ஸ்பெஷல் -1
Published:Updated:

பேசாத பேச்செல்லாம்... - 25

ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம்

பேசாத பேச்செல்லாம்... - 25

மீபத்தில் பார்த்த, அடிக்கடி பார்க்கக் கிடைக்கிற காட்சி இது. அசோக் நகர் சாலை ஒன்றில், மரத்துக்குக் கீழே மது போதையில் ஒருவன் விழுந்துகிடந்தான். அவனை அடித்து எழுப்ப முயற்சிசெய்து கொண்டிருந்தாள் அவன் மனைவி. சுற்றிலும் ஆட்கள் ஒரு நிமிடம் நின்று, 'இது ஒண்ணும் புதுசு இல்லையே...’ எனக் கடந்து நடந்துகொண்டிருந்தனர். அவன் மெள்ள எழுவதும் உட்கார முடியாமல் கீழே விழுவதுமாக அவளைப் படுத்திக்கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் மடியில் இருந்த அவர்களது குட்டி மகன், 'அப்பா... அப்பா...’ என விழுந்துகிடந்தவனின் வயிற்றின் மீது ஏறி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். அந்தக் குழந்தைக்கு இரண்டு வயதுக்கு மேல் இருக்காது. குழந்தை அழுவதைக் கண்டதும் அந்தப் பெண், தன் தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அந்தப் பையன் இன்னும் சத்தமாக, 'அப்பா... அப்பா...’ எனக் கதறினான்.

மகனின் அழுகை கேட்காத ஏதோ தூரத்தில் சஞ்சரித்துக் கிடப்பவன்போல, அவனிடம் அசைவே இல்லை. அந்தக் குழந்தை, தன் அழுகையை நிறுத்திவிட்டு அந்தச் சூழ்நிலையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. சொந்த மகனின் அழுகையைப் புறக்கணித்துவிட்டு, குடியை நேசிக்கும் அளவுக்கு அந்த மதுவில் அப்படி என்னதான் இருக்கிறது?

மீபத்தில் நாகர்கோவிலில் சந்தித்த இரு நண்பர்கள், தங்கள் மாவட்டத்தில் ஒரு பகுதியில் மட்டும் 700 இளம்பெண்கள் கணவனை இழந்து தனியாக வாழ்வதாகக் குறிப்பிட்டனர். குடியாலோ, குடியின் மூலம் ஏற்பட்ட விபத்திலோ இறந்தவர்களின் மனைவிகள் அவர்கள். அதில் பாதிக்கும் அதிகமான பெண்களுக்கு ஒன்றோ, இரண்டோ குழந்தைகள் உண்டு. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு திருமணத்துக்கு நகை சேர்ப்பதற்காக வேலைக்குச் சென்று, திருமணம் ஆனதும் கணவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் தள்ளிவிடப்பட்ட பெண்கள் அவர்கள். அவர்களைத் தன்னந்தனியாக விட்டுச் செல்வதை யோசிக்க முடியாதபடி மது மூளையை நிரப்புமா?

பேசாத பேச்செல்லாம்... - 25

ண்பன் ஒருவன் பெருங்கவிஞன்; பகலில் கொஞ்சம் தெளிவோடு இருப்பவன், மாலை 6 மணியானதும் மொபைலில் இருக்கும் அத்தனை எண்களுக்கும், 'ஐ லவ் யூ’ மெசேஜ் அனுப்பத் தொடங்குவான். மதுவினால் வரும் காதல் என நெருங்கியவர்களுக்குப் புரியும். நள்ளிரவுகளில் போன் அலறினால் அவனாகத்தான் இருக்கும் என யூகித்து, போனைக் கவிழ்த்துவைத்துவிடுவேன். 'எப்படியாவது திருத்திவிடலாம்’ என வருடக்கணக்கில் முயன்று, முடியாமல் தோற்று, குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில்கொண்டு அவனைவிட்டு மனைவி விலகிச் சென்றுவிட்டார். நண்பனைவிட்டுச் செல்ல முடியாமல், வயதான அவருடைய அம்மா உடன் இருக்கிறார். 'ஒழுங்காக வீடு வந்துசேர்வானா?’ என்ற கவலையில் அந்த அம்மா, வீதியின் ஓரத்தில் இருக்கும் கோயிலில் வந்து உட்கார்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருப்பார். மகன் சேதாரம் இல்லாமல் வந்துசேர்ந்தாலும் அவர் சந்தோஷப்பட முடியாது. காரணம், வீட்டுக்கு வந்து அடுத்தடுத்த காவடிகளைத் தூக்கத் தொடங்குவார். ஒருநாள் குடியில் அம்மாவையே தூக்கிச் சுற்றிக் கீழே போட, அதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்து ஆறு மாதங்கள் வரை நகர முடியாமல் அவஸ்தைப்பட்டார். 'இதை எல்லாம் பார்க்க நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்?’ என்றும், 'நானும் போயிட்டா இவன்கூட யார் இருப்பா?’ என்றும் எப்போது பார்க்கப் போனாலும் அந்த அம்மா அழுவார். கடந்த 10, 15 வருடங்களில் அவர் அழாத ஒருநாளாவது இருந்திருக்குமா என்பது சந்தேகமே... அம்மாவின் கண்ணீரைவிட அத்தனை வலிமையானதா மது?

உலக அரசியல் முதல், லோக்கல் முனிசிபாலிட்டி அரசியல் வரை என்ன சந்தேகம் என்றாலும் கூப்பிட்டுக் கேட்கக்கூடிய அறிவாளி நண்பன் எனக்கு இருந்தான். 'என் வாழ்வின் மிகச் சிறந்த தோழி’ என என்னைக் குறிப்பிடுவான். வாரம் ஒருமுறை ஜாலிக்காகக் குடிக்க ஆரம்பித்திருந்த அவன், தினமும் பாட்டிலோடு திரிய ஆரம்பித்தான்.

ஒருநாள் என் வீட்டுக்கு வந்து தத்துவமோ, அரசியலோ ஏதோ ஒன்றை போதையின் உச்சத்தில் பேச ஆரம்பித்தான். நண்பனை 'எப்படிக் கிளம்பிப் போகச் சொல்வது?’ என நான் யோசித்துக்கொண்டிருக்கும்போதே, 'ஒரே ஒரு முத்தம் குடு, நான் போயிடுறேன்’ என அடம்பிடித்து என்னை அதிரவைத்தான். முதல்முறையாக ஒரு நண்பனைப் பார்த்து பயந்த தினம் அது. 'குடிக்காத ஒரு தினத்தில் அவனால் அப்படி நடக்கவே முடியாது’ என உறுதியாகக் கூறுவேன். அதன் பிறகு அவனோடு பேசும் தைரியம் எனக்கு வரவே இல்லை. வாழ்வின் மிகச் சிறந்த தோழியைக் காயப்படுத்திவிட்டு, மதுவைத் தொடர முடிகிற அளவுக்கு அத்தனை சிறந்ததா மது?

ன்றாம் வகுப்பு படிக்கும் என் மகளின் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு.  ஒரு மாணவன் வகுப்பில் பேசுவதே இல்லை; சோர்வாகவும் கவலையாகவும் இருக்கிறான்; சாப்பிடுவது இல்லை... என ஆசிரியர் அவனது அம்மாவிடம் புகார்செய்ய, அவர் எங்கள் அத்தனை பேர் முன்பும் அழ ஆரம்பித்தார். 'இவனோட அப்பா திடீர்னு குடிக்க ஆரம்பிச்சுட்டார். வீட்ல ஒரே சண்டை; அழுகை. தினமும் குடிச்சுட்டு ராத்திரி லேட்டா வருவார். அதைப் பத்தி நாங்க கேப்போம்னு பயந்துட்டு, காலையில் சீக்கிரம் எந்திரிச்சு போயிடுவார். வீட்ல இவனுக்கு நிம்மதியே இல்லை மேடம். இவன் சிரிச்சுப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு!’ என அவர் அழுகையை நிறுத்தவே இல்லை. அப்பாவின் போதைக்காக ஆறு வயது சிறுவன் நிம்மதியைத் தொலைப்பது அநியாயம் இல்லையா?

சும்மா ஜாலிக்காகக் குடிக்கிறேன், என்பவர்களிடம் 'எது ஜாலி?’ எனக் கேட்கத் தோன்றுகிறது. மது கொஞ்சமாகக் குடிக்கிற வரை கொண்டாட்டம்தான். வேலைக்காக காடுகளில் நான் தங்கியிருந்தபோது பழங்குடி ஆணும் பெண்ணும் குடித்துக் குதூகலித்ததை அருகிருந்து பார்த்திருக்கிறேன். பகலின் வேலைப்பளு முடிந்து ஒருநாளை கொண்டாட்டமாக முடிக்க, அவர்கள் தேர்ந்தெடுப்பது மதுவை.

பேசாத பேச்செல்லாம்... - 25

நாகர்கோவிலில் என் வீட்டுக்கு இறங்கும் பேருந்து நிறுத்தத்துக்குப் பக்கத்தில், அருந்ததியர் தெரு இருந்தது. துப்புரவுப் பணியாளர்களின் வீடுகள் அங்கே இருக்கும். மாலை வேளைகளில் குடும்பம், குடும்பமாக தெருவில் உட்கார்ந்து குடித்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள். பகல் முழுவதும் நகர் தங்கள் மீது நடத்தும் வன்முறையை, தங்கள் வேலையின் இழிவை, அன்றைக்குப்பட்ட அவமானங்களை அவர்கள் குடித்துக் குடித்தே ஆற்றிக்கொள்வதாகத் தோன்றும். அந்தக் குடி இல்லையேல் உடல், மன வேதனைகளை அவர்களால் கடக்க முடியாது. ஆனால், நகரின் சென்ட்ரலைஸ்ட் ஏ.சி அலுவலக ஊழியர்கள், அவ்வளவு துன்பப்படுகிறார்களா என்ன?

ன்னோடு படித்த சுஜியின் அப்பா பெருங்குடிகாரர். குடித்துவிட்டு எங்கேனும் விழுந்துகிடக்கும் அவரை சுஜியும் அவள் தம்பியும் போய் அழைத்துவருவார்கள். வந்ததும் முதல் வேலையாக மனைவியையும் பிள்ளைகளையும் கண் - மண் தெரியாமல் அடிக்க ஆரம்பிப்பார். விக்கிரமாதித்தன், வேதாளம் கதைபோல இவர்கள் அழைத்து வருவதும், அவர் அடிப்பதும் தினமும் நடக்கும். அவருக்கு இப்படிக் குடித்துவிட்டு அடிப்பதில் என்ன மகிழ்ச்சி இருந்திருக்கும்? குடிப்பது என்னவோ அவர்தான். ஆனால், 'குடிகாரன் மனைவி’ என்ற பட்டத்தை இன்னமும் சுமப்பது சுஜியின் அம்மாதான். 'குடிச்சுட்டுக் கிடப்பானே மாதவன், அவன் பொண்டாட்டில்ல போறது’ என்றுதான் அவரை அடையாளப்படுத்துவார்கள். பகல் முழுவதும் சுற்றியிருக்கும் பெண்களிடம், தன் கணவனின் குடி பற்றியே அழுது தீர்ப்பார் அவர். சமூகம் அவமானப்படுத்தும் அடையாளம்கொண்ட ஒரு பெண்ணின் கணவனாக, சுஜியின் அப்பாவால் ஒரு மணி நேரமாவது வாழ முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக 'குடிகாரனின் மனைவி’ என்ற பட்டத்தைத் தூக்கி எறிய முடியாமல் அவமானத்தில் சுஜியின் அம்மா அந்த ஊரில் இருந்துவருகிறார்.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு படித்த இந்திக் கதையோ, குஜராத்திக் கதையோ ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் இருப்பார்கள். காலையில் அவர் அன்பாக மனைவியிடம் பேசிவிட்டு வேலைக்குக் கிளம்புவார். மாலை ஆக, ஆக அந்தப் பெண்ணுக்குப் பதற்றம் அதிகரிக்கும்; கைகள் நடுங்கத் தொடங்கும்; தொண்டை வறண்டுபோகும். வெளியே வந்து நிற்கப்போகும் ஆட்டோவுக்காக வாசலுக்கும் அறைக்குமாக நடக்கத் தொடங்குவார். அடிக்கடி மணி பார்த்துக்கொள்வார். குழந்தைகளை வெகு சீக்கிரம் தூங்கவைப்பார். தூங்க மறுக்கும் குழந்தைகளை அடித்துத் தூங்கவைப்பார். அழுதுகொண்டே தூங்கிப்போகும் குழந்தைகளை நினைத்து அழுவார். நேரமாக, நேரமாக அவருக்குப் பதற்றம் கூடும். வெளியில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கும். பதற்றத்துடன் ஓடிவந்து கதவைத் திறப்பார். குடித்த கணவன் ஆட்டோ டிரைவரின் உதவியோடு வீட்டுக்குள் வருவார்.

