ஸ்பெஷல் -1
Published:Updated:

கடவுள் தொடங்கிய இடம் - 25

த்ரில் திகில் தொடர்கதைஅ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

ச்சியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு நிஷாந் அவசரமாக வெளியே வந்தபோது, 11 வயது சிறுமி ஒருத்தி மருத்துவமனை வரவேற்பறையில், ''அங்கிள்... அங்கிள்...'' என்று கத்தினாள். அவன் நிற்காமல் நடக்கவே, அவள் துரத்தி வந்து அவன் கையைப் பிடித்து மறுபடியும் ''அங்கிள்'' என்றாள். அந்தச் சிறுமியை நிஷாந்துக்கு யார் எனத் தெரியவில்லை. அழகான குழந்தை. நல்ல சிரிப்பு. ''எனக்கு உங்களைத் தெரியும். உங்களுக்கு என்னைத் தெரியலையே'' என்று சொல்லி, பின்னுக்கு வளைந்து பெருமிதமாகச் சிரித்தாள். குனிந்து குழந்தையின் கன்னத்தைத் தடவி, ''என்னம்மா வேணும்'' என்று கேட்டான். நிஷாந்துக்குள் குழப்பம்.

பின்னால் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்திருந்த, மிக நாகரிகமாக உடை அணிந்திருந்த தமிழ்ப் பெண் ஒருத்தி, நிஷாந்தைப் பார்த்துச் சிரித்தாள். அவனால் அந்தப் பெண்ணை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. பின்னர் எழுந்து நடந்துவந்தாள். பளிச்சென்ற சருமம். நெருப்புப் பற்றவைத்த செருப்புபோல டக் டக்கென ஓசையெழுப்பின குதி உயர் காலணிகள். நிஷாந்தின் ஒரு மாதச் சம்பளம் கொடுத்தாலும் வாங்க முடியாத கைப்பை. தலைமுடி சாதாரணமாகத் தொங்கினாலும் சிறந்த சிகை அலங்காரியின் கைவண்ணம் தெரிந்தது. அளவான உயரம். அந்தந்த அங்கங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு சதை.

''என்னைத் தெரியவில்லையா? நான்தான் ஈஸ்வரி. உக்ரைனில் ஒன்றாக இருந்தோமே. இவள்தான் லைலா; என் மகள்.''

நிஷாந்தின் வாய், மீனின் வாய்போல சத்தம் இல்லாமல் திறந்து திறந்து மூடியது. வருடங்கள் உதிர்ந்து ஞாபகம் வெளியே வந்தது. நின்றபடியே இருவரும் பழைய கதைகளைப் பேசினார்கள். நிஷாந் சுருக்கமாகத் தன் வரலாற்றைச் சொன்னான். அதன் பல அத்தியாயங்களை ஈஸ்வரியால் நம்பவே முடியவில்லை. அவள் எப்படி கனடாவுக்கு வந்து சேர்ந்தாள் என்பதை விவரித்தபோது, அதுவும் திகில் கதையாகவே இருந்தது. அவள் தன் முகவரி அட்டையை நிஷாந்திடம் கொடுத்துச் சொன்னாள்... ''உங்களை நான் பலதடவை நினைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் நீங்கள். இங்கே நான் சந்தித்த எல்லாரிடமும் விசாரித்திருக்கிறேன். உங்களைப்போல நேர்மையான ஒருவரை, மனிதாபிமானம் உள்ள ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவசியம் என்னை வந்து பாருங்கள்'' என்று கூறிவிட்டு மகளின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்துபோனாள். இது அந்த ஈஸ்வரியா? அவள் இருக்கையில் அமரும் முன்னர் ஒரு மகாராணி அதில் உட்காரப்போவதுபோல, அவசரமாக அலெக்ஸ் கையினால் ஆசனத்தைத் துடைத்துவிட்டது நினைவுக்கு வந்தது.

