Published:Updated:

தடை... அதை உடை! இது "ஸ்பைடர்" ஃபார்முலா

தடை... அதை உடை! இது "ஸ்பைடர்" ஃபார்முலா
தடை... அதை உடை! இது "ஸ்பைடர்" ஃபார்முலா

இது மகேஷ்பாபுவின் ஸ்பைடர் கதை அல்ல. ஆனால், சினிமா சூப்பர்ஸ்டார் போல எல்லாத் தடைகளையும் உடைத்து நொறுக்கி வாழும் சிலந்தியின் கதை. ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு எந்தக் குறைவுமில்லாத கதை. 

சீனாவினுடைய ராணி, தனக்குப் பட்டுப்பூச்சியால் நெய்யப்பட்ட பட்டுப்புடவைபோல, சிலந்தி வலையால் பின்னப்பட்ட ஆடை வேண்டும் என்று சொன்னார். எல்லோரை விடவும் அதிகமான சிறப்பு வாய்ந்த பெண்மணியாக திகழ வேண்டும் என்பதற்காகவே அந்த ஏற்பாடு. அதைச் செயல்படுத்த சுமார் 8,000 சிலந்திப் பூச்சிகள் வலையிலிருந்து செய்யப்பட்டு உடை தயார் செய்யப்பட்டது. அப்போது ராணி அணிந்த ஆடை அவ்வளவு வரவேற்பு பெற்றது. அதேபோல, பழங்காலத்தில் ஸ்காட்லாண்டில் உள்ள ராபர்ட் புரூஸ் என்ற அரசன் தன்னுடைய எதிரியுடன் பலமுறை போர் புரிந்து தோல்வியடைந்து குகைக்குள் தனியாக வாழ நேரிட்டது. அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான் அரசன். அப்போது பலமுறை வலைபின்ன முயற்சி செய்து தோல்வியடைந்த சிலந்தி இறுதியாக வலையைப் பின்னியது. அதைக் கவனித்தவன் அதையே பாடமாக எடுத்துக்கொண்டு தனது படைகளைத் திரட்டி போருக்குச் சென்று ஸ்காட்லாண்டை தன் வசம் கொண்டுவந்தான். இதுபோல பல எடுத்துக்காட்டுகள் ஸ்பைடரை வைத்துச் சொல்லலாம்.

சிலந்திப்பூச்சி (ஸ்பைடர்) பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் அதிகமான தகவல்கள் இருக்கின்றன. சிலந்தி என்றதும் நமது ஞாபகத்திற்கு வருவது ஸ்பைடர் வலையாகத்தான் இருக்கும். ஸ்பைடரின் வாயிலிருந்து வரும் எச்சிலிலிருந்து வலை பின்னப்படுகிறது. இந்த வலையில் வந்து விழும் பூச்சிகளைத்தான் சிலந்திகள் உணவாக உட்கொள்ளும். ஸ்பைடர்களில் அதிகமாக வேட்டையாடுவது பெண் ஸ்பைடர்கள்தான். ஆனால், ஒரு வலையில் வந்து விழும் பூச்சிகளை எல்லா ஸ்பைடர்களும் சரிசமாக பிரித்துக்கொண்டு உண்ண ஆரம்பிக்கும். அதேபோல பெண் ஸ்பைடர் வலையில் உள்ள அனைத்துச் சிலந்திகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வரும். 42,000 சிலந்திப் பூச்சி வகைகள் உலகில் உள்ளன. விஷத்தன்மை கொண்ட சிலந்தியை காட்டுச் சிலந்தி என்றும் அழைப்பர். உண்ணக்கூடிய பூச்சிகள் மீதும் எதிராளிகள் மீதும் விஷத்தைப் பீய்ச்சி அடிக்கும். சிலந்தி சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வாழ்ந்து வருகிறது. 

அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் வசிக்கும் பியாடர் பல்வேறு காடுகளில் உள்ள விலங்குகளைப் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்காவில் உள்ள சதுப்பு நிலக் காடுகளில் பயணங்கள் மேற்கொண்டார். அப்போது ஒரு மரத்தின் அருகே நிலம் அதிர்வதையும் உணர்ந்துள்ளார். அதை உற்றுநோக்கியபோது நாய்க்குட்டி அளவில் சிலந்தி ஒன்று ஊர்வதைக் கண்டார். அந்தச் சிலந்தி மரத்தின் மீது இருந்த பறவையை தனது காலால் பிடித்து உணவாக எடுத்துக் கொண்டது. அந்தச் சிலந்தியின் நகங்கள் அனைத்தும் சிறு குழந்தையின் முழங்கை அளவு நீளம் இருந்தது. அதனைக் கண்டவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. "ராட்சத சிலந்தி நடக்கும்போது அதன் காலடிச்சத்தம் குதிரையின் குளம்படிச் சத்தம் போல இருந்தது. இதுபோல சிலந்திகள் அந்தக் காடு முழுவதும் அதிகமாக இருந்தன. இதுகுறித்து எனது குழுவினர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்தச் சிலந்தி வகைகள் தெரபோ எனும் அறிவியல் பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகிறது. இதுபோல பல சிலந்திகள் இவ்வுலகில் உள்ளன. பறவை, பல்லி, பாம்பு உள்ளிட்டவற்றைச் உண்ணும் தன்மை கொண்டவை சிலந்திகள். 2007-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஊனுன்னா எனும் சிலந்தியைத் தவிர, சில சிலந்திகள் சிறு சிறு பூச்சிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும்" என்கிறார்.

அளவைப் பொறுத்தவரையில் வேறு வேறு தன்மை கொண்ட சிலந்திகள் காணப்படுகின்றன. கொலம்பியா நாட்டில் காணப்படும் மிகச்சிறிய பட்டு டிகுவா என்ற சிலந்தியின் உடல் நீளம் 03.37 மி.மீ ஆகும். மிகப்பெரிய டரன்டுலாஸ் என்ற சிலந்தியின் உடலமைப்பானது 90 மி.மீ அளவும், கால் அளவானது 250 மி.மீ நீளமும் காணப்படுகின்றன. 'மிக்காரியா சொசியாபிலிஸ் இனத்தைச் சேர்ந்த ஆண் சிலந்திகள் பெரிய பெண் சிலந்திகளை மட்டும் உணவாக எடுத்துக்கொள்ளும்' என செக் குடியரசின் மசாரைக் பல்கலைக்கழகத்தின் லென்கா செண்டன்ஸ்காவின் ஆய்வும் சொல்கிறது. மற்ற பூச்சிகளைப்போல இதற்கு உணர்வு இழைகள் கிடையாது. அளவில் சிறியதாக இருந்தாலும், காடுகளில் பல மீட்டர் நீளம் கொண்ட வலையைப் பின்னும் தன்மை சிலந்திக்கு உண்டு. ஓர் இடத்தில் சிலந்தி வலை பின்ன ஆரம்பித்துவிட்டால் அதற்கு எத்தனை தடையூறுகள் வந்தாலும், மீண்டும் மீண்டும் வலையை அந்த இடத்தில் பின்னிக் கொண்டே இருக்கும். சிலந்தியைத்தான் கம்போடியா மக்கள் உணவாக உட்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.