Published:Updated:

மூன்றாம் உலகப் போர்!

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

மூன்றாம் உலகப் போர்!

கவிப்பேரரசு வைரமுத்துஓவியங்கள் : ஸ்யாம்

Published:Updated:
##~##

'நியூ சயின்டிஸ்ட்’ பத்திரிகையில் வெளிவந்த அந்தக் கட்டுரையின் மீது கணிசமான கண்கள் மொய்த்தன. இணையத்திலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் மின் அஞ்சல்களிலும் அது நிறைந்து வழிந்தது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அண்மைக்கால விவாதப் பொருளும் அதுதான். வழக்கமாகத் தங்கள் தோள்களைச் சற்றே உயர்த்திக் குலுக்கி உதடு பிதுக்கி முகஞ்சுழித்து எதையும் அலட்சியப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்கூட ''ஆமாம் பார்த்தேன்'' என்று பதிவு செய்தார்கள். ஐரோப்பிய ஆய்வு மாணவர்கள்கூட அந்தக் கட்டுரையை சான்ட்விச்சோடு சேர்த்துக் கடித்துக்கொண்டிருந்தார்கள் கோக் குடித்துக்கொண்டே.

கட்டுரைபோலவே கவனத்துக்குள்ளானது எழுதிய எமிலியின் பெயரும். அதை மொழிபெயர்க்கும் பணியில் முனைந்திருந்தன சில இந்தியப் பல்கலைக்கழகங்களும். 'ஓர் உறுத்தும் உண்மை’ (AN Inconvenient Truth) என்ற சுற்றுச்சூழல் ஆய்வுக்காக நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்ட அல்கோரை விமர்சித்தவர்கள்கூட இந்தக் கட்டுரையை முற்றிலும் நிராகரிக்க முடியாது என்று முன்மொழிந்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்றாம் உலகப் போர்!

விஞ்ஞான உண்மைகளைத் தாண்டி மனித நேசம் படிந்திருந்தது அந்த ஆய்வில். அறிவின் மூட்டையாய்க்கிடந்த அந்தக் கட்டுரையின் மீது ஒரு சொட்டுக் கண்ணீரும் விழுந்திருந்தது; அது படர்ந்து ஒட்டுமொத்த மானுடத்தையும் வியாபித்து நனைத்ததாய்த் தோன்றியது.

இதுபோன்ற கட்டுரைகளை எல்லாம் கூர்வாளில் கிழித்துக் குடல் வாங்குவதற்கென்றே பேனா வைத்திருக்கிற ஒரு விமர்சகர் இப்படி எழுதினார்:

''சில கட்டுரைகள் பொருந்தாத தொப்பிகளைப் பூட்டிக்கொள்ளும் கோமாளிகளைப்போல - உள்ளடக்கத்தோடு ஒட்டுவது இல்லை.

சில கட்டுரைகள் ஆடம்பரம் சூடி வரும் சீமாட்டிகளைப்போல-தம்மைவிடத் தம் அலங்காரமே கவனிக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுவன.

சில கட்டுரைகள் வாசத்தால் மட்டுமே தங்களை அடையாளம் காட்டும் மூலிகைகளைப்போல-தங்கள் முகத்தை முன்னிலைப்படுத்தாமல், குணத்தை முன்னிலைப்படுத்தும்.

எமிலியின் கட்டுரை அந்த மூன்றாம் வகை மூலிகை.''

காந்தி கிராமம் பல்கலைக்கழகம்தான் முதலில் அதை மொழிபெயர்த்து வெளியிட்டது:

போருக்கு எதிரான போர்

மூன்றாம் உலகப் போர்!

''முதல் இரண்டு உலகப் போர்கள் முடிந்துவிட்டன என்று சரித்திரம் அறிவித்துவிட்டது. ஆனால் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்பதை அது இன்னும் அறிவிக்கவே இல்லை. அது கண்ணுக்குத் தெரியாத யுத்தம்; கை குலுக்கிக்கொண்டே நடக்கும் யுத்தம்; கொல்கிறவன் கொல்கிறான் என்றும் சாகிறவன் சாகிறான் என்றும் அறிந்துகொள்ள அவகாசம் தராத யுத்தம். இது மனிதனுக்கும் மனிதனுக்கும் மட்டும் அல்ல-மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மூன்றாம் உலக நாடுகளுக்கும் முன்னேறும் நாடுகளுக்குமிடையே நிகழும் முடிவு தெரியாத போர்.

இந்தப் போரை இப்போதே நிறுத்த முயன்றால், மானுடம் மிஞ்சலாம். இல்லையேல் பூமி, தான் படைக்கப்பட்ட நோக்கத் தில் இருந்து விட்டு விலகி வெகு தூரம் போய்விடலாம்.