கடவுள் தொடங்கிய இடம் - 25

நிஷாந் மீள முடியாத மனவேதனையில் இருக்கும்போது, அம்பிகாபதி மாஸ்ரரை அழைப்பான். ஒருசமயம் தற்கொலை செய்யலாமா என யோசித்தபோது அவரை அழைத்தான். அவ்வளவு வேதனைக்கும் அவமதிப்புக்கும் உள்ளாகியிருந்தான். வாழ்க்கையில் இதனிலும் கீழே இறங்க முடியாது என அவன் உணர்ந்திருந்த சமயம் அது. அகதிக் கோரிக்கை இழுபட்டுக்கொண்டேபோனது. அவன் வேறு வேலையில் சேர விருப்பப்படுவதை சற்குணநாதனிடம் சொன்னபோது, நிஷாந் அகதிக் கோரிக்கை விண்ணப்பத்தில் சொன்ன பொய்களை குடிவரவுக்கு அம்பலப்படுத்தப் போவதாக அச்சுறுத்தினார். ஒவ்வொரு சதத்துக்கும் அவர் கையை எதிர்பார்த்திருக்கும் பரிதாபம். காசு கணக்கு காட்டும்போது பிரச்னை வரும். ஒருமுறை ஐந்து சதம் கணக்கில் குறைந்தது. அதற்கு அவர் சொன்னது சம்பந்தம் இல்லாதது. 'ஐந்து சதம் எனக் குறைவாக நினைக்கக் கூடாது. ஐந்து சதத்தில் ஒரு பீவர் விலங்கு இருக்கும். ஏன் தெரியுமா? கனடா பீவர் தோலில் எழுப்பப்பட்டது. பீவர்கள் இல்லையென்றால் கனடா இல்லை. அதன் ஞாபகமாக உண்டாக்கப்பட்டது ஐந்து சதக் குறி. அதைத் தொலைத்தால், கனடாவை அவமரியாதைச் செய்வதுபோல’ - இப்படிப் பெரிய பிரசங்கம் செய்தார்.

அன்றுதான் அம்பிகாபதி மாஸ்ரரை அழைத்தான், ''மாஸ்டர்... என்னோடு வந்தவர்கள், எனக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் எங்கேயோ உயரத்துக்குப் போய்விட்டனர். நான் மாத்திரம் அடிமைபோல் வாழ்கிறேன். இங்கே அடைபட்டுக்கிடக்கிறேன். இன்னும் 20 வருடங்கள் சென்றாலும் என் நிலைமை மாறாதுபோல. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது... ஏன் எனக்கு மட்டும்?''

அம்பிகாபதி மாஸ்ரர் அன்று சொன்னதை நிஷாந் என்றைக்கும் மறந்தது இல்லை. அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆதர் ஆஷின் கதையைச் சொன்னார்... ''70-களில் உலக டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் ஆதர். விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் பெற்ற அவருக்கு எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, குறைபாடு உடைய  ரத்தம் ஏற்றியதால் வந்த விளைவு. அப்போது அவருடைய விசிறி ஒருவர் இப்படி எழுதினார். 'ஏன் உங்களுக்கே உங்களுக்கு மட்டும் கடவுள் இப்படி தண்டனை கொடுத்திருக்கிறார்?’ அதற்கு அவர் சொன்ன பதில் உலகப் பிரசித்தம்.

'வருடாவருடம் ஐந்து மில்லியன் மக்கள் டென்னிஸ் ஆட்டத்துக்குப் புதிதாக வருகிறார்கள். ஐந்து லட்சம் பேர் அதைத் தொடர்கிறார்கள். 50 ஆயிரம் வீரர்கள் போட்டிகளில் பங்குபெறுகிறார்கள். அதில் 5,000 பேர் வெற்றி பெற்று முன்னேறுகிறார்கள். 500 பேர் வெற்றியில் உயர் நிலையை அடைகிறார்கள். அதில் 50 பேர் உலகச் சாம்பியன் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். இப்படிப் பங்குபெற்ற 50 பேரில் விம்பிள்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போட்டிகளில் முதலாவதாக வந்து, இன்று உலகின் முதல் இடத்தில் இருக்கிறேன். அப்போதெல்லாம் நான் 'கடவுள் ஏன் எனக்கே எனக்கு மட்டும் இப்படிச் செய்கிறார்?’ என முறைப்பாடு சொல்லவே இல்லை. வெற்றிகளை ஏற்கும்போது தண்டனைகளையும் ஏற்கத்தானே வேண்டும்’ - ஆஷ் சொன்னார். நான் என்ன சொல்கிறேன் என்றால், நீர் கஷ்ட காலத்தில் இருக்கிறீர். இதுவும் கடந்துபோகும். நல்ல செய்திகள் உங்களைத் தேடிவரும். காத்திருங்கள்'' என்றார்.

