Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

பாரதி தம்பி, படம்: நா.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

பாரதி தம்பி, படம்: நா.வசந்தகுமார்

Published:Updated:

ளி குறைந்து, இருள் கூடும் அந்திப்பொழுதைப்போல வெளிச்சம் குறைந்துகொண்டே வருகிறது.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

எனினும், நம்பிக்கையின் கீற்று இன்னும் மிச்சம் இருக்கிறது. நமது கல்வி நிலையங்கள், மாபெரும் பள்ளத்தாக்கில் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவை முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. மீட்புக்கான சாத்தியங்கள் இன்னும் மீதம் இருக்கின்றன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என நம் முன்னே இருக்கும் இரு பெரும் பிரிவுகளில், தனியார் பள்ளிகளின் மோசடிகளும் பித்தலாட்டங்களும் வரம்பு கடந்துவிட்டன என்பது நமக்குத் தெரியும். கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வழிப்பறி செய்யும் திருடர்களைப்போல, கல்வியின் பெயரால் பெற்றோர்களின் மொத்த சேமிப்பையும் உறிஞ்சுகின்றன. பிள்ளைகளைப் பணயக் கைதிகளைப்போல பிடித்துவைத்துக்கொண்டு விதம்விதமான பெயர்களால் பணம் பிடுங்குகின்றன. எதிர்த்துக் கேட்க ஆள் இல்லை. 'ஏன்?’ எனக் கேட்க நாதி இல்லை. எந்தச் சட்டத்தையும் விதியையும், கால் தூசிக்கு சமமாகக்கூட அவர்கள் மதிப்பது இல்லை.

அரசின் கட்டண நிர்ணயக்குழு 5-ம் வகுப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் எனச் சொன்னால், தனியார் பள்ளிகள் எந்தக் கூச்சமும் அச்சமும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் வாங்குகின்றன. தஞ்சாவூர் டு திருச்சி பேருந்துக் கட்டணம் 25 ரூபாய் என அரசு நிர்ணயித்தால், அதைவிட ஒரு ரூபாய்கூட அதிகம் வாங்க முடியாது. அப்படி வாங்கினால், மக்களே சண்டைபோடுவார்கள். ஆனால் இங்கு, 'ஆயிரக்கணக்கான பெற்றோர்களிடம் இப்படி வாங்குகிறோமே... யாராவது ஒருவர் நம்மைச் சிக்கவைத்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற சிறு தயக்கம்கூட பள்ளி நிர்வாகத்திடம் இல்லை. அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்குகிறார் என்றால், 'மாட்டிக்கொண்டால் என்ன ஆவது?’ என்ற பதற்றம் இருக்கும். அதன் சாயல்கூட இவர்களிடம் இல்லை. மாறாக, பணம் கட்டும் பெற்றோர்கள்தான் படபடப்பாக இருக்கின்றனர். 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கடைநிலை அரசு ஊழியர், அவமானம் தாங்காமல் முகத்தைத் துண்டால் மூடிக்கொண்டு செல்கிறார். கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஒவ்வொரு தனியார் பள்ளி முதலாளியும் இதேபோலதான் நடத்தப்பட வேண்டும். மாறாக, அவர்கள் கல்வித் தந்தைகளாக வலம்வருகின்றனர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தனியார் பள்ளிகள் தாங்கள் கொள்ளை அடிப்பதாகவோ, சட்டத்தை மீறி செயல்படுவதாகவோ நினைக்கவே இல்லை. பல ஆண்டுகளாக ஊராரின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்ததன் விளைவாக கொள்ளை அடிப்பதை, தங்களின் பிறப்புரிமையாகவே கருதத் தொடங்கிவிட்டனர். இரண்டாவது, கலெக்டர்  முதல் முதலமைச்சர் வரை... ஊரில் உள்ள அரசியல், அதிகார வர்க்கத்தினரின் வாரிசுகள் அத்தனை பேரும் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். தங்கள் வாரிசு படிக்கும் பள்ளிக்கு ஒரு பிரச்னை என்றால், இந்த அதிகாரவர்க்கமே பதறித் துடிக்கும். ஆகவே, புறம்போக்கு நிலத்தை வளைத்தாலும், விதிமுறைகளை மீறி கட்டடம் கட்டினாலும் அவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. பள்ளி வளாகத்தில் கொலைகளும் தற்கொலைகளுமே சாதாரணமாகிபோனது இதனால்தான்.

தனியார் பள்ளிகளின் அட்டூழியங்களுக்கு இவை காரணங்களாக இருக்கின்றன என்றால், அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள் எவை? அரசாங்கம், திட்டமிட்டு அரசுப் பள்ளிகளைக் கைவிடுகிறது. ஓர் அரசு நினைத்தால், தரமான கல்வி, தகுதியான ஆசிரியர்கள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர முடியாதா? நிச்சயம் முடியும். அது ஒன்றும் மலையைப் புரட்டிப்போடும் வேலை அல்ல. ஆனால் அரசாங்கமோ, அரசுப் பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதை மௌனமாக அனுமதிக்கிறது. தமிழகக் கிராமங்களில் உள்ள பல தொடக்கப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுவருகின்றன. மாணவர் எண்ணிக்கை ஒற்றைப்படையில் சுருங்கியவுடன், அவர்களை அருகில் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டு, அரசுப் பள்ளியை மூடிவிடுகின்றனர். ஆனால், அந்தக் கிராமத்தில் பள்ளிக்கூடம் கொண்டுவருவதற்காக முந்தைய தலைமுறையினர் எவ்வளவு போராடியிருப்பார்கள்? அப்படிப் போராடிப் பெற்ற பள்ளியை, போகிறபோக்கில் இழுத்து மூடுவது எவ்வளவு பெரிய அவலம்?

இது தொடக்கப் பள்ளிகளின் நிலை எனில், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் அரசின் அக்கறைக்கு உரியதாக இல்லை. குறைந்துவரும் மாணவர் சேர்க்கை குறித்தோ, இருக்கும் மாணவர்களுக்கான கல்வித்தரத்தை மேம்படுத்துவது குறித்தோ கரிசனம் இல்லை. உலக நாடுகள் எல்லாம் கல்விக்கு பெருந்தொகை ஒதுக்கும் நிலையில், இந்தியா தொடர்ந்து கல்விக்கு மிகக் குறைந்த நிதியையே ஒதுக்குகிறது. இப்படி அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிக்கு அரசுதான் காரணமாக இருக்கிறது.

தனியார் பள்ளிகளின் எழுச்சி, அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி... இரண்டும் ஒரே காலகட்டத்தில் தொடங்கி நடந்துகொண்டிருப்பவை என்பது மட்டும் அல்ல... இவற்றுக்கான காரணங்களும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. தனியாரின் எழுச்சி திட்டமிடப்பட்டது என்றால், அரசின் வீழ்ச்சியும் திட்டமிடப்பட்டதுதான். இரண்டும் பிரிக்க இயலாதவாறு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இரண்டையும் இணைக்கிறது 'தனியார்மயம்’ என்ற நரம்பு.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

கல்வியில் தனியார்மயம் அனுமதிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டப் பிறகுதான், நமது கல்விச்சூழல் அதிவேக சீரழிவுக்கு உள்ளானது. கல்வியில் மட்டும் அல்ல... இந்தக் காலகட்டத்தில் அனைத்து துறைகளிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. லாபம், கொள்ளை லாபம் என்பதை மட்டுமே கொள்கையாகக்கொண்ட இவர்கள், சமூகத்தின் அனைத்து துறைகளையும் சூறையாடத் தொடங்கினர். இயற்கை வளங்கள், தொழில் வாய்ப்புகள், அடிப்படைத் தேவைகள்... என அனைத்தின் இலக்கும் லாபம் மட்டுமே. தனியார்மயம் என்னும் மிருகத்தின் பசி, எதைத் தின்றாலும், எதைக் குடித்தாலும் அடங்காத பெரும் பசி. அதற்கு மேலும் மேலும் தீனி தேவை. அதனால்தான் இப்போது அரசுத் துறைகளை கூறுபோட்டு தின்னத் தொடங்கியிருக்கிறது.

இப்படி புற உலகம் லாபவெறியின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இதன் விளைவு அக உலகிலும் எதிரொலிக்கிறது. புற உலகில் நிகழும் சீர்கேடுகள், அக உலகின் ஒழுக்க மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் காவு கேட்கின்றன. சுயநலனும் பணவெறியும் அடுத்தவனை வீழ்த்தியேனும் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையும் மனிதர்களின் மனங்களை ஆக்கிரமித்துவிட்டன. லாபத்துக்காக எந்தத் தீங்கையும் நியாயப்படுத்தும் ஆபத்தான நோய்க்கூறு மனதை மனிதர்கள் பெற்றுவிட்டனர். தனியார்மயத்தின் செயல்கள் புறவயமாக நடக்க, அதன் கொள்கை சாராம்சம் மனிதர்களின் மனதில் படிந்துவிட்டது. இதன் அடிப்படையில் பொதுச் சொத்துக்களைத் திருடுவது, திருட்டு அல்ல... சாமர்த்தியம் எனக் கருதுகிறார்கள். லஞ்சம் வாங்குவதும், லஞ்சம் கொடுப்பதும் குற்றம் அல்ல... தந்திரமாகப் பிழைக்கும் வழி என நினைக்கிறார்கள்.

இத்தகைய எதிர் சிந்தனைகொண்ட மனதுக்கு வாழ்க்கையில் எந்த மதிப்பீடுகளும் தேவை இல்லை. சொல்லப்போனால், அவை தொந்தரவு. அதனால்தான் சூது கவ்வினால் மகிழ்ச்சி அடைகிறோம். அறம் வீழ்ந்தால், கேலி செய்கிறோம். இத்தகைய நெறிபிறழ் வாழ்க்கை சமூக இயல்பாகவே மாற்றப்பட்டுள்ளது. ஒரு மிருகத்தை செல்லப்பிராணியாகப் பழக்குவதைப்போல நம் மனதை தனியார்மயத்தின் ஆதரவாளர்களாகப் பழக்கிவைத்திருக்கிறார்கள். அதனால்தான் தனியார் பள்ளிகளின் கொள்ளை நமக்கு துறுத்தலாகத் தெரியவில்லை. அதை இயல்பு என ஏற்று அங்கீகரிக்கிறோம். அதனால்தான் அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சிகுறித்த கலக்கம் நமக்கு இல்லை. மற்ற எல்லா அரசுத் துறைகளும் வீழ்ச்சி அடைவதைப்போலவே இதுவும் வீழ்கிறது எனக் கருதிக்கொள்கிறோம்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

எனில், இதற்குத் தீர்வுதான் என்ன? நம்மை சூழ்ந்திருக்கும் கல்விச் சிக்கல்களை சொந்த திறமையால் சரிசெய்துவிட இயலுமா? நமது சம்பாத்தியத்தை உயர்த்திக்கொள்வதன் மூலம், உயர்தரப் பள்ளி என பெயர் எடுத்த பள்ளியில் பிள்ளையைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்னைகளைத் தாவிக் கடந்துவிட முடியுமா? 'முடியும்’ என்பது பலரது எண்ணம். தலையை அடகு வைத்தாவது நன்கொடை கொடுக்கப் பணம் சேர்ப்பதும், மானம் மரியாதையைவிட்டு யார் காலில் விழுந்தேனும் பிராண்டட் பள்ளியில் ஒரு ஸீட் வாங்கத் துடிப்பதும் இதனால்தான். ஆனால், எவ்வளவு தூரத்துக்குதான் மூச்சிரைக்க ஓட முடியும்? முதல் பிள்ளைக்கு ஒரு லட்சம் நன்கொடை தந்து புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்தவர்களால், இரண்டாவது குழந்தைக்கும் அப்படிச் செய்ய முடிவது இல்லை. ஏனெனில், கையில் பணம் இல்லை. பள்ளி முதலாளிகளின் லாபவெறி ஒவ்வோர் ஆண்டும் 100 சதவிகிதம் அதிகரிக்கிறது. ஆனால், நமது வருமானம் ஆண்டுக்கு 10 சதவிகிதம்கூட அதிகரிப்பது இல்லையே! ஆகவே, இந்தச் சிக்கலை தனி நபர்களின் திறமையால் சரிசெய்துவிட முடியாது.

வேறு எப்படிச் சரிசெய்வது? தனிப்பட்ட ஆசிரியர்களின் நல்லெண்ணம், தனிப்பட்ட நபர்களின் நன்கொடை, என்.ஜி.ஓ-க்களின் செயல்பாடுகள், சில அமைப்புகளின் பொருள் உதவி போன்றவை ஒருசில பள்ளிகளை, சில காலத்துக்குக் காப்பாற்றலாம். இவை நிரந்தரத் தீர்வை தர முடியாது. அதேநேரம், 'எல்லாத்துக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்ப்பது முட்டாள்தனம். நாமே நமக்குத் தேவையானதைச் செஞ்சுக்கணும்’ எனப் பலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இது பெரும்பான்மை மக்களிடம் எடுபடும் கருத்து. சற்று பெருந்தன்மையானதைப் போன்ற தோற்றமும்கொண்டது.

என்.ஜி.ஓ-க்கள், இந்தக் கருத்துக்குத்தான் செயல்வடிவம் கொடுக்கின்றன; 'அரசு செயல்பட முடியாத இடங்களில் நாங்கள் செயல்படுகிறோம்’ என்கிறார்கள். ஆனால், அரசாங்கம் என்ற பிரமாண்டமான அமைப்பை, தனி நபர் அல்லது தனிப்பட்ட அமைப்புகளின் சிறிய செயல்பாடுகளால் எந்தக் காலத்திலும் பதிலீடு செய்ய முடியாது. அப்படிச் சொல்வது ஓர் ஏமாற்று வேலை என்பதுடன், அரசின் செயலற்றத்தன்மையை மறைக்கும் தந்திரம். கல்வி, சுகாதாரம், தண்ணீர், சாலை வசதி, உணவு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் 'அரசாங்கம்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இவற்றை 'நமக்கு நாமே’ செய்துகொள்ள வேண்டும் எனில், பிறகு அரசுக்கு என்ன வேலை? தன் குடிமக்கள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை வழங்கவேண்டியது அரசின் கடமை.

ஆகவே, நமது கல்விச் சிக்கல்கள் அனைத்தையும் அரசின் கொள்கை முடிவுகளின் வழியேதான் தீர்க்க முடியும். தனியார் பள்ளிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, கல்வி என்றால் அரசுப் பள்ளிகள் மட்டுமே என்ற நிலையை நோக்கி அரசு நகர வேண்டும். இதற்கு தனியார் பள்ளிகளை இறுக்கிப் பிடிப்பதும், அரசுப் பள்ளிகளைச் சீரமைப்பதும் அவசியம். ஆனால், சிந்தித்துப்பாருங்கள்... அரசும் தனியாரும் வேறுவேறாக இருக்கின்றனவா? அரசின் அதிகாரவர்க்கமும், தனியாரின் அதிகாரவர்க்கமும் தனித்தனியாக இயங்குகின்றனவா? அரசுப் பள்ளிகளை மேம்படுத்தப் போராடவேண்டிய மக்கள் பிரதிநிதிகள், தனியார் பள்ளிகளின் முதலாளிகளாக இருக்கின்றனர். தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கின்றனர். இந்த ஆபத்தான நச்சுச் சூழலில், தனியார் பள்ளிகளை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை அரசே எடுக்கும் என நம்புவதற்கு இடம் இல்லை. எனில், மீள்வதற்கு வழியே இல்லையா? வழி இருக்கிறது; குறுக்கு வழிகள் இல்லை.

தங்களின் கோரிக்கையை நோக்கி அரசைப் பணியவைக்கும் அளவுக்கான பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் மூலம்தான் இதற்குத் தீர்வுகாண முடியும். அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்குவது, அருகாமைப் பள்ளி முறையை உறுதிசெய்வது, பொதுப் பள்ளி முறையைச் சாத்தியப்படுத்துவது, தாய்மொழிவழிக் கல்வியை உத்தரவாதப்படுத்துவது... ஆகியவை நமது கல்விச்சூழலை ஆரோக்கியமானதாக மாற்றி அமைப்பதற்கான கோரிக்கைகள். ஆனால், இவை நீண்ட தூர இலக்குகள். இவற்றை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகள், உடனடிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, இப்போது அனைத்து பெற்றோர்களையும் வதைப்பது, வகைதொகை இல்லாத கட்டணம்தான். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில், அந்தக் குறிப்பிட்ட வகுப்புக்கு அரசின் கட்டண நிர்ணயக்குழு எவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். கல்வித் துறையின் இணையதளத்திலேயே இந்த விவரம் கிடைக்கிறது. பொதுநலம் விரும்பும் பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து, இந்தப் பள்ளியில் இந்த வகுப்புக்கு இவ்வளவுதான் கட்டணம் என்பதை ஊர் எங்கும் போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். அந்தத் தொகையைத் தாண்டி ஒரு பைசா தரக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். முக்கியமாக, கட்டும் பணத்துக்கு ரசீது வாங்க வேண்டும். 'அரசு சொல்லும் கட்டணத்தை வாங்கு. வாங்கும் காசுக்கு ரசீது கொடு’ இதுதான் இப்போதைய உடனடி முழக்கம்.

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை கல்வியின் தரம்தான் அங்கு உடனடிப் பிரச்னை. அரசுப் பள்ளியில் பிள்ளையைப் படிக்கவைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளையின் படிப்பைக் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகள், பாடங்களில் தொடர்ந்து தோல்வி அடைந்தால் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களைக் கேளுங்கள். மதிப்பெண் குறைவாக எடுத்தால், ஆசிரியர்களிடம் சண்டை போடுங்கள். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதியே இருப்பது இல்லை. வயதுக்கு வந்த உங்கள் மகள், மாதவிடாய் காலங்களில் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார் என்பதை என்றைக்கேனும் சிந்தித்தீர்களா? உங்கள் வீடாக இருந்தால், இப்படி விட்டுவிடுவீர்களா? ஒட்டுமொத்த பெற்றோர்களும் சேர்ந்து சென்று பள்ளி நிர்வாகத்தை உலுக்கி எடுக்க வேண்டாமா?

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 30

அரசுப் பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும் கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட முன்வந்தால், கல்வித் துறை அதிகாரிகள் ஓடிவருவார்கள்; மாவட்ட நிர்வாகம் பதறி இறங்கிவரும். இதைத் தனி நபர்களாகச் செய்ய முடியாது. அமைப்பாக, சங்கமாக அணிதிரள வேண்டும். தனது சகிக்க முடியாத லாபவெறியின் காரணமாக தனியார் பள்ளிகள் மவுசை இழந்துவரும் நிலையில், இதுதான் அதற்குப் பொருத்தமான தருணம். 'தனியார் பள்ளிகள்’ என்ற முறிந்து தொங்கிக்கொண்டிருக்கும் கிளையை வீழ்த்துவதன் மூலம்தான், 'அரசுப் பள்ளிகள்’ என்ற ஆணிவேரைக் காப்பாற்ற முடியும்.

இரண்டு மாங்காய்களையும் வீழ்த்த ஒரு கல் போதும். அந்த ஒரு கல், போராட்டம்!

- நிறைந்தது