ஸ்பெஷல் -1
Published:Updated:

நலம் 360’ - 25

மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’  - 25

த்தம் காட்டாமல் இன்னொரு வியாதியால் பாதிக்கப்படுவோர் பட்டியலில் முதல் இடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக் கிறோம் நாம். ஆம்... 2025-ம் ஆண்டு ஈரல் நோயின் உலகத் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என அபாய மணி அடிக்கிறார்கள் மருத்துவர்கள். துரித உணவு பாணி நவீன வாழ்வியலை வாரி அணைத்துக்கொண்டதில் இந்தியாவில் இன்றைக்கு ஐந்தில் ஒருவருக்கு ஈரல் நோய் இருக்கக்கூடும் என்கிறது புள்ளிவிவரம். உடம்பின் உள் உறுப்புகளில் மிகப் பெரியதும், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றைக் காட்டிலும் மிக முக்கியமானதுமான உறுப்பு... ஈரல்!

நாம் சாப்பிடும் உணவில் இருந்து சர்க்கரை, புரதம், கொழுப்பு இவற்றை ஜீரணித்துப் பிரித்து ஆள்வது, ரத்தச் சிவப்பு அணுக்களை, தட்டுக்களை உற்பத்திசெய்வது, ஹார்மோன்களின் செயல்பாட்டைச் சீராக்குவது, நச்சுக்களைக் கழிப்பது... என பல்வேறு முக்கியப் பணிகளைச் செய்வது ஈரல்தான்.

விளைவு... 'இங்கிலீஷ்காரன்... டெய்லியும் ராத்திரி ரெண்டு கட்டிங் போடாமத் தூங்க மாட்டானாம். அதனாலதான் அவனுக்குக் கெட்ட கொலஸ்ட்ரால் குறைஞ்சிருக்காம். ஒயின்ல இருக்குற பாலிஃபீனால், இதய நோய்க்கு நல்லதாம்டா’ எனத் தவறான புரிதலோடு மதுபானக் கடைகளில் தன் ஈரலைக் கிளறிச் சிதைக்கும் 'வருத்தப்படாத வாலிபர் கூட்டம்’ பெருத்துவிட்டது. போதாக்குறைக்கு, 'மக்களுக்குப் புதுசு புதுசா ஏதாச்சும் ஊத்திக் குடுங்கப்பா’ என ஆராய்ந்துகொண்டிருக்கிறது மக்கள் நலம் காக்கவேண்டிய அரசாங்கம்!

நலம் 360’  - 25

இன்ஷூரன்ஸுக்காக ஸ்கேன் செய்யும்போது, 'சார் ஈரலில் கொஞ்சம் கொழுப்பு படிஞ்சிருக்கு. அவ்வளவுதான். ஃபேட்டி லிவர் கிரேடு 1’ என முன்பு சொன்னபோதெல்லாம் யாரும் அதிகம் அலட்டிக்கொண்டது இல்லை. ஆனால் இப்போது, Non alcoholic fatty liver disease கொஞ்சம் அக்கறையுடன் பார்க்கப்பட வேண்டிய விஷயம். கண்டுகொள்ளாமல்விட்டால், கொழுப்புக்குக் கீழே உள்ள ஈரல் செல்கள் அழற்சியில் நாள்பட்ட ஈரல் நோயை விதைத்துவிடும் என்கிறது நவீன மருத்துவம். 'நான் அதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஏன்னா, டீ, காபிகூட குடிக்காத 'டீடோட்லர்’!’ எனப் பெருமிதப்படுபவர்களே... நீங்களும் கொஞ்சம் உஷார். ஏனென்றால், அலுவலக வாசலில் தினமும் சூடாகச் சாப்பிட்ட பஜ்ஜி, வடையின் எண்ணெய், ஈரலில் கொழுப்பைக் குத்தவைக்கும். கூடவே, சர்க்கரை வியாதிக்காரருக்கும் கொஞ்சம் செல்லத் தொப்பை சேரும் நபருக்கும் ஈரலில் கொழுப்பு படிந்து நோய்க்கு நங்கூரமிடும்.

நம்மில் சிலர், இரும்புச்சத்து டானிக்கில் குழம்பு வைத்து, வைட்டமின் மாத்திரைகளை நறுக்கி பொரியல், கூட்டு செய்து, புரத ஊட்ட உணவைக் கரைத்து உப்பு சேர்த்து, தோசை வார்த்து பெருமிதமாகச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கலாம். அவர்கள் மற்றவர்களிடம் 'ஏங்க இப்படிக் கொஞ்சம்கூட கவலைப்படாம இருக்கீங்க? என்னை பாருங்க, எவ்ளோ ஜாக்கிரதையா இவ்ளோ சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கிறேன்’ எனப் பெருமிதம் பேசுவார்கள். ஆனால், நாம் சாப்பிடும் தேவையற்ற மருந்தாலும், ஊட்ட உணவாலும்கூட ஈரல் பல்வேறு நோய்களுக்கு நேந்துவிடப்படும்.

இதையெல்லாம் தாண்டி, பகலில் கடிக்கும் கொசு, இரவில் கடிக்கும் வைரஸ், நாளெல்லாம் கடிக்கும் டென்ஷன் என ஈரலுக்கு ஏகப்பட்ட எதிரிகள். அப்போதெல்லாம் திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் காலை 4 மணிக்கு பாபநாச மலையின் காரையாறு எனும் மலையூருக்கு தனியார் பஸ் ஒன்று கிளம்பும். 'ஏல... காமாலை பஸ் கிளம்பப்போகுது, ஓடியா... ஓடியா...’ எனக் குரல் கிளம்பவும், வலது பக்க மேல்வயிறைப் பிடித்துக்கொண்டே ஓடிவந்து ஏறும் கூட்டத்தால் நிரம்பி வழியும் அந்தப் பேருந்து. 'பஸ்ஸா அல்லது ஆம்புலன்ஸா?’ எனப் பல நேரம் சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்கு ஈரல் நோயாளிகள் நிரம்பிச் செல்வார்கள். அதனாலேயே அந்தப் பேருந்துக்கு 'மஞ்சக்காமாலை பஸ்’ என்று பெயர். அவ்வளவு கூட்டமும், அந்த மலைக்கிராமத்தில் சித்த வைத்தியப் பாட்டி ஒருத்தி காலை நேரத்தில் மட்டும் வழங்கும் காமாலை மருந்துக்காகத்தான் செல்லும். இப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் காமாலைக்கு முலிகை மருந்துகள் வழங்கும் மரபுகள் நிறைய உண்டு.

ஹெப்படிடிஸ்-ஏ பிரிவைச் சேர்ந்த காமாலைக்கு கீழாநெல்லிக் கீரையும் கரிசலாங்கண்ணிக் கீரையும் இன்னும் சில அனுபவ மருந்துகளும் சேர்த்து வழங்கப்படும். இந்தக் காமாலைக் கிருமியைக் கண்டு அவ்வளவாகக் கலவரப்பட வேண்டியது இல்லை. நான்கைந்து நாட்களில் முற்றிலும் சரியாக்கிவிடலாம். ஆனால், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசியில், சவரக் கத்தியில், சில நேரங்களில் டயாலிசிஸ் சிகிச்சை, ரத்தம் ஏற்றல், கிருமி உள்ளோருடனான உடலுறவில்... என நுழையும் ஹெப்படிடிஸ்-பி அதிக அக்கறையுடன் எதிர்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அலட்சியமாக இருக்கையில் ஈரல் சுருக்க நோயான 'சிர்ரோஸிஸ்’ வந்துவிடும் ஆபத்தும் மிகுந்தது. 'விசாவுக்கு ரத்தம் சோதிக்கும்போதுதான் இந்த சனியன் ரத்தத்தில் இருந்தது தெரிஞ்சுச்சு. எப்படி வந்துச்சுனே தெரியலை. ஆபத்தா சார்?’ எனப் பதறும் இளைஞர் கூட்டம், இன்று உலகில் 30 கோடிக்கும் மேல். 'அப்படியானவர்களுக்கு கீழாநெல்லிக் கீரை பலன் அளிக்கும்’ என சித்த மருத்துவம் சொன்னதை, தன் 25 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்து, காப்புரிமைப் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் தியாகராஜன், கீழாநெல்லியை உலகெங்கும் உற்றுப்பார்க்கச் செய்திருக்கிறார்.

நலம் 360’  - 25

வைரஸால் வரும் ஈரல் நோய் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று இந்தியாவில் இருக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ஈரல் சிர்ரோஸிஸ் நோயாளிகளில் சரிபாதிக்கு மேல், குடி போதையில் இந்தச் சங்கடத்தை இழுத்து வந்தவர்கள். 'அளவோடுதான் குடிக்கிறேன்; சோஷியல் ட்ரிங்கர் சார். மார்க்கெட்டிங்கில் இது தவிர்க்கவே முடியாது’ என சப்பைக் கட்டு கட்டும் நபர்களுக்கு ஒன்று தெரியாது. குடி, உங்களையும் உங்கள் குடியையும் மட்டும் அல்ல... குலத்தையே அழிக்கும் என்ற உண்மை. அப்பா குடிக்கும் நபர் என்றால் அவரைப் பாதிக்காத ஈரல் சுருக்கம் அவரது பேரனுக்கு வரக்கூடும். ஒருவேளை அவன் குடி பக்கமே போகாதவனாக இருந்தாலும்கூட, என்றைக்கோ ஒரு காய்ச்சலுக்கு அவன் போட்ட சரியான அளவிலான பாராசிட்டமால் எனும் சாதாரண மருந்துகூட அவன் ஈரலைப் பதம்பார்த்து நோய்வாய்ப்படுத்தும் என்கிறது எப்பிஜெனிட்டிக்ஸ் அறிவியல். போதாக்குறைக்கு, குடிக்கத் தூண்டும் போதையும் தந்தை வழியாக மகனுக்கு மரபணுரீதியாகவே கடத்தப்படுமாம்.

ஒருபக்கம் மது இப்படி ஈரலைக் கெடுக்கிறது என்றால், சமத்துப்பிள்ளையாக வேஷம் கட்டிவந்து அட்டூழியம் செய்யும் வஸ்துக்கள், டிரான்ஸ் ஃபேட், ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப் சேர்த்துச் செய்யப்பட்டு தினம் தினம் புதுசு புதுசாக உணவுச்சந்தையில் நுழையும் குக்கீஸ், சிப்ஸ், குளிர்பானங்கள் ஆகியவை. இவை ஈரலின் செல்களைப் பாதித்து, கெட்ட கொழுப்பு எனும் Low density lipoprotein-ஐ ரத்தத்தில் உருவாக்கும். Trans fat free என்ற லேபிளைச் சுமந்துகொண்டுவரும் பொருளுக்கு வர்த்தகரீதியான அர்த்தம் கெட்ட கொழுப்பு இல்லவே இல்லை என்பது அல்ல. ஒரு சர்விங்கில் 0.2 கிராமுக்குக் குறைவாக இருப்பது என்பதுதான் பொருள். நீங்கள் எப்போதும் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டும் நபராக இருந்தால் துளித்துளியாகக் கொழுப்பு கூடிவந்து, கும்மியடிக்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை.

ஈரலில் கொழுப்பு படியத் தொடங்குகிறது என்றால், நிச்சயம் எண்ணெயில் தனிக் கவனம் வேண்டும். அளவு குறைவாகவும், செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், கடலெண்ணெய் என வகைக்கு ஒன்றாக அரை லிட்டர் மட்டும் வாங்கி, காலை சமையலில் ஒரு வகை எண்ணெய், மதியம் வேறு வகை எண்ணெய் எனச் சமைக்கலாம் என்கிறார்கள் உணவியலாளர்கள்.

ஈரலைப் பாதுகாக்க நிறைய எளிய மூலிகைகளை, உணவுகளை நம் மூத்தோர் அடையாளம் காட்டியுள்ளனர். சாதாரண கீழாநெல்லி, கரிசாலை, நிலவேம்பு, சீரகம், ஆடு தொடா, நொச்சி முதல் கடுகுரோகிணி, வல்லாதகி, மலை வேம்பு என இந்தப் பட்டியல் பெரிது. உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் எல்லாம் அலசி ஆராயும் இந்த உணவையும் மருந்தையும் நாம் என்னவோ இன்னும் அதிகம் உற்றுப்பார்க்கவில்லை. கீழாநெல்லிக் கீரையையும் கரிசலாங்கண்ணிக் கீரையையும் மஞ்சக்காமாலை வந்தால்தான் கண்ணில் காட்ட வேண்டும் என்பது இல்லை. உண்மையில், அவை நேரடியாக வைரஸோடு மோதலில் ஜெயிக்கிறதா... ஈரல் செல்களுக்குப் பாதுகாப்பு தந்து வைரஸில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறதா என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பித்தநீரைச் சுரக்கும் ஈரல், பித்தம் வசிக்கும் ஓர் உடல் அங்கமாகத்தான் ஒட்டுமொத்தப் பாரம்பரியப் புரிதலும் உள்ளது. அந்த வகையில் காலை நேரத்தில் பல் துலக்கும்போது குமட்டிக்கொண்டு வரும் லேசான பச்சை நிற வாந்தி, பசி மந்தமாக இருக்கும் பொழுதுகள், ஏதேனும் சிகிச்சைக்குப் பின்னரான பசிமந்தம், அஜீரணம் எல்லாவற்றிலும் பித்தத்தால் ஈரல் நோய்வாய்ப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு எல்லாம், கீழாநெல்லியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, மோருடன் கொத்துமல்லி சட்னிபோல் அரைத்து, காலையில் கொடுக்கலாம். அதேபோல் கரிசலாங்கண்ணிக் கீரையையும் பிடுங்கி, நிழலில் உலர்த்தி, பொடி செய்து அரை டீ ஸ்பூன் அளவு உணவுக்கு முன் சாப்பிடலாம். கரிசாலையை ஈரல் நோய்க்கான கற்ப மருந்தாகவே பாரம்பர்ய மருந்துகள் பார்க்கின்றன. 'குருதி தனில் உள்ள கிருமியும் போகுங்காணே...’ என போகர் சித்தர் பேசிய கீரை, கரிசாலை. வள்ளலாரும் சுட்டிக்காட்டிய ஈரலுக்கான மூலிகை என்பது, இன்று நாம் களைச்செடி எனப் பிடுங்கி எறியும் கரிசலாங்கண்ணியைத்தான்!