இப்போது நிஷாந்தின் அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்டுவிட்டது. வேலை ஒன்று இருப்பதாக ஈஸ்வரி சொல்கிறாள். ஆசிரியர் முதல் நாள் கணக்கை கரும்பலகையில் இருந்து அழித்துவிட்டு புதுக் கணக்கு எழுதுவதுபோல, நிஷாந் புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். இத்தனை வருடங்கள் சாவியைத் தேடினான்; ஆனால் கதவு திறந்துதானே கிடந்தது.  

பேருந்தில் அறைக்குத் திரும்பும்போது அவன் சிந்தித்தான். அவனால் நம்பவே முடியவில்லை. முந்தி ஒல்லியாக இருந்த ஈஸ்வரி இன்று எப்படி அழகானவளாக, நவநாகரிகமானவளாகத் தெரிந்தாள். அத்துடன் அவள் பேசிய விஷயங்களும் சொன்ன விதமும் அபூர்வமானதாக இருந்தன. உக்ரைனில் அன்றைய சம்பவத்துக்குப் பின், அவள் கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதிருக்கிறாள். கணவர் பிரான்ஸில் இருந்து திரும்பி, எவ்வளவோ பணம் செலவழித்து அவளை அழைத்துப்போய்விட்டார். இரண்டு வருடங்கள் அவள் பிரான்ஸில் படித்தாள். பின்பு இருவரும் மகளுடன் கனடாவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். இங்கே ஈஸ்வரியின் கணவர் தொழிற்சாலை ஒன்றை நிறுவி, உற்பத்தியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். அறைக்குத் திரும்ப எடுத்துக்கொண்ட அத்தனை நேரமும் அவன் காதுக்குள் ஒலித்தது ஒரு வார்த்தைதான்... 'நேர்மையானவர்.’ உக்ரைனில் வாழ்ந்த அந்த நாட்களில், நிஷாந் ஈஸ்வரியுடன் கொஞ்சம் வார்த்தைகள் மட்டுமே பேசியிருப்பான். ஆனால், அவனை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். அவன் நேர்மையானவன் என்ற முடிவுக்கும் அவள் எப்படியோ வந்திருக்கிறாள். அவனுடைய கனடா வாழ்க்கையை அவள் அறிய நேரிட்டால், அப்படி நினைத்திருக்க வாய்ப்பு உண்டா?

இரண்டு நாட்கள் கழித்து ஈஸ்வரி கொடுத்த முகவரிக்கு நிஷாந் போனான். அவளுடைய அலுவலகம், டொரன்டோ மையப் பகுதியில் பெரிய கட்டடத் தொகுதியின் 14-ம் மாடியில் இருந்தது. வரவேற்பறையில் இருந்த பெண்ணின் உடையையும் அலங்காரத்தையும் பார்த்தவுடன், தன் உடையைக் குனிந்து பார்த்தான்; கூச்சமாக இருந்தது. நிஷாந் வந்திருப்பதாக அவள் அறிவித்தாள். வரவேற்பாளினி அவனை அமரச் சொன்னாள். சோபாவில் அமர்ந்தான். அது அரை அடி ஆழம் புதைந்து சமநிலையை அடைந்தது. 10 நிமிடங்களுக்கு ஒரு தரம் யாரோ துப்புரவாக்கியதுபோல முழு அலுவலகமும் பளிச்சென இருந்தது. ஒருவித சுகந்த வாசனை எங்கேயிருந்து வருகிறது என்பதை யூகிக்க முடியாதவாறு வீசியது. மூன்றடி உயரமான கண்ணாடி ஜாடியில் சிவப்பு, மஞ்சள் ட்யூலிப் பூக்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தன.

உள்ளே வரச்சொன்னதும் எழுந்து நடந்தான். கம்பளம் தொடங்கும் இடம் வந்ததும் நின்றான். பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு முன்னேறினான். கதவைத் தட்டியதும் உள்ளேயிருந்து பதில் வந்தது. ஈஸ்வரி எழுந்து வெளிநாட்டுத் தூதுவர் ஒருவரை வரவேற்பதுபோல கைகொடுத்தாள். அலுவலகம் வெளிர் பச்சை நிறத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. புத்தக அடுக்கில் சட்டப் புத்தகங்கள் ஒருவித ஒழுங்கோடு தனிம அட்டவணைபோல அடுக்கப்பட்டிருந்தன. கணினித் திரையில் ஆறு சாளரங்கள் திறந்துவைத்து ஈஸ்வரி வேலை செய்துகொண்டிருந்தாள். அகத்திலே ஏற்பட்ட பதற்றத்தைக் காட்டாமல் சாதாரணமாக அமர்ந்தான் நிஷாந்.

மறுபடியும் நிஷாந் பற்றி வேறு விவரங்களை ஈஸ்வரி கேட்டு அறிந்துகொண்டாள். திடீரென ''உங்களுக்கு 'தேலோன்’ பற்றி தெரியுமா?'' என்று கேட்டாள்.

''அது கனடாவில் ஓடும் ஓர் ஆறு'' என்று நிஷாந் சொன்னான்.

அவள் சொன்னாள்... ''தேலோன் பள்ளத்தாக்கு கனடாவின் யுக்கோன் பிரதேசம், வடமேற்குப் பிரதேசம், வடதுருவ வட்டம் எல்லாவற்றையும் இணைத்துக்கிடக்கிறது. அந்த இடத்துக்கு நான் போயிருக்கிறேன். ஆதியில் இருந்து மாற்றம் அடையாமல்,  பூமி அன்று இருந்த மாதிரியே இன்றும் இருக்கிறது. அதே மரங்கள், அதே ஆறு, அதே மிருகங்கள், அதே பறவைகள், அதே மனிதர்கள். அந்த இடத்தைப் பார்க்கும் ஒரு மனிதரால் கண்களைத் திரும்ப எடுக்க முடியாது. பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றும்.  

அந்த இடத்துக்குப் பெயர் 'Where God Began.’ கடவுள் அங்கே இருந்துதான் ஆரம்பித்தார் எனச் சொல்வார்கள். ஆகவேதான் எங்கள் கம்பெனிக்கு 'Thelon Export Company’ எனப் பெயர் சூட்டினோம். இதை ஆரம்பித்த நாளில் இருந்து வியாபாரம் பெருகியபடியே இருக்கிறது. அதற்கு, கடவுளின் ஆசீர்வாதம்தான் காரணம். ஒட்டாவாவில் ஒரு கிளை திறந்திருக்கிறோம். இந்தக் கிளை திறந்தபோது உங்களை நினைத்தேன். நம்புவது கடினம், ஆனால் உண்மை. உங்களைப்போல நேர்மையாக உழைக்கக்கூடிய அறிவான ஆள்தான் எங்களுக்குத் தேவை. ஒன்றைச் சொன்னதும் உடனே புரிந்துகொள்ளும்தன்மை உங்களிடம் இருக்கிறது. நீங்கள் முதலில் போய் பொறுப்பேற்க வேண்டும். என் கணவர் அங்கே வந்து, மீதி விவரங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருவார். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம். ஏனென்றால், நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் நீங்கள்தான். உங்களுக்கு நன்றி'' - ஈஸ்வரிக்குக் குரல் தழுதழுத்தது.

கடவுள் தொடங்கிய இடம் - 25

ஒட்டாவாவுக்கு பேருந்து பிடித்து நிஷாந் ஏறியபோது, ஒருவருக்கும் சொல்லவில்லை. புதுவேலைக்கான உத்தரவு பையில் இருந்தது. முதல் வேலையாக அம்மாவை அழைத்து அந்த நற்செய்தியைச் சொல்லவேண்டும் என நினைத்தான். ஒட்டாவாவில் கம்பெனி விருந்தினர் அறையில் தங்குவான். பின்னர் தனக்கென ஓர் இடம் பார்ப்பான். மேலாளர் வேலை என்று மட்டுமே ஈஸ்வரி சொன்னாள். ஆனால், விவரங்கள் தெரியவில்லை. நிஷாந் வாழ்க்கையில் கடந்துவந்த பாதைகளை யோசித்துப் பார்த்தான். எத்தனை நாடுகள், எத்தனை மனிதர்கள்? இந்தத் தருணத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அம்பிகாபதி மாஸ்ரர், 'ஜேனஸ்’ எனும் ரோமக் கடவுள் பற்றி சொல்லியிருக்கிறார். இரண்டு தலைகள் கொண்டது. ஒன்று வலது பக்கம் பார்க்கும்; மற்றொன்று இடது பக்கம் பார்க்கும். ஒன்று இறந்தகாலத்தைப் பார்க்கிறது; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கிறது. நிகழ்காலம் என்ற ஒன்று மனிதனுக்கு இல்லை. எல்லாமே எதிர்காலம்தான். அதை வசப்படுத்துவது அவன் கையில்தான் உள்ளது.

பேருந்தில் நிஷாந் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணின் மடியில் ஒரு நாய்க்குட்டி படுத்திருந்தது... சடை வைத்த அழகான வெள்ளையில்.

''அழகாக இருக்கிறதே. என்ன வகை நாய்க்குட்டி?'' என்று ஆச்சர்யமாகக் கேட்டான் நிஷாந்.

அவள், ''இது குட்டி இல்லை. மால்டீஷ் வகை. வளர்ந்தாலும் இதே சைஸ்தான்'' என்றாள்.

அவர்கள் பேசத் தொடங்கினார்கள். அவள் வங்கி வேலையில் சேர்வதற்காக முதன்முதலாக ஒட்டாவாவுக்குப் போகிறாள். நிஷாந்தும் முதல் வேலை கிடைத்து ஒட்டாவாவுக்குச் செல்வதாகச் சொன்னான்.

''எதற்காக ஒட்டாவா நகரத்தைத் தேர்வுசெய்தீர்கள்?'' - நிஷாந் கேட்டான்.

கடவுள் தொடங்கிய இடம் - 25

''கனடாவின் தலைநகரம் இது. அத்துடன் உலகிலேயே அதிசுத்தமான நகரம் எனப் படித்திருக்கிறேன். மனிதர்களும் நல்லவர்கள். இவை போதுமான காரணங்கள்'' என்றாள்.  

அவள் கண்கள் அவனைப் பிரமிக்க வைத்தன. கத்தியால் கீறியதுபோல நீண்ட கோடு போன்ற கண்கள். நாயின் சடையில் அவள் கைவிரல்கள் அளைந்து மறைந்துபோயின. நிஷாந் அவளுடைய பெயரைக் கேட்டான்.

''த்ரூபா'' என்றாள்.

அவன் சொன்னான்... ''பெயரின் பின்பகுதி எனக்குப் பிடித்திருக்கிறது. எங்கள் மொழியில் அதற்கு 'பணம்’ எனப் பொருள்.''

அவள் சொன்னாள்... ''முன்பகுதி எங்கள் மொழியில் 'எச்சரிக்கை’.''

'அவள் என்ன மொழி பேசுகிறவளாக இருக்கும், ஒருவேளை கேலி செய்கிறாளோ?’ என நிஷாந் நினைத்தான்.

பேருந்து இறுதி நிறுத்தத்தை அடைந்தபோது ஒரு பெரிய மரத்தை இருவரும் பார்த்து அதிசயித்தனர். காலம் வரும் முன்னரே எல்லா இலைகளையும் உதிர்த்த மரம், ஒரே ஓர் இலையை மட்டும் காவியது.

''அத்தனை இலைகளை உதிர்த்தாலும், இந்த மரம் இந்தக் கடைசி இலையை மட்டும் விடுவதாக இல்லை'' என்றான் நிஷாந்.

த்ரூபா சொன்னாள்... ''இல்லை... இலைதான் 'என்னை விட்டுவிடாதே’ எனக் கெட்டியாகப் பிடித்தபடி இருக்கிறது.''

அவன் சொன்னான்... ''உலகத்தின் அதிசுத்தமான நகரம் இது. அதை நாம் கெடுக்க வேண்டாம்'' என மரமும் இலையும் சேர்ந்து தீர்மானித்திருக்கலாம்.''

இருவரும் சிரித்தார்கள்.

'திவ்யா, லாரா, அகல்யா இவர்களுடன் எத்தனை நெருக்கமாகப் பழகினோம். ஆனால், அவர்கள் உடனுக்குடன் என்னை மறந்தார்கள்’ - பேருந்தில் இருந்து இறங்கி நடந்தபோது நிஷாந் இப்படித்தான் நினைத்தான். த்ரூபா அழகாக இருக்கிறாள். அவன் மனம் ஒன்று நினைத்தால், அவள் அது பற்றி உடனேயே பேசுகிறாள். நிஷாந்தின் செல் நம்பரைக் கேட்டு வாங்கிப் போகிறாள். தொடர்புகொள்வாளா? ஒருவன் சைக்கிளிலே இடிப்பதுபோல வேகமாக முட்ட வந்து சடாரென வெட்டிச் சென்றான். நிஷாந்துக்கு எரிச்சல் வரவில்லை. யாரோ அவனுடைய உடம்பில் காற்றை நிறைத்து விட்டதுபோல இருந்தது. ஆகாயம் நீலமாக ஒளிர்ந்தது. குட்டிக் குட்டி வெண்முகில்கள் ஒரே திசையில் மெள்ள நகர்ந்தன. அவனுடைய புதிய செல்போனில் பாதையைத் தேடியபடியே நடந்தான். பூங்கா இருக்கையில் இளம் பெண்கள் அருகருகே அமர்ந்து, ஒரு செல்போனில் இரு வொயர்கள் மூலம் காதுகளில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.

''ஹாய்'' என்றான். அவர்களும் ''ஹாய்'' என்றனர். இரவு கீழே இறங்கி வர வர அவன் விருந்தினர் விடுதியை நோக்கி நடந்தான். முழு இருட்டு இறங்கியவுடன் அவன் தெரு வந்தது. ஒவ்வொரு கதவையும் உன்னிப்பாகப் பார்த்தான்.

ஓக் மரத்தில் செய்த பெரிய கதவு. வெளியே 'Thelon Export Company’ என எழுதியிருந்தது தெருவிளக்கில் துல்லியமாகத் தெரிந்தது. அப்படி ஒரு வழுவழுப்பான கதவை அவன் இதுவரை கண்டது இல்லை. ஈஸ்வரி தந்துவிட்ட திறப்பை கையிலே எடுத்தான். விளக்குகள் ஜெகஜ்ஜோதியாக எரிந்த இரவு நேரத்தில், கதவில் இருந்த துளையை நோக்கி திறப்பை கொண்டுபோனான். அவனுடைய எதிர்காலம் கதவுக்கு அந்தப் பக்கம் இருந்தது. அந்த நேரத்தில் திடீரென மின்சாரம் வெட்டி இருள் சூழ்ந்தது. சாதாரண மின்வெட்டு என, சிறிது நேரம் திகைத்து நின்றான். அது 10 மில்லியன் மக்கள் கனடாவிலும், 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவிலும் அனுபவிக்கப்போகும் சரித்திர மின்வெட்டு. தேதி வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2003. அதுபற்றி அடுத்த நாள் காலைப் பத்திரிகைகள் எழுதும். நிஷாந்தின் கையிலே உள்ள திறப்பு அவன் கண்ணுக்குத் தெரியவில்லை; சாவித் துவாரம் தெரியவில்லை; கதவு தெரியவில்லை; வீடு தெரியவில்லை; கனடா தெரியவில்லை!

- கடவுள் தோன்றினார்