Published:Updated:

எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! குழந்தைகளுக்கான இரவுக் கதை #BedTimeStory

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்!  குழந்தைகளுக்கான இரவுக் கதை #BedTimeStory
எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! குழந்தைகளுக்கான இரவுக் கதை #BedTimeStory

எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! குழந்தைகளுக்கான இரவுக் கதை #BedTimeStory

கதைகளே குழந்தைகளுக்கு நல்ல நண்பன். புதிய உலகத்தைத் திறக்கச் செய்ய எளிய வழி கதை சொல்வதுதான். ஒவ்வொரு நாளும் உங்கள் குழந்தைக்குக் கதை சொல்லுங்கள். அப்படி சொல்வதற்கு உதவியாக இதோ அழகான ஒரு கதை! சாலையில் நாம் அதிகம் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிக்னலை வைத்து சூப்பரான கதை உங்களுக்காக!

எப்போதுமே சிவப்பு விளக்கு எரியும் சிக்னல்! 

விழியன்

”மாமா, இவன்கூடப் போய்ட்டு வரவா?” என்று கேட்டான் மணி. அவன் காட்டியது லோகநாதன் என்ற லோகுவைத்தான். மணி கிராமத்திலிருந்து தன் மாமாவுடன் சென்னைக்கு வந்திருக்கின்றான். ஏழாம் வகுப்பு படிக்கும் மணி தன்னால் சரியாகப் படிக்கமுடியவில்லை என்று விடுமுறை விட்டதும் வீட்டிலேயே முடங்கி இருந்தான். ஊருக்குப் போன அவன் மாமா ஒரு மாசம் சென்னையில என்கூட இருந்துட்டு வா என அழைத்து வந்திருக்கிறார். மாமா, சென்னை போரூர் சிக்னல் அருகே டீக்கடை வைத்திருக்கிறார். அவரே முதலாளி; அவரே டீ மாஸ்டர்; அவரே அந்தக் கடையில் எல்லாமும். ஒரு இந்திப் பேசும் இளைஞன் மாமாவின் உதவிக்கு இருக்கிறார். 

மணி, கடைக்கு வெளியே வந்து சிக்னலைப் பார்ப்பதிலேயே நேரத்தை கடத்துவான். காலை ஏழரை மணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு பத்து மணி வரை குறையவே குறையாது. மேம்பாலம் திறக்கப்பட்டாலும் நெரிசல் குறையவில்லை. மாமாவின் கடை குன்றத்தூர் சாலையில் இருந்தது. சிக்னலில் இருந்து ஐம்பது அடிகள்தான். அங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளி சின்ன அறை எடுத்துயிருந்தார் மாமா. மூவரும் அங்கேதான் தங்கினார்கள். மாமா திருமணமே செய்துகொள்ளவில்லை.

மணி எப்போது சிக்னலைப் பார்த்தாலும் அவனுக்குச் சிவப்பு நிற விளக்கு மட்டுமே தெரியும். அவனுக்கு அப்படி ஒரு ராசி என நினைத்துக்கொள்வான். அவனுக்கு நிறையக் குழப்பங்கள் இருந்தன. மேலே படிக்கலாமா இல்லை விட்டுவிடலாமா, இங்கயே ஏதாச்சும் வேலையில் சேர்ந்திடலாமா என்று கூட யோசனை இருந்தது. சென்னை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் எந்நேரமும் நெரிசலும் கூட்டமுமாக இருந்த போரூர் சிக்னல் அவனுக்குச் சுத்தமாகவே பிடிக்கவே இல்லை. ஊரில் விட்டுவிடுங்கள் என மாமாவை கேட்க நினைத்த நாளில் தான் லோகுவை சந்தித்தான். அவன் அப்பா ஒரு ஷேர் ஆட்டோ ஓட்டுநர். அந்த நாள் அவர் டீ சாப்பிட வரும்போது லோகுவும் வந்திருந்தான். பார்த்ததுமே புன்னகைத்தான். அவனாக வந்து பேசினான். அன்றிலிருந்து தினமும் வந்துவிடுவான். ”மாமா, இவன் கூட போய்வரவா?” என்று கேட்டதும் 'போய் வா' என்றார் மாமா. லோகுவின் அப்பாவை நன்றாகத் தெரியும் என்பதால் அந்த நம்பிக்கை.

லோகுவும் மணியும் ஷேர் ஆட்டோவில் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர். போரூர் சிக்னலில் இருந்து பூந்தமல்லி வரை ஓடும் ஷேர் ஆட்டோ அது. மதிய வேளையில் சவாரி குறைவாகவே இருக்கும். வெயில் வேறு அதிக்கப்படியாக இருந்ததால் மக்கள் யாரும் வெளியே வரவே அஞ்சினார்கள். மணிக்கு இந்தப் பயணம் மிகவும் பிடித்து இருந்தது. தினமும் இதுவே பழக்கமாகிவிட்டது. போரூரில் இருந்து பூந்தமல்லி, பூந்தமல்லியில் இருந்து போரூர். இப்போது எல்லா நிறுத்தமும் மணிக்கும் அத்துப்படியானது. லோகு இடைவிடாது பேசிக்கொண்டே இருப்பான்.

ஒருநாள் பூந்தமல்லியில் இருந்து கிளம்பும்போது ஷேர் ஆட்டோ நிரம்பி வழிந்தது. “இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க ஏத்திக்க முடியுமா?” என ஆட்டோவில் இருந்த ஒருவர் கேட்க லோகுவும் மணியும் இறங்கினார்கள். “பின்னாடி நம்ம பசங்க யாராச்சும் வருவாங்க, காலியா இருக்க ஆட்டோல வந்திடுங்க. இல்லைன்னா இங்கயே இருங்க ஒரு மணிநேரத்தில வந்திட்றேன்” என்றார் லோகுவின் அப்பா. அங்கேயே காத்திருந்தார்கள். கால் மணி நேரம் கழித்து “என்னடா லோகு இங்கே இருக்க, வா போகலாம்” என அவனுக்குத் தெரிந்த ஆட்டோக்காரர் இருவரையும் அழைத்துக்கொண்டார். ராமச்சந்திரா ஸ்டாப்பிங்கில் இருவரும் இறங்கிக்கொண்டனர். அங்கிருந்து போரூர் சிக்னல் சுமார் ஒரு மைல் தூரம் இருக்கும். “நடந்து போகலாம் மணி” என்றான் லோகு. மாலை நேரம் மழை வரும்போல இருந்தது. சில்லெனக் காற்று வீசிக்கொண்டிருந்தது. ராமச்சந்திரா காம்பெளண்ட் சுவர் கடந்ததும் வலது பக்கம் ரெட்டேரி இருக்கும். தூரத்தில் ஒரு மேம்பாலம். அது தாம்பரம் பைபாஸ் சாலை.

“லோகு, நீ எப்படிடா சந்தோஷமாவே இருக்க?” என்று மணி கேட்டான். அதற்கு அவன் சிரித்தான்.
..
“லோகு, நீ பெரியவனாகி என்ன செய்யப்போற?”

லோகு விரல்களை நீட்டினான். 'அதோ' என நீட்டினான். அவன் சுட்டியது மேம்பாலத்தை அல்ல, அதனைத் தாண்டிய மேகத்தை. இல்லை மேகத்தையும் தாண்டிச்சென்ற விமானத்தை.
“அதுவரைக்கும் பறப்பேன் மணி. அதுக்கும் மேல” என்றான்.

'ஜிவ்...' என்று இருந்தது மணிக்கு. புது ரத்தம் பாய்ச்சியதுபோல இருந்தது. அவன் சிந்தனையில் மாற்றம் நிகழத் தொடங்கியது. அன்று இரவு மணியைக் கட்டாயப்படுத்திப் பூந்தமல்லி சுந்தர் தியேட்டருக்கு அழைத்துச்சென்றான் லோகு. அவன் அப்பாவின் ஷேர் ஆட்டோவில் லோகுவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அன்று இரவு லோகுவில் வீட்டில்தான் உறங்கினான். அவ்வளவு சின்ன வீடு. ஆனா இவனுக்கு இவ்வளவு பெரிய கனவா என வியந்தான். மறுநாள் ஊருக்குக் கிளம்புகிறான் மணி.

“மாமா, நீங்க வரவேண்டாம், நானே தனியே போறன்” என்றான். வரும்போது பயந்த பையனா இவன் என வியந்தார் மாமா. “என்னடா சென்னை பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். “ரொம்பவே” என்றான்.

இரவு 10.30க்குப் பூந்தமல்லியில் பேருந்து, விடியற்காலை ஊருக்குப் போய்விடலாம். மாமா வந்து ஏற்றிவிடுவதாக இருந்தது. ஆனால் லோகு ஏற்றிவிடுவதாக அவன் அப்பாவுடன் வந்திருந்தான். லோகுவை ஒருமுறை கட்டியணைத்துக்கொண்டான். “இந்தா அம்மா உனக்கு ஏதோ கொடுத்திருக்காங்க” எனப் பொட்டலத்தை நீட்டினான். கடையை விட்டு வெளியே வந்ததும் சிக்னலைப் பார்த்தான் மணி.

“பச்சை”

போலாம் ரைட் !

விழியன்: சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருபவர். இவர் எழுதிய மாகடிகாரம் எனும் சிறுவர் நூல் விகடன் விருது பெற்றது. குழந்தை வளர்ப்புத் தொடர்பாகவும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு