Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 25

பாரதி தம்பி, படம்: ரமேஷ் கந்தசாமி

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 25

பாரதி தம்பி, படம்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டும். மாறாக, நமது வகுப்பறைகளில் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் தெய்வ நம்பிக்கையைப்போல பாடங்கள் நடத்தப் படுகின்றன. தர்க்கரீதியிலான கேள்விகளுக்கு அங்கு இடமே இல்லை. ஆனால், அறிவியலை நம்பிக்கையின் பெயரால் கற்க முடியுமா? கேள்வி கேட்பதுதான் அறிவு. அதுதான் அறிவியல். கேள்வி கேட்கவே அனுமதிக்காத நமது வகுப்பறை, எப்படி அறிவை வளர்க்கும்?

மாணவர்களைப் பேச அனுமதிக்க வேண்டும். ஆசிரியரே பேசிக்கொண்டிருக்கும் இந்த வகுப்பறை, மிகவும் சோர்வூட்டுகிறது. 'ஆசிரியர்களுக்கு விவரிப்பு வியாதி இருக்கிறது’ என்கிறார் புகழ்பெற்ற மாற்றுக்கல்விச் சிந்தனையாளர் பாவ்லோ பிரையர். இந்த நிலையை மாற்ற, 'வகுப்பில் ஆசிரியரின் பாத்திரம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும்’ என்ற கருத்து உலகெங்கும் வலுப்பெற்று வருகிறது. Teacher should be seen; not heard  என்பார்கள். அதாவது, வகுப்பில் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; அவர்களின் குரல் மட்டுமே ஒலிக்கக் கூடாது.

''ஆசிரியர் என்பவர், ஒவ்வொரு பக்கமாக, ஒவ்வொரு பாடமாக கிளிப்பிள்ளைக்குச் சொல்லித்தருவதைப்போல சொல்லித்தர வேண்டியது இல்லை. சுயமாகக் கற்கும் ஆற்றலும் முனைப்பும் மாணவர்களுக்கு இருக்கிறது. அதைத் தூண்டிவிடுவதுதான் ஆசிரியரின் வேலை. முக்கியமாக, மாணவர்களையே ஆசிரியர்களாக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட வேண்டும் எனில், ஓட்டித்தான் கற்றுக்கொள்ள முடியும். யாரோ ஒருவர் ஓட்டுவதை வேடிக்கை பார்த்துக் கற்றுக்கொள்ள முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 25

மாணவர்களே ஆசிரியர்களாக மாறும் அந்தத் தருணத்தில் மகத்தான மாற்றங்கள் நிகழ்கின்றன. முற்றிலும் எதிர்பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத கோணங்களில் அவர்கள் கற்பித்தலை நிகழ்த்துகின்றனர். தன் சக வயது பிள்ளைகளுக்கு எப்படிச் சொன்னால் புரியும் என்ற உத்தி அவர்களுக்குத் தெரியும். தன்னை ஆசிரியருக்கு இணையாக மதிக்கும் அந்த வகுப்பறையை, மாணவர்கள் ஆழமாக நேசிக்கின்றனர். அதற்கு முடிந்தவரை நேர்மையாக இருக்க முயற்சிக்கின்றனர். ஆரம்பத்தில் சில வகுப்புகளில் சிரிப்பும் கேலியும் இருந்தாலும் சில நாட்களிலேயே ஆச்சர்யப்படத்தக்க ஒழுங்குமுறை வந்துவிடுகிறது. ஆசிரியரின் முதிர்ச்சியான மனப்பாங்கும், 'எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற முன்முடிவும் மாணவர்களுக்கு இல்லை என்பதால், தவறுகளை ஏற்றுக்கொண்டு திருத்திக்கொள்ளவும் செய்கின்றனர்'' என்கிறார் இத்தகைய நடைமுறையை முயற்சித்த தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கலையரசன்.

ஆசிரியரின் பாத்திரம் குறைய வேண்டும் என்பதைப்போலவே 'வகுப்பறை’யையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்களும் கேட்கின்றன. நான்கு சுவர்கள், கரும்பலகை, ஆசிரியர் என்ற சோர்வூட்டும் சூழலில் இருந்து மாணவர்களை விடுவிக்கும்போதுதான் அவர்களின் கற்றல் மேலும் வெளிச்சம் அடைகிறது. கொஞ்ச நேரம் நடந்தால் தோப்பு, வயல்காடு, ஆற்றங்கரை என பசுமை சூழ அமைந்திருக்கும் ஒரு பள்ளியில், நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து தாவரவியல் படிப்பது பெரும் அறிவீனம். அயல் மகரந்தச்சேர்க்கை குறித்து பக்கம் பக்கமாகப் படிப்பதைவிட, நேரில் அழைத்துச் சென்று விளக்கினால் மாணவர்களுக்கு மிக எளிதில் மனதில் பதியும். இதற்கான சாத்தியம் இருந்தும் ஏன் அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்க வேண்டும்?

அவர்கள் வெளியில் வரும்போது பாடம் சார்ந்த அம்சங்களுடன், பாடத்துக்கு அப்பாற்பட்ட நிலம், இயற்கை, சமூகம் சார்ந்த அறிவையும் புரிதலையும் பெறுகின்றனர். தாவரத்தைப் பார்க்க ஆற்றங்கரைக்குப் போனால்தான், 'ஆறு ஏன் வற்றிப்போய் இருக்கிறது?’ என்ற கேள்வி எழும். வறட்சியின் விளக்கமும் மணல் கொள்ளையின் பயங்கரமும் அப்போதுதான் அவர்களுக்குப் புரியும்.

இன்றைய கல்வியின் மாபெரும் குறை, அது சுற்றத்தில் இருந்து மாணவர்களைத் தனிமைப்படுத்துகிறது என்பதுதான். அது குறையா அல்லது அதுதான் நோக்கமா என்ற துணைக் கேள்வி ஒரு பக்கம் தொக்கி நிற்க... கல்வி என்பது சுற்றத்தை அறிதலில் இருந்துதான் தொடங்குகிறது; தொடங்க வேண்டும். தன்னைப் பற்றி, தன் ஊரைப் பற்றி, அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி எந்த அறிவும் இல்லாமல் பாடப் புத்தகங்களைப் படிப்பதால் என்ன பயன்? கும்பகோணம் தீ விபத்து குறித்து குறைந்தபட்சம் அந்த ஊர் மாணவர்களுக்காவது தெரிய வேண்டாமா? கூடங்குளம் அணு உலையின் அபாயம் குறித்து வள்ளியூர் மாணவர் அறிவது அவசியம் இல்லையா? நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் தங்கள் மூதாதையர்கள் என்ற வரலாற்று உண்மையை அந்தப் பகுதி மாணவர்கள் அறிந்தால்தானே, அப்படி நிலம் கொடுத்தவர்கள் 20 ஆண்டுகளாக ஒப்பந்தக் கூலிகளாக சுரண்டப்படும் அவலத்தைப் புரிந்துகொள்ள முடியும்?

ஆகாயம், அண்டம், பேரண்டம், பால்வீதி என அண்ணாந்து பார்க்கும் தலையைக் கீழே இறக்கி, தென் தமிழகக் கடலோரத்தில் தாதுமணல் கொள்ளையடிக்கப்படும் கொடுமையைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மதுரையில் கிரானைட் குவாரி என்ற பெயரில் ஒரு மலையையே வெட்டிக் கரைத்தவர்கள் குறித்து பாடம் நடத்த வேண்டும். இப்படி எதிர்மறையாக மட்டும் அல்ல, நேர்மறையிலும் தங்கள் பகுதியின் நிலம், தாவரங்கள், நீர்வளம், விலங்குகள் குறித்த அறிவை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். கல்வி என்பது, இப்படி நடைமுறை சார்ந்ததாக இருக்கும்போதுதான் அது வாழ்க்கைக்கு உதவுவதாக, வாழ்க்கையை எதிர்கொள்ளும் கருவியாக அமைகிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியப்பிரதேசத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 700 பள்ளிகளில் 'ஏகலைவா’ என்ற அமைப்பு, 'ஹோஷங்பகாத் அறிவியல் கற்பிக்கும் திட்டம்’ ஒன்றை நடைமுறைப்படுத்தியது. அறிவியலை, நடைமுறை அறிவுடன் கற்பிக்கும் திட்டம் அது. இந்த நிலையில், அங்குள்ள பழங்குடி கிராமம் ஒன்றில் திடீரென ஒரு பீதி பரவியது. செடிகளின் பச்சை இலைகளில் பாம்பு படம் எடுப்பது போன்ற வடிவம் தென்படத் தொடங்கியது. மக்கள் அதை 'நாகதேவதையின் சாபம். ஆண் பாம்பின் மீது லாரி ஒன்று ஏறி, அது செத்துவிட்டது. அதன் துணையான பெண் பாம்பு விட்ட சாபம்தான் இது’ என பீதி அடைந்தனர். இதனால், விளைந்த காய்கறிகளைச் சாப்பிட அஞ்சி, குப்பையில் கொட்டினார்கள். இந்த நிலையில் சோனி என்கிற மாணவியும், அவளது வகுப்புத் தோழிகளும் இது தாங்கள் படிக்கும் அறிவியலுக்கு எதிராக இருப்பதாகக் கருதினார்கள். அந்த இலைகளை ஊசிகளைக் கொண்டு குத்திப் பார்த்தபோது அனைத்து இலைகளிலும் சிறிய புழு இருப்பது தெரிந்தது. அந்தப் புழு, இலையின் பச்சை நிறத்துக்குக் காரணமான குளோரோஃபிலைத் தின்றது. இதனால் இலை வெளிறி, வளர்ச்சி அடையும்போது அந்தப் பகுதி பாம்பு படம் எடுப்பதுபோல காட்சி அளித்தது. மாணவிகளின் இந்தக் கண்டுபிடிப்பு, அந்தப் பகுதியில் நிலவிய அச்சத்தையும் பீதியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

