Published:Updated:

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

‘‘ஆன்மிகம் வேறு... மதம் வேறு!’’- சுகி.சிவம் சொல்லும் ரகசியம்சா.வடிவரசு,  படம்: மீ.நிவேதன்

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

மேடை, பத்திரிகை, ரேடியோ, தொலைக்காட்சி என்று கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன் பேச்சால் லட்சக்கணக்கானோரின் மனதை மகிழ்வித்தும், தெளிவித்தும் வருபவர் சுகி.சிவம். அன்றைய சந்திப்பில் நம் இன்றைய திருமண கொண்டாட்டங்கள் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகளை எழுப்பினார் சிவம்.

''மேடைப் பேச்சில்தான் என் வாழ்க்கை தொடங்கியது. அதன் பின் இலக்கியம், சமயம், சமூகப் பிரச்னை, தேச அரசியல், ஆன்மிகம் என்று என் பயணம் கிளைகள் கொண்டது. ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டதற்குப் பலரும் பல காரணங்களையும், சம்பவங்களையும் சொல்வார்கள். என்னைக் கேட்டால், சம்பவத்தால் வரும் ஆன்மிகம் குழந்தைத்தனமானது! உண்மையில், 'நான்’ இருக்கிறேன் என்று எப்போது ஒருவர் சிந்திக்கத் தொடங்குகிறாரோ, அப்போதுதான் அவருக்குள் ஆன்மிகம் உருவாகிறது. இப்படி, சுய தேடலில் உருவாகும் ஆன்மிகம்தான் மெய்யானதாக இருக்கும். மற்றவை ஒருகட்டத்தில் மதத்தில் போய் முடியக் கூடியவை!

ஹலோ விகடன் - கலங்காதிரு மனமே!

இன்றைய திருமணங்களின் அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். ஏனெனில், இன்றைய திருமணம் என்பது உறவுகளை, அன்பை, உணர்வை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு... தேவையற்ற எதையோ தேடும் ஒன்றாகத்தான் நடந்து வருகிறது. உதாரணமாக, திருமணத்துக்கு நாம் போகும்போது, நம்மை வரவேற்க அங்கே யாரும் இருப்பதில்லை. அதனால் பொம்மை ஒன்றை

நிறுத்தி வைத்து வணக்கம் சொல்ல வைக்கிறார்கள். இன்னொரு பொம்மையைக் கொண்டு பன்னீர் தெளிக்கிறார்கள். சில திருமணங்களிலோ, யார் என்றே தெரியாத ஒரு கூட்டத்தை பணம் கொடுத்து கூட்டிவந்து, வந்தவர்களை வரவேற்கச் சொல்கிறார்கள்.

அடுத்தது, இதைவிட உச்சம். மன்னருக்கு கப்பம் கட்டுவது போல் திருமணத்துக்கு வந்தவர்கள் வரிசையில் நின்று மணமக்களைப் பார்த்து, மொய் வைத்து, வராத ஒரு சிரிப்பை வரவழைத்து, ஒரு நிமிட புகைப்படத்துக்காகவும், வீடியோவுக்காகவும் போஸ் கொடுக்க வேண்டும். வந்தவர்களைச் சாப்பிடச் சொல்ல யாரும் இருப்பதில்லை. அப்படியே நாமாகச் சாப்பிடப் போனாலும், '11 வகை ஸ்வீட்’, '22 வகை உணவுகள்’ என்று தங்களின் பகட்டைக் காட்ட, ஒவ்வொரு இலையிலும் அரைப் பங்கு வீணாகும் விருந்தைப் பரிமாறுகிறார்கள். வரவேற்பு, பந்தி, நலம் விசாரிப்பு, உபசரிப்பு எல்லாம் மறந்து, மணமக்களின் பெற்றோர் எந்தப் புகைப்படம், வீடியோ காட்சியிலும் விடுபட்டுவிடாமல் இருக்க, மணமக்களுடன் மேடையிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இதன் பெயர் திருமணமா? உறவுகளை அன்போடு வரவேற்று, அவர்களைப் பாசத்தோடு உபசரித்து, அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று மணமக்களை வாழ்த்துப் பெறச் சொல்லி, சுற்றத்தின் உளப்பூர்வமான ஆசீர்வாதத்தைப் பெறும் திருமணங்கள் இனி வேண்டாம் என்று முடிவு செய்தது எதனால்? இந்த பகட்டுத் திருமணங்களால் நாம் பெறுவதென்ன?'' என்ற கேள்விகளை வைத்த சுகி.சிவம், அவள் விகடன் 'குரல் ஒலி’யில்...

• குடும்பத்தை சந்தோஷமாகக் கொண்டு செல்வது எது?

• யாரையும் யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஏன்?

• எல்லா பெண்களும் மனதில் ஒன்றை நினைக்கிறார்கள். அது?

• மதங்கள் அனைத்தும் பெண்களுக்கு எதிரானவை. ஏன்?

• பெண்கள், ஆண்களை எளிதில் வீழ்த்தும் ஒற்றை ஆயுதம் எது தெரியுமா?

• பெற்றோர்களே... உங்களிடம் ஒரு கேள்வி. அது?

• பெண்களின் பிரச்னைகளில் பெரும் பிரச்னை எது தெரியுமா?

• முதியோர் இல்லம் கலாசார சீரழிவு கிடையாது, மறுமலர்ச்சி. ஏன்?

இப்படி இன்னும் பல விஷயங்களைச் சொல்ல ஆவலோடு காத்திருக்கிறார். கேட்டுப் பயன் பெறுங்கள். உங்கள் சிந்தைனையில் தெளிவு பிறந்து, மனம் முழுக்க மகிழ்ச்சி நிறையட்டும்!

டிசம்பர் 30 முதல் ஜனவரி 12 வரை

தினமும் மூன்று நிமிடங்களை ஒதுக்குங்கள்...

044-66802932* இந்த எண்ணுக்கு

ஒரு போன் போடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு