Published:Updated:

கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25
கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25

கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்... ஃபேஸ்புக்கிடம் சரண்டர் ஆன கதை! #StartUpBasics அத்தியாயம் 25


அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது லின்னை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஆசை. லின் தொலைந்தபோது அவளுக்கு வயது ஐந்து. நடுவில் நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. எப்படி கண்டுபிடிப்பது? பத்திரிகை விளம்பரம் உதவவில்லை. தங்களது உணர்சிகளைக் கொட்ட அந்த விளம்பரங்கள் போதாது. அப்போது தான் இணையமும், ஃபேஸ்புக்கும் கைகொடுத்தன. ஃபேஸ்புக்கில் “என் தங்கையை கண்டுபிடிக்க உதவுங்கள்” என்று பதிவை எழுதுகிறார். அந்த உணர்ச்சிப்பெருக்குள்ள பதிவு பலரால் பகிரப்பட்டு வளர்ந்துகொண்டே சென்றது. பலப்பல தொடர்புகள் ஏற்பட்டு இறுதியில் லின்னை கொண்டுவந்து அவர்களிடம் சேர்க்கிறது. இது போல பல கதைகள். 

பத்துவருடங்களுக்கு முன்பு வரை கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் அணுக முடியாதவர்களாக இருந்தார்கள். புதிய சிந்தனைக் கொண்ட இளம் கலைஞர்களை, எழுத்தாளர்களை இனம் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. படித்து முடித்தபின் பல இடங்களில் பிரிந்து வாழும் உடன்படித்த நண்பர்களை இணைப்பது சாத்தியமில்லாததாக இருந்தது. ஒத்த கருத்துடைய புதிய நண்பர்களை கண்டறிவது மிக மிக கடினமாக இருந்தது. மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க பத்திரிக்கைகளுக்கு எழுதி அதில் சிறந்தவற்றை அல்லது தங்களுக்கு பிடித்தவற்றை அந்த பத்திரிகை ஒரு சிறு பத்தியாக வெளியிடடுவது என்று மக்களின் நேரடி பங்கு குறைவாக இருந்தது. ஆனால் இன்று இந்தக் கதைகள் மாறி இருக்கின்றன. பத்திரிகைகள் மக்களின் ட்ரெண்டிங் பதிவுகளை வைத்துத் தலைப்பு செய்திகளை தீர்மானிக்கும் காலம் வந்திருக்கிறது. இன்னும் சில நாடுகளில் மக்களின் எழுச்சி அரசியலை புரட்டி போட்டிருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்களை இணைக்க இன்று கிடைத்த வாய்ப்புகளை போல இதுவரை என்றும் கிடைத்ததில்லை. இவற்றை சாத்தியப்படுத்திய சமூக வலைதளங்களில் முதன்மையான தளம். ஃபேஸ்புக். 

அமெரிக்காவில் நியுயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ஒயிட் பிளைன்ஸ்ஸில் மனோதத்துவ நிபுணர் அம்மாவிற்கும், பல் மருத்துவர் அப்பாவிற்கும் கடைக்குட்டியாக பிறந்தவர் தான் மார்க் சக்கர்பெர்க். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் உண்டு. பள்ளியில் மிகவும் குறும்புகார மாணவர். படிப்பிலும் சுட்டி. கத்திச்சண்டை விளையாட்டில் கேப்டன். பன்னிரண்டு வயதிலேயே கணினிமொழிகளில் ஆர்வம் ஏற்பட்டு கற்க ஆரம்பித்தார். கம்ப்யூட்டர் கேம் விளையாட வேண்டிய வயதில் அதை வடிவமைத்தார். லத்தின், கிரேக்கம், ஹீப்ரு போன்ற மேற்குலகின் செம்மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருந்தார். இசை ஆர்வலர்களின் தேடலுக்கு ஏற்ப ப்ளே லிஸ்டை கொடுக்கும் ஒரு மென்பொருளை வடிவமைத்தார். பெற்றோர்கள் அல்லது மற்றவர்களின் தூண்டுதல்கள் எல்லாம் இல்லை. அவருக்கு பிடித்தவற்றை செய்ய முயற்சித்தார். வீடு அதற்கேற்ற சுதந்திரத்தை கொடுத்தது. கல்லூரி படிப்பிற்கு ஹார்வர்ட் பல்கலைகழகத்திற்கு சென்றார். முதல் வருடம் படிக்கும் போதே மாணவர்கள் தங்கள் விருப்ப பாடத்திற்கு ஏற்ப ஒன்று சேர ஓர் இணையதளம் வடிவமைத்தார். அதன்பெயர் கோர்ஸ்மேட்ச் (Course Match). 

பருவ வயதும் பளிச் அறிவும் சேர்ந்து எதிர்பாலினரை கவர்ந்திழுக்கும் வகையில் ஒரு தளத்தை வடிவமைக்க வைத்தது. அதன் பெயர் ஃபேஸ்மேஷ் (Facemash). அந்த கல்லூரியில் யார் கவர்ச்சியானவர்கள் என்பதை மாணவர்கள் ரேட்டிங் கொடுக்கும் வகையிலான தளம் அது. பல பெண்களின் புகைப்படங்கள் அவர்கள் அறியாமலேயே அதில் வெளிவந்து கடும்கண்டனத்திற்கு உள்ளானது. இணையதளம் ஹிட்டு தான். ஆனால் நோக்கம் சரியானதல்ல என்பதால் ஒரேநாளில் இழுத்து மூடப்பட்டது. இந்த சமயத்தில் தான் இவரின் திறமைக் கண்டு மூன்று சீனியர் மாணவர்கள் தங்கள் ஸ்டார்ட்அப்பில் வேலை செய்ய அழைத்தார்கள். அது அந்த பல்கலைகழகத்திற்கான மாணவர்களை இணைக்கும் ஹார்வர்ட்கனக்சன் என்ற தளம். அது சரியாக வராத காரணத்தால் பாதியில் கைவிட்டார்கள். ஆனால் மார்க்கிற்கு சரியாக வரும் என்று தோன்றவே இவரே சொந்தமாக ஒரு தளத்தை வடிவமைத்தார். அது தான் திஃபேஸ்புக்.காம் (www.thefacebook.com) . 

ஒரே வாரத்தில் அதை வடிவமைத்து வெளியிட்டார். வெளியிட்ட சில நாட்களிலேயே கல்லூரி முழுவதும் சென்று சேர்ந்தது. அதையும் தாண்டி அக்கம் பக்கத்தில் உள்ள கல்லூரிகளிலும் அது காட்டுத் தீயாக பரவ ஆரம்பித்தது. தளத்தை வடிவமைக்கத் தேவையான முதலீடை நண்பன் எடார்டோ கொடுத்தான். பத்தாயிரம் டாலர்க்கு முப்பது சதவீத ஃபேஸ்புக் பங்கு என்ற ஒப்பந்தப்படி அந்த முதல் முதலீடு கிடைத்தது. டஸ்டின், க்ரிஷ் என்ற தன்னுடைய ரூம்மேட்டுகளை அவரவர் திறமைக்கேற்ப வேலைகொடுத்து எடுத்துக்கொண்டார். பத்தாயிரம் மாணவர்களை மிக குறுகிய காலத்தில் அது இணைத்தது.  

சான் பார்க்கர் என்ற இன்னொரு ஸ்டார்ட்அப் நிறுவனரின் கண்ணில் திஃபேஸ்புக் பட்டது. ”அட இது நல்லா இருக்கே” என்று தோன்ற மார்க்கை கூப்பிட்டு பேசுகிறார். ”தம்பிகளா இதோட மதிப்பு என்னனு தெரியாம இருக்கீங்க. என்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு தேவையான முதலீட்டை கொண்டுவருகிறேன்” என்று சொல்ல அவரையே தங்கள் நிறுவனத்தின் தலைவர் ஆக்குகிறார்கள். பார்க்கர் தன் பங்குக்கு அந்தத் தளத்தை இன்னும் மெருகேற்றுகிறார். பின்னாளில் இதை மார்க் இவ்வாறு குறிப்பிடுகிறார் “அதுவரை காலேஜ் ப்ராஜெக்ட்டாக மட்டும் இருந்த எங்களது ஸ்டார்ட்அப்பை ஒரு நிறுவனமாக மாற்றியது சான் தான்” 

பார்கர் தனது அனுபவத்தால் பீட்டர் தியல் என்ற முதலீட்டாளரை கூட்டி வருகிறார். அவர்தான் வெளியில் இருந்து வந்த முதல் முதலீட்டாளர். அவர் 10.5 சதவீத ஃபேஸ்புக் பங்குகளை வாங்கிகொண்டு ஐந்து லட்சம் டாலர்களை முதலீடு செய்கிறார். கொஞ்சநாளில் ஒரு பிரச்சனை வருகிறது. பார்க்கர் தன் நண்பர் நண்பிகளுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டியில் போதைமருந்து பயன்படுத்தப்பட்டது என்று அவர் மேல் வழக்கு பதியப் படுகிறது. இதனால் ஃபேஸ்புக்கின் தலைவர் பதவியில் இருந்து விலக நேர்கிறது. ஆனாலும் அவரது பங்களிப்பு தொடர்கிறது. 


