Published:Updated:

“அணில் வேண்டாம்... அனுமன்தான் வேண்டும்!” அமைச்சர்களுக்கு அறிவுரை தந்த ஜக்கி

“அணில் வேண்டாம்... அனுமன்தான் வேண்டும்!” அமைச்சர்களுக்கு அறிவுரை தந்த ஜக்கி
“அணில் வேண்டாம்... அனுமன்தான் வேண்டும்!” அமைச்சர்களுக்கு அறிவுரை தந்த ஜக்கி

ஷாயோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி கோவையில் ‘நதிகள் மீட்போம்‘ என்ற தேசிய அளவிலான விழிப்பு உணர்வு பேரணியைத் தொடங்கினார். திருவனந்தபுரம், கன்னியாகுமரி, மதுரை, புதுச்சேரி, பெங்களூரு ஆகிய ஊர்களைத் தொட்ட அவருடைய பேரணி, கடந்த 10-ம் தேதி சென்னைக்கு வந்தது. இதையொட்டி, தேனாம்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ், முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் சீனிவாசன், நடிகை சுஹாசினி, கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
 

முதலில் பேசிய நடிகர் விவேக், “நதிகள் மீட்போம் என்ற பேரணி, நதிகளை இணைப்பதற்காக அல்ல, காணாமல் போன நதிகளை மீட்பதற்காகத்தான்” என திட்டத்தைப் பற்றி தெளிவாக எடுத்து வைத்தார். இதைத் தொடர்ந்து நதிகளைக் காக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. ரஜினி, பார்த்திபன், ராதிகா போன்ற திரைப்பிரபலங்கள் பலரும் இதில் பேசியிருந்தனர்

இவ்விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, நதிகளைக் காப்பதில் கவனம் செலுத்தினார். அதன் ஒரு பகுதியாக 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடியில் 2,065 பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளன. புதிய தடுப்பணைகள் கட்ட அரசு ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கிச் செயலாற்றி வருகிறது" என்று புள்ளிவிவரங்க¬ளை அடுக்கியவர், "நதிநீர் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். சத்குரு இப்போது உருவாக்கியுள்ள அற்புதமான திட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம். அரசு புறம்போக்கு நிலங்களில் எங்கெங்கெல்லாம் மரம் நடவேண்டும் என சத்குருஜி ஆசைப்படுகிறார்களோ... அங்கே எல்லாம் மரங்களை நட்டுக் கொள்ளட்டும். அதற்குத் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்” என்று பேசினார்.

வனத்துறை அமைச்சர் ‘திண்டுக்கல்’ சீனிவாசன், "நதிகள் மீட்போம், பாரதம் காப்போம் என்று இரண்டு வரிகளை வைத்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசியில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த நிகழ்ச்சிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் எனத்தோன்றியது. ஆனால், இங்குக் காட்டப்பட்ட குறுந்தகட்டின் மூலம் விளக்கிய பின்னர் தெளிவாகத் தெரிந்தது. நதிகளைக் காப்போம் என சத்குருஜி கிளம்பியிருக்கிறார். எல்லாம்வல்ல இறைவன் கொடுத்த சக்திதான் அவரை வழிநடத்துகிறது. இந்தப் புனிதப்பயணத்தில் நாங்களும் சத்குரு அவர்களுக்குத் தோளோடு தோளாகத் துணை நிற்போம். எப்படி ராமருக்கு அணில் உதவியதோ, அதேபோல நாங்களும் சத்குருஜிக்கு உதவத் தயாராக இருக்கிறோம்" என்று தன் உரையை முடித்தார்.

அடுத்து மைக் பிடித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அம்மா அரசு, சத்குருஜி அவர்களுக்கான இந்தத் திட்டத்துக்குத் துணை நிற்கும். சத்குருஜியின் ஆசிரமம் என்னுடைய தொண்டாமுத்தூர் தொகுதியில்தான் அமைந்துள்ளது. அங்கே சிறப்பான முறையில் பள்ளிக்கூடம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். பாரதப் பிரதமர், தமிழக முதல்வர் அனைவரும் கலந்துகொண்டு திறந்து வைத்த சிவன் சிலையும் அங்குதான் அமைந்துள்ளது. அது எங்களுக்குப் பெருமை கொள்ளும் விஷயமாக இருக்கிறது” என்று உச்சிக்குளிர்ந்தவராகப் பேசினார்.

நிறைவாக பேசிய ஜக்கி வாசுதேவ், “இதுவரை 3,069 கி.மீ தூரம் பயணித்திருக்கிறேன். இதுவரை பயணம் மேற்கொண்ட மூன்று மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தது வடமாநிலங்களை நோக்கி பயணிக்கப் போகிறேன். இது, வெறும் 30 நாள் பயணமல்ல, என்னுடைய வாழ்நாள் ஆசை. கேரளா மற்றும் கர்நாடகம் என இரண்டு மாநிலங்களிலும் மரங்கள் நடுவதாக அரசின் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள். வனத்துறை அமைச்சர் பேசும்போது ராமனுக்கு அணில்போல் சேவை செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். எங்களுக்குத் தேவை அணிலின் வேலை அல்ல, அனுமனின் வேலை. அணில் பணியைச் செய்ய எங்களிடம் லட்சக்கணக்கான ஆட்கள் இருக்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு தண்ணீர் பிரச்னைதான் முக்கியமான காரணம். தமிழ்நாட்டில் வெறும் 20 சதவிகிதம்தான் நீர் இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளும் ஏறக்குறைய வற்றிவிட்ட நிலையில்தான் இருக்கிறது. இதனை மீட்பதற்காகத்தான் இந்தப் பேரணியை தொடங்கியிருக்கிறோம். சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கிடைப்பது 55 மில்லியன் லிட்டர் மட்டும்தான். எதிர்காலத்தில் இந்நிலை மிகவும் மோசமாகும். நீராதாரங்கள் மிகவேகமாக வற்றி வருகின்றன. உடனே தீவிரமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் கைகோக்க வேண்டும். நதிகளைக் காத்து நமது அடுத்த தலைமுறைக்கு தண்ணீரைச் சேமித்து வைப்பது நமது கடமையாகும். நதிகளின் ஓரமாக இருபுறங்களிலும் அதிக அளவில் மரங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீரானது பூமிக்குள் சேகரமாகும். ஒவ்வொரு கிராமத்திலும் 5 வகையான கனி வகைகளைச் சேர்ந்த மரங்கள் இருக்க வேண்டும். நதிகளை மீட்க இளைஞர்கள் பெருவாரியாக திரள வேண்டும்" என்று அழைப்புவிடுத்தார். 

கிச்சுக்கிச்சு முதல்வர்-அமைச்சர்கள்!

பாவம், தினகரன் அவ்வப்போது குறுக்குமறுக்காக 'சைக்கிள் ஓட்டி' கிலி கிளப்பிக் கொண்டே இருப்பதால், நம்முடைய முதலமைச்சர், துணைமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆயிரத்தெட்டு டென்ஷன். அதனால்தானோ என்னவோ... முதல்வர், துணைமுதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை ஏகத் தடுமாற்றத்துடன்தான் மேடையில் பேசினார்கள்.

* கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “சுஹாசினி மணிவாசகம்" என்று சொல்ல, சுஹாசினி மணிரத்னம் உட்பட அரங்கமே சிரித்துக் குலுங்கியது. 

* வனத்துறை அமைச்சர் ‘திண்டுக்கல்’ சீனிவாசன் பேசும்போது, "அவர்களே... அவர்களே" என்று முக்கிய பிரமுகர்களின் பெயர்களாக அடுக்கிவிட்டு, “பரத நாட்டியத்தில்” என்று சொல்ல... மைதானமே சிரிப்பலையில் மூழ்கியது. உடனே சுதா ரகுநாதன் பக்கம் திரும்பியவர், ஏம்மா நீங்க பரத நாட்டியந்தானே” என்று கேட்க, ‘பாடகி’ என பதில் ஒலிக்க... “பாடகி சுதா ரகுநாதன் அவர்களே” என வாழ்த்துரையைத் துவங்கினார்.

* துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம், “பாடகி சுதா ரங்குநாதன் அவர்களே” என்று சுதா ரகுநாதனுக்கு தானும் அதிர்ச்சி கொடுத்தார்.

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "தமிழக முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களே..." என்று சொல்லி, ஓபிஎஸ்ஸுக்கு புரமோஷன் கொடுத்து, இன்ப அதிர்ச்சியைக் கிளப்பினார்.

* "முதல்வர் சொன்னபோதுதான் வனத்துறை மூலமாக இவ்வளவு செயல்பாடுகள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதே எனக்குத் தெரிகிறது" என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டு, முதல்வர் உட்பட தமிழகத்துக்கே அதிர்ச்சிக் கொடுத்தார்... வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.