Published:Updated:

'வி மிஸ் யூ பெரியார்!' – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!

'வி மிஸ் யூ பெரியார்!' – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!
'வி மிஸ் யூ பெரியார்!' – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!

'வி மிஸ் யூ பெரியார்!' – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!

தோழர் பெரியார் அவர்களுக்கு,

வணக்கம். இறந்தவர்களுக்கு கடிதம் எழுதுவது பகுத்தறிவில் சேராது என்றாலும், காலத்தின் தேவை கருதி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 'பெரியார்' என்பவர் ஒரு மனிதர் மட்டுமல்ல; அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்தியல் என்பதை உளப்பூர்வமாக நம்புகிறேன்.

சமூகநீதிக்கு எதிராகவும், மாநில சுயாட்சிக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட போரில், சில நாள்களுக்கு முன்னர், அனிதாவை இழந்திருக்கிறோம். அனிதா எங்களுள் ஒருத்தி. நாங்கள் இந்தக்கால தலைமுறையினர். நீங்கள் இறந்து ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைமுறை மீண்டும் உங்களுக்காக ஏங்குகிறது.

நாங்கள் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள். நாங்கள் பிறக்கும்போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் கல்வித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையாக மாறியிருந்தது. நாங்கள் இந்தியாவின் மனித வளங்களாக பிறந்தோம்.

‘பெரியார்’ என்ற மனிதர் குறித்த அறிமுகங்களை நாங்கள் பயின்ற பள்ளிகள் எங்களுக்கு ஏற்படுத்தித்தரவில்லை. மகாத்மா காந்தியோடு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட பெரியாரை, சில மதிப்பெண்களுக்காக நாங்கள் படித்திருக்கிறோம். உங்களைப் போலவே, உங்கள் நண்பர் அம்பேத்கரும் ‘இந்தியாவின் அரசியலமைப்பை எழுதியவர்’ என்ற அளவில் மட்டுமே எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.

அதையும் மீறி, பேருந்து நிறுத்தங்களிலோ, சாலை முனைகளிலோ உங்கள் சிலைகளைப் பார்க்கலாம். சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு குறித்து நீங்கள் பேசிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். உங்கள் நண்பர் அம்பேத்கரின் சிலை ஊருக்கு வெளியே சிறைவைக்கப்பட்டிருக்கும். அம்பேத்கர் சிலைகள் ஊருக்கு வெளியே இருப்பதையும், கூண்டுகளுக்குள் அவர் அடைபட்டிருப்பதையும் கேள்விக்குள்ளாக்கியபோது, இந்திய மக்கள் ‘சாதி’ என்ற நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதை எங்களால் அறிய முடிந்தது.

தமிழ்நாட்டில் சாதியை மிக வலிமையாக எதிர்த்ததும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூகநீதியான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததும் திராவிட இயக்கங்கள். எங்கள் காலத்தின் மிக முக்கியமான அரசியல்வாதிகள் திராவிடத்தின் பெயராலேயே இயங்கி வருகின்றனர். அவர்கள் தங்களைத் தாங்களே உங்களின் வழித்தோன்றல்களாக முடிசூட்டிக்கொண்டாலும், நாங்கள் உங்களை ஏற்றுக்கொண்டதைப் போல அவர்களை ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அதனையும் பெரும் போராட்டமாக வெளிப்படுத்தினோம்.

1951-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டுவந்து பல போராட்டங்கள் மேற்கொண்டு உங்களால் கொண்டுவர முடிந்தது. கல்வி மறுக்கப்பட்ட எங்கள் முன்னோருக்குக் கல்வி நிலையங்களுக்குள் நுழைய அது வாய்ப்பாக அமைந்தது.

நாங்களும் கடந்த ஜனவரி மாதம் ஏறத்தாழ ஏழு நாள்கள் போராட்டம் நடத்தினோம். வாடிவாசலில் காளைகள் நுழைவதற்கான போராட்டம் அது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்ட மாபெரும் போராட்டம் அது. சென்னையின் மெரினா கடற்கரை முழுவதும் இளைஞர்களால் நிரம்பியிருந்தது. மத்திய அரசுக்கு எதிரான அந்த எழுச்சியை நீங்கள் கண்டிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பீர்கள்! நாங்கள் அந்த போராட்டத்தில் வெற்றிபெற்றோம். எனினும் அண்ணாவின் பெயரிலும், திராவிடத்தின் பெயரிலும் இயங்கும் ஆளுங்கட்சியின் உத்தரவால் காவல்துறையினர் எங்கள்மீது வன்முறையைத் தொடுத்தனர். மீனவ மக்கள் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அவர்களது குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன.

வன்முறைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னர், காவல்துறை அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். அந்தப் பேட்டியில், "உங்கள் குழந்தைகளை யாராவது போனில் அழைத்து, 'தோழர்' என்று பேசத் தொடங்கினால், உடனே அவர்களின் தொடர்புகளைத் துண்டிக்கச் செல்லுங்கள்" என்று கூறினார். சமத்துவத்துக்காக, "பெரியார் என்று என்னை அழைக்கவேண்டாம்; தோழர் என்றே அழையுங்கள்” என்று நீங்கள் கூறியதை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம்.