முதலில் இந்த பூமி மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டது அல்ல என்பதை மனிதர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அறியப்பட்ட 20 லட்சம் உயிரினங்களில் ஒரு ஜீவராசிதான் மனிதன். பூமிக்குச் சற்றொப்பக் கடைசியாய் வந்த பேரினம் மனித இனம்தான். பறவைகளும் விலங்குகளும் புழுக் களும் பூச்சிகளும் மீன்களும் நுண்ணுயிர்களும் இந்த பூமியின் பங்குதாரர்களாய் இருந்த வரை எந்த மாறுதலும் இல்லை இயற்கையில்.

காடுகள் அழித்துக் கூடுகள் கட்டியதில்லை பறவைகள். தங்கள் வாழிடங்களுக்காக இயற்கையின் கோடுகளைத் தாண்டியதில்லை விலங்கினங்கள். தம் கழிவுகளில் வெளிப்படும் மீத்தேன் வாயு தவிர இயற்கைக்குப் பெரிதாக விரோதம் செய்யவில்லை விலங்குகள். சொல்லப்போனால், பறவைகளின் எச்சங்கள் காடுகளை வளர்த்தன. இயற்கை யின் விதிகள் தடுமாறும்போதெல்லாம் நுண்ணுயிர்கள் சமன் செய்தன. பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கையால், தாவரக் கூட்டம் தழைத்தது. மனிதன் வினைப்படும் வரைக்கும், இயற்கைக்கு எதிராய் பூமி துளைக்கப்பட்டதில்லை; வானம் கிழிக்கப்பட்டதில்லை.

கடைசிப் பேருயிராய் வந்து சேர்ந்தான் மனிதன். அதன் பிறகுதான் பூமியின் சரித்திரம் மனிதனுக்கு முன் - மனிதனுக்குப் பின் என்று பிளவுகொண்டது.

பூமிக்கு வந்து போன உயிர்களிலும் வந்து வாழும் உயிர்களிலும் வல்லமையும் வஞ்சகமும் உள்ள உயிர்... மனிதன்தான். பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ - அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும். மனிதன் மாறுதலை உண்டாக்கினான். அதற்கு நாகரிகம் என்று பெயர் சூட்டிக்கொண்டான். நாகரிகம்தான் மனிதனின் வளர்ச்சி; ஆனால், பூமிக்குப் பின்னடைவு.

மண்ணில் பிறந்த ஒன்று அது அதுவாக இருந்தவரை பூமி பழுதுறவில்லை. ஒன்று இன்னொன்றாக மாற்றப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் மனிதன் எழுந்தான்; பூமி விழுந்தது.

மண்ணில் கிடந்த இரும்பு இரும்பாக இருந்த வரையில் சம்பவம் ஏதும் இல்லை; அது ஆயுதமாக மாற்றப்பட்ட பிறகு என்ன நேர்ந்தது என்பதற்குச் சாட்சிகள் தேவை இல்லை.

ஆயுதம் கண்டறிந்த பிறகு பூமியின் பூர்வகுடிகளான விலங்குகளையும் பறவைகளையும் மனிதன் வேட்டையாடி வெளியேற்றினான்.

உணவே தொழில்; தொழிலே உணவு என்றானது வேட்டை. புற்றுக்குள் கைவிட்டு ஈசல் அள்ளித் தின்னும் கரடியைப்போல இயற்கைக்குள் கைவிட்டு உள்ளதை உண்டு வந்தான் மனிதன். போகப் போக உணவு அரிதானது; அல்லது அற்றுப்போனது. வேட்டையில் ஈடுபட்ட மனிதனும் வேட்டையாடப்பட்டபோது அவன் சோர்வுற்றான்.

வேட்டையில் அவன் கண்ட சோர்வும் தோல்வியும் விவசாயத்தில் முடிந்தன. தான் தேடிச் செல்லும் உணவு தன்னைத் தேடி வரலாகாதா என்ற கேள்வியில் விழுந்தது விவசாயத்துக்கான வித்து.

விவசாயத்தின் உபரி உற்பத்தி, வணிகத்தில் போய் முடிந்தது. வணிகம், அரசியலை ஈன்றது. அரசியல், தன் இருப்புக்குத் தனியுடைமைகளையும், மதங்களையும், கல்வியையும், கலைகளையும், வருணங் களையும், வர்க்கங்களையும் உற்பத்தி செய்து உடனிருத்திக்கொண்டது.

வானியலும் புவியியலும் வகுத்துக் கொடுத்த வசதிக்கேற்ப, உலகின் வெவ்வேறு பாகங் களில் விவசாயம் தொடர்ந்தது. விவசாயக் கலாசாரம் மட்டும் விளங்கிய வரை மண்ணை மட்டுமே மனிதன் கூறு செய்தானன்றி வானம் வகிரப்படவில்லை. இங்கிலாந்தில் என்று தொழில் புரட்சி தோன்றியதோ, அன்று விழுந்தது வானத்தில் வடு.

பிரத்தியேக ஏற்பாடுகள் செய்துகொண்டதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தின் சிறந்த கோள்களுள் ஒன்று பூமி என்று சொல்லலாம். பூமியின் சிறப்புக் காப்புறுதிகளுள் ஒன்று, இயற்கை உச்சத்தில் கட்டிக் கொடுத்திருக்கும் ஓசோன் கூரை.

மூன்றாம் உலகப் போர்!

காற்று மண்டலத்துக்கு மொத்தம் மூன்று அடுக்கு. பூமிக்கு மேலே 12 கிலோ மீட்டர் உயரம் வரை உள்ளது முதல் அடுக்கு. இதில் தான் இருக்கிறது பூமிக்கான காற்றின் 90 விழுக்காடு.

முதல் அடுக்கின் முடிவில் தொடங்கி 50 கிலோ மீட்டர் உயரம் வரை இருப்பது இரண்டாம் அடுக்கு; இதில் ஓரளவுதான் இருக்கும் உயிர்க் காற்று.

60 கிலோ மீட்டருக்கு மேலே இருப்பது மூன்றாம் அடுக்கு; அது காற்றற்ற வெற்றடுக்கு.

1,000 கிலோ மீட்டர் உயரத்துக்கு மேலிருப்பது வெட்ட வெளி - ஒளியும் ஒலியுமற்ற பாழ்வெளி. விண்கலங்களும் செயற்கைக் கோள்களும் விடப்படுவது அங்கேதான்.

இந்த நான்கு அடுக்குகளிலும் பூமிக்கு முக்கியமானது, 10 முதல் 40 கிலோ மீட்டர் உயரம் வரை அமைந்திருக்கும் ஓசோன் கூரைதான்.

குறைந்த காற்றழுத்த மண்டலத்துக்கும் அதிக அழுத்த மண்டலத்துக்கும் இடையில் காணப்படும் மெல்லிய உறை அது; மூன்று ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது; பூமியை உருகவிடும் - கருகவிடும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி வடிகட்டி பூமிக்கு சாந்தப்படுத்தி அனுப்பிவைக்கும் சக்திமிக்கது. இத்தனை யுகங்களாய் இந்த பூமியின் மீது வெயிலின் கூரான வேல் வந்து நேராகப் பாயாமல் தடுத்துக் காத்த தாய்க் கூரை அதுதான்.

அந்தக் கூரையைத்தான் இன்று கிழித்தெறிந்துவிட்டான் இந்த நூற்றாண்டுத் தொழிற்புரட்சி மனிதன்.

இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நாள் வரை 29 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்குக் கிழிந்து கிடக்கிறது ஓசோன் கூரை. பூமிக்கு எதிரான புறஊதாக் கதிர்களின் படையெடுப்பு எளிதாகிவிட்டது; கிழிந்த கூரையைத் தைப்பதற்கு மாறாய் இன்னும் கிழிக்கவே எத்தனிக்கிறோம்.

ஆண்டுக்கு 200 மில்லியன் டன் கார்பன் மோனாக்சைடும், 50 மில்லியன் டன் ஹைட்ரோ கார்பனும், 150 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடும், 190 மில்லியன் டன் சாம்பலும் காற்றில் கலந்து உடைந்த கூரையை மேலும் மேலும் உடைக்கின்றன.

மனிதன் கவலைப்படுகிறானோ இல்லையோ, இந்த மாபெரும் ஆபத்தை எண்ணி மலைச் சிகரங்கள் மட்டும் தனித்தனியே அழுதுகொண்டிருக்கின்றன. கூடிக்கொண்டேபோகிறது புவி வெப்பம். ஒரு டிகிரி வெப்பம் கூடியதற்கே மென்சிறகு கொண்ட சில பறவை இனங்களும் கம்பளித் தோல்கொண்ட சில விலங்கினங்களும் பூமியைவிட்டே போய்விட்டன.

புவி வெப்பத்தால் ஒரு மணி நேரத்திற்கு ஓர் உயிரினம் அழிந்துகொண்டே இருக்கிறது.