2005இல் அமெரிக்காவின் முக்கிய பல்கலைகழகங்கள் அனைத்திடமும் ஃபேஸ்புக் சென்று சேர்க்கிறது. ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க சிலர் முயற்சிக்கிறார்கள். முதலில் 60 கோடி ரூபாய்களுக்கு விலைக்கு கேட்கிறார்கள். மார்க் மறுத்துவிட்டார். பின்னர் MTV 350 கோடிக்கு மொத்தமாக விலைக்கு கேட்கிறது. அப்போதும் மறுத்துவிட்டார். இதற்கு நடுவில் ஆக்சில் என்ற வெஞ்சர் கேபிட்டல் நிறுவனம் 70 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. 

பிறகு வேறு சில நிறுவனங்களும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். முதலீடு பெருக பெருக ஃபேஸ்புக்கை பற்றிய பேச்சு பரவலாக மாணவர்களை தாண்டி பொதுமக்களிடமும் சென்று சேர்ந்தது. திஃபேஸ்புக் என்ற பெயரில் இருந்து “The” எடுக்கப்பட்டு “Facebook.com” பிறந்தது. பொதுமக்களுக்கு எப்போது திறந்துவிடுவீர்கள் என்று பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன. அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது. 2006-ல் சில பல புதிய வசதிகளுடன் ஃபேஸ்புக் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் ஃபேஸ்புக் மக்களை எழுத தூண்டுவதற்கு பதில் விளையாட தூண்டியது. FarmVille என்ற ஸ்டார்ட்அப்பை இணைத்துக்கொண்டு அதை ஊக்குவித்தார்கள். காரணம் அதில் தான் அவர்களுக்கு வருமானம் வரும் என்று நம்பினார்கள். பிறகு மக்களை எழுதத் தூண்டியது, அதில் பல புதிய வசதிகளை கொண்டுவந்தது. ஆரம்பத்தில் ஒரு பதிவை நீங்கள் லைக் செய்தால் அது வெறும் விருப்பத்தை தெரிவிக்கும் வழிமுறையே. பிறகு தான் லைக் செய்யப்பட்ட பதிவுகள் நண்பர்களுக்கு சென்று சேரும் வசதி வந்தது. அதன் தொடர்ச்சியாக ஷேர் பண்ணும் வசதி, கமென்ட் பண்ணும் வசதி என்று வளர  ஆரம்பித்தது. 

இந்த சமயத்தில் பல பெரிய நிறுவனங்கள் ஃபேஸ்புக்கை விலைக்கு வாங்க துடித்தன. அதில் கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் எல்லாம் அடங்கும். பங்குதாரர்களாக இருந்த வெஞ்சர் முதலீட்டுநிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும் பீட்டர் தீயல் மற்றும் மார்க் இருவரும் கடுமையாக எதிர்த்தார்கள். ஆகவே விலைபோகவில்லை. 

பின்னர் மைக்ரோசாப்ட் ஒரு டீலுக்கு வந்தது ஃபேஸ்புக்கின் 1.6 சதவீத பங்குகளை 240 மில்லியன் டாலர்களுக்கு வாங்க ஒத்துக்கொண்டு வாங்கியது. பத்திரிகைகளில் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. ”மூன்று வருடமே ஆன ஒரு ஸ்டார்ட்அப்பின் பங்கை இந்த விலைக்கு வாங்குவது முட்டாள்தனமானது” என்றார்கள். எல்லாம் ஃபேஸ்புக் பங்குசந்தையில் நுழையும் வரைதான். அமெரிக்க பங்குசந்தையில் நுழைந்த அந்த கணத்தில் இருந்து ஃபேஸ்புக்கின் வளர்ச்சி பல மடங்கு எட்டியது. ஒரு பங்கின் மதிப்பு 38$ டாலர்களுக்கு கணக்கிடப்பட்டது. ஒரு புதிய நிறுவனத்திற்கு 104 பில்லியன்கள் அளவிற்கு பெரிய மதிப்பிடப்பட்டது வரலாற்றில் அதுவே முதல்முறை. ஆனால் வெளியிட்ட சில நாட்களில் அதுவும் பொய்த்து போய் மேலே ஏறிக்கொண்டே சென்றது. இன்று ஒரு ஷேரின் விலை 172 டாலர்கள். 2012ல் பங்கு வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் நூறு சதவீத வளர்ச்சி எந்த நிறுவனமும் கொடுத்ததில்லை. 

மார்க்கின் சொத்து மதிப்பு 71.9 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் நான்கு லட்சத்தி அறுபதாயிரம் கோடிகள். இன்று இந்த இளைஞர் உலகின் நான்காவது பெரிய பணக்காரர்.

ஸ்டார்ட்அப் பாடம்

மார்க் சக்கர்பெர்க் இளைய சமுதாயத்தின் உயரம். வாரன் பப்பெட்டை பார்த்தபோது ”இனி இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்” என்று எழுதினார்கள். அவர்கள் எழுதி முடிக்கும் முன்பே பில்கேட்ஸ் வளர்ந்து அவரைத் தாண்டினார். பில்கேட்ஸை தொட முடியுமா எனும்போதே அமேசானின் ஜெப் பெசாஸ் தொட்டார். ஜெப்பை தொட வாய்ப்பில்லை எனும் போதே மார்க் வந்துவிட்டார். ஊக்கம் கொண்ட இளைஞர்கள் ஒவ்வொரு காலத்திலும் புதிய இலக்கை எட்டுகிறார்கள். அதை இன்னொரு புதிய இளைஞர் உடைத்துக்கொண்டே தான் இருக்கிறார். தொடமுடியாத இலக்கு என்று எதுவுமில்லை. 

ஒரு டிவி விவாதத்தில் நெறியாளர் ஸ்டார்ட்அப் இளைஞர்களை பார்த்து ”சும்மா சும்மா ஃபேஸ்புக்கை உதாரணம் காட்டாதீர்கள். உங்களால் இன்னொரு ஃபேஸ்புக்கை உருவாக்கமுடியுமா. லோக்கலில் ஒரு உதாரணம் காட்டுங்கள்” என்றார். எனக்கு கடும் கோபம் வந்தது. ஆனால் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஃபேஸ்புக்கையும் உடைக்க ஒரு சமூகவலைத்தளம் நிச்சயம் வர முடியும். போன வருடம் நீங்கள் ஏதோ ஒரு நாளில் எழுதிய ஒரு பதிவை எடுக்க வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் தேடி எடுப்பது இன்றும் சிரமம். இப்படி ஃபேஸ்புக்கில் எண்ணற்ற குறைகள் இன்றும் உண்டு. அவற்றை களைந்து இன்னும் சிறப்பான ஒரு தளம் வந்தால் நிச்சயம் ஃபேஸ்புக்கை தாண்ட முடியும். கூகுள் ஆர்குட்டை கொண்டு வந்த போது அடித்துக்கொள்ள யாருமில்லை என்று சொன்னார்கள். இன்று ஆர்குட்டே இல்லை. ஒரு ஃபேஸ்புக் அதை காலி செய்தது. இங்கு முடியாதது எதுவும் இல்லை என்பதே உண்மை.

இந்தத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் ஒரு முறை வேறொரு தளத்தில், தலைப்பில் எழுத வாய்ப்பு வரும் என நம்புகிறேன். ஸ்டார்ட்அப் பற்றி எழுத எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு மிக அற்புதமான வாய்ப்பு. இந்த வாய்ப்பை முடிந்தளவு நன்றாக பயன்படுத்தியிருக்கிறேன் என்று நம்புகின்றேன். 2010க்கு பிறகு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல இதுவரை அடையாத பல உயரங்களை அடைந்து எல்லா தேசங்களும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா ரெம்பவும் பின்தங்கியே இருக்கிறது. நாம் வேலை செய்ய காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதம் கூட தொழில் தொடங்க காட்ட அச்சப்படுகிறோம். ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது தான் புதிய தொழில்களுக்கு வாய்ப்புகள் பெருகி இருக்கிறது. இணையம் பெருவாரியான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. ஸ்மார்ட் போன் விலை சரிந்து அனைத்து தரப்பு மக்களையும் அடைந்திருக்கிறது. இளைஞர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். பணம் படைத்த முதலீட்டாளர்கள் அவர்களுக்கு உதவவேண்டும். அரசுகள், அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் விதிகளை தளர்த்தி ஸ்டார்ட்அப்புகளுக்கு உதவ வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் இவர்களிடம் தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்வது எல்லோருக்கும் அவசியம் என்று கருதுகிறேன்.              
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு