Published:Updated:

நலம் 360’ - 29

மருத்துவர். கு.சிவராமன்

சுவமேத யாகக் குதிரையோடு குறுக்கும் நெடுக்குமாக இந்தியா முழுக்க குதிரையில் பயணித்த அரசக் குடும்பத்தினரில் எவரும், இடுப்பு வலியால் அவதிப்பட்டதாக வரலாறு இல்லை. 'அஞ்சும் ஆறும்’ அழகாகப் பிறந்த பிறகும், ஏழாவதாக வீட்டிலேயே சுளுவாகப் பிரசவித்த என் பாட்டியை, இப்படி ஒரு வலி வாட்டி வதைத்ததாக, குடும்பத்தில் யாரும் சொன்னது இல்லை.

நலம் 360’  - 29

ஆறாம் கிளாஸில் குரங்கு பெடல் போட்டு குச்சி ஐஸ் வாங்க மன்னாபுரம் விலக்குக்குச் சென்றபோது அல்லது  குளத்தாங்கரை கடையைச் சுற்றிச் சுற்றி வந்தபோது, இப்படி ஒரு வலி வந்ததாக எனக்கும் நினைவில்லை. ஆனால், இப்போது எவன் தலையைத் தடவியாவது இதை விற்றே ஆக வேண்டும் என, தினமும் இருசக்கர வாகனத்தில் சுற்றிவரும் இந்த நாட்களில் பலருக்கும் இந்த வலி வருகிறது. பட்டம் விடும் நூலின் மாஞ்சாவை இடுப்பில் தடவினால்போல ஓர் எரிச்சல். கூடவே உள்ளிருந்து திருகாணியைத் திருகுவதுபோல் வலி, இடுப்பின் பின்புறத்தில் இருந்து பிட்டம், தொடையின் பின்பகுதி வழியாக கால் பெருவிரல் வரை வலி சுண்டி இழுக்கும். கூடவே ஆங்காங்கே மரத்துப்போன உணர்வு எனத் தடாலடி வலிக் கூட்டம் மொத்தமாக அழுத்தும். 'குய்யோ முறையோ’ எனக் குதித்துக்கொண்டு மருத்துவரிடம் போனால், 'உங்களுக்கு லம்பர் ஸ்பாண்டிலோசிஸ் (lumbar spondylosis) வந்திருக்கிறது’ என்று சொல்வார்... 'நிறைய நேரம் பைக்  ஓட்டுவீங்களா?’ என ஒட்டுதல் கேள்வியுடன். 

'கருத்தரித்திருக்கிறோம்’ என ஒரு தாய் உணரும் முன்னரே, அவளின் கர்ப்பப் பைக்குள் சிசுவின் முதுகுத்தண்டு ஆரம்பகட்ட வளர்ச்சியை அடைந்திருக்கும் என்கிறது அறிவியல். கருத்தரிக்க விரும்பும் தம்பதியர், கருத்தரிக்கும் முன்பு இருந்தே ஃபோலிக் அமில மாத்திரை சாப்பிட்டால் குழந்தையின் முதுகுத்தண்டு நலமுடன் வளரும் என்கிறது நவீன மருத்துவம். எந்தக் கணத்தில் கருமுட்டை உருவாகிறது எனக் கணிக்க இயலாது. ஆனால், கருமுட்டை உருவாகும் கணத்தில், ஃபோலிக் அமிலச்சத்து சரியாக இருக்க வேண்டும். பயறு, பருப்பு வகைகள், பட்டாணி, கீரை, பீன்ஸ், ஆரஞ்சு என அனைத்திலும் ஃபோலிக் அமிலம் இருந்தாலும், ஒரு நாளுக்குத் தேவையான 400 மைக்ரோ கிராம் கிடைக்க வேண்டும் என்பதால்தான், அந்த மாத்திரையைக் கருத்தரிக்க விரும்பும் பெண் உட்கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது. தவிர்த்தால் ஸ்பைனா பைஃபிடா spina bifida) எனும் தண்டுவட நோய் வரக்கூடும். பிறந்தவுடன் குழந்தையின் முதுகு, நிமிர்ந்து நிற்கும் வலுவுடன் இருக்காது. நாளுக்குநாள் அது தன்னை உறுதிப்படுத்திக்கொண்டே வரும். அதற்கு பெற்றோரும் சில விஷயத்தைப் புரிந்து நடக்க வேண்டும். பக்கெட்டில் போட்டு குழந்தையைத் தூக்கிச் செல்வது, அல்லது அதிக நேரம் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்து நகர்த்துவது எல்லாம், பின்னாளில் அந்தக் குழந்தைக்கு இடுப்பு வலி முதலான முதுகுத்தண்டுவட நோய்கள் வர வழிவகுக்கலாம்.  தூளியில் போட்டு ஆட்டி, இடுப்பு ஒக்கலில் தூக்கிவைத்து வளர்க்கும் குழந்தைக்கு, இந்தப் பிரச்னைகள் வரும் வாய்ப்பு மிகக் குறைவு.

நலம் 360’  - 29

நிமிர்ந்து நிற்க, மனசுக்கு எவ்வளவு வலிமை வேண்டுமோ, அதே அளவுக்கு  முதுகுத்தண்டுக்கும் வேண்டும்.33 எலும்புகள் கோத்து உருவாகும் முதுகுத்தண்டு, நேராக மூங்கில் கழிபோல் இருக்காது. இடைத் தட்டுக்களால், வளைய நெளிய உதவும் விதமாக கழுத்து, முதுகு, இடுப்பு என மேல் 24 எலும்புகளுடனும், ஒன்றோடு ஒன்று இணைந்து கூபக பிட்டப் பகுதியின் கீழ், ஒன்பது எலும்புகளுடன் இருக்கும். வயோதிகத்தில் முன் கழுத்து வளைந்து கூனாக உருவாகும் கய்போசிஸ் (kyphosis), இடுப்பு கூடுதலாக உள்வாங்கி (கர்ப்பிணிப் பெண்போல) இருக்கும் லார்டோசிஸ் (lordosis), கழுத்து - முதுகுத்தண்டுவட எலும்புகள் அதன் பக்கவாட்டில் கூடுதலாக வளைந்து, இடுப்பு தோள்பட்டை சமச்சீராக இருக்காமல் வரும் ஸ்கோலியோசிஸ் (scoliosis)... போன்ற முதுகுத்தண்டுவட எலும்புப் பிரச்னைகள் சிலருக்கு பிறப்பிலேயே ஏற்படக்கூடும். குழந்தை நிமிர்ந்து நிற்கும்போது முதுகைப் பார்த்தாலே இவற்றைக் கணிக்க முடியும். குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு இந்த ஸ்கோலியோசிஸ் பிரச்னை அதிகம் தாக்கும். அந்தப் பெண் பருவமடையும் சமயம் அல்லது அதற்கு முன்னர் இதற்கான சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே, பிற்காலத்தில் வலி இல்லாத முதுகும், அது முற்றிலும் வளைந்திராத வாழ்வும் கிட்டும்.

கழுத்து, முதுகு வலிகள் அனைத்துக்கும் இருசக்கர வாகனம் ஓட்டுவது மட்டுமே காரணம் எனப் பலரும் நினைப்பது தவறு. பைக் ஓட்டாத பாட்டிக்கும், சைக்கிள் ஓட்டவே சங்கடப்படும் பல ஆண்களுக்கும்கூட முதுகிலும் கழுத்திலும் வலி வருவது, இன்னபிற பல காரணங்களால். 10-14 மணி நேரம் கணினி திரையின் முன் அசையாது வேலைசெய்பவர்களுக்கு, நின்று கொண்டே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, கணிசமான எடையைக் கைகளில் தூக்கி, தோளில் நிறுத்தி, தலையில் ஏற்றும் உழைப்பாளிகளுக்கு, பள்ளம்-மேட்டில் விழுந்து எழுந்து செல்லும், பேருந்தின் கடைசி இருக்கையிலேயே அமர்ந்து பயணிக்கும் விளிம்புநிலை மனிதர்களுக்கு, எப்போதும் நிறை மாதக் கர்ப்பிணிபோல வலம்வரும் தொப்பையர்களுக்கு, தோளுக்கும் கழுத்துக்கும் இடையே செல்போனை நிரந்தரமாக வைத்துத் திரியும் 'பிஸி’யர்களுக்கு... எனப் பலருக்கும் கழுத்திலும் முதுகிலும் வலி அதிகரிக்கும் வாய்ப்புகள் நிச்சயம் ஏகம்!

அப்படி பல காரணங்களின் பொருட்டு, முதுகில் தட்டு லேசாக விலகியதாகக் கணிக்கப்பட்டால், சில வாழ்வியல் விஷயங்களில் பெரும் கவனம் நிச்சயம் வேண்டும்.  உணர்ச்சிவசப்பட்டு முதுகை

நலம் 360’  - 29

முன்னால் வளைத்து, குண்டு காதலியைத் தூக்குவதோ, தரையில் விழுந்த குண்டூசியை எடுப்பதோ கூடாது. தட்டு உலர்ந்த பொழுதில் முதுகை முன் பக்கம் வளைக்கையில் தட்டு நகர, விலக சாத்தியம் மிக அதிகம். பாத்ரூமில், ஷவரில், இடுப்பு உயர ஸ்டூலின் மேல் வாளி வைத்து, நீர்நிரப்பி குனியாமல் குளிப்பது உத்தமம். குறிப்பாக, மாடியில் இருந்து இறங்கும்போது, இரண்டு இரண்டு படிகளாகத் தாவுவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பகவான் அல்லது பகைவன், இவர்களில் கோரிக்கையுடன் யாரைச் சேவித்தாலும் 'அம்மா’வை வணங்குவதுபோல நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சேவிக்கலாமே ஒழிய, முன்வளைந்து பாதம் தொடுவது முதுகுக்கு நல்லது அல்ல. மெத் மெத் படுக்கை, படுத்தால் பாதி உடம்பு உள்ளே போகும் படுக்கை,  கல்யாணம் ஆன புதிதில் மாமனார் வாங்கிக்கொடுத்த மெத்தையை, தான் மாமனார் ஆகும் வரை பயன்படுத்தும் பழக்கங்கள் போன்றவை தட்டு விலகியோருக்கு ஏற்றது அல்ல. உறுதியான படுக்கையே சிறந்தது. அல்லது பாயில் ஜமுக்காளம் விரித்து உறங்குதல் நலம். கழுத்துக்கு இரண்டு, கால்களுக்கு ஒன்று, கால்களுக்கு இடையில் இரண்டு என தலையணையைத் துவம்சம் செய்து தூங்குவதும் இடுப்பில், கழுத்தில் வலி சேட்டை செய்ய உதவக்கூடும்.

நோய் எனும் நிலையை எட்டுவதற்கு முன், கழுத்து, முதுகுக்கான உடற்பயிற்சிகளைச் செய்துவந்தாலே போதும்... நிச்சயம் வலியைத் தடுக்கலாம். முதுகுத்தண்டை நெகிழச் செய்யும் சில உடற்பயிற்சிகளை காலைக்கடன், பல் துலக்கல், வாட்ஸ்அப் மேய்ச்சல்போல தவிர்க்க முடியாத அன்றாடப் பணியாக்க வேண்டும். முதுகு அணையும்படியான ergonomics உடைய நாற்காலியில் அமர்வதும், அப்போதும் தரையில் கால் பதியும்படியாக அமர்வதும் தட்டு விலகலைத் தவிர்க்கும். கழுத்து, முதுகு பக்கத் தசைகளுக்கான உடல் இயன்முறை சிகிச்சையுடன், தடாசனம், சூரிய வணக்க யோகம் முதலான பயிற்சிகளிலும், வலியை பல நேரங்களில் 100 சதவிகிதம் சரிசெய்ய முடியும். வயோதிகத்தில் மாதவிடாய் முடிவுக்குப் பின் இந்த வளைவு ஏற்பட, முதுகுத்தண்டுவட தட்டுக்கள் உலர்ந்துபோவது மிக முக்கியக் காரணம். இதைத் தவிர்க்க தினசரி குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது, 1,200-1,440 மில்லி கால்சியம் உணவில் இருப்பதும், போதிய அளவு விட்டமின் டி3 இருப்பதும் அவசியம். மோரில், பாலில், கீரையில் ஏராளமாக கால்சியம் கிடைக்கிறது. விட்டமின் - டி, பயறுகளில் கடல் மீனில் ஏராளமாக சூரிய ஒளியில் இருந்து பெறமுடியும்.

பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் இடுப்புத் தசைகள் மீண்டும் வலுப்பெற மிகவும் முனைப்பு காட்ட வேண்டும். பிரசவத்துக்குப் பின்னர் முதுகுத்தண்டுவட இடுப்புப் பகுதி தசைக்கான பயிற்சி கொடுப்பது தொப்பை ஏற்படாமல் இருக்கவும், முதுமையில் அந்தத் தட்டுக்கள் விலகாமல் இருக்கவும் உதவும். 'பெண் குழந்தைகள் மாதவிடாய் தொடங்கிய காலம் முதல், முதுகுத்தண்டுவடத் தசைகளுக்கான யோகாசனப் பயிற்சி கொடுப்பது இதற்குப் பெரிதும் உதவும்’ என்கிறார் யோகாசனப் பேராசிரியர் நாகரத்னா. மோரும் கம்பங்கூழும் கால்சியம் இரும்புச் சத்துக்கள் மிக அதிகம் உள்ள உணவு. இவை கழுத்து, இடுப்புப் பகுதிகள் வலுவாக இருக்க உதவுகின்றன. கீரைகளில் பிரண்டையும் முருங்கையும், கனிகளில் வாழையும் பப்பாளியும், காய்கறிகளில் வெண்டைக்காயும் தண்டுவடத் தட்டை வலுப்படுத்த உதவுபவை.

முதுகு, கழுத்து வலியைப் பொறுத்தவரை 'வருமுன் காப்போம்’ மந்திரம் மட்டுமே பயன் அளிக்கும். கொஞ்சம் உடற்பயிற்சியும், நம் உடலை 'பார்க்கிங்’ செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும்தான் எப்போதுமான தீர்வு!  

- நலம் பரவும்...

வலி போக்க என்ன வழி?

Cervical spondysis - கொஞ்சம் உறுத்தலான வருத்தமும் வலியும் தரும் நோய் இது. இந்த வலி பல நேரங்களில் கழுத்தோடு இல்லாமல், தோள்பட்டை முன்கை, விரல் வரை வரக்கூடும் என்பதால், சில நேரத்தில் வலி இடதுபக்கமாக இருக்கும்போது இதய வலியோ எனக் குழப்பம் தரும். மருத்துவரின் முறையான பரிசோதனையே, அது கழுத்து வலியா... இதய வலியா என்பதைச் சொல்லும். எக்ஸ்ரே மூலமும் நோயை உறுதிப்படுத்தலாம். வலியின் தொடக்க காலத்திலேயே சரியான உடற்பயிற்சி செய்தால் இந்த நோயைச் சீராக்க இயலும். தேர்ந்த சித்த-வர்ம மருத்துவரின் உதவியுடன் கொடுக்கப்படும் 'தொக்கண வர்ம சிகிச்சை’ இந்த நோயை நீக்க உதவும். கழுத்து எலும்பு பகுதிகள் என்பதால், எப்போது, எந்த அளவு அழுத்தம், எந்தத் தைல சிகிச்சை என்ற அனுபவமும் படிப்பும் இந்தச் சிகிச்சைக்கு முக்கியம். பழைய தமிழ் பட வில்லனுக்குப் பின்னால் எப்போதும் இரண்டு பேர் கழுத்தைப் பிடித்துக்கொண்டே நிற்பதுபோல, சுக மசாஜ் நிரந்தர சுகவீனத்தைத் தந்துவிடும். பல தட்டுப் பிரச்னைகளுக்கு அறுவைசிகிச்சை அவசியப்படுவது இல்லை. விபத்தில் முற்றிலுமாகத் தட்டு விலகி, தண்டுவடத்தை அழுத்தி, செயல் இழப்பைத் தரும்போது, அல்லது அதிகபட்ச நரம்புப் பிரச்னைகளைத் தரும்போது, குடும்ப மருத்துவர் மிக அவசியம் எனப் பரிந்துரைத்தால் மட்டுமே அறுவைசிகிச்சை அவசியம். நொச்சி, சிற்றாமுட்டி, தழுதாழை, ஆமணக்கு எனப் பல வாத மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்களால், முதுகு - கழுத்துப் பகுதிகளில் கொடுக்கப்படும் 'தொக்கணப் புற சிகிச்சை’யாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். அப்படியான முறையான சிகிச்சை வழிமுறைகள் இல்லாமல், ஒகேனக்கல் அருவி வாசலில், குற்றாலம் அருவி வழியில், நட்சத்திர விடுதி ஸ்பாவில் மசாஜ் செய்வது, வீட்டில் குழந்தைகளை ஏறி மிதிக்கச் சொல்வதுபோன்ற 'குறுக்கு வழி’கள், பின்னாளில் நிரந்தரப் பிரச்னைகளை உருவாக்கிவிடும்!