குடிகாரக் கணவன் அழுவார்; சிரிப்பார்; மனைவியைத் திட்டுவார்... வீட்டுக்கு வந்து மீண்டும் குடிக்க ஆரம்பிப்பார். மனைவியின் கேரக்டரை காலி செய்வார்; அடிப்பார்; விழுந்து தூங்கிப்போவார். அந்த இளம் மனைவிக்கு அவருடனான தாம்பத்யம் நின்றுபோய் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். குழந்தைகள் அவரைப் பார்த்தாலே பயந்து ஒளிந்துகொள்வார்கள். அவர் வீட்டுக்குப் பணம் தருவதை நிறுத்திய நாளில் இருந்து அந்த மனைவி வேலைக்குப் போக ஆரம்பித்திருப்பார். அதிகாலை வரை கணவனோடு போராடிவிட்டு, பகலில் அலுவலகத்தில் போய்த் தூங்கி வழிந்து திட்டு வாங்குவார். அந்தக் குடியிருப்பின் பிற ஆண்கள், இந்தப் பெண்ணைக் கேலியாகப் பார்ப்பார்கள்; உதவுவதுபோல் வந்து வழிவார்கள்; கணவனால் அவர் சந்தோஷமாக இல்லை என்ற முடிவுக்கு அவர்களாகவே வந்து, எப்படி எப்படியோ அந்தப் பெண்ணை நெருங்க முயற்சிப்பார்கள். ஒருநாள் அப்படி ஒருவன் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள, 'கேக்குறதுக்கு யாரும் இல்லைன்னு நினைச்சியா?’ என அவள் சீற, 'எங்க... உன் புருஷனை வரச்சொல்லு பார்ப்போம்’ என நக்கலாகச் சிரிப்பான்.

சிரமப்பட்டு தன்னை விடுவித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து, அவளுக்காகக் காத்திருக்கும் குழந்தைகளை அடிக்க ஆரம்பிப்பாள். குழந்தைகள் சாப்பிடாமல் தூங்கிப்போக, எப்பவும்போல நீந்தியபடி வீடு வந்துசேர்வான் அந்தக் கணவன். அன்று அவளுக்கு ஆக்ரோஷம் கலந்த கோபம் வரும். விஷம் வைத்துக் கொன்றுவிடலாம் என முடிவுசெய்வாள். விஷத்தோடு அவன் அருகில் செல்லும்போது, அவள் மீது மிகக் காதல்கொண்ட ஒரு தருணத்தைப் பற்றி அவன் உளறிக்கொண்டு இருப்பான். இயலாமையில் அந்த விஷத்தை அவளே குடிப்பாள். மரணிப்பதற்கு முன் குழந்தைகளைப் பார்க்கத் தோன்றி, குழந்தைகள் அருகே வருவாள். குழந்தைகளை மாலை அடித்தது நினைவுக்கு வரும். தான் இல்லாவிட்டால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் எனப் பதறுவாள். குழந்தைகளை எழுப்பி, தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கதறுவாள். என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாத இரு குழந்தைகளும் அப்பாவை எழுப்பப் போராடுவார்கள். மிதமிஞ்சிய போதையின் காரணமாக அவன் குழந்தைகளிடம் எரிச்சலுறுவான். மீண்டும் அம்மாவிடம் வந்து குழந்தைகள் அழுவார்கள். அம்மாவும், அப்பாவைப் போலவே அந்தக் குழந்தைகளின் குரல்கேட்காத ஓர் இடத்துக்குச் சென்றதும், கதை முடிந்துவிடும். இந்தக் கதை, இன்றும் எண்ணற்ற வீடுகளில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது!