இன்னும் மூன்றே மூன்று டிகிரி வெப்பம் கூடினால் போதும்; உலகின் 33 விழுக்காடு விலங்கினங்கள் அழிந்து போகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அதை நம்பித் தீர்வதற்கான திட ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ஆர்கன்சாஸ் மாநிலத்தில் தலைக்கு மேலே பறந்த 5,000 பறவைகள் பொத்தென்று தரையில் விழுந்து செத்தொழிந்த காட்சியை இப்போதும் நீங்கள் பார்க்கலாம் இணையத்தில்.

பருவங்களை ஏமாற்றி திடீரென்று வெப்பம் கூடிப்போன ரஷ்யாவில் சூடு தாங்காமல் நீராடப்போன பலர் நீர்நிலைகளிலேயே செத்து மிதந்ததை உலகறியும்.

சரிந்துகிடந்த பருத்திப் பொதிகளைப் போல் விஸ்கான்சின் நகரத்தில் ஒரே நேரத்தில் இறந்துகிடந்தன சில நூறு பசுக்கள்.

மெக்சிகோ வளைகுடாவில் இறந்து கரை ஒதுங்கிய எண்ணற்ற பிராணிகளைக் கண்கொண்டு கண்டு கலங்கியவள் நான்.

கடந்த நூறாண்டுகளில் 160 கோடியில் இருந்து 650 கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள் தொகை. ஆனால் அதே காலப் பகுதியில் மனிதகுலம் இழந்திருக்கிறது - உலகச் சதுப்பு நிலக்காடுகளில் பாதியை.

இழப்பு என்பது பூமிக்கொன்றும் புதியதல்ல;

அழிவு என்பது மனிதகுலத்துக்கு அதிசயமும் அல்ல;

ஆனால் அழிவுகளையும் இழப்புகளையும் சமன் செய்துகொள்ளும் சக்தி இதுவரை இருந்தது மண்ணுக்கும் விண்ணுக்கும். இப்போது இரண்டுமே தங்கள் சக்திகளை இழந்து வருகின்றன.

துருவங்கள் உருகுகின்றன; பருவங்கள் மாறுகின்றன. காலம்காலமாய் விவசாயிகள் கொண்டிருந்த மரபுசார் அறிவை மறுதலிக்கிறது இயற்கை. விவசாயத்தையே பெரிதும் நம்பி வாழும் மூன்றாம் உலக நாடுகள் தங்கள் நிலங்களில் வேளாண் குடி மக்களே மடிந்து மக்கி உரமாவதைத் தடுக்க முடியவில்லை.

அவர்களின் வானம் இடம்மாற்றி வைக்கப்பட்டுவிட்டது.

மண்ணை ரசாயனம் தின்றுவிட்டது.

நீர்நிலைகளைக் குடித்துவிட்டன சாயக் கழிவுகள்.

புவிவெப்பமாதல்-உலகமயமாதல் என்ற இரண்டு பூதங்களால் ஒரு விவசாயி ஒரே நேரத்தில் விழுங்கப்படுகிறான்.

அவன் வானிலையை வளர்ந்த நாடுகள் தீர்மானிக்கின்றன. அவன் உற்பத்திப் பொருளின் விலையைப் பங்குச் சந்தைகளும் தங்கச் சந்தைகளும் தீர்மானிக்கின்றன.

இந்தியாபோன்ற வளரும் நாடுகளில் ஒரு வேளாண்குடி மகனின் மதிப்பு, ஓர் இறைச்சி ஆட்டின் மதிப்பைவிடக் குறைவாகவோ, சற்று அதிகமாகவோ இருக்கிறது.

ஓர் ஆய்வறிக்கை சொல்லும் தகவலின்படி, 1997 முதல் 2011 வரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,14,500 பேர். ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இந்திய ஐதீகப்படி இவர்கள் அனைவரும் விதிவந்து செத்தவர்கள் என்று விலக்கிவிட முடியாது. ஒரு மனிதனைத் தற்கொலைக்குத் தள்ளுவதும் பாதிக் கொலைதான்.

இனியேனும் மூன்றாம் உலக நாடுகளின் வானத்தில் வைத்த வாளையும் கழுத்தில் வைத்த கத்தியையும் வளர்ந்த நாடுகள் அகற்றிவிட வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உலகச் சங்கிலியில் ஒரு கண்ணி என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

செவ்வாய் கிரகத்தில் மனிதனைக் குடி யேற்றும் முயற்சி நடப்பதாய்ச் செய்தி வருகிறது. அதை நினைத்தால் நான் ஒரு கறுப்புப் புன்னகை சிந்த வேண்டியவளாயிருக்கிறேன். செவ்வாய் கிரகம் என்பது 97 விழுக்காடு கரியமில வாயுகொண்ட வளி மண்டலத்தால் சூழப்பட்டிருப்பது. பூமி என்பது 0.03 விழுக்காடுகொண்ட கரியமில வாயுவும் 79 விழுக்காடு நைட்ரஜனும் 21 விழுக்காடு பிராண வாயுவும் கொண்ட வளிமண்டலத்தால் சூழப்பட்டிருப்பது.

எதை விட்டுவிட்டு எதில் குடியேறுவது?

இருக்கும் ரோஜாவை எரித்துவிட்டா, நீங்கள் முள்ளை முகர்ந்து பார்க்கப்போகிறீர்கள்? முதலில் நாமிருக்கும் பூமியை நாம் காப்போம். வானத்தைக் கிழிக்காத- காற்றைத் தொலைக்காத - பூமியை எரிக்காத வாழ்க்கை முறைக்கு மனிதகுலத்தை மாற்றிப் பார்ப்போம். வளர்ந்த நாடுகளுக்கு என் கட்டுரை சலிப்பைத் தரலாம். கட்டுரையை வாசிக்கும்பொழுதே சிலர் கையில் கிடைத்த கண்ணாடிக் கோப்பையை என் மீது வீசலாம்; அதையே என் கட்டுரைக்கான வெற்றிக் கோப்பை என்று வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன்!'

- எமிலி

விதை மேலாண்மையில் முதுநிலைப் பட்டயப் படிப்புப் பயிலும் சின்னப்பாண்டியைத் தன் அறைக்கு அழைத்தார் துணைவேந்தர் அருள்.

''மொழிபெயர்ப்பு நல்லாயிருந்தது சின்னப்பாண்டி. வாழ்த்துக்கள்.''

''நன்றிங்க. ஆனா மொழிபெயர்ப்பு நல்லா இருந்ததுக்குக் காரணம் மூலம் தாங்க.''

''மூலத்துக்குப் பக்கத்துல இருக்கு மொழிபெயர்ப்பு. அதுதான் பாராட்டறேன். பல பல்கலைக்கழகங்கள்ல இந்தக் கட்டுரை பேசப்படுது; எனக்கொரு யோசன தோணுது...

''சொல்லுங்க அய்யா...''

''நம்ம பல்கலைக்கழகத்துல 'இந்திய வேளாண்மையில் உலகத் தாக்கம்’ங்கற கருத்தரங்கு நடத்தப்போறோம். பொதுவா அதிகாரத்துல உள்ளவங்களையும் நன்கொடையாளர்களையும் சிறப்பு அழைப்பாளர்களா அழைக்கிறது ஒரு சடங்காகிப்போச்சு; அவங்களுக்குக் கருத்தரங்கத்தோட உள்ளீடே தெரியறதில்ல...''

''அய்யா... தெரியாதவங்களுக்குத் தெரியப்படுத்தறதுதான கருத்தரங்கு..?''

''உன் நகைச்சுவை உணர்ச்சியப் பாராட்டறேன் - ஆனா ரசிக்கிற மனநிலையில நான் இல்ல - இந்தக் கருத்தரங்குக்குச் சிறப்பு அழைப்பாளரா விஷயமுள்ள ஒருத்தர அழைக்கலாம்னு நினைக்கிறேன்.''

''யாருங்க..?''

''எமிலி - கட்டுரை எழுதின அமெரிக்கப் பெண்...''

''முயற்சி பண்ணலாம்.''

மூன்றாம் உலகப் போர்!

''நீதானே ஒருங்கிணைப்பாளர்! அந்த முயற்சிய நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன். எப்படியும் வரவழைக்கணும். அந்தப் பெண் கலந்துக்கிட்டா, கருத்தரங்குக்கே ஒரு கனம் கிடைக்கும்னு தோணுது. இதோ... இதுதான் அந்தப் பொண்ணோட இ-மெயில் ஐ.டி.globalchanger@gmail.com''

டுத்த சில நிமிடங்களில்...

பிரிக்கப்படாத பழைய மதுரை மாவட்ட எல்லைக்குட்பட்டதும் இன்றைய தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளதுமான அட்டணம்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த (நினைவில் வாழும்) சீனிச்சாமி பேரனும், கருத்தமாயி - சிட்டம்மா தம்பதியின் மகனுமான சின்னப் பாண்டி மின் அஞ்சல் செய்தான் - அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் வசிக்கும் ஜேம்ஸ் டேவிட் - எலீனா தம்பதியின் ஒரே மகளும் ஆய்வாளருமான இளம் பெண் எமிலிக்கு.

- மூளும்