Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : அரஸ்ம.கா.செந்தில்குமார்படம் : என்.விவேக்

நானும் விகடனும்!

இந்த வாரம் : அரஸ்ம.கா.செந்தில்குமார்படம் : என்.விவேக்

Published:Updated:

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பக்கம்!

##~##

வ்வொரு வாரமும் ஆனந்த விகடனை வீட்டுக்குள் அப்பா கொண்டுவரும்போது ஆளுக்கு முந்தி வரும் புத்தகத்தின் அச்சு வாசம்தான் என்னை ஈர்க்கும். அக்கா முன்பாக நாங்கள் அரை வட்டமாக அமர்வோம். அவர் சிறுகதை, தொடர்கதை என ஒவ்வொன்றாக வாய்விட்டுப் படிப்பார். ஆனால், என் கவனம் எல்லாம் அந்தக் கதைகளுக்கான ஓவியங்கள் மீதே பதிந்து இருக்கும். அக்கா திருமணம் முடித்துச் சென்றதும், கதை படித்துச் சொல்ல ஆள் இல்லை. ஆனாலும், தொடர்கதைகளில் வரும் படங்களைவைத்தே கதையின் ஓட்டத்தை யூகிக்கத் தொடங்கினேன். ஜமீன்தாரின் கரடுமுரடான சிரிப்பைவைத்து 'ஓ... இவன் கெட்டவன்’ என ஒரு வாரமும், அவரைச் சுற்றி நிற்கும் அரைக்கால் சட்டை அணிந்த போலீஸ்காரர்களைப் பார்த்து, 'ஜமீன்தாரைக் கைது செய்துவிட்டார்கள்’ என அடுத்த வாரமும், அந்த ஜமீன்தாரால் பாதிக்கப்பட்ட பெண் மணக்கோலத்தில் நிற்கும் படத்தைப் பார்த்து, 'அந்த அபலைப் பெண்ணுக்கு நல்லபடியாகத் திருமணம் முடிந்துவிட்டது’ என இறுதி வாரத்தையும் யூகிக்கும் அளவுக்கு விகடனின் ஓவியங்களோடு ஒன்றிப்போவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழுங்கிய பென்சில்களைக்கொண்டு விகடனின் ஓவியங்களைக் கொஞ்சம் வித்தியாசமாக வரைந்து பார்ப்பேன். பள்ளியில் சேரும் குழந்தையைத் தன் மடியில் அமர்த்தி, அதன் பிஞ்சு விரலைப் பிடித்து நெல்லில் 'அ’ எழுதக் கற்றுத் தரும் ஆசிரியர்போல விகடன் தாத்தாவின் மடியில் அமர்ந்து நான் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டவன். அந்த வகையில், விகடன் என் மானசீகக் குரு.

நானும் விகடனும்!

ஐந்தாம் வகுப்பில் நான் ஒரு கையெழுத்துப் பிரதி தொடங்கினேன். அதைக் கையெழுத்துப் பிரதி என்று சொல்வதைவிட கைப்'படப்’ பிரதி என்றே சொல்லலாம். 16 பக்கங்களையும் சின்னச் சின்ன கமென்ட்டுகளுடன் கூடிய ஓவியங்களால் மட்டுமே நிரப்பி இருப்பேன். அதற்கு 'திருநா காமிக்ஸ்’ என்று பெயர். அந்த காமிக்ஸ் புத்தகத்தைப் பள்ளிக்கு எடுத்துச் சென்றால், முதலில் துங்கபத்ரா டீச்சர் வாங்கிப் பார்ப்பார். அது அப்படியே பள்ளியின் அனைத்து டீச்சர்களிடமும் வலம் வரும். இப்படி அத்தனை டீச்சர்களுக்கும் நான் செல்லப் பிள்ளையாக இருக்க விகடன்தான் காரணம்!

பள்ளிப் படிப்பு முடிந்ததும், என் குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது. ரெட் ஹில்ஸ் அருகே ஒரு லாரி ஷெட்டில் ஓவியம் வரையும் வேலையில் சேர்ந்தேன். நாக்கைத் தொங்கப்போட்டு இருக்கும் பூதம், தாமரைப் பூக்கள் என லாரிகளில் விதவிதமான ஓவியங்களை வரைய வேண்டும். அந்த வேலையின் வருமானம் மூலம் தமிழில் வெளிவரும் அத்தனை வார, மாத இதழ்களையும் வாங்குவேன். அதில் இருக்கும் அலுவலக முகவரிகளுக்கு நேரில் சென்று வாய்ப்பு கேட்கத் தொடங்கினேன். கிடைத்தது!

கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளிலும் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். 'நல்ல ஓவியன்’ என, நான் மதிக்கும் பத்திரிகையாளர்களின் ஆசீர்வாதம் கிடைத்தது. ஆனால், விகடனின் இரும்புக் கோட்டையின் கதவு  மட்டும் திறக்கவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கியெழுந்து, ஒரு நாள் அது வரை நான் வரைந்து பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஓவியங்கள் அத்தனையையும் வெட்டி எடுத்துக்கொண்டு, விகடன் அலுவலகத்துக்குச் சென்றேன். என் ஓவியங்களைப் பார்த்த அப்போதைய இணை ஆசிரியர் மதன், 'பிரமாதமா இருக்கு!’ என்று பாராட்டி, கையோடு ஏழு சிறுகதைகளைக் கொடுத்தார். அதற்கு ஓவியங்கள் வரையச் சொன்னார். ஒரே நாளில் ஏழு கதைகளுக்கும் ஓவியங்கள் வரைந்து மறுநாளே சென்று அவர் முன்  நின்றேன். ஆச்சர்யமாகப் பார்த்தவர், 'ஓ.கே. கொடுத்துட்டுப் போங்க!’ என்றார்.

'நம்ம ஓவியம் வரும்... வரும்’ என்று எதிர்பார்த்து விகடனை வாங்கிப் பார்த்தால், ஜெயராஜ், மாருதி போன்ற சீனியர் ஓவியர்களின் படங்களுடன் நான் ஓவியம் வரைந்து கொடுத்த சிறுகதைகள் வெளியாகி இருந்தன. மீண்டும் விகடனுக்குப் படையெடுத்தேன். 'உங்களுக்கு உடனடியாக வாய்ப்பு இங்கே இல்லை. ஆனால், உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும்’ என்றனர். மிகச் சரியாக, 'ஜூனியர் விகடன்’ அரசியல் புலனாய்வு இதழில் முழு நேரம் பணிபுரிய விருப் பமா?’ எனச் சில நாள்களில் விகடனிடம் இருந்து அழைப்பு. 'ஆனந்த விகடன்தான் நம் இலக்கு. இருந்தாலும் இதை ஏற்றுக்கொள்வோம்’ என்ற சின்ன தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். பணியில் சேர்ந்தாகிவிட்டது.

இப்போது நினைத்தாலும் என்னை நினைத்து நானே பெருமைப்படும் அளவுக்கான பேய் உழைப்பு. நேரம் காலம் பார்க்காமல் விகடனே கதி என்று கிடப்பேன். ஏகப்பட்ட பரீட்சார்த்த முயற்சிகள். பேப்பரில் படம் வரைந்து, பிறகு கசக்கி சுக்குநூறாகக் கிழித்து, பிறகு அந்தப் பேப்பர் துண்டுகளை ஒன்றாக்கிப் பயன்படுத்துவது தொடங்கி, சின்னதும் பெரிதுமாக ஏகப்பட்ட முயற்சிகள்.  

'யோவ்... ஜித்தன்யா நீ. ஒரு ஹாரர் ஸீனுக்குப் படம் போடுற. உடனே நளினமா ஒரு அழகுப் பெண்ணையும் வரையுற. அடுத்து பயபக்தியா ஒரு சாமி வரையுற... எப்படிய்யா உன்னால மட்டும் முடியுது?’ என அலுவலகத்துக்கு உள்ளேயே குவிந்தன பாராட்டுக்கள். ஆனால், அந்தப் பாராட்டு என் புத்திக்குள் செல்வதற்குள் அடுத்தடுத்த வேலைகள் வரிசையில் காத்து நிற்கும். நான்கைந்து நாட்கள்கூட வீட்டுக்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே இருந்திருக்கிறேன்.  

என் ஒரு ஓவியம் இடம்பெறாதா என ஏங்கிய ஆனந்த விகடனில் ஒரே சமயத்தில் நான்கு தொடர்களுக்குப் படம் வரைந்தேன். 'கவனம் அரஸ். அரண்மனை தூணை வரைந்தால் கூட, இது சேரன் ஸ்டைலா, பாண்டியன் ஸ்டைலா என இனம் கண்டுகொள்ளும் அளவுக்கு நம் வாசகர்கள் கூர்மையானவர்கள்’ எனப் போகிறபோக்கில் வயிற்றில் புளி கரைப்பார்கள். 'கவனம்... கவனம்...’ என மூளைக்குள் அலாரம் அடிக்கும். ரெஃபரென்ஸ் தேடி ஓடிக்கொண்டே இருப்பேன். இப்படியாக என் ஓட்டத்தைக் கவனித்துக்கொண்டு இருந்த விகடன் நிர்வாகம், என் பணியை நிரந்தரப்படுத்தியது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த எம்.டி. சென்னை திரும்பியதும், அவரிடம் இருந்து அழைப்பு.. என்னை எதிரே அமரவைத்துவிட்டு இரண்டு நிமிடங்கள் கண்களை மூடியபடி அமர்ந்திருந்தார். 'அரஸ் வேறு... விகடன் வேறு என நான் பிரித்துப் பார்த்ததே இல்லை’ என்றார். இந்த வார்த்தைகளைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு!

சுஜாதா கேள்வி-பதில் பகுதியில், 'கம்ப்யூட்டரில் ஓவியம் வரைய முடியாதா?’ என்று ஒரு கேள்வி. 'அரஸ் போன்ற ஓவியர்களுக்கு முன் அவை எல்லாம் ஒன்றுமே கிடையாது’ எனப் பதில் அளித்து என்னை உச்சகட்டப் பெருமைக்கு ஆளாக்கினார்.

விகடனில் பணிபுரியும் ஒவ்வொருவரும், களத்தில் போராடும் போர் வீரர்கள். ஆனால், ராஜாவின் மகனும் எங்களோடு சரிக்குச் சமமாகப் பயிற்சி எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது

நானும் விகடனும்!

எங்கள் ஜே.எம்.டி. சீனிவாசனும், எடிட்டோரியல் குழுவினருடன் தோளோடு தோளாக நின்று பணியாற்றியது. ஆனந்த விகடன் குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் அவரின் பங்கு குறிப்பிடத்தக்கது. குதிரையின் லகானை இழுத்துப் பிடித்து, தான் நினைத்த பாதையில் அதை லாகவமாகச் செலுத்தி, இன்று கிட்டத்தட்ட 10 குதிரைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாகப் பவனி வருகிறார். இதற்கு அவருடைய திட்டமிட்ட நேர்த்தியான உழைப்பும் தொலைநோக்குப் பார்வை யுமே மிகமிக முக்கியக் காரணம்!  

கல்யாண வீடுகளில் சமையற்கட்டில் வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் சமைத்த பதார்த்தங்கள் ருசி பார்க்காமலேயே திகட்டி விடும். ஆனால், விகடன் எனும் சமையற்கட்டில் பணியாற்றிய எனக்கு இதுநாள் வரை விகடனின் பதார்த்தங்கள் ஒரு துளிகூடத் திகட்டியதே இல்லை. புது அச்சு வாசம் மாறாமல் அப்பா எடுத்து வரும் விகடனுக்காகக் காத்திருந்ததைப்போலவே, இன்றும் ஒவ்வொரு வெள்ளியையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் விகடனுக்காக!''