Published:Updated:

ஸ்பானிஷ் ஃப்ளுவுக்கு பைபை சொல்லிக் கொரோனாவை வென்ற 102 வயது மூதாட்டி பகிர்ந்த சீக்ரெட்! #MyVikatan

Italica Grondona
Italica Grondona

வலெண்டினோ ரோஸ்சியின் தீவிர ரசிகையான இந்தப் பாட்டிக்கு இதை விட ஒரு மகிழ்ச்சியான தருணம் வேறு இருக்குமா?

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வலெண்டினோ ரோஸ்சி (Valentino Rossi)

அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தைய உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. பல முறை சாம்பியன் பட்டம் கண்டவர். இவரது தந்தையும் ஒரு பெரும் மோட்டார் சைக்கிள் வீரர். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போலே இன்று உலகத்தின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரர்களில் ஒருவர்.

கரணம் தப்பினால் மரணம் என்ற அபாயகரமான மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் வீரர் ரோஸ்சி ஒரு பெண்மணியைப் பார்த்து நீங்கள் என்னை விட பலசாலியானவர், ஓர் சிறப்பான வீராங்கனை என்று பாராட்டினால் ஆச்சர்யப்படுவீர்களா?

நிச்சயம் இல்லை.

ஆனால், அவர் பாராட்டியது 102 வயதான மூதாட்டி என்றால்? வியப்பு தானே?

ஆம். இத்தாலிக்கா குரான்டோனா, என்ற பாட்டிதான் அவர். மக்களால் செல்லமாக "லீனா பாட்டி" என்று அழைக்கப்படும் இவர்தான் தற்போது இத்தாலியில் சூப்பர்ஸ்டார்.

Valentino Rossi
Valentino Rossi

அப்படி என்ன சாதித்துள்ளார் இவர் என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவிற்கு இதுவரை இத்தாலியில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் தம் உயிரை இழந்துள்ளார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதைக் கடந்தவர்கள்.

இந்நோயால் பாதித்த மக்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. துரதிஷ்டவசமாக 50க்கும் மேலான மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளார்கள்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான், கொரோனாவிற்கு மட்டுமல்ல, எதற்கும் சற்றும் சளைக்காமல் வெற்றிகரமாக அதை வென்று வீடு திரும்பியுள்ளார்.

இத்தாலியில் உள்ள ஜெனோவாவைச் சேர்ந்த இந்தப் பெண்மணி கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சான் மார்ட்டினா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருபது நாள்களாகப் போராடி மார்ச் 26ம் தேதி எந்தப் பாதிப்புமின்றி வீடு திரும்பினார். இது மட்டுமல்ல, இவர், 1918ம் வருடம் இத்தாலியில் தலைவிரித்தாடிய ஸ்பானிஷ் ஃப்ளு என்ற நோய்க்கும் டாடா காட்டியவர்.

இப்பொழுது புரிகிறதா, எதற்காக ரோஸ்சி இவருக்குத் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு அப்படி ஒரு பாராட்டை வழங்கினார் என்று?

அது மட்டுமல்ல, இந்தக் கொரானாவின் தாக்கம் முடிந்து நடக்கும் முதல் ரேஸைக் காண இவருக்கு ஒரு சிறப்பு அழைப்பும் விடுத்துள்ளார்.

வலெண்டினோ ரோஸ்சியின் தீவிர ரசிகையான இந்தப் பாட்டிக்கு இதை விட ஒரு மகிழ்ச்சியான தருணம் வேறு இருக்குமா?

இதற்குப் பின் அந்தப் பாட்டி பகிர்ந்த விஷயங்கள்தான் மேலும் சிறப்பு.

Valentino Rossi
Valentino Rossi

சிறுவயதிலிருந்தே இவருக்கு வேகத்தின் மீது பெரும் பிடிப்பு இருந்துள்ளது. திறந்த வெளியில் காற்றினைக் கிழித்துக்கொண்டு பைக்கில் செல்வதென்றால் இவருக்குக் கொள்ளை பிரியமாம்.

80 வருடங்களுக்கு முன் ஒரு நாள் இவர் ஒரு 25 வயது வாலிபனோடு மோட்டார் பைக் ஒன்றில் சிறிது தூரம் சென்றதை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். இவருக்கு பைக் மீது அமோக மோகம் இருந்த போதும், இவரது கணவருக்கு அது அறவே பிடிக்காத காரணத்தால் இவரது ஆசை நிராசையானது.

இருந்தும், இவரது விவாகரத்துக்குப் பின் தன் நண்பருடன் பைக்கில் சென்றதை இன்றும் நினைவுகூர்கிறார்.

கொடுத்து வைத்த பாட்டிதான். இல்லையா?

யாருக்குத் தெரியும், ஒருவேளை வேகப்பிரியரான பாட்டி பைக் வீரர் வலெண்டினோ பின்னிருக்கையில் அமர்ந்து இத்தாலியை ஒரு வலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பெயருக்கே ஏற்றாற்போன்று, மக்களின் மனதில் மட்டுமல்ல, இத்தாலியின் வரலாற்றுப் பக்கத்திலும் அவருக்கு நிரந்திர இடமுண்டு.

வாழ்த்துகளுடன்,

இத்தாலியிலிருந்து

உங்கள் மகேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு