Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 26

பாரதி தம்பிபடங்கள்: தி.விஜய், பா.காளிமுத்து

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 26

பாரதி தம்பிபடங்கள்: தி.விஜய், பா.காளிமுத்து

Published:Updated:

'கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்; வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்’ என்றார் ஜோதிராவ் புலே. கல்விக்கும் சாதிக்குமான தொடர்பு அவ்வளவு நெருக்கமானது; இறுக்கமானது. இப்போது கல்வி நிறுவனங்களில் நிகழும் சாதிக் கொடுமைகள் புத்துயிர் பெற்றுள்ளன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 26

சம்பவம் 1: அந்த ஆசிரியருக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. அவர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள சாரநத்தம் என்ற ஊரின் அரசுத் தொடக்கப் பள்ளியில் முதன்முதலில் பணியில் சேர்ந்தார். அது, பேருந்து வசதிகூட இல்லாத மிகச் சிறிய கிராமம். வாடகை வீடுகூட அங்கே கிடையாது. அந்தப் பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக இருக்கும் பெண், தன் வீட்டிலேயே அந்த ஆசிரியையைத் தங்கவைத்துக்கொள்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்ன சாதி?’ எனக் கேட்டதற்கு, 'நாங்க கிறிஸ்டியன்’ எனச் சொல்கிறார் ஆசிரியை. ஒருசில மாதங்கள் சென்ற நிலையில், ஆசிரியர்கள் தொடர்பான ஆவணங்களை நகல் எடுத்து வரச் சொல்லி சத்துணவு அமைப்பாளரிடம் கொடுத்துவிடுகிறார் தலைமை ஆசிரியர். அப்போது, தன் வீட்டில் தங்கியிருக்கும் ஆசிரியை ஒரு தலித் என்பதைத் தெரிந்துகொள்கிறார். அவருக்கு ரத்தம் கொதிக்கிறது. நேராக வீட்டுக்குச் சென்று ஆசிரியையின் பெட்டி படுக்கையை எல்லாம் எடுத்து வந்து, பள்ளியில் தூக்கி வீசுகிறார். 'உன்னைச் சும்மாவிடுறதே தப்பு... ஏதோ வெளியூர்ல இருந்து வந்திருக்கியேனு இதோடு விடுறேன்’ என சாதிப் பெயரைச் சொல்லி கேவலமாகத் திட்டுகிறார். மொத்தப் பள்ளியும் இதை வேடிக்கை பார்க்கிறது. அதன் பிறகு வேறு ஒரு பள்ளிக்கு அந்த ஆசிரியை பணிமாறுதல் வாங்கிச் சென்றார்.

சம்பவம் 2: சேலம் மாவட்டம் காட்டுவளவு கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. அங்கு சத்துணவு ஊழியராகப் பணி நியமனம் பெற்றார் சுந்தரவனிதா என்கிற தலித் பெண். பள்ளி அலுவலகத்துக்கு வெளியில் நிற்கவைத்து பணி ஒப்புதல் வழங்கி, பள்ளி நிர்வாகமே முதல் தீண்டாமை கொடுமையைத் தொடங்கிவைத்தது. ஒருசில நாட்களில் தங்கள் ஊர் பள்ளியில் சமையல் செய்வது ஒரு தலித் பெண் என்பது, அந்த ஊரின் ஆதிக்கச் சாதியினருக்குத் தெரிகிறது. ஒரு தலித் சமைத்ததை தங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் சாதி கௌரவத்துக்கு இழுக்கு அல்லவா? ஆகவே, சுந்தரவனிதா சமைத்த சாப்பாடு குப்பைக்குப் போனது. இந்த விஷயம் பி.டி.ஓ-வுக்குத் தெரிந்ததும் யார் தீண்டாமைக் கொடுமையில் ஈடுபடுகிறார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, சுந்தரவனிதாவை அவரது சொந்த ஊரான மூக்கனூருக்குப் பணிமாறுதல் செய்தார். அங்கும் இதே கொடுமை. இவர் சமைப்பார். பிள்ளைகள் சாப்பிடாது!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 26

சம்பவம் 3: மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைப் பெரும் பூதமாகச் சூழ்ந்திருக்கிறது சாதிக் கயிறு. 'ஃப்ரெண்ட்ஷிப் பேண்டு’ என கையில் ரப்பர் பட்டை கட்டுவார்களே... பார்க்கஅதேபோன்றுதான் இருக்கும் இந்தப் பட்டை. ஆனால், தங்கள் சாதி கட்சிக் கொடியின் நிறத்தில் இந்தப் பட்டையை அணிந்துகொள்கிறார்கள் மாணவர்கள். மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு என விதம்விதமான பட்டைகள் மாணவர்களின் கைகளில் தென்படுகின்றன. பள்ளி மாணவர்களிடையே மிகவும் வெளிப்படையான சாதிப் பிரிவினையை ஏற்படுத்தி, வெறுப்பையும் பகையையும் நிரந்தரமாக்கிப் பதறவைக்கும் இந்தப் பழக்கம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

யார் என்ன சாதி என்பது மணிக்கட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும் என்பதால், அவர்கள் ஒரு குழுவாகவே இருக்கின்றனர். வகுப்பில் உட்காரும்போது, உணவு இடைவேளையில் சாப்பிடும்போது, பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும்... என எப்போதும் ஒரே நிறக் கயிறுகள் ஒன்றுசேர்ந்து கொள்கின்றன. ''பி.இ.டி பீரியட்ல கபடிக்கு டீம் பிரிச்சா, இந்தப் பசங்க பூரா ஒண்ணு சேர்ந்துக்கிறாங்க'' என்று அதிர்ச்சி விவரம் சொல்லும் தேனி மாவட்ட ஆசிரியர் ஒருவர், மேற்கொண்டு பகிர்ந்துகொண்டவை இன்னும் அதிர்ச்சி.

''கையில பேண்டு கட்டிக்கிட்டு வந்தா எங்க ஸ்கூல்ல பிடுங்கிப் போட்டுருவோம். அதனால, இப்போ அதே நிறத்துல கயிறு கட்டிக்கிட்டு வர்றான். கேட்டா, 'கோயில் கயிறு’ங்குறான். என்ன செய்ய முடியும்? 'சாமி நம்பிக்கையில தலையிடுறீங்க’ம்பான். இது மட்டும் இல்லை... அரசியல்வாதிகள் எல்லாம் வெள்ளை கலர் சட்டை போட்டுக்கிட்டு பாக்கெட்ல தன் கட்சித் தலைவர் படத்தை வெச்சிருப்பாங்க. அதேபோல இந்தப் பசங்க, தங்கள் சாதித் தலைவர் படத்தை பாக்கெட்ல வெச்சுக்குறான். வெள்ளை சட்டைதான் யூனிஃபார்ம்கிறதால அந்தப் படம் பளிச்னு வெளியில் தெரியுது.

ஒரு விளையாட்டு பீரியட்ல நான் பார்த்த காட்சியை இன்னமும் மறக்க முடியாது. கபடி விளையாட சட்டையைக் கழட்டிட்டு பனியன் எடுத்துப் போடுறாங்க. எல்லார் முதுகுலயும் 'திமிர் பிடித்த ..... பாய்ஸ்’னு எழுதியிருக்கு. எதிர் அணி பசங்களும் அதேபோல பனியன் போடுறாங்க. அதில் 'அடங்க மறுக்கும் ..... பாய்ஸ்’னு எழுதியிருக்கு. பார்த்த எனக்கு அப்படியே வியர்த்துப்போச்சு. அதெல்லாம்  சும்மா பேனாவால எழுதலை; அச்சு அடிச்சிருக்கு. அப்படின்னா வீட்ல உள்ளவங்க, சொந்தக்காரங்க துணை இல்லாம இது நடந்திருக்காது. இந்தச் சின்னப் பசங்ககிட்ட இவ்வளவு மோசமான சாதி வெறியை வளர்க்கிறதை நினைச்சா ரொம்பப் பயமா இருக்கு'' என்ற அவரது அச்சம் மிகவும் நியாயமானது.  

பள்ளிகளில் சீருடை அணியும் முறை கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, அங்கு சாதி பேதங்கள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், சாதி வித்தியாசங்களை அடையாளம் காணவும் ஆழப்படுத்தவுமே இவர்கள் 'சாதிக் கயிறு’ என்ற ஒரு யூனிஃபார்மைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் சிறுவயதில் இருந்தே சுய சாதி மோகமும், மற்ற சாதியினர் மீதான வெறுப்பும் இவர்களின் மனங்களில் ஆழமாக விதைக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னையின் மீது அரசு, பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள்... என அனைத்தும் தங்களின் முழுக் கவனத்தையும் உடனடியாகச் செலுத்த வேண்டும். இல்லையெனில், எதிர்காலம் பெரும் கேடாக முடியும்!

சம்பவம் 4:  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் இருக்கிறது சீ.ரா.நாயுடு அரசு மேல்நிலைப் பள்ளி. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கேட்டால் நெஞ்சம் பதறுகிறது.

ரமேஷ், ப்ளஸ் ஒன் மாணவன்; தலித் சமூகத்தைச் சேர்ந்தவன். புதிதாக வாங்கிய கைகடிகாரத்தை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார். இதை வைத்து பள்ளியில் ஒரே கேலி, கிண்டல். இதனால் ரமேஷ்க்கும், மற்ற சில மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அன்று இரவு வேறு எங்கோ சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய ரமேஷ், பள்ளி மாணவர்களால் வழிமறிக்கப்பட்டார். திருத்தங்கல் ரயில் நிலையத்தின் கழிவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடிகாரம் அணிந்திருந்த மணிக்கட்டில் கடுமையாகத் தாக்கப்பட்டார். ரத்தம் வழிந்து வலியால் ரமேஷ் அலறியதும் அவர்கள் ஓடிவிட்டனர்.

இதே பள்ளியில் 8-ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இருக்கும் அம்பேத்கர் தொடர்பான பாடத்தை எப்போது நடத்தினாலும் வகுப்பறையில் இருந்து பெரும் கூச்சல் எழும். தலித் அல்லாத மாணவர்கள் 'அம்பேத்கர்’ என்ற பெயரைச் சொன்னாலே சத்தம் எழுப்புவார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த விஷயம் வெளியில் கசிந்தது. 'நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர் கல்வித் துறை அதிகாரிகள். ஆனால், இப்போதும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் பள்ளியில் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க உள்ள பல பள்ளிகளிலும் அம்பேத்கர் தொடர்பான பாடம் நடத்துவதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது.

சம்பவம் 5: மாணவர்களை, கழிவறையைக் கழுவப் பயன்படுத்துகின்றனர் பல ஆசிரியர்கள். ராஜபாளையம் அருகே இருக்கிறது பேயம்பட்டி கிராமம். இங்கு உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒன்றாம் வகுப்புப் படிக்கும் அருந்ததியர் மாணவர்கள் மூன்று பேரை, பள்ளியின் கழிவறைகளைக் கழுவச் சொல்லியிருக்கின்றனர்  ஆசிரியர்கள். அது இப்போது வெளியில் வந்து அந்த ஊரில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. பேயம்பட்டியில் மட்டும் அல்ல, தமிழ்நாடு முழுக்கப் பல பள்ளிகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய அருந்ததியர் மாணவர்களைத்தான் குறிவைத்து பயன்படுத்துகின்றனர். ஒருவேளை அங்கு அருந்ததியர் இல்லை என்றால், தலித் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.

சம்பவம் 6: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் இருக்கிறது வீராணம் கிராமம். இங்குள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 45 குழந்தைகள் படித்தனர். அதில் 32 பேர் தலித் குழந்தைகள். பள்ளிக்கூடம் சாதி இந்துக்களின் பகுதியில் இருக்கிறது. தலித் குழந்தைகள், வாய்க்கால் வரப்பு வழியாகத்தான் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டும். சாலை வசதிகூடக் கிடையாது. இதனால் தங்களுக்கு என தனியே ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் எனக் கேட்டனர் தலித்கள். இதைக் கடுமையாக எதிர்த்தனர் சாதி இந்துக்கள். காரணம், தலித் குழந்தைகள் 32 பேரும் பிரிந்து சென்றுவிட்டால்,  இவர்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். பிறகு, பள்ளியை மூடிவிடுவார்கள் என்பதுதான். ஊர்க் கூட்டத்தைக் கூட்டி 'நீங்க தனியா பள்ளிக்கூடம் கேட்டால், கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது; தண்ணீர் விட மாட்டோம்’ என ஊர்க் கட்டுப்பாடு விதித்தனர். அந்த ஊரில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் பஞ்சாயத்துத் தலைவர் என்றாலும், ஊர்க் கட்டுப்பாட்டை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 26

பிறகு, சி.இ.ஓ-வைச் சந்தித்து பள்ளிக்கூடம் வேண்டும் என தலித் மக்கள் மனு கொடுத்தனர். அடுத்த நாளே சாதி இந்துக்கள் வந்து சி.இ.ஓ-வைப் பார்த்து, 'அரசு விதியின்படி குறைந்தபட்சம் மூன்று கி.மீ இடைவெளி இருந்தால்தான் புதிய பள்ளிக்கூடத்துக்கு அனுமதி தர முடியும். தலித்களின் பகுதி, பள்ளியில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில்தான் இருக்கிறது. இதனால் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி வழங்கக் கூடாது’ எனத் தகராறு செய்தனர். உடனே, இரு சக்கர வாகனம் மூலம் சோதனை செய்தபோது 3.5 கி.மீ தூரம் இருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றாலும், சாதி இந்துக்களின் போராட்டம் ஓயவில்லை. பேச்சுவார்த்தையில், 'சரி, உங்க பிள்ளைங்களை வேணும்னா அங்கே போயி படிக்கச் சொல்லுங்க’ என அதிகாரிகள் சொன்னதற்கு, 'எங்க பிள்ளைங்க சேரியில் போய்ப் படிக்காது’ எனப் பதில் வந்தது. சமூக மோதலைத் தவிர்க்கும் பொருட்டு இந்தப் பள்ளியையும் மூடுவது இல்லை; அங்கும் ஒரு புதுப் பள்ளி தொடங்கப்படும் என முடிவானது. அதன்படியே தலித்கள் பகுதியில் பள்ளி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. சாதி இந்துக்கள் பகுதியில் உள்ள பள்ளியில் 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் படித்தாலும், பள்ளி தொடர்ந்து இயங்கிவருகிறது.

• கரூர் நகராட்சியை ஒட்டியிருக்கிறது சின்னமநாயக்கன்பட்டி. இங்குள்ள அங்கன்வாடி மையத்துக்குச் செல்லும் தலித் குழந்தைகள் மட்டும் மதியம் சாப்பிடுவதற்கு தட்டும், தண்ணீர் குடிக்க டம்ளரும் எடுத்துச் செல்ல வேண்டும். தலித் அல்லாத மற்ற குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலேயே தட்டும் டம்ளரும் தரப்படும். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்தக் கொடூரம் அங்கு இப்போதும் தொடர்கிறது.

• உள்ளூர் விடுமுறை தினங்களை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே முடிவு செய்துகொள்ளலாம். சாதி இந்துக்கள் பகுதியின் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை விடுவார்கள். தலித்கள் பகுதியில் ஏதேனும் திருவிழா என்றால், அதற்கு உள்ளூர் விடுமுறை கிடையாது. யாராவது கேட்டால், 'நீங்க வேணும்னா உங்க குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம். நாங்க அட்டென்டண்ஸ் போட்டுர்றோம்’ என்பார்கள்.

• பெற்றோர்-ஆசிரியர் கழகத்தில் தலித் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ஒருபோதும் தலித்களை விடமாட்டார்கள் அல்லது ஆவணங்களில் மட்டும் கையெழுத்து வாங்கிக்கொண்டு, பெயருக்கு ஒருவரை டம்மியாக வைத்திருப்பார்கள்.  

• அரசு உதவி பெறும் பள்ளிகளில், பதவி உயர்வு என்பது அரசுப் பள்ளிகளைப்போல் மூப்பு அடிப்படையில் இருக்காது. அங்கு ‘Merit and ability’ ன்ற விதிப்படி பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் ஒருபோதும் தலித்கள் தலைமை ஆசிரியராக வர முடியாது. பள்ளி நிர்வாகியின் சாதிக்காரர்தான் தலைமை ஆசிரியராக இருப்பார். தலித் கிறிஸ்தவர்கள் நடத்தும் ரு சதவிகித உதவிபெறும் பள்ளிகளில் மட்டுமே தலித்கள் தலைமை ஆசிரியராக வர முடியும். எத்தகைய கொள்கை பேசுவோர் நடத்தும் பள்ளியாக இருந்தாலும் இதுவே கசப்பான யதார்த்தம்!  

• ஆசிரியர்களே சாதிவாரியாகப் பிரிந்து சாப்பிடுவது, சாப்பாட்டை தலித் ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொள்ளாதது, டீ வாங்கி வரச் சொல்வது என்றால்கூட தன் சாதிப் பையனாக அழைத்து வாங்கி வரச் சொல்வது, 'ஸ்காலர்ஷிப் வாங்குறவங்க எல்லாரும் இந்தப் பக்கம் வா’ என்பதுபோல் நுணுக்கமான முறையில் வகுப்பறையில் சாதிப் பிரிவினையை நிலைநாட்டுவது... என, பள்ளியில் படிந்திருக்கும் சாதிக் கறையைத் துடைக்கத் துடைக்க வந்துகொண்டே இருக்கிறது.

- பாடம் படிப்போம்...