Published:Updated:

பஜாஜ் சேட்டக் முதல் யமஹா RX100 வரை... சுதந்திர இந்தியா கண்ட சிறந்த டூ-வீலர்கள்!

பஜாஜ் சேட்டக் முதல் யமஹா RX100 வரை... சுதந்திர இந்தியா கண்ட சிறந்த டூ-வீலர்கள்!
பஜாஜ் சேட்டக் முதல் யமஹா RX100 வரை... சுதந்திர இந்தியா கண்ட சிறந்த டூ-வீலர்கள்!

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சாதனைகளை நாம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை காலப் பதிவேடுகளில் பெருமையுடன் பதிவிட்டுள்ளோம். இந்தியாவின் பணப்புழக்கத்திலும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு விதமான இட மாற்றங்கள் மற்றும் பொருள் மாற்றங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தவை வாகனங்கள். சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை உருவ மாற்றம் அடைந்துவந்த வாகனப் பரிமாணத்தின் பதிவே இந்தக் கட்டுரை.

`ர்ர்ர்ர்ர்ர்ர்', `சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை தனியே அடையாளம் காட்டிக்கொண்ட விதவிதமான பைக்குகளில் அணிவகுப்பு இதோ...

பஜாஜ் சேட்டக்:

`ஹமாரா பஜாஜ்... ஹமாரா பஜாஜ்...' 1980-களில் இளையராஜாவின் பாடல்களைத் தவிர பலரும் முணுமுணுத்த வரிகள் இவை. இரண்டு ஸ்ட்ரோக் பைக்குகள், இந்தியாவை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலத்தில், தில்லாக சேட்டக் ஸ்கூட்டரைக் களமிறக்கி அசாத்திய வெற்றியையும் பெற்றது பஜாஜ் நிறுவனம். மக்கள் வருடக்கணக்கில் காத்திருந்து இதை வாங்கிச் சென்றதே, இதற்கான சிறந்த உதாரணம். ஒருகாலத்தில் `உலகில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்' என்ற பெருமையைப் பெற்றிருந்த சேட்டக், 2000-களின் பிற்பகுதியில் தனது செல்வாக்கை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, 2006-ம் ஆண்டில் இதன் உற்பத்தியை நிறுத்தியது பஜாஜ். பிறகு 2009-ம் ஆண்டில் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே தயாரிக்கும் பொருட்டு, ஸ்கூட்டர் செக்மென்ட்டைவிட்டே இந்த நிறுவனம் வெளியேறியது. இடைப்பட்ட காலத்தில் அறிமுகமான ஆக்டிவாவின் அசுரத்தனமான எழுச்சியால், சேட்டக் ஸ்கூட்டர் வாயிலாக மீண்டும் ஸ்கூட்டர் சந்தையில் நுழைவதற்குத் திட்டமிட்டுள்ளது பஜாஜ் நிறுவனம்.

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350:

1949-ம் ஆண்டிலிருந்தே இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்துவருகிறது என்ஃபீல்டு நிறுவனம். ஆனால், 1955-ம் ஆண்டில் இந்திய அரசாங்கம், ராணுவப் பயன்பாட்டுக்காக 800 `புல்லட் 350' பைக்குகளுக்கான ஆர்டரைப் போட்டதன் பிறகு, `மெட்ராஸ் மோட்டார்ஸ்' எனும் இந்திய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது, இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஃபீல்டு நிறுவனம். `என்ஃபீல்டு இந்தியா' என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள், மெட்ராஸ் மோட்டார்ஸ் வசமே இருந்தன. 1957-ம் ஆண்டு முதல், பைக்குகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கவும் தொடங்கியது மெட்ராஸ் மோட்டார்ஸ். 1971-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்த என்ஃபீல்டு நிறுவனம், மூடுவிழா கண்டதன் எதிரொலியாக 1980 முதல் இப்போது வரை இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு `புல்லட் 350' பைக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1994-ம் ஆண்டில் கனரக வாகனங்களைத் தயாரிக்கும் `Eicher' நிறுவனத்துடன் சேர்ந்த பிறகு இந்த நிறுவனம் `ராயல் என்ஃபீல்டு' எனப் பெயர் மாற்றம்கொண்டது. `புல்லட் 350' பைக்கை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட `க்ளாசிக் 350' பைக், இந்த நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியது வரலாறு.

யெஸ்டி ரோட் கிங்:

கர்நாடகாவிலிருந்த `ஐடியல் ஜாவா' எனும் நிறுவனம், யெஸ்டி ரோட் கிங் பைக்குகளைத் தயாரித்தது. 1980-ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த இந்த பைக்கில் 250சிசி, இரண்டு ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டிருந்தது. இது சிங்கிள் சிலிண்டர் இன்ஜினாக இருந்தாலும், இரட்டை எக்ஸாஸ்ட் பைப்களைக்கொண்டிருந்தது. இது வெளிப்படுத்திய சத்தம், பைக் காதலர்களால் காலங்களைக் கடந்தாலும் மறக்க முடியாத ஒன்று. யெஸ்டி ரோட் கிங் பைக், மக்களின் மனதை மட்டுமல்லாது, இந்தியாவில் நடைபெற்ற பலவிதமான ராலி மற்றும் ரேஸ்களையும் வென்றது. 1978 முதல் 1996-ம் ஆண்டு வரை தயாரிப்பிலிருந்த யெஸ்டி ரோட் கிங், யமஹா - கவாஸகி - சுஸூகி போன்ற ஜப்பான் நிறுவன பைக்குகளின் வரவால் விற்பனையில் தேக்கநிலையைச் சந்தித்தது. தற்போது ஜாவா பைக்குகளைத் தயாரிப்பதற்கான உரிமத்தைக் கைப்பற்றியிருக்கும் மஹிந்திரா, விரைவில் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யமஹா RD350:

இந்தியாவில் பல பைக் ஆர்வலர்களை உருவாக்கிய பெருமை, `யமஹா RD350'-யே சேரும். எஸ்கார்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்த இந்த பைக்கின் பெயரில் இருக்கும் RD-க்கு, Race Developed என அதன் ரசிகர்கள் மார்தட்டினாலும், உண்மையான விரிவாக்கம் RajDoot 350 என்பதுதான். 1983 முதல் 1989-ம் ஆண்டு வரை மட்டுமே இந்த பைக் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்திய பைக் சந்தையில் சிங்கிள் சிலிண்டர் பைக்குகள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், இந்த இரண்டு சிலிண்டர் இன்ஜின்கொண்ட பைக், இந்தியாவில் ஏற்படுத்திய அதிர்வலைகள் மிகப்பெரிது. RajDoot 350 பைக்கில், 347சிசி, இரண்டு ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு பேரலல் ட்வின் இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புப் பொருத்தப்பட்டிருந்தது. இது வெளிப்படுத்திய சத்தமும் அதிரடியான பெர்ஃபாமன்ஸும் காலங்களைக் கடந்து பைக் ஆர்வலர்களின் மனதை ஆட்கொண்டிருப்பதே இதற்குச் சாட்சி.

யமஹா RX100:

1985 முதல் 2006-ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட RX100 பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 98சிசி, இரண்டு ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புதான், இந்த பைக்கின் ஸ்டார் அட்ராக்‌ஷன்! குறைவான எடை - அதிக பவர் என்ற அசத்தலான காம்பினேஷனைக்கொண்டிருந்த இந்த பைக், அற்புதமான ஹேண்ட்லிங்கும் - தெறி பெர்ஃபாமன்ஸையும்கொண்டிருந்தது. இப்படி மக்கள் மத்தியில் அசைக்க முடியாத புகழைப் பெற்றிருந்த RX100 பைக், இந்தியாவில் விதிக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாடு விதிகளின் காரணமாக, இதன் உற்பத்தியை நிறுத்தவேண்டிய சூழலுக்கு யமஹா தள்ளப்பட்டது. அதாவது, `2005-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த BS-II விதிகளின் எதிரொலியாக 100சிசிக்கும் அதிகமான இரண்டு ஸ்ட்ரோக் பைக்குகளைத் தயாரிக்கக் கூடாது' என, இரண்டு ஸ்ட்ரோக் பைக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒன்றுகூடி முடிவெடுத்தனர். எனவே, ஒருகாலத்தில் பைக் விற்பனையில் உச்சத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது வரை அந்தச் சரிவிலிருந்து மீள முடியவில்லை என்பதே நிதர்சனம்.