Published:Updated:

நலம் 360’ - 27

மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’  - 27

கொஞ்சம் படபடப்புடன், கட்டியணைத்த மூச்சுத்திணறல் உணர்வுடன் காதல் மட்டும்தான் வருமா என்ன? ஆஸ்துமாவும் அப்படித்தான் வரும். மார்கழிப் பனியில் இருமலும், சிம்பொனியின் தொடக்க இசை போன்ற மூச்சொலியும் கலந்து வருவது ஆஸ்துமாவின்  அடையாளம். 'பனி விழும் மலர்வனம்’ எனச் சிலாகித்துப் பாட முடியாத அளவுக்கு, பனியும் மலர் மகரந்தமும் இம்சை கொடுக்கும் ஆஸ்துமா நோயாளிகள் இந்தியாவில் மட்டும் 10 கோடி பேர்!

மூச்சைத் திணறவைக்கும் துன்பம்போல் வலி தரும் கொடுமை வேறு இல்லை. அதுவும் ஒன்றரை வயதுக் குழந்தை அந்தத் திணறலைத் தெரிவிக்க முடியாமல், சிணுங்கியும் இருமியும், வயிற்றுப் பகுதி விலா எலும்புச் சதைகள் உள்வாங்கியும், நெஞ்சுக்கூடு மேலெழும்பியும் வதைபடும் கொடுமையை பெற்றோர் பார்க்கும்போது வரும் பயமும் கண்ணீரும்... வேதனையின் உச்சம். நெபுலைசர் இயந்திரமும், நுண்தூள் மருந்தை வேகமாக மூச்சுக் காற்றில் செலுத்தும் இன்ஹேலரும் ஸ்பேசரும் இந்த அவஸ்தையை, பயத்தை, கண்ணீரை இன்று பெருவாரியாகக் குறைத்திருக்கின் றன. ஆனால், அதுவும் எல்லோருக்குமான தீர்வு அல்ல!

நலம் 360’  - 27

ஏன் இத்தனை அவஸ்தைகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு? குழந்தையை ஸ்கூல் ஆட்டோவில் ஏற்றும்போது, 'ஸ்கேல் எடுத்துக்கிட்டியா, ஆஸ்துமா இன்ஹேலர் எடுத்துக்கிட்டியா?’ எனக் கேட்கும் நிலை ஏன் வந்தது? 'சுளுவாய் வேலை முடிகிறது. கழிவையும் மாசையும் குவியும் குப்பைகளையும் கொட்டும் வசதியுள்ள, கேள்விகேட்காத அப்படியே கேட்டாலும் காசை விட்டு எறிந்தால் கம்மென்று இருக்கிற  நிலப்பரப்பு இதுதான்’ என இந்தியாவை அறிந்துகொண்ட பெரிய நிறுவனங்கள் பெருகியதும், வீங்கிக்கொண்டேபோகும் நகரமயமாக்கலும் இதற்கான மிக முக்கியக் காரணங்கள். கூடவே, 'இதற்குத்தானா ஆசைப்பட்டோம்?’ என வெற்று மனதுடன் வேடிக்கை பார்ப்பதும், உள்ளுக்குள் ஓசையின்றி அன்றாடம் குமுறி அழும் மனமும், ஆஸ்துமாவின் இரைப்புத் தூண்டுதலுக்கு உளவியல் காரணங்கள். மாசு, மனம், குளிர்காற்று, குளிர்ச்சியில் மூச்சுக்குழல் சுருக்கம் தரும் மரபணுக் காரணமும் ஆஸ்துமாவை வரவேற்கின்றன.

'தானான தூயதோர் நாசிதன்னில்

சலநோய் நீர்தான் விழுந்து தும்மலுண்டாம்

மானான மார்பு நெஞ்சடைத்து மூச்சு

வலுவாகி பாம்பு போல் சீறலாகும்...

ஏனான இருமலோடு கோழை கம்மல்

இரைப்பாகு மந்தாரகாசமாமே’

- என 'யூகி வைத்திய சிந்தாமணி’ எனும் சித்த மருத்துவ நூல், மப்பும் மந்தாரமுமான மாலைப் பொழுதில், குளிர்காற்றுடன் கொண்டுவந்து சேர்க்கும் குணங்களாக ஆஸ்துமாவை என்றோ வரையறுத்து வைத்திருக்கிறது. மாசும் மன அழுத்தமும் இல்லாத காலத்தில், இந்தக் குளிர்காற்றில் குத்தவைத்து முன்வளைந்து இருமி இழுத்து துன்புறுவதைக் குறைக்க-தடுக்க, ஆசுவாசப்படுத்த, மாத்திரையும் லேகியமும் உறிஞ்சு மருந்துகளும் மட்டும் போதாது. நிறைய உணவும் செயலும் மனமும் செதுக்கிச் சீராக்கப்பட வேண்டும்.

மிளகைத் தெரிந்த பலருக்கு, அதன் பெரியப்பாவான திப்பிலியைத் தெரியாது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மும்மருந்துக் கூட்டணி, நம்மில் பலரை நெடுங்காலமாக பல வியாதிகளில் இருந்து காத்துவந்த மருத்துவப் பொருட்கள். அதுவும் திப்பிலி, காலம்தொட்டு ஆஸ்துமாவுக்கு மிகச் சிறப்பான தடுப்பு மருந்து. கோழைச் சளியை விலக்கி, மூச்சின் இறுக்கத்தை இது இலகுவாக்கும்.

'மாமனுக்கு மாமனென மற்றவனுக்கு மற்றவனாக

காமனெனுந் திப்பிலிக்குக் கை’

- என பரிபாஷையில், தேரன் சித்தன் பாடியதை விவரித்தால் திப்பிலியின் பெருமை பிடிபடும். 'பாரதத்தில் சகுனி மாமனால் வந்த பிரச்னையை, கிருஷ்ணன் மாமா தீர்த்துவைத்ததுபோல், ஆஸ்துமா மாமன்போல் மரபாக வந்திருந்தாலும், கோழையை விரட்டி ஆஸ்துமாவை விரட்டும் திப்பிலி மாமன்’ என்பதுதான் அந்தப் பாடலின் பொருள். இரைப்பு இல்லாத நிலையிலும் இந்தப் பனிக்காலத்தில் நோய்த் தீவிரத்தைத் தடுக்க, மிளகு ரசம் வைப்பது மாதிரி, திப்பிலி ரசம் வைத்து மோர்ச் சோறுக்கு முன்பு கொடுக்கலாம். கோழை அதிகமாக இருக்கையில் தனியாக சூப் மாதிரி இதைக் கொடுத்தால் சளியை வெளியேற்றும். பொதுவாக காற்று மாசுக்களால் மூச்சுக்குழல் இறுகுவதை திப்பிலி சத்துக்கள் தடுப்பதுடன், திடீர் கோழைப்பெருக்கம் நடப்பதையும் நிறுத்தும் என 'International Journal of Pharmacology’ முதலான பல மருத்துவ சஞ்சிகைகள் உறுதிபடுத்தியுள்ளன.

அஜீரணமும், மலச்சிக்கலும் ஆஸ்துமாவின் பக்க வாத்தியங்கள். இந்த இரண்டையும் விலக்குவது ஆஸ்துமா சிகிச்சைக்கு அதிமுக்கியம். குழந்தைகளுக்கு மாந்தத்தின் நீட்சியாக இந்த இரைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்பதால்தான், பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வராமல் தடுக்க வேலிப்பருத்தி எண்ணெய் அல்லது அதன் சாற்றை வீட்டில் கொடுப்பார்கள். இது மலத்தை இலகுவாகக் கழியச்செய்து, வயிற்று உப்புசத்தைப் போக்கி, இரைப்பை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும். இது வீட்டுத் தோட்டத்தில் வளரும் எளிய மூலிகைச் செடி. வளர்ந்த பிள்ளைகளுக்கு, கடுக்காய் இளம்பிஞ்சை செக்கில் ஆட்டிய விளக்கெண்ணெயில் வதக்கி, பின் அதைப் பொடி செய்துவைத்துக்கொண்டு, இரவில் படுக்கும் முன்னர் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடக் கொடுக்கலாம். சளி பிடிக்கும் மழைக்காலத்தில் பருப்பு கடைசலில் விளக்கெண்ணெய் சேர்ப்பதுகூட செரிமனத்தைத் தூண்டும்.

ஆஸ்துமாக்காரர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய ஒன்று பால். ஆனால், மிகவும் உடல் வலுவற்ற நிலையில் பிற உணவுகள் ஏற்காத நிலையில் 'கண்டிப்பாகத் தேவை’ என மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பாலில் மிளகும் மஞ்சள் தூளும் பனங்கற்கண்டும் சேர்த்து, மாலை 6 மணிக்கு முன்னதாக அருந்தலாம். பால் சேர்க்காத தேநீர் உடனடி நிவாரணம் தரும் ஆஸ்துமா மருந்து. பல நூறு ஆண்டுகளாக நவீன மருத்துவத்தில் இதற்குப் பயனாகும் தியோஃபிலின் மருந்து, இந்தத் தேயிலையில் இருந்து எடுக்கப்பட்டதுதான். ஆஸ்துமாவில் சளி மூச்சுக்குழலில் ஒட்டிக்கொண்டு வரக் கஷ்டப்பட்டு கோழையாக இருப்பதற்கு ஆடாதொடா இலைச்சாறு பெரும்பயன் அளிக்கும். கரிசாலைக் கீரையையும், முசுமுசுக்கையையும் தேயிலைக்குப் பதிலாகப் போட்டு தேநீர் அருந்துவதும், கொத்துமல்லி இலைக்குப் பதிலாக தூதுவளைக் கீரையை ரசத்தில் போட்டுச் சாப்பிடுவதையும், பஜ்ஜியில் வாழைக்காய்க்குப் பதிலாக கற்பூரவல்லி இலையைப் போட்டு கொஞ்சமாக பஜ்ஜி சாப்பிடுவதும் மழைக்கால சம்பிரதாயமாக மாறுவது மூச்சு இரைப்பைத் தடுக்கும் உணவு உத்திகள்.

மார்கழி மாதத்தில் பெருமாள் பாதத்தை சேவித்துத் தலைவணங்குவதுபோல், வாரம் ஒருமுறை நெபுலைசரில் மூச்சைக் காட்டி சேவித்துவரும் குழந்தைகள் கூட்டம் இப்போது நகரில் அதிகம். இன்னும் சிலரோ, 'யார் வாயில் வைத்த குழாயோ... எதுக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு? அதான் 1,000 ரூபாய்க்குக் கிடைக்குதே’ என வீட்டில் வாங்கிவைத்து உறிவதும், மருந்து நிறுவனத்தின் ஆசியுடன் அதிகரிக்கிறது. முதலில் இந்த மோட்டார் மூச்சுதான் சிறப்பு எனப் பேசியவர்கள், இப்போது 'இல்லை... இல்லை... நாமே உறிஞ்சும் இன்ஹேலர்தான் சிறப்பு’ எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இன்ஹேலர் இல்லாத காலத்தில் இதே பணியை நம் மரபு வேறு மாதிரி கற்றுத் தந்தது. அதற்கு பேர் 'ஆவி பிடித்தல்’ அல்லது 'வேது பிடித்தல்’. ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீர்கோத்த மரபு உள்ள வளர்ந்த குழந்தைகளை மழை, பனிக் காலங்களில் ஆவி பிடிக்கவைப்பது இரைப்பு வராது தடுக்க உதவும். இதற்கு நொச்சித்தழை, யூகலிப்ட்டஸ் தழை, மஞ்சள் தூள், சித்த ஆயுர்வேத மருந்தகங்களில் கிடைக்கும் மூலிகை எண்ணெய்களை அவர்கள் ஆலோசனைப்படி பயன்படுத்துதல் நல்லது.

நலம் 360’  - 27

'அதான் இழுக்குதே... அவனைப் போயி ஓடச் சொல்றீங்க, எக்ஸர்சைஸ் பண்ணச் சொல்றீங்க’ என பி.டி கிளாஸில், மருத்துவச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு மரத்தடியில் கவிதை எழுதப்போய்விடும் மாணவக் கூட்டம், பள்ளியில் எப்போதும் கொஞ்சம் உண்டு. உடற்பயிற்சியால் ஏற்படும் ஆஸ்துமா வகையில் மட்டும்தான் அந்த அதிகப் பயிற்சி தவிர்க்கப்படலாமே ஒழிய, எல்லா ஆஸ்துமாக்காரரை விளையாடவிடாமல் தடுப்பது கூடாது. அப்படியானவர்களுக்கு நுரையீரலின் செயல்படும் திறனை அதிகரிக்க உடற்பயிற்சி பெரிதும் உதவும். குறிப்பாக யோகாசனப் பிராணாயமத்தில் கபாலபாதி எனும் எளிய, மிக சக்திவாய்ந்த நாடிசுத்தி மூச்சுப்பயிற்சி, நுரையீரலின் திறனை (Force Vital Capacity) ஏகத்துக்கும் உயர்த்தும் என்கிறது நவீன அறிவியல்.

கருத்தரித்திருக்கும்போது ஆஸ்துமா தொல்லை வந்தால் மருந்து 'எடுக்கலாமா... வேண்டாமா?’ என்ற குழப்பம், பல கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும். மருத்துவர் ஆலோசனைப்படி கண்டிப்பாக சரியான மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மருந்து எடுக்கத் தவறி, அதீத இரைப்புடன் அவஸ்தைப்படுவது மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

வீசிங் பிரச்னை இருக்கும்போது 'அந்த’ விஷயம் அவசியமா... ஆபத்தா? என்ற கோக்குமாக்கு சிந்தனையும் சிலருக்கு உண்டு. பித்த உயர்வைத் தரும் அளவான முத்தமும் அதன் பின்னான மெல்லிய காமமும் இரைப்புக்கு இதம் அளிக்கும் விஷயமே. சிலருக்கு உடற்பயிற்சியால் வரும் இரைப்பும் மனஅழுத்த உச்சத்தில் வரும் இரைப்பும், உடலுறவின்போதும் வரும் சாத்தியம் உண்டு. அப்படியானவர்கள் மட்டும் ஆஸ்துமாவுக்கான தடுப்பு சிகிச்சையை எடுத்துக்கொள்வது அவசியம்.

புளித்த உணவுகள், புளித்த பழங்களான எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, நுரையீரலில் நீர்த்துவக் கபத்தை உண்டாக்கும் கிர்ணி, சீதா, தர்பூசணியை ஆரம்பத்தில் இருந்தே தவிர்ப்பது நலம். யோகப் பயிற்சி மற்றும் மருத்துவம் மூலம் நல்ல நிலைக்கு மீண்டு வரும்போது இளநீர், வாழை, மாதுளை எனப் படிப்படியாக எல்லா பழங்களுக்கும் பழகலாம். அப்படியே பழத் துண்டுகள் சாப்பிட்டாலும் மிளகு தூவி சாப்பிடுவது நல்லது.

சே குவேரா, சார்லஸ் டிக்கின்ஸ்,  அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் முதல் நம்ம ஊர் ராஜாஜி வரை ஆஸ்துமாவை ஓரங்கட்டி உயர்ந்த ஆளுமைகள் உலகில் ஏராளம். ஆக, ஆஸ்துமாவுக்குத் தேவையெல்லாம் கூடுதல் அக்கறையும் கொஞ்சம் மருந்தும் மட்டுமே... அச்சம் இல்லை!

- நலம் பரவும்...

ஆஸ்துமா வருமுன் காக்க...

நலம் 360’  - 27

ரும் முன் காப்பது எப்போதும் ஆஸ்துமாவில் மிக அவசியம். கூடுதல் இரைப்பு உள்ளபோது, உடனடியாக மூச்சிரைப்பைக் குறைக்க நெபுலைசரும் இன்ஹேலரும் நிச்சயம் பயன் அளிக்கும். ஆனால், இரைப்பின் வீச்சு திடீரென அதிகரிக்காமல் தடுக்க பாரம்பர்யம்தான் பாதுகாப்பு தரும். திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலி கூட்டணியும், தசமூலம் எனும் ஓரிலை, மூவிலை, சிறுவழுதுணை, கண்டங்கத்தரி, சிறு நெருஞ்சில், குமிழ், முன்னை, பாதிரி, பையாணி, வில்வம் என்ற மூலிகைகளும் என இரண்டு மூலிகைக் கூட்டணிகளும் சித்த ஆயுர்வேத மருந்துகளின் பெரும் நம்பிக்கை நட்சத்திரங்கள். ஆஸ்துமா உள்ளோர் வீட்டில் இந்தக் கலவைதான் காபித் தூளாக அல்லது தேநீர்த் தூளாக இருக்க வேண்டும். ஆடாதொடா இலையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கஷாயப் பொடியில் 2 ஸ்பூன் பொடிக்கு 2 குவளை நீர்விட்டு அரை குவளை கஷாயமாக வற்றவைத்து, வடிகட்டி, இளஞ்சூட்டோடு மழைக் காலத்தில் தேநீர்போல் பருகினால், இரைப்பின் அட்டகாசம் சலேரெனக் குறையும்!

எது ஆஸ்துமா?

நலம் 360’  - 27

'மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பதுபோல இழுப்பது எல்லாம் ஆஸ்துமா அல்ல. இதய, சிறுநீரக நோயில்கூட இரைப்பு வரும். புகைப் பழக்கத்தால் வரும் COPD நோய், ஆஸ்துமா போலவே 40 வயதுக்காரரை வதைக்கும். ஆஸ்துமா எனும் போர்வைக்குள் மறைந்திருக்கும் காசநோய் குறித்த விழிப்பும் நமக்கு கட்டாயம் வேண்டும். இந்தியாவில் இளங்காசம் எனும் கவனிக்கப்படாத PRIMARY COMPLEX TUBERCULOSIS  நிறையவே உண்டு. ஆக, 'ஆஸ்துமா’ என்ற சந்தேகம் எழுந்தாலே, அது எந்தவகை ஆஸ்துமா... அல்லது ஆஸ்துமாவோடு இணைந்திருக்கக் கூடிய பிற நோய்கள் என்னவென  ஊர்ஜிதப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்!