சிறந்த படம்

சதுரங்க வேட்டை

'பணம் இருக்கிறவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் ஏன் என்ன வேணும்னாலும் பண்ணக் கூடாது?’- 'சதுரங்க வேட்டை’யின்  பொளேர் ஒன்லைன் இது. மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம்.எல்.எம்., ஈமு கோழி... என சமீபகாலத்தில் தமிழர்கள் கடந்த அத்தனை மோசடிகளின் பின்னணி மீதும் பளீர் வெளிச்சமிட்ட படம். 'ஒரு பொய் சொன்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது’ - மாஸ் ஹீரோ சொல்லாமலேயே பட்டிதொட்டியெங்கும் பரவியது படத்தின் இந்த பன்ச். பெரும் பணம் சம்பாதிக்கப் பேராசைப்படும் தமிழர்களின் மனதைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காண்பித்து, அதில் அறுவடை செய்யத் துடிக்கும் ஜித்தர்களின் குறுக்குவழிகளையும் அம்பலப்படுத்தியதில்... இது சின்சியர் சினிமா. படம் முழுக்க வரும் நாயகனின் ஏமாற்றுவித்தைகளில் மனம் லயிக்கச் செய்தாலும், இறுதியில் அன்பும் பிரியமுமே நிரந்தரம் என இயக்குநர் ஹெச்.வினோத் படத்தை நெகிழ்ச்சியாக நிறைவுசெய்தது... மாஸ்டர் ஸ்ட்ரோக்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த இயக்குநர் பா.இரஞ்சித்

மெட்ராஸ்

ணிக சினிமாவுக்குள் வலுவான அரசியல் பேச முடியும் என்பதையும், அதை வெற்றிப் படமாக மாற்ற முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டினார் 'மெட்ராஸ்’ இயக்குநர் பா.இரஞ்சித். வட சென்னை மக்களின் இயல்பான காதலை அழகியலாகச் சொல்லி 'அட்டகத்தி’யில் முத்திரை பதித்தவர், 'மெட்ராஸ்’ படத்தில் தொட்டிருக்கும் உயரம் பெரிது. ஒரு குடிசை மாற்றுவாரியக் குடியிருப்பின் சுவரில் எவ்வளவு அரசியல் விளையாடுகிறது, அது சாமான்யர்களை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியது இவரின் இயக்கம். அரசியல் அதிகார ஆட்டத்தில் சிக்கிச் சீரழியும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை, உரத்த குரலில் துணிவுடன் முன்வைத்ததற்காக... இந்த ஆண்டின் செம கெத்து டைரக்டர் ஆகிறார் இரஞ்சித்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த நடிகர் தனுஷ்

வேலையில்லா பட்டதாரி

தை பழசு... திரைக்கதை அதைவிடப் பழசு... அனிமேஷன், கிராபிக்ஸ், பிரமாண்ட பட்ஜெட்... எதுவுமே இல்லை. ஆனால், படம் முழுக்க நிறைந்திருந்த ஒரே அம்சம்... 'தனுஷ்’ ஃபேக்டர்! அது 'காட்டு... காட்டு...’ எனக் காட்டியதில் வருடத்தின் பிளாக்பஸ்டர் சினிமாக்களில் ஒன்றாக இடம்பிடித்தது 'வேலையில்லா பட்டதாரி’. 'ஏன் மூஞ்சியை இப்படி வெச்சிருக்க?’ 'என் மூஞ்சியே இப்படித்தான்...’ -இந்த  மிகச் சாதாரண வசனத்தை தனுஷ் சொல்லும்போது தெறித்தது தியேட்டர். செல்லப் பொறாமை காட்டும் அண்ணன், கனிவான காதலன், அம்மா செல்ல மகன், சமூக அக்கறை இளைஞன்... என ஒரே படத்தில் பல பரிமாணங்கள் எடுத்த தனுஷின் அத்தனை வெர்ஷனோடும் தங்களைப் பொருத்திக்கொண்டனர் தமிழக இளைஞர்கள். அலட்டல் இல்லாத நடிப்பு, வாட்ஸ்அப் தத்துவப் பாட்டு, கானா ஸ்டைல் பாடல்... என 'ஆன் ஸ்கிரீன், ஆஃப் ஸ்கிரீன்’ இரண்டிலும் படத்தின் மொத்த எடையையும் ஒற்றையாளாகத் தாங்கிய தனுஷ், இந்த வருடத்தின் பெஸ்ட் பெர்ஃபார்மர்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த நடிகை

மாளவிகா நாயர்

குக்கூ

ஆனந்த விகடன் விருதுகள் 2014

பார்வைத்திறனற்ற நாயகியாக அறிமுகம். ஆனாலும், படம் முழுக்க 'சுதந்திரக் கொடி’யாகத் திருமுகம் காட்டியிருப்பார் மாளவிகா நாயர். பொண்ணுக்குத் தீர்க்கமான கண்கள். ஆனால், அதில் எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் படபட சிமிட்டல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹீரோயின்களுக்குக் கஷ்டமான சவால். சந்தோஷமாகச் சமாளித்தார் மாளவிகா. கோபத்தில் அடித்துவிட்டு, பின் காயத்தில் சிலுவை போட்டுப் பிரார்த்திக்கும் கனிவாகட்டும், குழந்தையின் உடல் தொட்டு வெட்கப்படுவதாகட்டும், காதல் தீண்டலின்போது சிலிர்ப்பதாகட்டும்... அனைத்து உணர்வுகளையுமே உடல் மொழியிலேயே மின்சாரமாகக் கடத்தியிருப்பார் மாளவிகா. மாற்றுத்திறனாளிகளுக்கான பரிதாபம் துளியும் கோராத அந்த நடிப்பு... வொண்டர் வொண்டர்!    

சிறந்த வில்லன்

பாபி சிம்ஹா

ஜிகர்தண்டா

முந்தைய படங்களில் அமுல் பேபி. ஆனால், 'ஜிகர்தண்டா’வில் 'ஆங்ரி பேர்டு’. 'ஸ்கெட்ச், சேகருக்கு

ஆனந்த விகடன் விருதுகள் 2014

இல்ல சௌந்தரு... உனக்குத்தான். எல்லாத்துலயும் அவசரம். முழுசா முளைக்கிறதுக்குள்ள பெருசா முளைச்சிரணும்’ என ரணகள வில்லன் 'அசால்ட் சேது’வாக அதார் உதார் பண்ணியிருந்தார் பாபி சிம்ஹா. அதே படத்தின் பின்பாதியில் உர் முகத்துடன் உறுமல் அதட்டலுடன் ஜிப்ரீஷ் மொழி பேசி, 'கில் அண்டு லாஃப்’ பயிற்சியெடுத்து பாபி அடித்ததும்... செம காமெடி ஸ்டன்ட். போகிறபோக்கில் லட்சுமி மேனன் 'நீங்களே அந்தப் படத்துல நடிங்களேன்’ என சூடேற்றும்போது சின்ன வெட்க மின்னல் மின்னிமறையும் சிம்ஹா முகத்தில். இப்படிப் படம் முழுக்க 'நீ நடிகன்டா... நடிகன்டா...’ என அசத்தல் அப்ளாஸ் அள்ளினார் பாபி. 'ஜிகர்தண்டா’வில் வில்லன்தான் ஹீரோ...ஆனால், ஹீரோயிசம் இருக்காது. பின்பாதியில் வில்லத்தனமும் கூடாது. இப்படி விநோத வியூகத்திலும் ஸ்கோர் அடித்ததே சிம்ஹாவைச் சிறந்த சாய்ஸ் ஆக்கியது!      

சிறந்த வில்லி

சலோனி லூத்ரா

சரபம்

ஆனந்த விகடன் விருதுகள் 2014

செம ஸ்மார்ட் வில்லி. ஒரே தோற்ற ட்வின்ஸ்... அதில் குட் கேர்ள் - பேட் கேர்ள் வித்தியாசத்தை செம அதட்டல் மிரட்டலாக வெளிப்படுத்தியிருப்பார் சலோனி. பாசத் தங்கையாக பேரன்பு காட்டுபவர், போதை அக்காவாக பெருங்கோபம் காட்டி அசத்தினார். அம்மாஞ்சி ஹீரோவை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கும் கதாபாத்திரத்தில் அழகி கொடுத்தது 'அட்டகாஷ்’ பெர்ஃபார்மன்ஸ். அதுவரை ஸ்மார்ட் வியூகங்களை வகுத்துவிட்டு க்ளைமாக்ஸில் 'நம்பியார்’ கணக்காக ஆயுத மிரட்டலிலும் செம ஸ்கோர் அடித்த பொண்ணு. படத்தின் அத்தனை 'அபவுட் டர்ன்’ திருப்பங்களையும் எந்த லாஜிக் உதறலும் இல்லாமல் நம்பவைத்தது சலோனியின் திமிர் பவர். 'ஆன்ட்டி ஹீரோயின்’ என்பதற்கான உதாரணத்துக்கு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு டார்கெட் அடித்த க்யூட் ராக்கெட்!

சிறந்த குணச்சித்திர நடிகர்

கலையரசன்

மெட்ராஸ்

ண்பனுக்கு நல்ல அன்பன். கதைப்படி படத்தின் இரண்டாவது நாயகன். ஆனால், படத்தின் முதல் பாதி முழுக்கக் கவனம் திருடினார் கலை. 'அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது, தன் மக்களின் விடுதலை’ என நம்பும் முதல் தலைமுறை அரசியல்வாதியாக கலை காட்டிய உணர்வுகள், உண்மைக்கு மிக நெருக்கம். அதட்டலும் உருட்டலுமாக மனைவியைக் காதலிப்பதாகட்டும், உயிருக்குப் பயந்து ஓடும்போது பரிதவிப்பதாகட்டும், நண்பனின் மொக்கைக் கவிதைகளைப் பாராட்டிக் கொண்டாடுவதாகட்டும், அதே நண்பனின் ஆவேசத்தை அடக்கும் பக்குவமாகட்டும்... ஒரே கேரக்டரில் பல பரிமாணங்களில் ரசிக்கவைத்த கலையரசனுக்கு, கலையுலகில் காத்திருக்கின்றன பல சவால்களும் சபாஷ்களும்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த குணச்சித்திர நடிகை

சரண்யா பொன்வண்ணன்

என்னமோ நடக்குது, வேலையில்லா பட்டதாரி

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சினிமாவில் இன்னும் சரண்யா 'அம்மா’ மவுசு டாப் டக்கர். எக்கச்சக்கமாக 'அம்மா’வாக நடித்திருக்கிறார்தான். ஆனால், இந்த வருடம் அதிலேயே இரு துருவ வித்தியாசம் காட்டி அசத்தினார் சரண்யா. 'என்னமோ நடக்குது’ படத்தில் சென்னையின் சேரி வாழ் அம்மாவாக 'கஸ்மாலம்... லவ் வந்தா எல்லா ஆம்பளைங்களும் லூஸுதான்’ என மகனையே சதாய்த்தார். போதையில் குளறும் மகனுடன் தரை டிக்கெட்டாக சரிமல்லுக்கு இறங்கிச் சலம்பினார். அதுவே 'வேலையில்லா பட்டதாரி’யில் மிடில் கிளாஸ் பாசத் தாயாக கணவனின் வெறுப்பு, வசவுகளில் இருந்து மகனைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்தார். இரு மகன்களுக்கு இடையில் 'தேர்டு அம்பயர்’ கணக்காக ஓடியாடி சமாதானம் செய்தார். தமிழகத்தின் அத்தனை பூகோள, கலாசார, மொழி வித்தியாச 'அம்மா’வாகவும் பாச விருந்து படைத்துக்கொண்டேயிருக்கிறார் சரண்யா. அதனாலேயே ஆடி, ஆவணி என எல்லா மாதங்களிலும் 'டாப்’பிலேயே இருக்கிறார் இந்த அம்மா!

  சிறந்த நகைச்சுவை நடிகர்

தம்பி ராமையா

கதை திரைக்கதை வசனம் இயக்கம்

ஜோக்குகளில் இது புது தினுசு! 'சின்ன தம்பி’ பிரபுவுக்குத் தாலி என்றால் என்னவெனத் தெரியாததைப் பற்றி கிண்டலடிப்பதாகட்டும், தேவர் எப்படி படங்களில் காட்சிகள்வைப்பார் என விலாவாரியாக விளக்குவதாகட்டும்... விஷய ஞானத்துடன் கலகலவெனக் கலக்கினார் தம்பி ராமையா. ஓர் அறை, சில இளைஞர்கள், தீவிர விவாதம்... என டாக்குமென்ட்ரி தொனியில் அமைந்திருக்கவேண்டிய படத்தில், டைமர் வைத்து பட்டாசு வெடித்தார் ராமையா. 'குறும்படம் எடுக்கும் குரங்குகளா...’ என தம்பி ராமையா பல்லைக் கடித்துக்கொண்டு திட்டியபோது, கோபமே வரவில்லை. ஐம்பதைக் கடந்தும்  'அசிஸ்டென்ட் டைரக்டராகவே நீடிப்பவர்கள் உணரும் துயரம்தான் முகத்தில் அறைந்தது. ஆனால், நாம் உருகிக்கொண்டிருக்கும் நொடியிலேயே அடுத்த சிரிப்பு மத்தாப்பைக் கொளுத்தி வீசி, வெடிச் சிரிப்பு சிரிக்கவைத்தார் நம்ம 'தம்பி’!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த நகைச்சுவை நடிகை

கோவை சரளா

அரண்மனை

ன்-அப்போஸ்டு வெற்றியாளர்! கால் நூற்றாண்டுக்கும் மேலாக சினிமாவில் இருந்தாலும்,  துளியும் உற்சாகம் குறையாமல் சிரிசிரிக்கவைக்கிறார் சரளா. 'அரண்மனை’ படத்தில் மனோபாலாவின் மனைவியாக அம்மணி செய்ததெல்லாம் அதகளம்.  'என் உதடு பட்டுச்சுல்ல.. அதான் பால் இனிப்பாருக்கு’ என ரொமான்ஸுவது, 'கருமம் பிடிச்சவனுக்கு கண்டகண்ட நேரத்துல எல்லாம் காதல் வருதே...’ எனக் கதறுவது, 'என் பையன் கவிதையாப் பேசி கரெக்ட் பண்றான்’ எனப் பெருமிதப்படுவது, 'அடி வாங்கிறதுல அப்படியே அவன் அப்பா மாதிரி’ எனக் கைக்கொட்டிச் சிரிப்பது, தன்னைப் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் கணவனின் முஸ்தீபுகளைப் பார்த்துத் தெறிப்பது... என அரண்மனையில் சிரிப்புக் கோட்டை கட்டிச் சிதறடித்தார் இந்த சூப்பர் சீனியர். பேய் படத்தில் பேய்க்குப் பயப்படுவதை ஹைவோல்டேஜ் காமெடியாக்கியதில் சரளாவின் அனுபவத்துக்கு இருக்கிறது ஆயிரம் வாட்ஸ் சக்தி!    

சிறந்த புதுமுக இயக்குநர்

ராம் குமார்

முண்டாசுப்பட்டி

போட்டோ எடுத்துக் கொண்டால் இறந்துவிடுவோம் என நம்பும் கிராமம், அங்கு மாட்டிக்கொள்ளும் இரண்டு போட்டோகிராபர்கள்... இவ்வளவுதான் கதை களம். அதில் வானமுனி மூடநம்பிக்கை, ஐஸ்க்ரீம் காதல் கலந்து காமெடி ட்ரீட் அளித்து நம்பிக்கை டோக்கன் கொடுத்திருக்கிறார் ராம் குமார். காதல், காமெடி இரண்டை மட்டுமே வைத்து டாஸ்மாக் படங்கள் வந்துகொண்டிருந்த சீஸனில்,  'பீரியட் ஃபேன்டஸி’ எனப் படம் முழுக்கப் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டு அதகளம் செய்தார். குறும்படமாக கவனம் கவர்ந்த படத்தை முழுநீளப் படமாக்கும்போது பெரிய வெற்றிடம் ஏற்படும். ஆனால், அதை சுவாரஸ்ய சங்கதிகளால் நிரப்பி... செம ஜாலி 'போட்டோ ஷூட் சினிமா’ கொடுத்து, தன் வருகையை அழுத்தமாகவே பதித்திருக்கிறார் ராம் குமார். ஏனுங் ராமு, வெல்கம்முங்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த புதுமுக நடிகர்

துல்கர் சல்மான்

வாயை மூடி பேசவும்

சிரிக்கச் சிரிக்க அரட்டை அடிக்கும் முன்பாதி, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ஸ்மைலி ரியாக்ஷன்களாலேயே சமாளிக்கவேண்டிய பின்பாதி... இரண்டிலும் வெரைட்டி டி-ட்வென்ட்டி ஆடியிருப்பார் துல்கர். ஹீரோயின் நஸ்ரியா மீது காதலில் அத்தனை கனிவு காட்டுவது, கண்களின் சிரிப்பிலேயே எவரையும் கவர்வது, தம்-தண்ணி-ஈவ் டீஸிங் வசனம், ஆக்ஷன் அடிதடி என எதுவும் இல்லாமலேயே ஹீரோ கெத்து காட்டியது... என ஆல்ரவுண்டராக அசத்தினார் துல்கர். இன்னொருவருக்கு நிச்சயிக்கப்பட்ட நஸ்ரியா மீதான காதலை மௌனமாகவும் புன்னகையோடும் வெறுமையோடும் கடக்கும் இடங்களில்... கிளாசிக் துல்கர்!

சிறந்த புதுமுக நடிகை

கேத்ரின் தெரஸா அலெக்சாண்டர்

மெட்ராஸ்

'உனக்கு என்னதான் வேணும்?’ என ஹீரோ கோபமாகக் கேட்க, 'என்ன... நீதான் வேணும். கல்யாணம் பண்ணிக்கிறியா?’ - சிடுசிடுவெனக் கேட்டுவிட்டு சட்டெனச் சிரிக்கும் கேத்ரினுக்குக் கொடுக்கலாம் லட்சம் லவ் லைக்ஸ். வட சென்னைப் பெண்ணாக செம ஹோம்லியாக படத்தில் ஈர்த்த கேத்ரின், நிஜத்தில் மாடலிங் புயல். செல்லக் கோபம், சின்னச் சீண்டல், நிறையக் காதல், பிரியப் பார்வை... என 'கலையரசி’யாக அச்சுஅசலாகப் பொருந்தினார். ஹீரோ எதிரே வரும்போது பார்வையைத் தவிர்த்துவிட்டு, அவர் இல்லாதபோது தேடும் அந்தத் தவிப்புக்கும், தட்டால் மறைத்துக்கொண்டு உதட்டைச் சுழித்துக்கொண்டு கொடுக்கும் முத்தத்துக்கும்... நிஜக் காதலனாக இருந்திருந்தால், கண்ணுக்குள்ளே ஆனந்தக் கடல் கசிந்திருக்கும்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த இசையமைப்பாளர்

சந்தோஷ் நாராயணன்

குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ்

ருடம் முழுக்க நம் மனங்களில் சந்தோஷம் விதைத்தது சந்தோஷ் நாராயணனின் இசை. 'ஒத்த நொடியிலதான்...’ என மனம் கிறங்கவைப்பதோ, 'எங்க ஊரு மெட்ராஸு...’ எனக் கொண்டாடவைப்பதோ, 'புழுதி பறக்கும் பாரு’ எனத் துள்ளாட்டம் போடவைப்பதோ... ஸ்ட்ரிங்ஸ் கருவிகள் மூலம் நாடி, நரம்புகளில் உணர்வேற்றிக்கொண்டே இருந்தது சந்தோஷின் நோட்ஸ். காதல் மெலடி, ஆக்ஷன் அதிரடி, புதிய இசை, புதிய குரல், புதிய பரிசோதனைகள்... ஒவ்வொரு முயற்சியிலும் ஆச்சர்யப்படுத்தியது சந்தோஷின் இசை விசை!  