இதே சமயத்தில் சோனியின் தோழி, மற்றொரு பரிசோதனையைச் செய்தாள். பாம்பு உருவம் உள்ள இலைகளைப் பறித்துவந்து யாருக்கும் தெரியாமல் தன் வீட்டு உணவில் கலந்துவிட்டாள். அதைச் சாப்பிட்டதால் எந்தத் தீங்கும் வரவில்லை என்பதை நிரூபித்துக்காட்டினாள். 'இப்படி செஞ்சா யாராவது அடிப்பாங்கனு நினைக்கலையா?’ என அந்த மாணவியிடம் கேட்டபோது அவள் சொன்னாள், 'மூடநம்பிக்கையை ஒழிக்க கொஞ்சம் அடி வாங்கினால்தான் என்ன?’ இது பழங்குடி குழந்தையின் துணிவு மட்டும் அல்ல; கல்வியறிவு தந்த துணிவும்கூட. இப்படி நடைமுறை வாழ்க்கைக்குத் துணை நிற்பதுதான் கல்வியின் பயனாக இருக்க வேண்டும். தேர்வு எழுதி முடிந்ததுமே தேவையற்றதாகிவிடுவதற்குப் பெயர் அறிவு அல்ல; கழிவு.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 25

இதில் இன்னொரு முக்கியமான கோணம் இருக்கிறது. கல்வி, அறிவை வளர்க்க வேண்டும் என்பது சரி. ஆனால், அது அறிவு குறித்த மமதையை, உடல் உழைப்பு குறித்த கீழ்மையான எண்ணத்தைத் தோற்றுவித்துவிடக் கூடாது. ஆனால் இந்தியக் கல்விமுறை, உடல் உழைப்பை மிகவும் மலிவாக மதிப்பிடும் மனப்பாங்கை உருவாக்கி இருக்கிறது. உழைப்புதான் இந்த உலகின் ஒவ்வோர் அங்குலத்தையும் உருவாக்கியது; உருவாக்கிக்கொண்டிருக்கிறது. நாம் காணும் பொருட்களின் உருவாக்கம், பிரமாண்டமான தொழிற்சாலைகள், கட்டடங்கள், இயந்திரங்கள், சாலைகள்... ஒவ்வொன்றிலும் உழைப்பு இருக்கிறது. உழைப்பு எனும் உன்னதமான செயல்தான் குரங்கில் இருந்து மனிதனாக நம்மை வளர்ச்சி அடைய வைத்தது; வளைந்திருந்த நம் முதுகுத்தண்டை நேர் ஆக்கியது. மூளை என்ற பருப்பொருள் சிந்திக்கும் திறனைப் பெற்றதிலும் உழைப்பின் பங்கு மகத்தானது.

இந்த உலகில், 'உழைப்பு நிகழாத கணம்’ என ஒரே ஒரு மைக்ரோ விநாடிகூட இல்லை. உழைப்பு இல்லை என்றால் இந்த உலகம் இல்லை. அத்தகைய உழைப்புக்கு நாம் தரும் மரியாதை என்ன? அது நம் மனதின் கீழ் வரிசையில் இருக்கிறது. உலகத்தின் மொத்த நிலையும் இதுதான் என்றபோதிலும், இந்தியாவின் சிறப்புத் தகுதியான சாதி அமைப்பு, உடல் உழைப்பை மிகவும் இழிவானதாக வைத்திருக்கிறது; உடல் உழைப்பில் ஈடுபடுவோரை கீழ் சாதியினர் எனக் கேவலப்படுத்துகிறது. உழைப்பை மதிக்காத இந்தியக் கண்ணோட்டத்தின் உருவாக்கத்தில், சாதி அமைப்பின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. ஆகவே, படித்தால் மட்டும் போதாது; மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது; சமூகத்தின் இயங்கும்தன்மை அறிந்திருக்க வேண்டும். பிற்போக்குத்தனங்களை உதற முன்வர வேண்டும். சாதி இழிவுகளைத் துணிவுடன் எதிர்த்துப் போராட வேண்டும். இவற்றைச் செய்யாமல் எவ்வளவு படித்தாலும் அது வெறும் குப்பை!

- பாடம் படிப்போம்...

போராடி வென்ற மாணவிகள்!

டந்த அக்டோபர் 2-ம் தேதி, பெரும் பரபரப்புடன் 'தூய்மை இந்தியா’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அந்தத் திட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் ஊர்வலங்கள் நடந்தன. ராஜஸ்தான் மாநிலம் பிம் நகரில் சுமார் 500 மாணவிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம் நடந்தது. அது தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்து அல்ல... தங்கள் பள்ளிக்குப் போதிய ஆசிரியர்களை நியமிக்கவேண்டி நடந்த ஊர்வலம்!

எந்த அரசியல் கட்சியாலும் அணி திரட்டப்படாமல், ஒரு சமூக ஆர்வலரின் ஒருங்கிணைப்பில் சுயேச்சையாக ஒன்றுசேர்ந்து அந்த ஊர்வலத்தை மாணவிகள் நடத்தினார்கள். இவர்கள் படிக்கும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் 700 மாணவிகள் படிக்கிறார்கள். ஆசிரியர்களின் எண்ணிக்கையோ வெறும் மூன்று பேர். கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் இல்லை. கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், இந்தி... போன்ற எந்தப் பாடத்துக்கும் ஆசிரியர் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக 11 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளன. கிராம மக்கள் எத்தனையோ முறை மனு கொடுத்தும், முறையிட்டும் சிறு நடவடிக்கையும் இல்லை.

மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளே இந்தப் பள்ளியில் படிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பேருந்துக்கு 20 ரூபாய் செலவழித்து 15 கி.மீ தூரம் கடந்து பள்ளிக்கு வருகின்றனர். இவ்வளவு சிரமங்களைக் கடந்துவந்தால், பள்ளியில் ஆசிரியர் இல்லை. இந்த நிலையில்தான் மாணவிகள் ஒருங்கிணைந்தனர். பள்ளியை இழுத்துப் பூட்டிவிட்டு, 'எங்களுக்கு ஆசிரியர் வேண்டும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை  ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். பி.டி.ஓ அலுவலகத்தில் மனு கொடுத்தவர்கள், அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். 'குறைந்தபட்சம் ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியரையாவது நியமியுங்கள்’ என்ற அவர்களின் கோரிக்கையை மறுத்துப் பேச எவராலும் முடியவில்லை. மாணவிகளின் போராட்டச் செய்தி, எங்கும் பரவி பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது. மாவட்ட கலெக்டர் வந்தார். 'இன்னும் ஒரு வாரத்துக்குள் புவியியல், கணக்கு, இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என்றார். ஆனால், இதுவும் வெற்று உறுதிமொழியாக ஆகிவிட்டால்? 'அக்டோபர் 7-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றால், மறுபடியும் பள்ளியை இழுத்துப் பூட்டுவோம்’ என்றனர்.

அவர்கள் நினைத்ததைப்போலவே அக்டோபர் 7-ம் தேதி வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. சொன்னதுபோலவே 8-ம் தேதி பள்ளியை இழுத்து மூடிய மாணவிகள், பள்ளிக்கு வெளியே ஒரு கூடாரம்  அமைத்தனர். அங்கு மாணவிகள் தங்களுக்குத் தாங்களே சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டனர். சாலையில் சென்ற எல்லோரது கண்களிலும் இந்தக் காட்சி பட்டது. அருகில் இருந்த கடைக்காரர்கள் மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வாங்கித் தந்தனர். இந்தச் செய்தி, நகரம் முழுவதும் பரவியது. இதுவே அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட செய்திகள் வெளியாகின. அடுத்த நாள் பள்ளியின் பிரேயரில் மொத்தம் ஏழு ஆசிரியர்கள் இருந்தனர். மாணவிகளின் முகங்களில் பெருமித மகிழ்ச்சி.

அரசு 'கல்வி உரிமைச் சட்டம்’ கொண்டுவந்திருக்கிறது. இந்தச் சட்டம், ஆவணங்களில் மட்டும்தான் உரிமையை உத்தரவாதப்படுத்துகிறதே தவிர, நடைமுறையில் அல்ல. நடைமுறையிலும் நமது கல்வி உரிமையை நிலைநாட்ட, சட்டங்களைவிட போராட்டங்கள்தான் உதவும் என்பதுதான் பிம் நகர் பள்ளி மாணவிகள் நமக்கு உணர்த்தும் பாடம்!