'ஆபீஸ், வேலை, அது, இதுனு ஆயிரம் பிரச்னைகள்... அதான் குடிக்கிறோம்’ எனச் சொல்லும் ஆண்கள், தங்கள் வீடுகளில் இருக்கும் பெண்களையும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க மாட்டார்களா? அவர்கள் பிரச்னைக்கு அவர்கள் எதைக் குடிப்பது? குடிகாரக் கணவனோடு மல்லுக்கட்டும் தோழி ஒருத்தி இப்படிச் சொல்வாள்... 'பிரச்னைனு குடிக்கிறானாம். டெய்லி குடிச்சுட்டு வர்ற இந்தாளைவிட பெரிய பிரச்னை ஏதாவது இருக்க முடியுமா, இவரையே நாம சமாளிக்கலையா?’. இருக்கிற பிரச்னைக்கு பெண்கள் குடிக்க ஆரம்பித்தால் இந்த நாடு தாங்குமா? 'குடிச்சுட்டு வந்து நீ பண்ற இம்சை தாங்கலை. இன்னில இருந்து நானும் குடிக்கிறேன்’ என, ஒரு பெண் தன் பிரச்னைக்குப் பரிகாரம் தேட ஆரம்பித்தால்?

பேசாத பேச்செல்லாம்... - 25

ஒரு குழந்தை படிப்பை நிறுத்தியது, ஒரு பெண்ணின் கல்யாணம் நின்றுபோனது, ஒரு பெண் தன் கணவனை இழந்தது, ஒரு குடும்பம் தன் வீட்டை விற்றது, ஒரு குடும்பம் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தது... என எல்லா துயரங்களுக்கும் பின்னணியில் குடியைக் கைகாட்ட முடியும்.

'வாழ்க்கையைக் கொண்டாடுவதற்கு குடிக்கிறேன்’ எனச் சொல்பவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாமல் அதில் இருந்து தப்பிக்கத்தான் குடிக்கிறார்கள் எனத் தோன்றுகிறது. உண்மையில் இந்த நேரத்தையும் வாழ்க்கையையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என அவர்களுக்குத் தெரியவில்லையோ எனத் தோன்றுகிறது. கொண்டாடுவதற்கு மதுவைத் தவிர நமக்கு ஒன்றுமே இல்லையா?

அசோக் நகர் சாலையில் குடித்துவிட்டு விழுந்துகிடந்தவன் மீது உட்கார்ந்து அழுத குழந்தை, அவன் எழுந்திருக்க மாட்டான் எனத் தெரிந்ததும் அவன் மீது இருந்து எழுந்து போய்விட்டது. கொஞ்ச நேரம் அவனை வேடிக்கை பார்த்துவிட்டு அம்மா முகத்தையே பார்த்தபடி அம்மா மடியில் போய் உட்கார்ந்தது.  கொஞ்ச நேரத்தில் அங்கிருந்தும் எழுந்து, அருகே கிடந்த இலை, கற்களை எடுத்து விளையாட ஆரம்பித்தது; பிளாட்பாரத்தில் ஏறி-இறங்கி விளையாட ஆரம்பித்தது; போகிற, வருகிறவர்களை எல்லாம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தது; தன்னால் மாற்ற முடியாத அந்தத் துயரத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, அதுபாட்டுக்கு விளையாட ஆரம்பித்தது.

உண்மையில் துயரங்களை எதிர்கொள்வதையும், அதில் இருந்து தன்னை விலக்கிக்கொள்வதையும் அந்தத் தகப்பன் ஏன் அந்தக் குழந்தையிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை? மதுவற்ற மாலை நேரம் ஒன்று அவனுக்கு வாய்த்து, வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி என்பதை அந்தக் குழந்தை அவனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என எனக்கு ஆசையாக இருக்கிறது!

- பேசலாம்...