Published:Updated:

தொலைதூர கேலக்ஸியில் இருந்து வந்த 15 விசித்திர சிக்னல்கள்... ஹாய் ஏலியன்ஸ்!

“ஹலோ! யாராவது இருக்கீங்களா?” என்று புதுப்பேட்டை தனுஷ் கணக்காக நாசா விஞ்ஞானிகள் முதல் பல பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரை இதுவரை தென்படாத ஏலியன்களை வாலன்டியராக தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். விண்வெளி தொடர்பான சாகசங்கள் பல நிகழ்த்தி இருந்தாலும், மைல்கல் பல கடந்திருந்தாலும், நம் பூமியை தாண்டி வேறு கோள்களில், வேறு கேலக்ஸிகளில் உயிரினம் ஏதாவது இருக்குமா, அல்லது உயிர் வாழச் சாத்திய கூறுகளாவது இருக்குமா? அப்படி இருந்தால் மனிதர்களால் அங்குச் சென்று வாழ முடியுமா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நடந்த வண்ணமே உள்ளன.

ப்ரேக்த்ரூ லிசன் (Breakthrough Listen) என்ற முன்முயற்சியின் முக்கிய பணியே மற்ற கோள்களில், கேலக்ஸிகளில் ஏலியன்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்வதே. அப்படி ஒரு நாள் ஆராய்ச்சியின் போது, காலை திடீரென 15 சுருக்கமான ஆனால் சக்திவாய்ந்த ரேடியோ சிக்னல்கள் வந்து சேர்ந்தன. ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் (Fast Radio Burst - FRB) என்று அழைக்கப்படும் இது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் நம் பூமியில் இருந்து 3 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு குட்டி கேலக்ஸியில் இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

FRB 121102  

அதே கேலக்ஸியில் முன்னர் பலமுறை சிக்னல்கள் வந்தபோது அதன் ஆரம்பப்புள்ளிக்கு FRB 121102 என்று பெயர் வைத்திருந்தனர் விஞ்ஞானிகள். இதற்குக் காரணம் அவை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது நவம்பர் 2, 2012 அன்று. ஆனால், அங்கிருந்து இவ்வாறு தொடர்ந்து வீரியம் குறையாமல் வருவது இதுவே முதன் முறை என்று ஆச்சர்யப்பட்டுள்ளனர். 

“இவ்வளவு உயர் அதிர்வெண்ணுடன் இதற்கு முன் அங்கிருந்து எந்த சிக்னலும் வந்தது இல்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த புதிய சிக்னல்களை ஆராய்வதன் மூலம் பல புரிதல்கள் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பெர்க்லி SETI ஆராய்ச்சி மையம் மற்றும் ப்ரேக்த்ரூ லிசனின் இயக்குநர் ஆண்ட்ரூ சிமியன்.

400TB டேட்டா

இந்த ஃபாஸ்ட் ரேடியோ பர்ஸ்ட் முதன் முதலில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) அன்று மேற்கு விர்ஜீனியாவில் உள்ள கிரீன் பேங்க் தொலைநோக்கு இல்லத்தில் உள்ள ஒலிப்பதிவு கருவியில் கிடைத்துள்ளது. ஐந்து மணி நேரங்கள் தொடர்ந்து இந்த சிக்னல்களை பதிவு செய்ய 400 டெராபைட்ஸ் அளவிற்கு டேட்டா கிடைத்துள்ளதாம். 4 முதல் 8 GHz அதிர்வெண்ணிலிருந்து பதிவு செய்யப்பட்ட இதற்கு, பூமிக்கும் இதன் ஆரம்பப்புள்ளிக்கும் இடையில் இருக்கும் ஒரு சில வாயுக்கள் தடைகளாக இருந்தனவாம். அசாதாரண திறன்கள் கொண்ட இந்த ஒலிப்பதிவு கருவியானதால் மட்டுமே அதே அலைவரிசையில் பல கிகா ஹெர்ட்ஸ் டேட்டாவை பதிவு செய்ய முடிந்துள்ளது. இதை சேனல் சேனலாக பிரித்து ஆராய்ந்த குழு இந்த 15 ஃபாஸ்ட் ரேடியோ சிக்னல்களை உறுதி செய்துள்ளது.

என்ன காரணம்?

ப்ரேக்த்ரூ லிசன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இந்த புதிய சிக்னல்களை பற்றி தெரிந்து கொள்ள எல்லாவகை முயற்சிகளும் எடுக்கப்படும். உலகம் முழுவதும் இருக்கும் எங்கள் கருவிகளுக்கு இனி இது தான் முதல் வேலை. இதற்கான காரணமாக பல விஷயங்கள் இருக்கலாம். வலுவான காந்த புலங்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து ஏலியன்கள் வரை அனைத்தும் சாத்தியமே” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது ஏலியன்களாக இருப்பினும், நீண்ட தொலைவில் இருப்பதால் இந்த சிக்னல்கள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாக இருக்கலாம். எனவே, அதன் ஆரம்பப்புள்ளி, இப்போது அழிந்தே போயிருக்கலாம் என்பதும் சாத்தியங்களில் ஒன்று.