Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

பாரதி தம்பி, படங்கள்: தே.சிலம்பரசன், ந.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

பாரதி தம்பி, படங்கள்: தே.சிலம்பரசன், ந.வசந்தகுமார்

Published:Updated:

த்திய அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு சம்ஸ்கிருதத்தைச் சேர்க்கும் அரசின் அறிவிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. நாடு முழுவதும் 1,092 கே.வி பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றின் இடைநிலை வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது மொழி பிராந்திய மொழி, மூன்றாவது மொழி ஜெர்மன். ஆனால், இனி ஜெர்மன் மொழிக்குப் பதிலாக சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படும் என அண்மையில் மாற்றி அறிவித்தது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்.

'கே.வி பள்ளிகளில், ஜெர்மன் மொழி அறிமுகப்படுத்தப்பட்டதே 2011-ம் ஆண்டில்தான். அதற்குள் இது அப்புறப்படுத்தப்பட்டால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஒரு மொழியை அரைகுறையாகத் தெரிந்துகொள்வதால் எந்தப் பயனும் இல்லை. மேலும், சம்ஸ்கிருதத்தைவிட ஜெர்மன் மொழி படித்தால் சர்வதேச வேலைவாய்ப்புக்கும் உதவும்’ என்பது பெற்றோரின் கருத்து. இதனால் அவர்கள் அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தனர்.

இன்னொரு பக்கம் அரசியல்ரீதியாக, 'இது சம்ஸ்கிருதமயமாக்கலின் ஓர் அங்கம்’ என்ற கருத்துக்கள் காட்டமாக எழுந்தன. உடனே, 'சம்ஸ்கிருதம் கட்டாயம் அல்ல. ஏதேனும் ஓர் இந்திய மொழியை மூன்றாவது மொழியாகப் படிக்கலாம்’ எனப் பின்வாங்கியது அரசு. இப்படி அறிவித்துவிட்டு பின்வாங்குவது பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் முறை அல்ல. மத்தியில் ஆட்சி அமைத்ததுமே, 'சமூக இணையதளங்களில், அரசின் அறிவிப்புகள் இனிமேல் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்படும்’ எனச் சொன்னார்கள். அதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்ததுமே, அதில் இருந்து பின்வாங்கினார்கள். இப்போதும் அப்படியே நடந்துள்ளது. எப்படி இருந்தாலும் ஒரு மொழித் திணிப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன என்பதையே இந்தச் செய்திகள் தெளிவாகக் காட்டுகின்றன. இதில், நம் கவனத்துக்குரிய முக்கியச் செய்தி ஒன்று இருக்கிறது. கே.வி பள்ளிகளில் நடைபெறும் இந்தச் சர்ச்சை, பயிற்றுமொழி தொடர்பானது அல்ல. மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மனைப் படிப்பதா, சம்ஸ்கிருதத்தைப் படிப்பதா என்பதே இப்போதைய சிக்கல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

ஆனால் தமிழ்நாட்டிலோ, எந்த ஆய்வும் இல்லாமல் அரசுப் பள்ளிகளின் பயிற்று மொழியை ஆங்கில வழிக்கு மாற்றியிருக்கிறது அரசு. இதற்கு பெரிய எதிர்ப்புகளோ, போராட்டங்களோ இல்லை. கே.வி பள்ளியில் படிக்கும் பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அது தொடர்பான செய்திகள் முன்வரிசையில் இடம்பிடிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சமூகப் படிநிலையின் அடிநிலையில் இருப்போர் என்பதால், இத்தகையச் செய்திகள் யாருடைய கவனத்துக்கும் வராமலேயே போய்விடுகின்றன.

ஓர் அரசு ஆணையின் மூலம் அரசுப் பள்ளிகளின் பயிற்றுமொழியை போகிறபோக்கில் மாற்றுவதைப்போலவே அரசுப் பள்ளிகளையும் தனியாருக்கு மாற்றுகிறது அரசு. 'சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஏழு பள்ளிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன’ என்பது கடந்த வார செய்தி. 'அரசு - தனியார் கூட்டு’ (Public Private Partnership) என்ற முறையில் இந்தப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கின்றனர். 'மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால்தான் இப்படி’ என, காரணம் சொல்கின்றனர். ஓர் அரசின் நிர்வாக அமைப்பு சரியாகச் செயல்படவில்லை என்றால், கோளாறு எங்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். மாறாக, அது பழுதடைவதற்காகவே காத்திருந்ததைப்போல தனியாருக்குத் தூக்கித்தருவது எந்த வகையில் சரி? அரசு சொத்துக்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் இந்தச் செயல், ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் ஒழித்துக்கட்டும் சதித் திட்டத்தின் முன்னோட்டம்.

'இந்தப் பள்ளிகளில் எந்தக் கட்டணமும் இல்லை. அரசுப் பள்ளியில் படிப்பதைப்போலவே இங்கும் இலவசமாகப் படிக்கலாம். இலவசப் பாடப் புத்தகம், இலவசச் சீருடை போன்ற அரசின் வசதிகளும் உண்டு’ எனச் சொல்கின்றனர். முழுப் பொய்களைவிட அரை உண்மைகள் ஆபத்தானவை. அரசு சொல்வது அரை உண்மை. மாணவர்கள், கட்டணம் செலுத்தவேண்டியது இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஒரு மாணவருக்கு ஆண்டு ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதம் பள்ளியைக் குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு அரசு வழங்கிவிடும். இதை எப்படி இலவசக் கல்வி என்று சொல்ல முடியும்? மக்கள் நேரடியாக பணம் கட்டாமல் இருக்கலாம். ஆனால், அரசு அள்ளித் தருவதும் மக்கள் பணம்தானே? அரசின் சொத்தான பள்ளிக்கூடத்தை தனியாருக்குக் கொடுத்து, ஒரு மாணவருக்கு இவ்வளவு என பணமும் கொடுத்து, ஆசிரியர்களுக்குச் சம்பளமும் அரசே கொடுத்து, பள்ளிக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தந்து... இதற்குப் பெயர்தான் 'அரசு - தனியார் கூட்டா?’ இது மக்கள் சொத்துக்கு வைக்கப்படும் வேட்டு.

இதில் நாம் கவனிக்கவேண்டியது மக்களுக்கு கல்வி தரும் கடமையில் இருந்து அரசு, தன்னை விடுவித்துக்கொள்கிறது என்பதைத்தான். கல்வியில் மட்டுமா... அனைத்து மக்கள் நலத் திட்டங்களில் இருந்தும் அரசு தன்னை விடுவித்துக்கொள்கிறது. மானிய விலையில் கியாஸ் விநியோகிப்பதற்குப் பதிலாக 'மானிய பணத்தை வங்கிக் கணக்கில் போட்டுவிடுகிறோம். நீங்கள் சந்தை விலைகொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்’ என்கிறார்கள். அரசு மருத்துவமனைகளை அவல நிலையில் விட்டுவிட்டு, அரசே தனியார் நிறுவனத்தின் கூட்டுடன் காப்பீட்டுத் திட்டங்களை அறிவிக்கிறது. 'நாடு முழுவதும் உள்ள முக்கியமான 12 ரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்’ என கடந்த வாரம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. கல்வி, மருத்துவம், போக்குவரத்து... என அரசின் அனைத்துச் சேவைகளையும் தனியாரிடம் உள் வாடகைக்கு விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது அரசு. இப்படிப் பல்வேறு கட்டங்களில் அரசின் செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்வதை, ‘less government and more governance’ எனப் பெருமைமிகு கொள்கையைப்போலவும் பறைசாற்றிக் கொள்கின்றனர். இது எப்படி எனில், அரசு இருக்கும்; ஆனால், இருக்காது. ரப்பர் ஸ்டாம்ப் மாதிரி. எல்லா வேலைகளும் முடிந்த பின்னர் சீல் குத்த மட்டும் அரசு போதும். 'ஓனரா இருந்தா ஓரமா போ!’ என காமெடி ஒன்று திரைப்படத்தில் வரும். அதுபோல், 'அரசாங்கமா இருந்தா அப்பால போ’ என்கிறார்கள். 'அரசாங்கம், அடிப்படை உரிமையான கல்வியில் இருந்து அப்பால் இருக்க வேண்டும்’ என்ற இந்தக் கருத்துக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் உண்டு.

சுதந்திர முழக்கம் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்த 1937-ம் ஆண்டில் காந்தி, வார்தா மாநாட்டைக் கூட்டினார். அதில் காங்கிரஸ் வெற்றிபெற்ற ஏழு மாகாணங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கல்வி அளிப்பது தொடர்பான ஜாஹிர் உசேன் கல்விக் குழுவின் அறிக்கை மீது அந்த மாநாடு விவாதித்தது. இறுதியில் காந்தி 'காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள மாகாணங்களில் அரசே பொறுப்பேற்று கட்டணம் இல்லா கல்வியை தாய்மொழியில் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். ஆனால், காந்தியின் வேண்டுகோளை எந்த காங்கிரஸ் மாகாண அரசும் நிறைவேற்றவில்லை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

பிறகு, நாடு சுதந்திரம் அடைந்து அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது அம்பேத்கர் சட்ட அமைச்சர் ஆனார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் நாட்டின் முதல் கல்வி அமைச்சர் ஆனார். இவர்கள் இருவரும் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றனர். சர்தார் வல்லபபாய் படேல் தலைமையிலான நிலைக்குழுவுக்கு இந்தப் பரிந்துரை அனுப்பப்பட்டது. படேல் 'அரசின் பொருளாதார நிலை, அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கும் நிலையில் இல்லை’ எனச் சொல்லி, பரிந்துரையை நிராகரித்தார். கல்வி உரிமைக்கான குரல்வளை எழுந்த இடத்திலேயே நசுக்கப்பட்டது. எனினும், அம்பேத்கர் தனது சட்ட அறிவின் துணையுடன், 'அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்’ (directive principle of state policy) என்ற பிரிவை உருவாக்கி, அதில் கல்வியைக் கொண்டுவந்தார்.

இதைத் தொடர்ந்து கேரளாவில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு 'கேரள கல்விச் சட்டம்’ கொண்டுவந்தது. அப்போது ஜோசப் முண்டச்சேரி கல்வி அமைச்சராகவும், வி.ஆர்.கிருஷ்ணய்யர் சட்ட அமைச்சராகவும் இருந்தனர். இந்தியாவில் கல்வி உரிமைக்காகக் கொண்டுவரப்பட்ட முதல் சட்டம் அது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு, நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளாவில் ஏற்பட்ட வன்முறையைக் காரணமாகச் சொல்லி, கேரளா அரசைக் கலைத்தார் நேரு.

இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராக இருந்தார். 'அறியாமையின் ஆழத்தில் கிடந்த மக்களை கைதூக்கிவிட, 30 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை அரசு தொடங்கும்’ என அறிவித்தார். 'நிதிக்கு என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டபோது 'பள்ளி சீரமைப்பு மாநாடு’ என்ற புத்தம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பணக்காரர்களிடமும் பெற்றோர்களிடமும் நிதிபெற்று மளமளவென பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டன. இப்படி, சுதந்திர இந்தியாவில் வலுவான பொதுப் பள்ளி முறையை உருவாக்கியதில் கேரளாவும் தமிழ்நாடும்தான் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தன. இந்த வரலாற்றை நாம் ஆழ்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் கல்வி என்பதை மறுத்த சர்தார் வல்லபபாய் படேலுக்கு 200 கோடி ரூபாய் செலவில் சிலை வைக்கப்படுவதையும், அனைவருக்கும் கல்வி வேண்டும் என வலியுறுத்திய அபுல்கலாம் ஆசாத் வரலாற்றில் இருந்து அகற்றப்படுவதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்!

- பாடம் படிப்போம்...

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

ஆச்சர்ய உதாரணம்!

ரசாங்கமே, அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைத்துவரும் நிலையில், ஒரு தனியார் பள்ளி, அரசுப் பள்ளியைப்போல அனைத்தையும் இலவசமாகவும் தரமாகவும் வழங்கிவருகிறது என்பது ஆச்சர்ய செய்திதானே?

திண்டிவனம் நகரில் ரோசணைப் பகுதியில் இருக்கிறது தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி. 'திண்டிவனம் நகர மற்றும் ஊரகக் கல்வி மேம்பாட்டுக் குழு’ என்ற அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் இந்தப் பள்ளியை ஒருங்கிணைத்து நடத்துகிறார் பேராசிரியர் கல்யாணி என்று அறியப்படும் பிரபா.கல்விமணி. எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சுமார் 191 மாணவர்கள் படிக்கிறார்கள்.

14 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தரப்பினரின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஒரு பைசாகூட கட்டணம் கிடையாது. வருடம் இரண்டு சீருடைகள் இலவசம்; பாடப் புத்தகங்கள் இலவசம். எல்லாமே நன்கொடையாளர்கள் தருவது. முக்கியமாக, அனைத்து மாணவர்களுக்கும் தரமான மதிய உணவு இலவசம்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 27

''நினைச்சுப்பார்க்கவே மலைப்பான காரியம்தான். ஆனால், பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்களோட நினைவு நாள்னு தினசரி யாரோ ஒருத்தர் பிள்ளைங்களோட மதிய உணவுச் செலவை ஏத்துக்கிறாங்க. சாதாரணச் சாப்பாட்டுக்கு 1,000 ரூபாய், சைவ பிரியாணிக்கு 1,500 ரூபாய், வடை பாயசத்துடனான சிறப்பு உணவுக்கு 2,500 ரூபாய். இப்படிக் கொடுக்கும் பணத்துக்குத் தகுந்த மாதிரி பிள்ளைங்களுக்குச் சாப்பாடு போடுறோம். ஆசிரியர்களும் இங்கேதான் சாப்பிடணும், இது விதி. 191 குழந்தைகள், 16 பணியாளர்கள், ஆதரவற்ற முதியோர் ஐந்து பேர்... மொத்தம் 212 பேருக்கு, தினசரி மதிய உணவு வழங்குகிறோம்'' என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி. 90 சதவிகிதம் தலித் குழந்தைகள் படிக்கும் இந்தப் பள்ளியில், குழந்தைகளை அடிப்பது அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை வேளைகளில் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுக்குத் தனிப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.