சிறந்த ஒளிப்பதிவு

 கேவ்மிக் யு ஆரி

ஜிகர்தண்டா

செம சீரியஸ் டோனில் ஒரு காமெடிப் படம். நம்ம பேட்டைக்கு புது வஸ்து. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் வன்முறை தெறிக்கும் படத்தை பிளாக் ஹ்யூமர் கேன்வாஸில் ரசிக்க/ சிரிக்கவைத்ததில் கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவுக்குப் பெரும் பங்கு உண்டு. ஒரிஜினல் மதுரையை இதற்கு முன் காட்சிப்படுத்தாத கோணங்களில் படம்பிடித்ததே ஒரு மேஜிக். அதனாலேயே 'மதுரை சினிமா’வுக்கான டெம்ப்ளேட்டுக்குள் அடங்காமல், உலக கிளாசிக் வரிசையை எட்டிப்பிடிக்கும் தரத்தில் இருந்தது படம். மழையில் சந்து நெடுக சிம்ஹாவைப் பின்தொடர்வது, கரும்புத் தோட்ட வன்முறையை வைட் ஆங்கிளில் காட்டுவது, வற்றிய கிணற்றுக்குள் சுற்றிச் சுழல்வது, மழை இரவில் கொலை வேட்டைக்கான டெம்போ ஏற்றுவது... என இண்டு இடுக்குகளில்கூடப் புகுந்து விளையாடியது ஆரியின் கேமரா. தியேட்டர், கேன்டீன், கிணறு, வயல்வெளி, மழைச் சாலை, காரின் உட்புறம், தீப்பெட்டி வீடுகள்... என எங்கெங்கும் சர்வசுதந்திரத்துடன் உலவிய ஒளிப்பதிவாளருக்கு ஒரு ஸ்பெஷல் ஜிகர்தண்டா பார்சேல்ல்!    

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த படத்தொகுப்பு

ராஜா முகமது

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

திருமணம் நிச்சயமான காதலியைக் கடத்தக் கிளம்பும் காதலன் ப்ளஸ் நண்பர்களின் பயணமே களம். துப்பாக்கியைப் பார்த்துவிட்டு போலீஸ் துரத்த, மூன்று வெர்ஷன்களில் கிளை பிரியும் கதை. மூன்று சம்பவங்களின் தொகுப்பு. ஒவ்வொரு வெர்ஷனிலும் ஒருவர் இறந்துபோக, மூன்றாவது வெர்ஷனில் என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ். அடுத்தடுத்த, அடுக்கடுக்கான சம்பவங்கள்தான் கதை. கொஞ்சம் அசந்தாலும் 'திரும்பத் திரும்பச் சொல்றாங்க’ எனப் போரடித்துவிடக்கூடிய கதையை விறுவிறுப்பாக்கி வேகமாக ஓடவைத்தது ராஜா முகமதுவின் கத்தரி. கிளை பிரியும் இடங்களில் கனகச்சிதமாக எடிட்டிங் செய்திருந்தது அவரின் கலைநேர்த்தி!

சிறந்த கதை

பா.இரஞ்சித்

மெட்ராஸ்

து மாதிரியும் இல்லாத அசல் சினிமா. மெட்ராஸின் அட்ரஸாக இருக்கும் பூர்வகுடிகளின் வாழ்க்கையை, அவர்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்தும் அதிகார அரசியலை, அதிகாரத்தை எளியவர்கள் கைப்பற்ற வேண்டியதன் அவசியத்தை... அழுத்தமாகப் பதிந்தது 'மெட்ராஸ்’. கமர்ஷியல் சினிமா தொனியில் அமைந்திருந்தாலும், கதையின் ஒவ்வோர் அடுக்கும் அரசியல் பேசியது. திராவிட அரசியலில் 'சுவர்கள்’ வகிக்கும் பாத்திரம் முக்கியமானது. அந்தச் சுவரை ஒரு குறியீடாக வைத்துப் பின்னப்பட்ட கதையில் காதல், நட்பு, துரோகம், விரோதம்... என அத்தனை அத்தியாயங்களும் கச்சிதமாகப் பொருந்தியது அபாரம். கதாபாத்திரங்களின் பெயர்கள், 'அடங்குறது எல்லாம் அந்தக் காலம்’ போன்ற கூர் வசனங்கள், கேரக்டர்களின் உடல்மொழி என படத்தின் ஒவ்வொரு சித்திரிப்பும், மையக்கதையுடன் இறுக்கமாக 'கனெக்ட்’ செய்யப்பட்டிருந்த நேர்த்திக்கான அங்கீகாரம்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த திரைக்கதை

மிஷ்கின்

பிசாசு

ன் மரணத்துக்குக் காரணமானவன் மேல் அன்பைப் பொழியும் இந்தப் 'பிசாசு’ தமிழ் சினிமாவுக்கே புதுசு. நல்லவராக வாழ்பவர்கள் இறந்த பிறகும் நல்லவர்களாகத்தானே இருக்க வேண்டும் என்ற மிஷ்கின் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்தான் படத்தின் ஹீரோ. நாயகியின் பச்சைப் பொட்டில் தொடங்கும் சினிமா முழுக்க, மறைமுகமாக சிவப்பு-பச்சைக் குறியீடுகள் வந்துபோவதும், மொத்தப் படத்தின் மர்மமும் ஒரு புள்ளியில் விடுபடுவதும், அங்கே படத்தின் குறியீடு முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்வதுமாக... செம ஃப்ரெஷ் ஸ்கிரீன்ப்ளே. பேய் படத்தில் திகில் மிரட்டல் இல்லை, பாசமான பேய், சமீப காமெடி பேய் டிரெண்டுக்கும் பொருந்தாத திரைக்கதை என, 'பிசாசு’  கம்பி மேல் நடக்கும் ரிஸ்க். ஆனாலும், ஆரம்பத்தில் பிசாசு பயம் காட்டி, மர்மம் கூட்டி, பின் நெகிழவைத்து, நேசிக்கவைத்து, கலங்கவைத்த மிஷ்கினின் திரைக்கதைக்கு... சலாம்!          

சிறந்த வசனம்

ராஜூமுருகன், ஆ.பரமு

குக்கூ

பார்வையற்றவர்களின் காதலுக்கு தங்கள் சொற்களால் உயிர்கொடுத்தார்கள் ராஜுமுருகன், ஆ.பரமு. 'கண்ணு இருக்குற ஆம்பள எங்கனாலும் இருக்கான். மனசு இருக்குற ஆம்பள எல்லா இடத்துலயுமா இருக்கான்?’ என எளிய வசனங்களில் பேரன்பை இசைத்தது 'குக்கூ’. 'ஒவ்வொரு ஆம்பளையும் வீட்டுக்கு வெளியிலதான் புரட்சித் தலைவர்; வீட்டுக்குள்ள வந்தா, நடிகர் திலகம்’ எனச் சொன்னது வொண்டர்... வொண்டர். 'ரேடியோவைக் கண்டுபிடிச்சது மார்க்கோனி. ஆனா, அதைக் கேட்கவெச்சது நம்ம  இசைஞானி’, 'கர்ணனும் துரியோதனனும் ஏன்டா நார்த் மெட்ராஸ்ல வந்து பொறந்தீங்க?’, 'காதலிக்கிறது ஆண்மை... காதல்ல தோக்குறது பேராண்மை’ எனப் படத்தில் பல வசனங்கள் பளிச் ஹைக்கூ. கதைச்சூழலோடு அத்தனை அழகாகப் பொருந்திய ஒவ்வொரு வசனமும்... வாழ்த்து அட்டை வாசகம்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த கலை இயக்கம்

சி.ஆர்.வேலு

ஆஹா கல்யாணம்

திருமண வீட்டின் கலர்ஃபுல் களேபரங்கள்தான் படம். வெற்றிலைபாக்கு முதல் வெல்வெட் மெத்தை வரை திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுப்பது ஹீரோ, ஹீரோயின் வேலை. இதன் பின்னணியில் சிம்பிள் அலங்காரத்தில் ஆரம்பித்து ஆஸ்திரேலியாவில் இருந்து பூக்களை வரச்செய்யும் பிரமாண்டத் திருமணம் வரை என ரக ரகமான ரங்கோலி தூவிய படம். இரண்டு மணி நேரமும் கல்யாண வீட்டுக்குள்ளேயே இருக்கும் எண்ணத்தை உருவாக்கியது சி.ஆர்.வேலுவின் கலை இயக்கம். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மதத் திருமணங்கள், ஆந்திரத் திருமணம், வட இந்தியத் திருமணம் என படம் நெடுக நடக்கும் திருமண செட்டிங்குகள் அதன் அழகிலும் நேர்த்தியிலும் பிரமாதம். நாயகன்-நாயகி நடத்தும் 'கெட்டி மேளம்’ கம்பெனியில் தாறுமாறாகக் கொட்டிக்கிடக்கும் பொருட்கள்கூட டர்ட்டி பியூட்டி!  

