Published:Updated:

Need For Speed ரேஸர் இப்போ இந்தியாவின் நம்பர் 1 ரேஸர்! #Mira

Need For Speed ரேஸர் இப்போ இந்தியாவின் நம்பர் 1 ரேஸர்! #Mira
Need For Speed ரேஸர் இப்போ இந்தியாவின் நம்பர் 1 ரேஸர்! #Mira

Need For Speed ரேஸர் இப்போ இந்தியாவின் நம்பர் 1 ரேஸர்! #Mira

தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் ஆவதுபோல் ரொம்ப ஈஸியான விஷயமல்ல இது. உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். இந்தியாவிலிருந்து இரண்டு பேர்தான் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்கள். இப்போது மீரா எர்தாவும்.

‘இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் ரேஸர்’ என கூகுளில் டைப் செய்தால், நரேன் கார்த்திகேயனுக்குப் பிறகு மீரா எர்தாவின் பெயர்தான் வரும். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர் மீரா எர்தா. சின்ன வயதில் மொபைல்போனில் ‘Need for Speed’ எனும் கார் ரேஸ் கேமை விளையாடிக்கொண்டிருந்த மீரா, இப்போது இந்தியாவின் குறைந்த வயது ஃபார்முலா கார் ரேஸர்களில் ஒருவர். 

மீராவுக்கு எட்டு வயசு இருக்கும்போது, 3-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் குட்டிப் பாப்பா. ஒரு விடுமுறை நாளில், புனேவில் உள்ள கோ-கார்ட் ட்ராக்குக்கு குழந்தை மீராவைக் கூட்டிச் சென்றார் தந்தை கிரித். ‘‘கார் இவ்வளவு ஸ்பீடா நிஜத்துலேயும் போகுமா டாடி?’’ என்று மழலை வார்த்தைகளில் மீரா கேட்க, ‘‘நீகூட ஸ்பீடா கார் ஓட்டலாம்!’’ என்று ஒரு கோ-கார்ட் காரில் உட்காரவைக்கப்பட்டாள். கார் டிரைவிங்கில் மீராவுக்கு அதுதான் முதல் அனுபவம். இப்போது +2 படிக்கும் மீராவுக்கு, 18 வயது.

இதுவரை பெண்களே கலந்துகொள்ளாத இந்த ஃபார்முலா ரேஸில், நிஜமான கார்களை வைத்து மீரா மெர்சல் காட்டிவருகிறார் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். பொதுவாக, ஆண்கள் மட்டுமே கலக்கிக்கொண்டிருக்கும் எந்தத் துறையிலுமே பெண்கள் நுழைவது மிகவும் கடினம். அதிலும் ரேஸிங்! `இது ஆண்களுக்கானது மட்டுமே' என்ற நிலையை, இப்போது முழுவதுமாக நொறுக்கிக்கொண்டிருக்கிறார் மீரா. “ட்ராக்கில் மீராவின் காரைப் பார்த்தாலே ஜெர்க் ஆகும் பசங்க இருக்கிறார்கள்'' என்றார்கள் இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்கில்.

‘‘எல்லாமே பசங்கதான். அதுவும் புரொஃபஷனல் ரேஸர்ஸ். ஆரம்பத்துல ‘பசங்ககூட மோதப்போறே... உனக்கு எதுக்கு இந்த வேலை... இது ஒண்ணும் மொபைல்போன்ல கேம் விளையாடுற விளையாட்டு இல்லை’னு எல்லோரும் பயமுறுத்தினாங்க. அவங்க சொன்னது உண்மைதான். கார்களைக்கூட ஈஸியா ஹேண்டில் பண்ண ஆரம்பிச்சுட்டேன். ஆனா, சில பசங்களோட கிண்டல்களை... அப்பப்பா! சமாளிக்க முடியலை. அப்புறம் என் ஆர்வத்தைப் பார்த்துட்டு பசங்களே என்னை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. எல்லா பசங்களையும் தப்பா நினைக்கக் கூடாதில்லையா!’’ என்று இந்தியில் பேசிய மீரா, இந்தியாவில் இருக்கும் எல்லா ரேஸ் ட்ராக்குகளிலும் டயர் பதித்துவிட்டார்.

விஜயகாந்த் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இதுவரை மீரா கலந்துகொண்ட ரேஸ்களின் எண்ணிக்கை 80. அதில் போடியம் ஏறியது 60 தடவை. கார் கோளாறால் போடியம் ஏறாமல் இருந்தது 5 முறை. அதில் மறக்க முடியாத ரேஸ் 2013-ம் ஆண்டில் நடந்தது. காரணம், கடைசி இடத்திலிருந்து ரேஸைத் தொடக்கிய மீரா, முதல் இடத்தில் வந்து ரேஸை நிறைவுசெய்ததை ரேஸ் உலகமே கொண்டாடியது. அதற்குப் பிறகு, தன் வாழ்வில் இந்த மாதிரி மெடிக்கல் மிராக்கிள்கள் எதுவும் நடக்கவில்லை என்கிறார்.

அதேபோல், ஹைதராபாத்தில் நடந்த JK Tyre ரேஸில், 7-ம் வகுப்பு படித்த சின்னப் பொண்ணு மீரா, 33.523 விநாடியில் பெஸ்ட் லேப் வந்தார். அதற்கடுத்து வந்த, எந்த ஜாம்பவான்களும் இந்தச் சாதனையை முறியடிக்கவில்லை! இப்படி ரேஸ் ட்ராக்கில் மெர்சல் பண்ணுவது மட்டுமல்ல... விவேகமாக இருப்பதும் மீராவின் ஸ்பெஷாலிட்டி. “ஆம்! இதுவரை ஒரு தடவைகூட ட்ராக்கிலோ, ரோட்டிலோ ஆக்சிடென்ட் பண்ணியதில்லை'' என்கிறார் மீரா.

பொதுவாக, ‘Race it; Break it; Fix it; Race it’ என்பதுதான் ரேஸிங் விதி. ஆணானப்பட்ட ராஸி, ஹாமில்ட்டன், வெட்டல் போன்றோரே க்ராஷ் செய்யும் சம்பவங்கள் ரேஸின்போது அடிக்கடி நடந்தேறும். நாம் என்னதான் கவனமாக இருந்தாலும், மற்ற ரேஸர்களின் கவனக்குறைவாலும் கார் மோதல் நடக்கும் என்றாலும், அதையும் தாண்டி விழிப்புடனே கார் ஓட்டுவதாகச் சொல்கிறார் மீரா. புனே, டெல்லி, கோவை, சென்னை என எந்த ட்ராக்காக இருந்தாலும், ரேஸுக்கு முன்பு பல தடவை கன்னாபின்னாவெனப் பயிற்சி எடுப்பாராம். ‘‘எந்த விளையாட்டுக்குமே பயிற்சி ரொம்ப முக்கியம். இது நம்மால் முடிந்த விபத்துகளைக் குறைக்கும்’’ என்பது மீராவின் டிப்ஸ். ட்ராக்கில் ‘ஆக்சிடென்ட்டே ஆகாத மீரா’ என்று செல்லமாகப் பெயரெடுத்திருக்கிறாராம்.

இன்னொரு பெருமையும் மீராவுக்கு வரவிருக்கிறது. அது, ‘குறைந்த வயதில் BMW FB02 கார் ஓட்டும் பெண், இந்தியாவில் மீரா மட்டும்தான்!

இன்னும் நிறைய பெருமை சேருங்க!

அடுத்த கட்டுரைக்கு