Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 29

பாரதி தம்பி, படம்: நா.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 29

பாரதி தம்பி, படம்: நா.வசந்தகுமார்

Published:Updated:

மிழகக் கல்விச்சூழல் குறித்து அக்கறைகொண்ட ஒவ்வொருவரும், அது பற்றி

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 29

வெளியாகியிருக்கும் புத்தகங்கள் பலவற்றை வாசிக்க வேண்டும். அப்போதுதான் நம் பள்ளிகளைச் சூழ்ந்திருக்கும் சிக்கலின் ஆணிவேர் எங்கெல்லாம் இருக்கிறது என்பதையும், தீர்வுக்கான தடம் எங்கே புதைந்துள்ளது என்பதையும் இனம் காண முடியும். இதுகுறித்து ஏராளமான புத்தகங்கள் வெளியாகி இருந்தாலும் ஒருசிலவற்றின் அறிமுகம் மட்டும் இங்கே... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்குரிய இடம் எங்கே?

ஆசிரியர்: ச.மாடசாமி,

வெளியீடு: அருவி மாலை பதிப்பகம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் இடைவெளியையும், அங்கு அறுபட்டிருக்கும் தொடர்பு கண்ணியை இணைக்கும் நடைமுறை வழிகளையும் சுவாரஸ்யமான கதை வடிவில் முன்வைக்கிறது இந்தப் புத்தகம். வகுப்பறையில் மாணவர்கள் குறும்பு செய்வதைப் பற்றி எழுதும்போது, 'இந்தக் குறும்புகள் அனைத்தும், வகுப்பறையில் மாணவர்கள் 'கதாநாயகர்கள்’ ஆவதற்கான குறுக்குவழிகள். அவற்றில் நியாயமும் இருக்கிறதே! எத்தனை காலத்துக்குத்தான் ஆசிரியர்களே வகுப்பறையை ஆக்கிரமித்துக் கொள்வது? 60 வயது ஆன பிறகும் கதாநாயகன் அந்தஸ்தை விட்டுத்தராத தமிழ் சினிமா கதாநாயகர்கள்போல் அல்லவா இவர்கள் ஆக்கிரமித்து நிற்கிறார்கள். வகுப்பறை, இளம் கதாநாயகர்கள் கையில் போக வேண்டும்’ என எழுதியுள்ளார். இதுபோன்ற கரிசனம் மிகுந்த மாற்றுப்பார்வை, இந்தப் புத்தகம் முழுவதும்  நிறைந்திருக்கிறது.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 29

திறமை இல்லாத மாணவர் என, ஒருவர்கூட இல்லை. ஒவ்வொருவரிடமும் ஓர் ஆற்றல் பொதிந்திருக்கிறது. அது வெளிப்படும் நேரமும் இடமும் வேறாக இருக்கலாம். சில மாணவர்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்; வேறு சிலர் பள்ளி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் முன்நிற்பார்கள். அவர்களிடம் நிர்வாகத்திறன் இருக்கும். படிப்பு, நடனம், நடிப்பு என, கலைகளின் பக்கம் கலக்குபவர்களும் உண்டு. இவர்கள் அத்தனை பேரின் திறமைகளும் நான்கு சுவர்கள் கொண்ட வகுப்பறைக்குள் வெளிப்பட்டாக வேண்டிய அவசியம் இல்லை. எதிர்பாராத நேரத்தில், புதிய சூழலில் வெளிப்படுவார்கள். உறுமீனுக்காகக் காத்திருக்கும் கொக்குபோல ஆசிரியர் காத்திருந்துதான் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவற்றை மிக எளிமையான மொழியில் வலிமையாக முன்வைக்கும் ச.மாடசாமிக்கு, அன்பால் தோய்ந்த மொழி கைவரப் பெற்றிருக்கிறது. தமிழகப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து படிக்கவேண்டிய புத்தகம் இது.

டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி

ஆசிரியர்: டெட்சுகோ குரோயாநாகி.

தமிழில்: சு.வள்ளிநாயகம், சொ.பிரபாகரன்.

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்.

'ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்?’ இந்தக் கேள்விக்கு உலகம் முழுவதும் கல்வியை நேசிப்போர் சொல்லும் பதில், 'டோமோயி பள்ளிபோல் இருக்க வேண்டும்’ என்பதுதான். ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் இருந்த இந்தப் பள்ளி, சோசாகு கோபயாஷி என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர்தான் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர். கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்தான் வகுப்பறைகள். பாடப் புத்தகங்களைப் படித்து மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு நேர் எதிராகக் குழந்தைகளின் அத்தனை இயல்புகளையும் அனுமதித்து, குழந்தை மைய வகுப்பறையாக இருந்தது டோமோயி.

ஒருநாள், தங்கள் பள்ளிக்குப் 'புதிய வகுப்பறை வருகிறது’ என மாணவர்களிடையே கிசுகிசு பரவுகிறது. அதாவது, மேலும் ஒரு ரயில்பெட்டி வரப்போகிறது. தண்டவாளம் இல்லாமல் எப்படி ரயில்பெட்டி வரும் எனப் பெரும் விவாதம். 'ரயில்பெட்டி வரும்போது நாங்கள் பார்க்க வேண்டும்’ என கோபயாஷியிடம் சொல்கின்றனர். 'நள்ளிரவில்தான் வரும். அதைப் பார்க்க வேண்டும் என்றால், எல்லோரும் வீட்டுக்குச் சென்று போர்வை எடுத்துக்கொண்டு வாருங்கள்’ என்கிறார் கோபயாஷி. போர்வையுடன் வந்து தூங்கிக்கொண்டிருக்கும் மாணவர்களை, ரயில்பெட்டி வந்ததும் அவரே எழுப்பிவிடுகிறார். தங்கள் வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவத்தை அன்று அவர்கள் பெறுகிறார்கள். அது வெறும் அனுபவம் மட்டும் அல்ல... மர உருளைகளை வைத்து ரயில்பெட்டியை இறக்குவது குறித்த அறிவியல்.

நீச்சல்குளங்களில் குழந்தைகள் ஆடைகள் இல்லாமல் நீந்துவதை அனுமதித்து ஊக்குவித்தார் கோபயாஷி. முக்கியமாக 'ஆண், பெண் இரு பாலினத்தவரும் சேர்ந்து நீந்த வேண்டும்’ என்றார். 'அப்போதுதான் இருவரும் தங்களின் உடற்கூறு வித்தியாசங்களை அறிய முடியும்’ என்றும், 'தங்கள் உடலை மறைப்பதற்காகப் படும் கஷ்டம் இயற்கைக்கு முரணானது’ என்றும் அவர் சொன்னார். மேலும், உடல் ஊனமுற்ற குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து நிர்வாணமாக நீந்தியபோது அவர்களின் தாழ்வுமனப்பான்மை காணாமல்போனது. ஆனால், இந்தப் பள்ளி இயங்கியது வெறும் எட்டு ஆண்டுகள் மட்டுமே. 1937-ல் தொடங்கப்பட்ட டோமோயி, 1945-ல் இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் மீது வீசப்பட்ட குண்டுகளால் எரிந்து அழிந்தது.

அந்தப் பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்கிற சிறுமி, பிற்காலத்தில் ஜப்பானில் புகழ்பெற்ற தொலைக்காட்சி பிரபலமானார். அவர் 'டோட்டாசான்’ என்ற சிறுமியின் அனுபவமாக, கதை வடிவில் எழுதியதுதான் இந்த நூல். 1982-ல் வெளியான இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் ஏராளமான மொழிகளில் வெளியாகி, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டே இருக்கிறது.

கரும்பலகையில் எழுதாதவை

ஆசிரியர்: பழ.புகழேந்தி,

வெளியீடு: வாசல் பதிப்பகம்.

சேலத்தைச் சேர்ந்த ஆசிரியர் பழ.புகழேந்தி எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றும் மிகவும் எளிய மொழியில், வலிமையான கல்வி அரசியலை முன்வைக்கின்றன.

விடை சொல்லவே

பழக்குகிறோம்...

பழக்கியதே இல்லை

கேள்வி கேட்க.

*

பிள்ளைகளே

பாடமாகிறார்கள் சிலபோது.

பக்கம் இருப்பவன் மேல்

வெறுப்பு மேலிட்டால்

வேரறுப்பதில்லை.

காய் விடுதலோடு

நின்றுவிடுகிறார்கள்

பழம் விடுவதற்கு வசதியாய்!

*

'சார்’

ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான்.

அனுப்பினேன்.

'சார்’

உடனே மற்றொருவன்.

அதட்டினேன்.

நொடிகள் நகர

உள்ளேயே ஈரம்

வகுப்பு முழுதும் நாற்றமடித்தது

என் அதிகாரம்.

பெரியார் கல்விச் சிந்தனைகள்

தொகுப்பு: அ.மார்க்ஸ்,

வெளியீடு: பாரதி புத்தகாலயம்.

'பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்வதுபோல், நமது அரசாங்கத்தார் சாராயத்தை விற்று அதில் வரும் லாபத்தை எடுத்து கல்விக்காகச் செலவுசெய்கிறார்கள். ஆகவே, மேலும் சில கல்வி சௌகர்யமும் சம்பளச் சௌகர்யமும் வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் அதிகமாக கள், சாராயம் குடித்து, அதனால் அதிக வரும்படியை உண்டாக்கும் பொறுப்பை நம் தலையில் வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி குடியில் வரும் லாபத்தினால்தான் படிப்புக்குச் செலவுசெய்ய வேண்டும் என்ற நிலை ஏற்படுமானால், மக்கள் படிக்காமல் தற்குறிகளாக இருந்தாலாவது, உபாத்தியாயர்கள் எல்லாம் தெருவில் கல் உடைத்து ஜீவனம் செய்துகொண்டாவது, கள் குடியை நிறுத்துவதே மேலானது என்பது என் அபிப்பிராயம்’ - 24.04.1927 அன்று, போளூரில் நடந்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மாநாட்டில் இப்படிப் பேசினார் பெரியார்.

87 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரது கருத்து இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. இது மட்டுமல்ல, தனது வாழ்நாளில் இரண்டு ஆண்டு காலம் மட்டுமே பள்ளிக்குச் சென்ற பெரியார், கல்விகுறித்துச் சொன்ன ஒவ்வொரு கருத்தும் காலம் கடந்தும் நிற்கிறது. பெரியாரின் கல்வி சார்ந்த இத்தகைய கருத்துக்களின் தொகுப்புதான் இந்த நூல். சிரத்தையோடு இதைத் தொகுத்திருக்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

'இப்போது உள்ள மக்கள் எதற்காகக் கல்வி கற்கிறார்கள்? அறிவுபெற வேண்டும், ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. கல்வித் திட்டமும் இவற்றைப் போதிப்பதாக இல்லை. அவர்கள் படிப்பது எல்லாம், பிழைப்பதற்குத்தான்; மண்வெட்டி எடுக்காமல் ஓரளவு பேனா பிடித்து எழுதி சம்பாதிக்கும்படியான வழியைத் தேடுவதற்குத்தான். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைக் கல்வி கற்கவைப்பதன் காரணம், தன் பிள்ளை புத்திசாலியாக வேண்டும், அறிவாளியாக வேண்டும் என வெளியில் கூறுவார்களே தவிர, உள்நோக்கம் எல்லாம் பையன் உத்தியோகத்துக்குப் போய்ச் சம்பாதிப்பதால், நாம் வாழ்க்கையைக் கஷ்டமின்றிக் கழிக்கலாம் என்பதுதான்’ - பெரியார், 9.3.1956, விடுதலை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 29

'பெரும்பாலும் புத்தகப் படிப்பையும், குருட்டு உருப்போட்டுத் தேர்வுகளில் தேறிவிடுவதையுமே கல்வி என, நமது மக்கள் கருதிக்கொண்டு இருக்கின்றனர். உதாரணமாக, ஆங்கிலத்தில் பி.ஏ., எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவர்களையும், தமிழ்ச் சங்கத்தில் படித்து வித்வான் பரீட்சையில் தேர்வாகிப் பட்டம் பெற்றவர்களையும் 'கல்வியாளர்’ எனச் சொல்லிவிட முடியாது. அவர்கள் ஏதோ ஒரு வித்தையில், அதாவது குருட்டு உருப்போட்டு ஒப்புவிக்கக்கூடிய ஒரு வித்தையில் தேர்ந்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, அலமாரியில் உள்ள புத்தகங்களைப்போல், இவர்களும் தங்கள் மனதில் பல விஷயங்களைப் பதியவைத்திருக்கும் 'ஒரு நகரும் அலமாரி’ எனத்தான் சொல்ல வேண்டும்’ - பெரியார், குடியரசு, 27.7.1930.

'அந்தக் காலத்தில் படிப்புச் செலவு என்பது,  இப்போதைய செலவில் பதினாறில் ஒரு பங்குகூட இருக்காது. இப்போதோ காகிதம், பேனா, பென்சில், சித்திரப் பொருட்கள், விளையாட்டுக் கருவி, ரசாயனப் பொருட்கள், பெஞ்சு, நாற்காலி, மேசை, கட்டடங்கள் இவற்றுக்கு ஆகும் செலவுகளே மக்கள் தாங்க முடியாததாகப் போய்விடுகிறது’ - பெரியார், 1.5.1927 குடி அரசு.

- பாடம் படிப்போம்...

மேலும் சில நூல்கள்...

 திராவிட நாட்டுக் கல்வி வரலாறு - திராவிடப் பித்தன், மீள் பதிப்பாசிரியர்: இரா.பாவேந்தன். வெளியீடு: கயல் கவின் பதிப்பகம்.

 கல்வி உரிமைச் சட்டம், நாம் ஏமாற்றப்பட்ட கதை - பேரா.அனில் சத்கோபால், கே.சுப்பிரமணியன், முகுந்த் துபே. தமிழில்: பேரா.சே.கோச்சடை. வெளியீடு: மக்கள் கல்வி இயக்கம்.

 தமிழகப் பள்ளிக் கல்வி - பிரச்னைகளும் தீர்வுகளும். வெளியீடு: மக்கள் கல்விக் கூட்டமைப்பு.

 'எங்களை ஏன் டீச்சர் ஃபெயிலாக்குனீங்க?’ தமிழில்: ஜே.ஷாஜஹான். வெளியீடு: வாசல் பதிப்பகம்.

''போயிட்டு வாங்க சார்'' - ச.மாடசாமி. வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.

 இது யாருடைய வகுப்பறை? - 'ஆயிஷா’

இரா.நடராஜன். வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.

 தமிழகப் பள்ளிக் கல்வி - ச.சீ.இராசகோபாலன் வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்.

 பள்ளிப் பருவம் - தொகுப்பு: ரவிக்குமார். வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்.

 பள்ளிகளில் பாகுபாடு - பள்ளிகளில் பாகுபாடு காட்டப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய அறிவுரை மன்றத்தின் பரிந்துரைகள் - தமிழில்: பேரா.சே.கோச்சடை. வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்.

 மாற்றுக்கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன? - அ.மார்க்ஸ். வெளியீடு: புலம் பதிப்பகம்.

 எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? - ஜான் ஹோல்ட். தமிழில்: அப்பணசாமி. வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.

 கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் - தியாகு. வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.

 பகல் கனவு, ஜிஜுபாய் பதேக்கா, தமிழில்: டாக்டர் சங்கரராஜுலு. வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்.

 சக்தி பிறக்கும் கல்வி - வே.வசந்திதேவி. வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.