நலம் 360’  - 25

அதேபோல் மஞ்சள், ஈரலை சாதாரண அழற்சியில் இருந்து ஈரல் புற்று தாக்குதல் வரை காக்கும் மூலிகை. குறிப்பாக, ஆல்கஹாலினால் ஏற்படும் ஈரல் பாதிப்புகளைப் போக்குவதில் மஞ்சளைப்போல பயன் தரும் உணவு வெந்தயம். 'சார்... அப்படின்னா மதுவுக்கு 'சைட் டிஷ்ஷா’ கொஞ்சம் நீங்க சொன்ன கீரையில் மஞ்சள், வெந்தயம், சீரகம் எல்லாம் போட்டு சாப்பிடலாமா?’ எனக் கேட்காதீர்கள். வெறிநாயைக் கடிக்கவிட்டுவிட்டு, ரேபீஸ் மருந்தைக் கலந்து குளிப்பதுபோலத்தான் அது.

இன்றைய சூழலில், ஈரல் மாற்று சிகிச்சைக்கு மிகக் குறைந்தபட்சம் 30 முதல் 40 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அதற்கும் உடல் உறுப்பு தானம் கிடைக்க வேண்டும். அல்லது உடன் பிறந்தவர் தன் ஈரலை கொஞ்சம் வெட்டிக் கொடுக்க வேண்டும். அடுத்த முறை மதுக் கடைக்குச் செல்கையில், துரித உணவை விழுங்கி மகிழ்கையில், நமக்கு அதெல்லாம் சாத்தியமா என்பதைக் கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்!

- நலம் பரவும்...

வீட்டிலேயே செய்யலாம் லிவர் டானிக்!

டுதொடா செடியின் ஆறு அல்லது ஏழு இலைகள் எடுத்துக்கொண்டு, இரண்டு குவளைத் தண்ணீர்விட்டு, கால் குவளையாக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி இலைக்கஷாயம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆடுதொடா இலைக் கஷாயத்தில் பாகு வெல்லம் சேர்த்து ஜீரா காய்ச்சுவதுபோல் பாகுபதத்தில் காய்ச்சிக் கொள்ளுங்கள். இதோடு கால் பங்கு தேன் கலந்து புட்டியில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள். இந்த சிரப் ஈரலுக்கு வலுகொடுத்து ரத்தத் தட்டுகளை உயர்த்தும். நோய் எதிர்ப்பாற்றல் குறைந்த நிலையிலோ, நாள்பட்ட ஈரல் நோய்களிலோ புற்றுநோய் சிகிச்சையின்போதோ, மாதவிடாய் சமய அதிக ரத்தப்போக்கின்போதோ ரத்தத் தட்டுகள் குறையும். அப்போது இந்த ஆடுதொடா டானிக் ரத்தத் தட்டுகளை உயர்த்தி உடலுக்குக் கேடயமாக இருக்கும்.

எந்தவித ரசாயனக் கலப்பும் இல்லாமல் செய்வதால் குறைந்த நாட்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தயாரித்துவைத்துக்கொள்ளவும். இந்த ஆடு தொடா சிரப், சளி மற்றும் இருமலையும்  போக்குவது கூடுதல் பயன்!

ஈரலின் எதிரிகள்!

மது: மதுவில் 6 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, 60 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி... அது ஓர் உயிர்க்கொல்லியே! வேறுபாடு, கடைசிக் காரியத்தின் நாள் எப்போது என்பது மட்டுமே!

புகை: புகை, ஈரலை நேரடியாகப் பாதிக்கும் மிக மோசமான எதிரி.

வலி நிவாரணிகள்: தேவை இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அனைத்தும் ஈரலைப் பலவீனப்படுத்தும்.

ஆபத்தான உணவுகள்:  கெட்ட கொழுப்பினால் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் - சிப்ஸ், குக்கீஸ், பிஸ்கட். குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கூழ்பண்டங்களில் (ஐஸ்கிரீம் போல) சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை சிரப். (ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப்)

இதுபோக, மன அழுத்தம், மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, டைஃபாய்டு முதலிய நோய்களால் நுண்ணுயிர் தொற்றுக் காலங்களிலும் ஈரல் பாதிக்கப்படலாம்!