நீங்கள் கருஞ்சட்டைப் படை அமைத்தபோது, உங்களுக்கும் அண்ணாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டது என்பதைப் படித்திருக்கிறோம். எனினும், அண்ணா அதிகாரத்தை எதிர்த்து, யாரும் எதிர்பாராதவாறு, கறுப்புச் சட்டையில் தோன்றி பேருரை நிகழ்த்தியிருக்கிறார். கறுப்புச் சட்டை இன்றும் அதிகாரத்தை உறுத்தும் ஆயுதம். மெரினா எழுச்சிக்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிந்து மாணவர்கள் கூடினாலே காவல்துறை அச்சம் கொள்கிறது. இன்று நாங்கள் படிக்கும் பல பொறியியல் கல்லூரிகளில் கறுப்புச் சட்டை அணிந்து வரத் தடை இருக்கிறது.

கடந்த மே மாதம், சென்னை மெரினாவில், ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி மே 17 இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தடையை மீறி மெரினாவில் மக்கள் கூடுவதை தமிழக அரசு விரும்பவில்லை. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைக் கைதுசெய்தார்கள். அப்போது கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்த வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதுக்கு சொல்லப்பட்ட காரணம், அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பது. எந்த அண்ணா, தான் பாடுபட்ட இயக்கத்துக்காக கருஞ்சட்டை அணிந்து இளைஞர் படைக்கு தலைமை தாங்கினாரோ, அந்த அண்ணாவின் பெயரில் இயங்கும் ஆளுங்கட்சி மேடையேற்றிய அவலக்காட்சிகள் இவை.

நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி, ஈழப்போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு, நூறு நாள்கள் கடந்து இன்னும் சிறையில் உள்ளனர். திருமுருகன், தமிழ்நாட்டு மக்களிடையே மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியவர்.

நீட் தேர்வு சமூக நீதியின் அடிப்படையையே மறுக்கிறது. எங்களில் பலர் மருத்துவர்களாக இருக்கின்றனர். எனினும், நாங்கள் எங்களுக்கு அடுத்து வருபவர்களைச் சிந்திக்கின்றோம். ஒரு மனிதன் தன் எஞ்சிய வாழ்வைக் கழிப்பதற்கு இரண்டு விஷயங்களைத் தன் விருப்பப்படி தீர்மானிக்க வேண்டும். ஒன்று கல்வி; மற்றொன்று திருமணம்.

எங்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு பெறப் போராடியது போல, சுயமரியாதை திருமணங்களையும் பல்வேறு இன்னல்களைத் தாண்டி நடத்தி வைத்தீர்கள். இன்று ஒரு ஆணும் பெண்ணும் சுயமரியாதையோடு, தங்கள் சாதி மறுத்து, திருமணம் செய்துகொள்வது, அவ்வளவு எளிதானது அல்ல. சாதிமறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள் அவர்களது பெற்றோராலேயே சாதி கெளரவத்திற்காகக் கொல்லப்படுகின்றனர். உடுமலைப்பேட்டையில் கெளசல்யா, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கரை திருமணம் செய்துகொண்டார். அதன் விளைவாக, நடுவீதியில் வைத்து இருவரும் வெட்டப்பட்டனர். சங்கர் உயிரிழந்தார்.

இன்று, கெளசல்யா உங்களையும், உங்கள் நண்பர் அம்பேத்கரையும் மக்களிடம் எடுத்துக்கூறி சாதிக்கு எதிரான பறையை வீரியமாக ஒலித்து வருகிறார். அவரைப் போலவே பல பெண்கள் இன்று போராட்டக் களத்தை நிரப்பி வருகின்றனர். அன்று உங்களால் கள்ளுக்கடை மறியலுக்கு நாகம்மையாரும், கண்ணம்மாவும் தலைமை தாங்கினர். அதன் நீட்சி, இன்று தமிழ்நாட்டில் அரசு மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களைப் போராட வைக்கிறது.

கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராடியதாக கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு விடுதலை பெற்றிருக்கிறார் வளர்மதி. விடுதலை பெற்றவுடன் போராட்ட களத்துக்கே சென்றிருக்கிறார். அனிதாவுக்காக தனது அரசுப் பதவியை உதறிய சபரிமாலா முதலானோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.

தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக, அதிக போராட்டங்கள் நடத்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இது திராவிட இயக்கத்தின் மூலம் நீங்கள் விதைத்தது. அதிலும் இன்றைய ஆளும்கட்சியான அ.இ.அ.தி.மு.க. ‘வெங்காயம்’ ஆக முளைத்திருக்கிறது. ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்று நீங்கள் சொன்னது மிகப்பொருத்தம்.

அனிதாவின் மரணம், தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மாணவர்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழக அரசோ எந்தச் சலனமும் இல்லாமல் போராடும் மாணவர்களை ஒருபுறம் கைதுசெய்துவிட்டு, மறுபுறம் மாணவர் அமைப்பான சாரணர் படைக்கு பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சித்து, தோல்வி அடைந்தது. 

அண்ணாவையும், திராவிடத்தையும் முன்னேற்றுவதாகக் கட்சி நடத்திக்கொண்டு, அமித் ஷா-வுக்கும் தமிழிசைக்கும் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். பாரதிய ஜனதா கட்சி இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டுக்குள் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது.

உங்கள் வழித்தோன்றல்களை எங்களுக்கு முந்தைய தலைமுறையினர் நம்பினர். எங்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறதே தவிர, கூடவில்லை. உங்களைப் போன்ற அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யாத, துணிந்து போராடக்கூடிய கருத்தியல் தலைமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். போராட்டங்களுக்காகவே காத்திருக்கிறோம்;

வி மிஸ் யூ பெரியார் அவர்களே!

இப்படிக்கு,

சாமான்ய இளைஞன்.

அடுத்த கட்டுரைக்கு