சிறந்த ஒப்பனை

'பட்டணம்’ ரஷீத்

காவியத்தலைவன்

பீரியட் ஃபிலிம் நடிகர்களுக்கான ஒப்பனை... செம சவால் அசைன்மென்ட். கொஞ்சம் பிசகினாலும் பள்ளி ஆண்டு விழா நாடகமாகும் ஆபத்து நிறைந்தது. அதிலும் 'காவியத்தலைவன்’ அந்தக் கால மேடை நாடகக் கலையைப் பின்னணியாகக் கொண்டது. படத்தில் மேடை நாடகங்களின்போது அழுத்தமான மேக்கப், மேடைக்கு கீழே அதற்கு நேர்மாறான இயல்பான, அதேசமயம் மிகப் பழைமையான மேக்கப்... என இரு துருவங்களைத் துருத்தாமல் இணைத்தது 'பட்டணம்’ ரஷீத்தின் ஒப்பனை. புராணம், வரலாறு, சமூகம், காதல்... என படத்தின் களத்துக்குத் தகுந்த ஒப்பனையால் கதை நடக்கும் காலகட்டத்துக்கே அழைத்துச் சென்றதில் ரஷீத்தின் மை, பவுடர்களுக்கும் அழகான பங்கு உண்டு. மலையாளத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சீனியர் கலைஞரின் திறமைக்கு சாட்சியாக, பூரிப்புடன் நிற்கிறான் இந்தத் தலைவன்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த நடன இயக்கம்

ஷோபி

'பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா...’

- கத்தி

மாஸ் ஹீரோவை வைத்து 'தெறி மாஸ்’ ஸ்டெப் அடித்திருக்கும் பாட்டு. ஹீரோக்களின் இன்ட்ரோ பாடலுக்குத் தடதட சுமோ, கடமுட அடியாட்கள், ஜிலுஜிலு டான்ஸர்கள் வைத்துக்கொள்ளாமல், ஒரு விமான நிலையத்தின் அத்தனை மனிதர்களையும் கன்வேயர் பெல்ட், விமானம் உள்ளிட்ட அத்தனை பொருட்களையும் 'அட்மாஸ்பியராக்கி’, அடி பிரித்து மேய்ந்திருப்பார் ஷோபி. அனிருத்-ஆதியின் ராப் ஹிப்ஹாப் கூட்டணிக்கு ஒவ்வொரு ஸ்டெப்பிலும் செம டஃப் கொடுக்கும் விஜய்யின் பெப்பி ஹிப்பி டான்ஸ். 'கண்டதும் காதல் ஃபீலில்’ விஜய் உருக, ஒவ்வொரு வரிக்கும் ஒரு குரூப் அவருடன் சேர்ந்து ஃப்ளாஷ்மாப் நடனம் ஆட... மொத்த விமான நிலையத்தையும் டிஸ்கொதெ அரங்கமாக்கி அதிரவைப்பார்கள். அந்த நான்கு நிமிடப் பாட்டு... மினி ஹனி ஆல்பம்!    

சிறந்த சண்டைப் பயிற்சி

சுப்ரீம்சுந்தர்

கோலிசோடா  

கோயம்பேடு மார்க்கெட்டையே அலறடிக்கும் அடியாள் கோஷ்டி. நான்கே நான்கு சுள்ளான்கள். இவர்களுக்கு இடையே சண்டை. ஒரு சினிமாகூடப் பார்க்காதவரும் சொல்லிவிடுவார்... அடியாள் கோஷ்டிதான் சுள்ளான்களை சுளுக்கெடுக்கும் என்று! ஆனால், மதம்கொண்ட 'சுண்டெலி’களாக அடியாட்களைச் சுத்திச் சுத்தி வெளுத்தது சுள்ளான் படை. அந்த அடி, உதைகளை எந்த லாஜிக் உதறலும் இல்லாமல் நம்பவைத்தது சுப்ரீம் சுந்தரின் ஸ்டன்ட் கலாட்டா. பாய்ந்துவரும் அடியாட்களிடம் இருந்து லாகவமாகத் தப்பித்தல், கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டே மொத்துவது, கால்களின் இடுக்கு இடைவெளியில் நழுவி தோளில் ஏறி அமர்வது... என 'டாம் அண்ட் ஜெர்ரி’ சண்டைக் காட்சிகளை கேண்டிட் சினிமாவாக்கியதில் அள்ளியது அப்ளாஸ். 'சின்னப் பசங்க வெளையாட்டு’ என உதாசீனப்படுத்த முடியாமலும், 'அடி ஒவ்வொண்ணும் இடி’ என ஹீரோயிச வகையில் சேராமலும் செம கெத்து காட்டியது இந்த ஆக்ஷன் குத்து!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த ஆடை வடிவமைப்பு

சத்யா, சயாம் சூத்

மான் கராத்தே

லட்டல், அலப்பறை 'சென்னை இளைஞனாக’ முதல் பார்வை முதலே சிவகார்த்திகேயனை எஸ்டாபிளிஷ் செய்ததில், சத்யாவின் ஆடைத் தேர்வுக்கும் முக்கியப் பங்கு உண்டு. எந்த ஆடையிலும் எந்த வண்ணத்திலும் ரகளையாக, உறுத்தல் இல்லாமல் தெரிந்தார் சிவா. ஹன்சிகா அழகுதான்; ஆனாலும், முன் எப்போதையும்விட செம கான்ட்ராஸ்ட் நிற ஆடைகளில் இன்னும் பப்ளியாக ஜொலித்தார். ஹீரோ, ஹீரோயின் மட்டும் அல்லாமல் படம் முழுக்கவே யூத் ஃபிட் ஆடைகள் அத்தனை அம்சமாகப் பொருந்தியது. ராமநாதபுரத்து இளைஞரான சத்யா படத்தில் 'டிரெஸ்கோடை’ மிக அழுத்தமாகவே பதித்தார். ஹன்சிகாவுக்கு லுங்கி மாட்டிய 'டார்லிங் டம்பக்கு’ பாடலுக்கும், இரவின் இருளுக்கு உறுத்தாத 'உன் விழிகளில் விழுந்த நாட்களில்’ பாடலின் ஆடைகளுக்கும் சயாம் சூத் பொறுப்பு. இரண்டு பாடல்களிலும் அரையடி லுங்கி முதல் ஆரஞ்சு நிற ஷூ வரை எல்லாமே பக்கா!

சிறந்த பாடலாசிரியர்  

யுகபாரதி

குக்கூ

தாய்மடியின் கதகதப்பையும் சிசு உணரும் சிலிர்ப்பையும் ஒருசேரப் பரிசளித்தது யுகபாரதி எழுதிய 'மனசுல சூரக்காத்தே...’ பாடல். வரிகளில் சூரக்காத்து இருந்தாலும் அதன் வரிகளிலும் இசை மெட்டிலும் தென்றல் தழுவல். படத்தின் நாயகனும் நாயகியும் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள். ஆனால், பாசத்தின் பரவசத்தையும் பரிதவிப்பையும் இழக்காதவர்கள். அவர்களின் நிறங்களற்ற உலகின் வானவில் பரவசத்தை வார்த்தைகளுக்குள் பொதிந்து தந்திருந்தார் யுகபாரதி. 'நிலவே சோறூட்டுதே... கனவே தாலாட்டுதே...’ போன்ற எளிய வரிகள் கிளாசிக் கவித்துவம். 'ஏ பொட்டபுள்ள தொட்டதுமே கொட்டம் அடங்கிருச்சே...’, 'கோடையில மழபோல...’ என தமிழும் மெல்லிசையும் கலந்த தாலாட்டாக அமைந்தன படத்தின் அனைத்துப் பாடல்களும். தன்னை நேசிக்கும், தன்னைப்போல் பிறரை நேசிக்கும் அனைவருக்குமான அன்பின் கீதம் அது!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த பின்னணிப் பாடகர்

பிரதீப்குமார்

'ஆகாயம் தீப்பிடிச்சா...’ - மெட்ராஸ்

'ஆகாயம்’ மூலம் ஆகாயம் தொட்ட பாட்டுக்காரர். 'ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா...’ என எடுத்த எடுப்பில் ஹைபிட்ச்சில் பாடி, திடுக்கென உலுக்கினார் பிரதீப்குமார். 'சோளக்காட்டுப் பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்லை...’ என அடுத்த வரியே செல்லக் கொஞ்சலுக்கு இறங்கி... பாடல் முழுக்க பல எமோஷன் பிடித்தார். 'ஆகாயம்...’ என்ற வார்த்தை இந்த வருடம் பிரதீப்புக்கும் லக்கி ஃபேக்டர்போல. 'குக்கூ’ படத்தின் 'ஆகாசத்த நான் பார்க்குறேன்...’ பாடலிலும் நெகிழச்செய்தார். அந்தப் பாடலின் பெண் குயில் கல்யாணி, நிஜத்தில் பிரதீப்பின் ஜோடிக் குயில். வருடம் முழுக்கவே இரண்டு 'ஆகாயப் பாடல்’களிலும் நம் மனதில் கடல் கசியவைத்தது பிரதீப் குரல்!  

சிறந்த பின்னணிப் பாடகி

சக்திஸ்ரீ கோபாலன்

'நான் நீ நாம் வாழவே...’ - மெட்ராஸ்

மிழ் இசையுலகின் 'தாபப் பூ’. 'நான் நீ நாம் வாழவே...’ என சக்திஸ்ரீ இழைந்தது, வருடம் முழுமைக்குமான மெஸ்மரிசம். மிக மெல்லிய உணர்வுகளை அதனினும் மெல்லியதாகக் கடத்தியது சக்தியின் வசீகர வருடல். 'நான் நீ’ பாடலின் இடையிடையே 'ம்ம்ம்ம்’ என சக்தி இசைத்ததுகூட... ஹனி ஹம்மிங். கடந்த வருடம் 'நெஞ்சுக்குள்ள...’ பாடலுக்காக 'ஆனந்த விகடன் விருது’ வென்றவர்; இந்த வருடமும் இதயத்தில் இடம்பிடித்தார். தமிழின் அத்தனை முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார் சக்தி. 'நான் பறவையின் வானம்.... பழகிட வா வா நீயும்..’ என உமாதேவி வரிகளின் கற்பனையை, அழுத்தாமல் கலைக்காமல் நம் மனதில் விதைத்தது சக்திஸ்ரீயின் மயில் இறகுக் குரல். இதனாலேயே எஃப்.எம்-களின் மெலடி டிரெண்டிங்கில் வருடம் முழுக்க உச்சத்தில் இருந்தது இந்தப் பாடல்!      

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த தயாரிப்பு  

கேம்பர் சினிமா

ராமானுஜன்

'நாளைய கணிதத்தை நேற்றே கண்டவன்’ என்பது 'ராமானுஜன்’ படத்தின் பன்ச் லைன். அது எத்தனை உண்மை என்ற ஆச்சர்யத்தை படத்தின் ஒவ்வோர் அத்தியாயமும் அதிகரிக்கிறது. தன் வாழ்நாளில் அங்கீகாரம் கிடைக்காத மாமேதையின் வாழ்க்கையை ஆத்மார்த்த அழகியலோடு படமாக்கியிருந்தார் இயக்குநர் ஞானராஜசேகரன். கணிதத்தில் மாமேதையாக இருந்தாலும் பள்ளிப் பாடத் தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாதது, பெற்றோர்-உறவினர்கள்கூட அவரது திறமையைக் கண்டுகொள்ளாத துயரம், ராமானுஜனின் நம்பிக்கைகளுக்கு மாறானவராக இருந்தாலும் அவரை ஊக்குவித்த இங்கிலாந்து பேராசிரியரின் பரிவுள்ளம்... என நெகிழ்ச்சியான பதிவாக அமைந்த படம், தமிழர்களுக்கான பெருமிதம். மிக இளம் வயதில் இறந்துவிட்ட ராமானுஜன் அவிழ்த்த புதிர்கள்தான், இன்று ஏ.டி.எம் இயந்திரப் பயன்பாட்டுக்கு அடிப்படை. அவரின் இழப்பு உணர்த்தும் கனத்த மௌனத்துடன் ரசிகர்கள் வெளியேறுவதே, இந்தப் படைப்பின் நேர்மைக்கு ஒரு சான்றிதழ்!  

சிறந்த சேனல்

சன் மியூசிக்

துடிக்கும் புதுமை, இனிக்கும் இளமை என புதுப் பொலிவோடு செம ஹிட்ஸ் அள்ளியது சன் மியூசிக் சேனல். சினிமா பாடல்களுக்கு இடையில் சில நிமிட அரட்டை என மியூசிக் சேனல்களுக்கு இடையில் லோகோ தவிர எந்த வித்தியாசமும் இருக்காது. அதை அடித்து உடைத்து ஒவ்வொரு ஷோவிலும் வித்தியாசம் காட்டி, வெரைட்டி லைக்ஸ் குவித்தது சன் மியூசிக் டீம். நேயர்கள் தங்களின் காதல் அனுபவத்தை ஆடியோ, வீடியோவில் பகிர 'லவ் டுடே’, சென்னையின் நேட்டிவிட்டி 'கானா’ பாடகர்களை அறிமுகப்படுத்த 'ரூட்டு தல’, ஆன்லைன் அப்டேட்ஸுடன்  இணையத் தளபதிகளிடம் லைக்ஸ் குவித்த 'சுடசுட சென்னை’, பாடல், வசனம், காட்சி எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு கலாட்டா டி.ஜே-வாக அதிரடிக்கும் 'மாஷ் அப்’, 'டேக் இட் ஈஸி’, 'பாக்ஸ் ஆபீஸ்’, 'ஃப்ளாஷ் பேக்’, 11 மணி ஹிட் லிஸ்ட் என, பல நிகழ்ச்சிகளும் டிரெண்டிங் அடித்ததில் சரசரவென டாப் ஸ்பாட் பிடித்தது சன் மியூசிக். இசை ரசனையை இன்னும் பல திசைகளுக்கு கிளை பரப்ப வாழ்த்துகள்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த டி.வி நிகழ்ச்சி

ஒரு வார்த்தை 1 லட்சம்

விஜய் டி.வி

மிழுக்கு மரியாதை! ஃபேஷன் ஷோ டான்ஸ் இல்லை; அட்டகாச செட் இல்லை; அலங்கார  விளக்குகள் இல்லை;  டி.ஆர்.பி தட்டும் அழுவாச்சி இல்லை; நட்சத்திரப் பிரபலங்கள் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு நொடியும் ஈர்த்து நம்மையும் ஆட்டத்தில் பங்கெடுக்கவைக்கிறது 'ஒரு வார்த்தை 1 லட்சம்’ நிகழ்ச்சி. இருவர் கொண்ட அணியில் ஒருவரிடம் மட்டும் ஒரு வார்த்தை தரப்படும். அந்த வார்த்தைக்கான குறிப்புகளை வேறு வார்த்தைகளில் இவர் கொடுக்க, மற்றொருவர் கண்டுபிடிக்க வேண்டும். விநாடி-வினா பாணியில்  அமைந்திருந்தாலும், தமிழ் ஆர்வமும் தடாலடி மதியூகமும் இருந்தால் மட்டுமே வெற்றிக் கோட்டைத் தொட முடியும். முழுக்கவே அழகுத் தமிழில் அரங்கேறும் நிகழ்ச்சி. திக்திக் நிமிடங்களின்போது, ஒரே வார்த்தைக்கு பல்வேறு இணைச்சொற்களை நாம் அறிந்துகொள்வதும், போட்டியாளருக்கு நம் வரவேற்பறையில் இருந்து நாம் உதவத் துடிப்பதுமாக... தமிழ் மொழியின் வளம் குதூகலம் அளிக்கிறது. பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை பற்றிக்கொள்ளச் செய்யும் முயற்சிக்காகவே, அங்கீகாரம்!

சிறந்த நெடுந்தொடர்

தெய்வ மகள்

சன் டி.வி

ந்த ஆண்டும் தமிழக இல்லங்களின் இரவு 8 மணி கால்ஷீட்டை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள் 'தெய்வ மகள்’. வழக்கமான வில்லத்தனம் மூலம் விறுவிறுப்பு கூட்டாமல், 'ட்விஸ்ட்... ட்விஸ்ட்... ட்விஸ்ட்...’ என ஹோம்மேக்கர்களின் பல்ஸைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது தெய்வ மகள். சீரியல் ஹீரோயின் வாணி, நிகழ்காலத்தில் நம் பெண்கள் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களையும் எதிர்கொள்கிறாள். அதற்கான தீர்வுகளைப் பக்குவமாக செயல்படுத்துவதுடன், அனைத்து குடும்ப உறவுகளையும் அனுசரித்துப்போகும் பெருந்தன்மை உணர்வையும் பிரதிபலிக்கிறாள்.ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பிரத்யேகக் குணம், ஒவ்வொரு நாளும் ஒரு சுவாரஸ்யத் திருப்பம், ஒவ்வோர் அதிர்ச்சியிலும் ஒரு நல்விளைவு, மகிழ்ச்சி என தினமும் ஒரு டி-20 மாரத்தான் நடத்துகிறார் சீரியலின் இயக்குநர் எஸ்.குமரன். சீரியலின் திருப்பங்களுக்காக தாய்க்குலங்கள் ரசிக்க, இளம் பெண்களின் ஃபேஷன் ரசனைக்கு செம ஷோ காட்டுகிறது வாணியின் காஸ்ட்யூம்கள்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த தொகுப்பாளர்

ரியோ

சன் மியூசிக்

ன் மியூசிக்கில் இப்போது ரியோ ராஜ்ஜியம். 'சுடச்சுட சென்னை’ நிகழ்ச்சியில் 'அ முதல் ஃ’ வரை எல்லாமே கலாய், கடி, காமெடிதான். இணைப்பில் பேசுபவர்கள் பல சமயம் இவரைக் கலாய்க்க முயற்சிக்க, கொஞ்சமும் அசராமல் அவர்களை ரியோ சமாளிக்கும் விதம்... பிரமாதம். நேயர்களின் கமென்ட்களுக்கு ஏற்ப வடிவேல் ரியாக்ஷன்ஸ் காட்டுவது, வெரைட்டி மாடுலேஷன்களில் பன்ச் அடிப்பது, கவுன்ட்டர் கொடுத்து போங்கு வாங்குவது என ஷோ முழுக்க, ரியோ... அய்யய்யயோ. திடீரென தன்னையே நாலைந்து கேரக்டர்களாக உருவாக்கி வீடியோ எடுத்து புரமோ செய்து பரபரப்பைக் கூட்டுவது, இணைப்பில் தன்னிடம் சட்டென புரபோஸ் செய்து வம்பிழுக்கும் பெண்ணிடம் மாட்டிக்கொண்டு முழிப்பது எல்லாமே... 'யோ.. யோ.. ரியோ’!

சிறந்த தொகுப்பாளினி

திவ்யதர்ஷினி

காபி வித் டி.டி - விஜய் டி.வி

சீனியர்தான். ஆனாலும், ரேஸில் டி.டி-தான் இப்போதும் நம்பர் ஒன். செம குறும்புப் பேச்சு, ஜாலி, கேலி, கலாய் என மொத்த நிகழ்ச்சியையும் ஒற்றை ஆளாக, கற்றைச் சிரிப்பில் கடத்துவது டி.டி ஸ்பெஷல். அது இன்னும் அலுக்காமல் சலிக்காமல் காந்தமாகக் கவர்வது சம்திங் ஸ்பெஷல்.  எவ்வளவு சீரியஸ் கேள்வியையும் சம்பந்தப்பட்டவர் கோபப்படாமல் ஜாலியாகக் கேட்டு பதில் வாங்குவதில்... டி.டி செம கேடி. 'டி.டி-க்கு கல்யாணம்’ என்றதும், நிஜ 'நம்ம வீட்டுக் கல்யாணமாக’ பாசத்தில் தழுதழுத்த தமிழகம், 'ஆஃப்டர் தி பிரேக்’ வந்தபோதும் 'வாம்மா... மின்னல்’ என அள்ளி அணைத்துக்கொண்டது. கமல், ஷாரூக், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய், சூர்யாவுடன் டி.டி இந்த வருடம் தட்டியது தமிழகத்தின் 'மோஸ்ட் வான்டட் செல்ஃபி’. கொஞ்சல் ரியாக்ஷன், ஃப்ரெண்ட்லி பேச்சு என எப்போதும் எனர்ஜி லெவலில் இருக்கிற டி.டி., 'ஆனந்த விகடன்’ விருது வெல்வது... இது தொடர்ச்சியாக நான்காவது முறை. வாழ்த்துகள் செல்லம்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த பண்பலை

ரேடியோ மிர்ச்சி

சென்னை அண்ணா சாலையைக் காட்டிலும், காற்றலைகளில் டிராஃபிக் ஜாஸ்தி. அந்த அளவுக்கு எகிறியடிக்கிறது 'ஆன் ஏர்’ போட்டி. பல போட்டியாளர்கள் ரெய்டு அடித்தாலும் இளமை, புதுமை எனக் கலக்குகிறது ரேடியோ மிர்ச்சி. கடந்த வருடம் 'ஒலி நூலகம்’ மூலம் விழித்திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தக வாசிப்பு, பாடல்கள் கேட்க வாய்ப்பு அளித்த ரேடியோ மிர்ச்சி, இந்த வருடமும் அவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தி 'ஃபைன் டியூனிங்’கிலேயே இருந்தது. காவல் துறை அதிகாரிகளை அழைத்து வந்து பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு என மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது மிர்ச்சி ஸ்பெஷல். சென்னையின் நிகழ்ச்சிகளை 'பி டவுன்’களில் அப்படியே ஒலிபரப்பாமல், பிரத்யேக பளிச் ஐடியா பிடிப்பது மிர்ச்சி மேஜிக். மதுரை மிர்ச்சி இந்த வருடத்தில் இருந்து சினிமா விருதுகள் கொடுக்க ஆரம்பித்திருப்பதும், விருது வென்றவர்களின் பேட்டிகளை ஒலிபரப்புவதும் 'அட்ரா சக்க’ அப்ளாஸ். பொழுதுபோக்கை சுவாரஸ்யமாகவும் சமூக விழிப்புஉணர்வை அக்கறையாகவும் காற்றலைகளில் பரப்புவதில்... மிர்ச்சி ஆல்டைம் ஃபேவரிட்!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர்

சிக்கந்தர்

ஹலோ எஃப்.எம்

ருத்து + கலாய் காம்போ... சிக்கந்தர் சிறப்பு. மதுரை ஹலோ எஃப்.எம்-மில் ஏழு வருடங்களாக 'ஜிகர்தண்டா’ நிகழ்ச்சியை பல்லேலக்கா கலகலப்புடன் நடத்தி வருகிறார் சிக்கந்தர். 'சிப்புச் சிப்பாக’ப் பேசுவதற்கு நடுவில் இயற்கை, சுற்றுசூழல் என அலெர்ட் மெசேஜும் சொல்கிறார். எம்.சி.ஏ பட்டதாரி, ஃபேஷன் டிசைனிங், அக்குபஞ்சர் படிப்பு... அந்த அனுபவங்களைக்கொண்டும் சைக்கிள் கேப்பில் டிப்ஸ் எக்ஸ்பிரஸ் ஓட்டுகிறார். 'நிலவேம்பு கசாயம் கசந்தா, பப்பாளி இலை சாப்பிடுங்க. காய்ச்சல் பறக்காஸ்’ என மெடிக்கல் டிப்ஸ்களிலும் பாசிட்டிவ் டச் கொடுப்பார். சிக்கந்தர் ஆன்-ஏர் என்றால், அங்கு நேயர்கள் அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். வெல்டன் ப்ரோ!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி

நந்தினி

ரேடியோ மிர்ச்சி

சென்னை ரேடியோ மிர்ச்சியின் 'ஹிட் ஹாட்’ கலாட்டா கோழி. 'கோலிசோடா’ நிகழ்ச்சி நந்தினியின் வேட்டை சேட்டைக் களம். நிகழ்ச்சியில் இவரின் அட்ராசிட்டி அகாதுகா பேச்சுக்கு சிட்டி பாய்ஸ் முதல் சிட்டி ரோபா வரை ஏக ரசிகர்கள். எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியின் விஸ்காம் மாணவி. கிரிக்கெட், கல்ச்சுரல், கல்லூரி எத்திக்ஸ், கோலி-பாலி- ஹாலிவுட், நாட்டு நடப்பு, ஹோம் டிப்ஸ் என ஆல்ரவுண்டு அட்டகாசம் பண்ணுவார். எந்த விஷயத்திலும் யூத் பல்ஸ் பிடித்துப் பேசுவது நந்தினி ஸ்லாங். 'மாற்றம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படியே இருந்தா துருப்பிடிச்சிருவோம். அதனால எது நடந்ததோ அது எக்ஸ்ட்ராடினரி.. எது நடக்க இருக்கிறதோ அது எக்ஸ்ட்ராடினரியோ எக்ஸ்ட்ராடினரி’ என எப்போதும் பாசிட்டிவ் பன்ச் அடித்து அள்ளு கிளப்புகிறார் நந்தினி!  

சிறந்த நாவல்

மிளிர் கல்  இரா.முருகவேள்

பொன்னுலகம் பதிப்பகம்

சிலப்பதிகாரத்தில் ரத்தினக் கற்கள் கோவலனின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்ததையும்... நவீன காலத்தில் ரத்தினக் கற்களை எடுப்பதின் பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்கள் அப்பாவி மக்களை வதைப்பதையும்... சுவாரஸ்யக் கண்ணியில் இணைத்து கதை சொல்கிறது 'மிளிர் கல்’. பூம்புகார் தொடங்கி, மதுரை வரையில் கண்ணகி நடந்துசென்ற அதே பாதையில் பயணிக்கும் கதை மாந்தர்கள், எதிர்பாரா புள்ளிகளில் வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கின்றனர். சிலப்பதிகாரம், நடந்த கதையா... புனைவா, கண்ணகி-கோவலனின் பூர்விகம் கொங்குப் பகுதியாக ஏன் இருக்கக் கூடாது, கண்ணகி மதுரையை எரித்தது உண்மையா, மீனவர்களும் பழங்குடிகளும் இப்போது வரை கண்ணகியை ஏன் நினைவில் வைத்திருக்கிறார்கள்... என, பல சுவாரஸ்யக் கேள்விகளை எழுப்புகிறது. 'கற்பு’டன் மட்டும் இணைத்துப் பேசும் அபத்தத்தில் இருந்து கண்ணகியை விடுதலைசெய்து, அதிகாரத்துக்கு எதிராக நீதி கேட்கிற கலகக்காரியாகக்  காட்சிப்படுத்துகிறார் இரா.முருகவேள். சமகாலத்தின் மிகச் சிறந்த அரசியல் நாவல்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த சிறுகதைத் தொகுப்பு  

பைத்திய ருசி  கணேசகுமாரன்

க்கை பதிப்பகம்

மூகத்தாலும் வாழ்க்கையாலும் புறக்கணிப்பட்ட மனிதர்களின் விசித்திர மனநிலைகளைப் பேசும் கதைகள். எல்லோருக்குள்ளும் இருக்கும் வெவ்வேறு பைத்திய மனநிலை, இந்தக் கதைகளில் அழகியலுடனும் நுட்பத்துடனும் விவரிக்கப்பட்டிருக்கிறது. ஓர் ஓரினச் சேர்க்கையாளன் தாம்பத்திய வாழ்க்கையில் பொருந்திப்போக முடியாத சிக்கல்களைப் பேசும் 'சந்திரன், பானுமதி மற்றும் வில்சன்’, மனைவியால் ஒதுக்கப்பட்ட, வெண்புள்ளிகள் கொண்டவனின் கட்டுக்கடங்காக் காமத்தை விவரிக்கும் 'காமத்தின் நிறம் வெள்ளை’, சுற்றுச்சூழலின் சீர்கேடுகளை கவித்துவத்துடனும் உண்மையின் அடியாழத்துடனும் முன்வைக்கும் 'பாதரசப் பூனைகளின் நடனம்’ என ஒவ்வொரு கதையும் ஓர் அடர் உணர்வை நம்முள் கடத்துகிறது. ஒதுக்கப்பட்ட மனநிலையின் துயரத்தை உரக்கப் பேசும் தொகுப்பு, கவனம்கொள்ள வேண்டிய படைப்பு!

சிறந்த கட்டுரைத் தொகுப்பு

ஷாதியற்றவளின் குரல்  ஷெயராணி

கருப்புப் பிரதிகள், தலித் முரசு

ந்திய தலித் மக்களின் வாழ்க்கை குறித்த குறுக்குவெட்டுச் சித்திரத்தை அறிய உதவும் நூல். பத்திரிகையாளரான ஜெயராணி, மாநிலம் எங்கும் பல ஆண்டுகளாகச் சேகரித்த கட்டுரைகளின் தொகுப்பு. எந்த ஒரு சிக்கலையும் அதன் அடியாழம் வரையில் சென்று ஆராய்வதும், ஆதாரங்களை முன்வைத்து எழுதுவதுமாக ஒவ்வொரு கட்டுரையும் கடும் உழைப்புடன் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட சாதியினர் அடர்த்தியாக இருப்பது ஏன், கிறிஸ்துவ மதத்துக்குள் சாதியின் பாத்திரம் என்ன, தலித்களுக்குள் உள்சாதி பாகுபாடுகள் எப்படிச் செயல்படுகின்றன... என 360 டிகிரியில் சமூகத்தை அணுகுகிறார் ஜெயராணி. ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் நாம் கவனிக்க மறுக்கும் மிகப் பெரிய சமூக அவலம் மறைந்திருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது 'ஜாதியற்றவளின் குரல்’!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த கவிதைத் தொகுப்பு

அந்தக் காலம் மலையேறிப்போனது  இசை

காலச்சுவடு பதிப்பகம்

ழுத்துக்களின் மறைவு இடுக்குகளில் பற்றிப்படரும் பகடியே இவரது கவிதைகளின் ஆதாரம். அன்றாட மனித வாழ்வில் நிகழக்கூடிய சின்னச் சின்ன சம்பவங்களையும் அனுபவங்களையும் எள்ளல் ரசனையுடன் பதிவுசெய்திருக்கிறார் இசை. வாசகனோடு ஒன்-பை-டூ டீ அருந்த அழைப்பு விடுக்கும் முன்னுரையில் தொடங்குகிறது அதகளம். டாஸ்மாக்கில் இருந்து திரும்பும் கவிஞனுக்கு, 60 டிகிரி சாய்ந்து காலை வணக்கம் சொல்லும் மதுரை மாநகரின் டோக் நகர் மின்கம்பம், சக மனிதர்களின் அபிப்பிராயங்களை மறுத்து மறுத்து திருப்பிக்கொண்டதால் முறுக்குக் கம்பியாகிப்போன கழுத்து என சுற்றத்தில் இருந்தே தனது கவிக்கான பாடுபொருளை எடுக்கிறார் இசை. ஈழ அகதியின் பேட்டியைப் பார்த்துகொண்டே பாயசம் அருந்தும் கணம், அறவுணர்வைச் சமரசத்துக்கு உள்ளாக்கும் தந்திரம் என தொகுப்பின் அரசியல் கவிதைகள்... சுளீர் ரகம்!

சிறந்த சிறுவர் இலக்கியம்

டார்வின் ஸ்கூல்

ஆயிஷா இரா.நடராசன்

புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

ரோச் பீட்டர் என்கிற சிறுவனின் மூளைக்குள், விலங்குகளின் மொழியைப் புரிந்துகொள்ளும் மைக்ரோ சிப் ஒன்றை, அவன் சிறுவனாக இருக்கும்போதே பொருத்திவிடுகிறார் அவனது அப்பா. இதனால் அவனுக்கு எல்லா விலங்கு இனங்களின் மொழியும் புரிகிறது. அவற்றுடன் பேசிப் பழகுகிறான். ஆந்தை, பூனை, ஆமை போன்றவை அவனுக்கு நண்பர்கள் ஆகின்றன. இந்த நிலையில் காட்டுக்குள் செயல்படும் 'டார்வின் ஸ்கூல்’ பற்றி அவனுக்குத் தெரியவருகிறது. அந்தப் பள்ளிக்குப் புறப்படுகிறான். அந்தப் பயணத்தில் டார்வினின் பரிணாமக் கோட்பாடு, இயற்கைத் தேர்வுக் கோட்பாடு என, உயிரினங்களின் தோற்றம் மிகவும் எளிமையாக, ஒரு கதை சொல்லும் சுவாரஸ்யத்துடன் விவரிக்கப்படுகிறது. உயிரியல், தாவரவியல், சூழலியல் என பாடப் புத்தக சங்கதிகளை, சிறுவர்களின் கதைகேட்கும் மனதுக்கு ஏற்றாற்போல செதுக்கித் தந்திருக்கிறார் இரா.நடராசன்.

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த மொழிபெயர்ப்பு - நாவல்

அரேபிய இரவுகளும் பகல்களும்  

சா.தேவதாஸ்,  எதிர் வெளியீடு

'1,001 அரேபிய இரவுகள்’ என்ற புகழ்பெற்ற கதை நமக்குத் தெரியும். ஓர் அரசன் தன் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணாகத் திருமணம் செய்து அன்று இரவே கொன்றுவிடுகிறான். ஒரு கட்டத்தில் நாட்டில் பெண்களே தீர்ந்துவிடும் நிலை. கடைசியில் அவரது அமைச்சரின் மகள் தானாக முன்வந்து அரசனைத் திருமணம் செய்துகொள்கிறாள். அன்று இரவு அரசனுக்கு அந்தப் பெண் கதை சொல்லத் தொடங்குகிறாள். அதன் முடிவைச் சொல்லாமல், அடுத்த நாள் சொல்வதாகக் கூறுகிறாள். இப்படியாக 1,000 இரவுகள் அவள் கதை சொல்லிக்கொண்டே இருக்கிறாள். இதுதான் 1,001 அரேபிய இரவுகளின் கதை. 1,002-வது நாளில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். அந்தப் பெண்ணுக்கு 1,000 கதைகள் எப்படித் தெரிந்தன.. அவள் கதைகளைத் தேடி எங்கெல்லாம் அலைகிறாள்...  என்பதை மையச் சரடாக வைத்து விறுவிறுப்பாக நகர்கிறது கதை. சமகால துருக்கி அரசியலும் உள்ளே இழையோடுகிறது. நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாகிப் மாஃபஸ் எழுதிய நூலை செய்நேர்த்தியுடன் மொழிபெயர்த்திருக்கிறார் சா.தேவதாஸ்!

சிறந்த மொழிபெயர்ப்பு - சிறுகதை

நீல நாயின் கண்கள்  அசதா  

நாதன் பதிப்பகம்

லகின் சிறந்த சிறுகதைகள் ஒன்பதும், இரண்டு நாவல் பகுதிகளும் அடங்கிய புத்தகம். அமெரிக்கா, கொலம்பியா, ஸ்பானிஷ், பிரேசில் என பல நாட்டுக் கதைகளையும் ஒருசேர படிக்கும்போது, ஒரு பறவையைப்போல உலகை சுற்றிவந்த உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. 'அடுத்து நீங்கள் கேட்கவிருப்பது’ என்ற கதையில் கடவுள் திடீரென ரேடியோவில் பேசி பல ஆச்சர்யங்களை நிகழ்த்துகிறார். 'உங்கள் காலடியில் இருக்கும் கூழாங்கல்லும், ஒவ்வொரு துளி நீரும் அதிசயமே. அவற்றை அனுபவித்து உணரும் திறனை நீங்கள் இழந்ததாலேயே இவற்றை நிகழ்த்திக் காட்டினேன்’ என, தன் வருகைக்கான காரணம் கூறுகிறார். மார்க்கேஸின் 'நீல நாயின் கண்கள்’ முதல் கூகி வா தியாங்கோவின் 'வேலைக்கான நேர்காணல்’ நாவல் பகுதி வரை, அனைத்துக் கதைகளையும் மொழிபெயர்ப்பு என்ற உணர்வே எழாமல் நேரடியாக தமிழில் வாசிப்பதைப்போல நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் அசதா!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த மொழிபெயர்ப்பு - கட்டுரைத் தொகுப்பு

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை  எஸ்.வி.ராஷதுரை  

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

'ரலாறு, கம்யூனிசத்தைக் கடக்காமல் முன்னேறாது’ எனச் சொன்ன கார்ல் மார்க்ஸும், பிரெடெரிக் எங்கெல்ஸும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைதான் உலகெங்கும் உள்ள இடதுசாரிகளுக்கு வழிகாட்டி. இயங்கியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மேற்குலக அரசியல் பொருளாதார வரலாற்றை ஆய்வுசெய்யும் இந்த நூலை, வர்க்கப் போராட்டத்துக்கான அழைப்பாக பாட்டாளி மக்களுக்காக எழுதினார் மார்க்ஸ். முந்தைய மொழிபெயர்ப்பு முயற்சிகளைவிட விரிவான முன்னுரை, இணைப்புகள் மற்றும் தரவுகளுடன் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையாக கடும் உழைப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை.

சிறந்த மொழிபெயர்ப்பு - கவிதைத் தொகுப்பு

வெள்ளை நிழல் படியாத வீடு (கறுப்புக் கவிதைகள்)  ரவிக்குமார் மணற்கேணி பதிப்பகம்

வெள்ளை தேசமான அமெரிக்காவில் உதித்த கறுப்புக் கவிதைகள். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் எழுதப்பட்ட வலி நிறைந்த இந்தக் கறுப்புக் கவிதைகள் 21-ம் நூற்றாண்டுக்கும் பொருந்திப்போவது, வேதனை. ஒவ்வொரு கவிதையும் இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. அடக்குமுறைகளால் சிதைந்துகொண்டிருக்கிற ஓர் இனத்தின் வரலாற்றைச் சொல்வதன் மூலம் மனிதாபிமானம் பேசுகிறது. எரியும் பிரச்னைகளை எந்த பிரசாரத் துருத்தலும் இல்லாத மொழியில் சொல்கிறது. நிலத்தின் மீது திணிக்கப்படும் வன்முறை எவ்வாறு ஓர் இனத்தைப் பாதிக்கிறது என்பதை உலகின் முன்வைக்கிறது. வீரியமான இந்தக் கவிதைகளை ஆரம்பகட்ட வாசகனும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்திருக்கிறார் ரவிக்குமார்.

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த சிற்றிதழ்

கொம்பு

ளைய படைப்பாளிகளுக்கும் தாராளமாகக் களம் அமைக்கிறது 'கொம்பு’ இதழ். கதை, கவிதை, கட்டுரைகள் நேர்த்தியாக அச்சேறும் அதே நேரம், அதிகம் அறியப்படாத இயற்கை ஆர்வலர்களின் நேர்காணல்கள் புதிய வாசல்களைத் திறக்கின்றன. காடுகளின் அழிவு பற்றி பெரும் விவாதம் கிளப்பிய 'மழைக்காடுகளின் மரணம்’ போன்ற கட்டுரைகள் 'கொம்பு’ இதழில் வெளிவந்தவையே. மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மற்றும் கவிதைகளில் தென்படும் எளிமை, வாசிப்போரை வசியப்படுத்துகிறது. ஓவியங்களுக்கான மெனக்கெடல் அழகு. இலக்கியம் மற்றும் இயற்கை சார்ந்து இடைவிடாமல் இயங்கிவரும் 'கொம்பு’ இதழை பெரும் முனைப்போடு கவிஞர் வெய்யில் நடத்தி வருவது பாராட்டுக்கு உரியது!  

சிறந்த வெளியீடு

தி மியூசிக் ஸ்கூல்  செழியன்

தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ்

மிழர்களுக்கும் இசைக்குமான தொடர்புக்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. ஆனாலும் மேற்கத்திய இசை குறித்த நுட்பங்களை விளக்கும் புத்தகம் தமிழில் இல்லை. அந்தத் திசையின் முதல் இசை இது. இசை மீது ஆர்வமும் அடிப்படைப் புரிதலும் மட்டும் இருப்பவர்களை, இந்த நூல் ஓர் ஆசான்போல கைபிடித்து அழைத்துச் செல்கிறது. மேற்கத்திய இசை குறித்த எளிய விளக்கங்கள், அதை அடிப்படையாகக் கொண்ட சிறிய தேர்வுகள் என இசைக் கற்றலை இனிதாக்குகிறது; எளிமையாக்குகிறது. ஒவ்வொரு நாளும் ஆர்வமுடன் நேரம் ஒதுக்கிப் படித்தால், மேற்கத்திய இசையைக் கற்றுத் தேர்வதற்கு உதவும்  புத்தகம். இசை சார்ந்த கலைச்சொற்களுக்கு எளிய உதாரணங்களையும், நம் கற்றலை அவ்வப்போது சோதிக்கும் பயிற்சி வடிவத்தை உள்ளடக்கி இருப்பதும்... மாஸ்டர் பீஸ்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த விளையாட்டு வீரர்

சதீஷ் சிவலிங்கம்

பளு தூக்குதல்

மிழகத்தின் தலையாய பளு தூக்கும் வீரர். அப்பா சிவலிங்கம், முன்னாள் ராணுவ வீரர். தேசிய அளவில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்றவர். அப்பாவின் கனவையே தனது கனவாக்கிக்கொண்டார் மகன். 13 வயதில் முறைப்படி பளு தூக்க ஆரம்பித்த சதீஷ், கடந்த ஒன்பது வருடங்களாகப் பயிற்சியெடுக்கிறார். மாநில, தேசிய, ஆசியப் போட்டிகளில் விடாமுயற்சியுடன் முத்திரை பதித்தவருக்கு, தங்க மகுடம் அணிவித்தது காமன்வெல்த் போட்டி.  77 கிலோ எடைப் பிரிவில் வெவ்வெறு ஸ்டைலில் எடை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார் சதீஷ். இப்போது ஒலிம்பிக் தங்கத்தைக் குறிவைத்து பயிற்சிகளில் வியர்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மிஸ்டர் வெயிட்!

சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்

ஷோஷ்னா சின்னப்பா   - தீபிகா பல்லிகல்

ஸ்குவாஷ்

ந்தியாவுக்கும் ஸ்குவாஷூக்கும் சம்பந்தம் இல்லை... இந்தியர்களுக்கும் பதக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற நிலையை மாற்றிக் காட்டிய இளவரசிகள். தேர்ந்த ஸ்குவாஷ் பயிற்சியாளர் இந்தியாவில் இல்லையென்றானபோது, எகிப்து சென்று பயிற்சி எடுத்தவர்கள். 'டீம்வொர்க்’ என்பதற்கு அசத்தல் உதாரணமாக அமைந்தது இவர்களின் காமன்வெல்த் வெற்றி ஆட்டம். 20-வது ரேங்க்கில் இருந்து, இரண்டாவது ரேங்க்கில் இருந்த இங்கிலாந்து இணையை அதிரடி ஆட்டத்தில் இவர்கள் வீழ்த்தியதுதான், காமன்வெல்த்தில் இந்த வருடம் இந்தியாவின் முதல் தங்கம். வேகம், விவேகம் இரண்டுமாக இணைந்த இவர்கள், இன்னும்  பல தங்கப் புதையல்களைக் கண்டெடுப்பார்கள்!  

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த பயிற்சியாளர்

டி.முத்து

பளு தூக்குதல்

ளு தூக்குதலில் சதீஷை தங்க நாயகனாக உருவாக்கிய சிற்பி... முத்து! முன்னாள் பளு தூக்கும் வீரரான முத்து, 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார்; 2002-ம் ஆண்டு இங்கிலாந்து காமென்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் இந்திய அரசாங்கத்திடமிருந்து அர்ஜுனா விருது அங்கீகாரம் பெற்ற முத்து, தன் சத்துவாச்சாரி கிராமத்தில் இருந்து பளு தூக்கும் வீரர்களை உருவாக்கத் தொடங்கினார். 39 வயதாகும் முத்து,  தெற்கு ரயில்வேயில் பயிற்சியாளராகவும் இருக்கிறார். 10 ஆண்டு காலப் பயிற்சியாளர் உழைப்புக்கு, இதோ சதீஷ் மூலம் முதல் வெளிச்சப் புள்ளி கிடைத்திருக்கிறது. தொடர்ந்தும் இந்த பிதாமகனின் பெயர் சொல்ல உருவாகிவருவார்கள் வீரர்கள்!

சிறந்த விளம்பரம்

ஏர்டெல்

தி ஸ்மார்ட்போன் நெட்வொர்க்

'ஸாரி... இதை செஞ்சே ஆகணும். வேற வழியே இல்லை’ எனச் சொல்லிவிட்டு தனது கேபினின் விளக்கை அணைத்துவிட்டு வீட்டுக்குக் கிளம்புகிறார் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான இளம்பெண். அந்த இளைஞர் மட்டும் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது செல்போன் ஒலிக்கிறது. வீடியோ அழைப்பில் மனைவி. 'வர லேட்டாகும். பாஸ், எக்கச்சக்க வேலை கொடுத்திருக்காங்க’ என்கிறார் இளைஞர். எதிர்முனையில் தான் சமைத்துவைத்ததை வீடியோ திரையில் காண்பிக்கும் 'பாஸ்’, கணவன் வேலையில் இருந்து கிளம்ப அனுமதி தருகிறார். அவரது மனைவிதான் அந்த பாஸ். வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் நவீன யுகத்தில்... அலுவலக அழுத்தம், குடும்பக் குதூகலம் இரண்டையும் அழகாக இணைக்கிறது இந்த விளம்பரம்!

ஆனந்த விகடன் விருதுகள் 2014

சிறந்த கார்

எலீட் ஐ20

ஹூண்டாய்

ந்த ஆண்டின் 'ஹாட் செல்லிங் கார்’. பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றிருக்கும் செம ஸ்டைல் கார். சக்திவாய்ந்த டீசல் இன்ஜினோடு  அன்லிமிட்டெட் வசதிகளை அட்டகாசமான காம்போ பேக்கேஜில் கொடுத்து அசத்தியிருக்கிறது ஹூண்டாய். ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏ.சி., 8 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், ப்ளுடூத், பட்டன் ஸ்டார்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரியர் ஏ.சி வென்ட், 2 காற்றுப்பைகள், ஏ.பி.எஸ் என, தோற்றத்திலும் வசதிகளிலும் ஒரு பிரீமியம் சொகுசு காரின் தரத்தை கிட்டத்தட்ட எட்டியது எலீட் ஐ20. இடவசதியிலும் இது மிட்சைஸ் செடான் கார்களுக்கு செம போட்டி. 6-9 லட்சம் ரூபாய்க்குள் ஒரு தரமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வேண்டும் என்றால், எலீட் ஐ20 சிறந்த சாய்ஸ்!

சிறந்த பைக்  

FZ 2.0

யமஹா

ஆனந்த விகடன் விருதுகள் 2014

மஹா FZ பைக்கின் அப்டேட்டட் மாடல் இது. துளியும் வீணாக்காமல், மிகச் சரியான அளவில் பெட்ரோலை இன்ஜினுக்குள் செலுத்தி மைலேஜ், பெர்ஃபார்மன்ஸ் இரண்டையும் அதிகரிப்பது ஃப்யூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம். இதனால், பைக்கின் விலை அதிகமாகும், பரபரப்பாக விற்பனையாகும் பைக்கில் இந்த மாற்றம் தேவையா என்கிற விமர்சனங்களைத் தூக்கி எறிந்துவிட்டு திஞீ பைக்கில் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தைத் துணிச்சலாக அறிமுகப்படுத்தி அசத்தியது யமஹா. ஸ்டைல், பெர்ஃபார்மன்ஸ், மைலேஜ், ஓட்டுதல் தரம் என அனைத்திலும் மிகச் சிறந்த பைக். இன்ஜின் தரத்திலும், பில்டு குவாலிட்டியிலும் உயர் தரம். இந்த வருடத்தின் ரோட் சைடு ரோமியோ! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு