michio Kaku) எழுதிய ஆய்வுக் கட்டுரையின் மற்றுமொரு கேள்வியை எழுப்புகிறது.

“பிக் பேங் தியரி என்ற கோட்பாடே நம் பிரபஞ்சம் உருவானதற்கான விளக்கத்தை முறையாகத் தரவில்லை. ஸ்ட்ரிங் தியரி நிதர்சனமான விளக்கம் ஒன்றை அளிப்பதாகக் கூறியுள்ளார். அதன் படி, பிக் பேங், பிக் பேங் என்று கூவிக்கொள்ளும் நாம், எது வெடித்தது என்று இதுவரை திட்டவட்டமாக கூறமுடியவில்லை. எனவே இது மிகவும் தவறான ஒரு கோட்பாடாகவே தோன்றுகிறது. பிக் பேங்கிற்கு முன்னால் ஒரு பெரிய நிகழ்வு நிச்சயம் நிகழ்ந்திருக்க வேண்டும். அதை விளக்குகிறது ஸ்ட்ரிங் தியரி. இரண்டு பிரபஞ்சங்கள் இணைந்து நம் பால்வெளி மண்டலம் உருவாகி இருக்கலாம். அல்லது நம் அண்டம் ஒரு பேரண்டத்திடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம்.”

எது எப்படியோ, இப்போது தலைதூக்கி இருக்கும் இந்தக் கருந்துளைகள் குறித்த செய்தி பல அண்ட கோட்பாட்டை ஆதரிக்கும் ஒன்றாக இருக்கிறது. இன்னமும் நிறையத் தகவல்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் மூலம் கிடைக்கலாம். காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு