Published:Updated:

ஜானகியைச் சந்தித்தோம்!

ஜானகியைச் சந்தித்தோம்!

ஜானகியைச் சந்தித்தோம்!

ஜானகியைச் சந்தித்தோம்!

Published:Updated:
##~##

''ஜனவரி பதினேழு... அவரோட பிறந்த தினம்... 'நம்ம பிறந்த தினத்தை நினைவுவெச்சு மத்தவங்கதான் கொண்டாடணுமே தவிர, நம்மை நாமே வாழ்த்திக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?’னு சொல்லுவார். ஆனாலும் அன்னிக்கு சாப்பாட்டுல அவருக்குப் பிடிச்ச சேமியா பால்பாயசம் வெச்சுக் கொடுப்பேன்''- கலங்கிய கண்களுடன் சொன்னார் ஜானகி ராமச்சந்திரன்.

 எம்.ஜி.ஆர். மறைந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அவர் வாழ்ந்த ராமாவரத்துக்குச் சென்றிருந்தோம். சென்னைப் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ராமாவரத்தில், சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர். தோட்டம். ''அவர் (எம்.ஜி.ஆர்.) கோடி கோடியாகச் சம்பாதித்தார் என்று என் காதுபடவே சிலர் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் அவர் எவ்வளவு சம்பாதிச்சார்னோ, எதுக்காகச் செலவழிச்சார்னோ, எனக்கு மட்டுமில்லே... அவருக்கே தெரியாது. அப்பப்போ யாராவது என்கிட்ட, 'அம்மா! ஐயா புண்ணியத்துல என் மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது’, 'ஐயா மட்டும் கைகொடுத்திருக்கலேன்னா, நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன்’னு சொல்றதைக் கேட்ட பிறகுதான் விஷயம் புரிஞ்சுப்பேன்'' என்று குறிப்பிட்ட ஜானகி அம்மாள், இப்போது யாரையும் எதற்காகவும் சந்திப்பது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜானகியைச் சந்தித்தோம்!

நம்மிடம் ''யாருகிட்ட என்ன பேசினாலும் அரசியலாக்கிடுவாங்களோனு பயமா இருக்கு. எனக்கு இனி அரசியல் தேவை இல்லை. என்னோட கடைசி நாள் வரைக்கும் அவரோட நினைவுகளுடன் அவர் வாழ்ந்த இந்த வீட்டுக்குள்ளேயே இருக்கணும்... அவ்வளவுதான்!''

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவரே தொடர்கிறார்... ''எனக்கு என்னமோ... அவர் ஒரு மாபெரும் அவதாரம்னு தோணும். தோட்டத்துக்கு வெளியேதான் அவர் புரட்சித் தலைவர். வீட்ல அவர் ஒரு குடும்பத் தலைவர் மட்டும்தான். ஜோக் சொல்லிச் சிரிக்கிறதும், நண்பர்களோட கடிதங்களைப் படிச்சு சந்தோஷப்பட்டுப் பேசுற தும், தன்னோட அம்மா பட்ட கஷ்டங்களை அடிக்கடி சொல்லிக் கண் கலங்கறதுமா இருப் பார். ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா, இரும்பு மாதிரி நிப்பார்'' என்கிற ஜானகி அம்மாள் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஜானகியைச் சந்தித்தோம்!

''பொதுவாவே, அவருக்கு சென்டிமென்ட்ஸ் ஜாஸ்தி. எங்க ஒவ்வொரு திருமண நாளின்போதும் முக்கியமான நண்பர்களை அழைச்சு, அவங்க முன்னாடி மாலை மாத்தி ஆசீர்வாதம் வாங்கறது... முக்கியமான விஷயங்களைப்பத்தி முடிவெடுக்கணும்னா, அண்ணா முதன்முதலா இவருக்குப் போர்த்தின சால்வையை முகத்துல போட்டு மூடிக்கிட்டு சிந்தனை செய்றது... சிவாஜி கணேசன் ஃபாரின் டூர் போனப்ப அங்கிருந்து எழுதின கடிதங்களை அடிக்கடி பிரிச்சுப் படிக்கிறது... இப்படி நிறைய உண்டு. குண்டடி பட்டப்போ கழுத்தைச் சுத்திப் போட்டு இருந்த கட்டுத் துணியைப் பத்திரப்படுத்தி அடிக்கடி எடுத்துப் பார்த்துப்பார். இந்த மாதிரி சமயங்கள்ல, அவரு தனிமையைத்தான் ரொம்ப விரும்புவார்.

ஆனா, அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார். அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.

அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.

உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''

ஜானகியைச் சந்தித்தோம்!

எம்.ஜி.ஆர். கெஸ்ட் ஹவுஸாகப் பயன்படுத்திய (குட்டி பங்களா - பாதாள அறை உள்ளிட்டது) கட்டடத்தில், தற்சமயம் நடந்து வரும் பேச்சுத் திறன் குறைந்த குழந்தைகளின் பள்ளியில் ஏறத்தாழ 60 மாணவ - மாணவியர் பயின்று வருகிறார்கள்.

இந்தப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான குழந்தைகளின் பெயர் மற்றும் பிரச்னை என்ன என்பது ஜானகி அம்மாளுக்குத் தெரியும். ''ஆனாலும் நான் இந்தக் குழந்தைகளை அதிகம் பார்க்கறதில்லே. ஏன்னா, இவங்களோட கஷ்டத்தைப் பார்க்கறப்போ எனக்கு அவரோட நினைவு ரொம்ப வந்து என்னை...'' மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் தளும்புகிறது.

கிளம்பும்போது எல்லாக் குழந்தைகளும் எழுந்து ஒன்றுகூடி ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

''எம்.ஜி.ஆர். தந்த காது கேளாதோர்
பள்ளி மாணவர் நாங்கள்...
எங்கள் பாட்டை நீங்கள் கேட்டு
எங்களை வாழ்த்துங்கள்...
உழைப்பால் உயர்வோம்...
உண்மையைச் சொல்வோம்.
ஊக்கத்தைக் கைவிட மாட்டோம்.
செய்வன எல்லாம் திருந்தச்
செய்வோம்.
தலைவரின் பெருமையைக்
காப்போம்.
எங்கள் குறையைத் தீர்த்தார்
தலைவர்...
என்றும் நலமாய்
வாழ்வோம் நாங்கள்...''

- மேற்படி பாடலின் ட்யூன் (சங்கர்) கணேஷால் போடப்பட்டது.

தினமும் காலையில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலுடன் இதையும் பாடிவிட்டு,  எம்.ஜி.ஆரின் படத்தை வணங்கிய பிறகே பணியைத் தொடங்கு கிறார்கள்!

- வி.குமார், படங்கள்: கே.ரவிசங்கரன்