Published:Updated:

ஆல் இஸ் வெல்! - 7

உங்களை நீங்களே கொண்டாடுங்கள்!மனதுக்கு மருந்து போடும் தொடர்டாக்டர் அபிலாஷா

வாசகிகளே! உங்களின் பர்சனல் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற, ‘ஆல் இஸ் வெல், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2’ என்ற அஞ்சல் முகவரியிலும், alliswell-aval@vikatan.com என்ற மெயில் ஐ.டி-யில் மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளச் சொல்லிக் கேட்டிருந்தேன். வந்த கடிதங்களில் ஒரு தோழி, தன் தாழ்வு மனப்பான்மை பற்றி கண்ணீருடன் கூறியிருந் தார். அவருக்காகவும், தாழ்வு மனப்பான்மை பிரச்னையால் உழலும் மற்ற சகோதரி களுக்காகவும் பேசுவோம் இந்த இதழில்!

தாழ்வு மனப்பான்மை என்பது, ஒருவருக்குத் தன்னால் வருவதைவிட, அவர்களைச் சேர்ந்தவர்களாலேயே தரப்படு கிறது. முதலில், உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையைத் தருபவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் தராதீர்கள். ‘அவ எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா? அவ பக்கத்துல நின்னு போட்டோ எடுக்க உனக்கு ரொம்பதான் தைரியம்!’ என்று கேலி செய்யும் கல்லூரித் தோழியை சட்டை செய்யாதீர்கள். அல்லது, ‘ஏய்... அவளைவிட, உன்னைவிட, நான் உள்ளத்துல அழகி!’ என்று பாஸிட்டிவாக, தைரியமாகப் பதிலடி கொடுங்கள்.

‘உங்களுக்கு சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல் தவிர வேறெதுவும் சமைக்கத் தெரியாது...’ என்று பக்கத்து வீட்டுப் பெண் மனம் நோகப் பேசினால், அதற்குப் பின் உங்களை இப்படித் தாழ்த்திப் பேசும் உரிமையை, தருணத்தை அவருக்குத் தராதீர்கள். அல்லது, ‘நீங்க செய்ற ஃப்ரைடு ரைஸ், பர்கரை எல்லாம் நான் நாளைக்கே கத்துக்குவேன். ஆனா, ஊரே வாசம் பிடிக்கும் என் புளிக்குழம்பு கைப்பக்குவம் உங்களுக்கு வரவே வராது’ என்று பதில் சொல்லுங்கள்.

ஆல் இஸ் வெல்! - 7

அலுவலகத்தில், உங்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே சீனியர்கள் ஜாலி என்ற பெயரில் கேலி செய்து பேசும் வார்த்தைகளைக் காதில் வாங்காதீர்கள்.

இப்படி உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்படி பேசும் எந்த நபருக்கும், அவரின் வார்த்தைகளுக்கும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முக்கியத்துவம் தராதீர்கள்.

சரி, ‘சித்தி எப்படி ஹோம்வொர்க் செய்யச் சொல்லித் தர்றாங்க. அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியல’ என்று குழந்தை சொன்னால், குழந்தைக்கும் வாழ்க்கையில் முக்கியத் துவம் தராமல் போய்விட முடியுமா..? இங்கு ஒரு சின்ன அறிவுறுத்தல். உங்களை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகப் பேசுபவர்களையே உதாசீனப்படுத்த வேண்டும்.  உண்மை யிலேயே, உங்கள் பொறுப்பில் நீங்கள் தேங்கும்போது, தவறும்போது சுட்டிக்காட்டும் நபர்களின் வார்த்தைகளை, வருத்தங்களைப் பரிசீலிக்கப் பழக வேண்டும்.

உதாரணமாக, உங்களால் தனக்கு ஹோம் வொர்க்கில் உதவி செய்ய முடியவில்லை என்று குழந்தை குறைபட்டுக் கொண்டால், உடனே பன்னிரண்டாவதுக்கு மேல் உங்களைப் படிக்க வைக்காத அம்மா, அப்பாவை இப்போது சபிப்பதால் உங்கள் வாழ்க்கை மாறி விடப்போவதில்லை. அல்லது, உங்கள் குழந்தை உடன் படிக்கும் மற்ற குழந்தைகளின் அம்மாக்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்த்து, ஆண்டு விழா, பெற்றோர் சந்திப்பு, குழந்தைகளை டிராயிங் கிளாஸ், யோகா கிளாஸ் என்று டிராப் செய்யும்போது கூடும் ‘மம்மீஸ் கிளப்’ போன்ற இடங்களில் தாழ்வு மனப்பான்மையில் அவர்களிடமிருந்து விலகுவதும் தீர்வாகாது. பாடம் சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்றால், டியூஷனில் விடலாம். ஆனால், பள்ளியில் வழங்கப்படும் புராஜெக்ட்டுகளில் வரைவது, வெட்டுவது, ஒட்டுவது போன்றவற்றில் உங்கள் கற்பனைத் திறனைக் காட்டி அசத்தி குழந்தைக்கு நீங்கள் உதவினால், ‘மம்மி சூப்பர்!’ என்று கட்டிக்கொள்ளும் குழந்தை. அதேபோல, தொலைதூரக் கல்வியில் படிப்பைத் தொடர்வது, குழந்தையுடன் சேர்ந்து நீங்களும் ஹிந்தி, கம்ப்யூட்டர் வகுப்புகளுக்குச் செல்வது, யோகா, கிராஃப்ட் வகுப்புகள் என்று எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்களுக்குச் செல்வது... இவையெல்லாம் உங்களின் தாழ்வு மனப்பான்மையை விரட்டி, நிச்சயம் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். ‘நமக்கு பல விஷயங்கள் தெரியும்’ என்ற தன்னம்பிக்கை, ‘மம்மீஸ் கிளப்’களில் உங்களையும் ஆர்வமாகப் பங்கெடுக்க வைக்கும்.

ஆல் இஸ் வெல்! - 7

‘உன் ஃப்ரெண்ட் தீபா எப்படி ஸ்லிம்மா இருக்கா? நீ இப்படி 80 கிலோவில் இருக்கே...’ என்று கணவர் சொன்னால், ‘அவருக்கு என்னைப் பிடிக்காமப் போயிருச்சு’ என்றோ, ‘வெளியிடங்களுக்குப் போகும்போது என் கணவருக்கு நான் பொருத்தமா இல்ல’ என்றோ தாழ்வு மனப்பான்மைக்குள் சென்று, இல்லற சந்தோஷத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள். ஹெல்த் அண்ட் ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். டயட், எக்சர்சைஸ் என்று மெனக்கெடுங்கள்.

அலுவலகத்தில், ‘ரூபி எவ்வளவு டார்கெட் கொடுத்தாலும் ரீச் பண்ணிடுவா. நீ வேஸ்ட்’ என்று பாஸ் சொன்னால், ‘அவளால மட்டும் எப்படி முடியுது?! பாஸ் சொல்வதுபோல, நான் வேஸ்ட்தான்!’ என்று அழாதீர்கள். உங்கள் உழைப்பை அதிகப்படுத்துங்கள். அல்லது, வேலையில் உங்களுக்கு இருக்கும் நியாயமான சிரமங்களை பாஸ் இடம் எடுத்துச் சொல்லி, தீர்வு காணுங்கள். அதன் பின் முட்டி மோதி ஓடி வந்து, ரூபியை முந்துங்கள்.

இந்த உலகில் ஒவ்வொருவரிடமும் ஓர் அழகு இருக்கிறது, திறமை இருக்கிறது, வசீகரம் இருக்கிறது. உங்களின் அழகு, திறமை, வசீகரம் எது என்பதை நீங்கள் கண்டறியுங்கள். உங்கள் கோ சிஸ்டர் அழகழகாக கோலம் போடலாம். ஆனால், உறவுகளை அரவணைத்துச் செல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். உங்கள் நாத்தனார் பிஸியான கேரியர் உமனாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அதைவிட திருப்தியான ஹோம்மேக்கர். உங்கள் உறவுக்காரப் பெண் ஒப்பிட முடியாத வசதியில் இருக்கலாம். ஆனால், உங்களைப் போல் உதவும் குணம் இங்கு அரிது. உங்கள் மகனுடைய ஃப்ரெண்டின் அம்மா சரளமாக ஆங்கிலம் பேசலாம். ஆனால், யாரையும் புண்படுத்தாத இனிமையான பேச்சு உங்கள் ப்ளஸ். உங்கள் அலுவலகத் தோழி உங்களைவிட பர்சனாலிட்டியாக இருக்கலாம். ஆனால், ஆட்டிட்யூடில் நீங்கள்தான் அழகி.
 
இப்படி நீங்கள் மற்றவர்களிடம் இருந்து உங்களை தாழ்வுபடுத்துவதாக நினைக்கும் விஷயத்தைப் புறந்தள்ளி, உங்களின் சிறப்பம்சங்களை நினைத்துப் பெருமைப்படுங்கள். உங்களை நீங்களே கொண்டாடுங்கள்!  

- ரிலாக்ஸ்...

தொகுப்பு: சா.வடிவரசு

மூன்று காரணங்கள்... ஐந்து தீர்வுகள்!

ருவரின் தாழ்வுமனப்பான்மை, பெரும்பாலும் அவர் குழந்தையாக இருக்கும்போது எதிர்கொண்ட விஷயங்களால்தான் ஏற்பட்டதாக இருக்கும். எனவே, குழந்தைகளிடத்தில் தாழ்வு மனப்பான்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமை. ‘அவ எப்படிப் படிக்கிறா... நீயும்தான் இருக்கியே...’ என்று மற்ற குழந்தைகளோடு ஒருபோதும் உங்கள் குழந்தைகளை ஒப்பிடாதீர்கள். அதுதான் இந்தப் பிரச்னையின் வேர்.

பொதுவாக உடல் சார்ந்த, திறன் சார்ந்த, சூழல் சார்ந்த மூன்று காரணிகளால்தான் குழந்தைகளுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதைக் களைய, இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றுங்கள். ஒன்று, குழந்தைகளை எப்போதும் கண்காணியுங்கள். இரண்டு, அவர்களுக்குள் எழும் எதிர்மறை எண்ணங் களை உடனுக்குடன் கிள்ளியெறிந்து அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் தட்டிக்கொடுங்கள். மூன்று, அவர்கள் மற்றவர்களால் தொடர் கிண்டல், கேலிக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நான்கு, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவமானப் படுத்தும்படியான தண்டனைகள் வழங்காமல், பக்குவ மாக சரிசெய்யுங்கள். ஐந்து, அவர்களை ஒருபோதும் யாரோடும் ஒப்பிடாதீர்கள்!