ந்திரசூடன் காலை ஆறு மணி காபியைத் துளித்துளியாய் ரசித்துக் குடித்துவிட்டு அன்றைய நாளிதழைக் கையில் எடுத்துக் கொண்டு தலைப்புச் செய்திக்குப் போவதற்கு முன், அவருடைய மனைவி அபிராமி, தன் எண்பது கிலோ எடை உடம்போடு ஒரு தூண் மாதிரி நடந்து வந்து அவர் முன்பாய் நின்றாள்.

 ''என்னங்க..!''

''சொல்லு..!''  தலைப்புச் செய்தி அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் போகவே நாளிதழின் அடுத்த பக்கத்தைப் புரட்டிக் கொண்டே தலையை ஆட்டினார் சந்திரசூடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இது உங்களுக்கே சரியா படுதா?''

''எது?''

''இன்னிக்கு புதன்கிழமை!''

''அதுக்கென்ன இப்போ..?''

''இன்னிக்குக் காலையில பத்து மணிக்கு நம்ம பொண்ணு மீராவை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பெண் பார்க்க வரப்போறாங்க..!''

நள்ளிரவு வானவில்!

''அதுதான் தெரியுமே... நான் என்ன பக்கத்துவீட்டுக்காரனா..?''

''தெரியுமில்ல? அதுக்கப்புறமும் இப்படி பேப்பரும் கையுமா உட்கார்ந்துட்டா எப்படி? நீங்க குளிச்சு ரெடியாக வேண்டாமா... நேரம் 'பரபர’ன்னு ஓடிடும்!''

அபிராமி படபடவென்று பொரிந்துகொண்டிருக்கும் போதே சந்திரசூடனின் செல்

போன் ரிங்டோனை மெலிதாய் வெளியிட்டது. நாளிதழை தாறுமாறாக மடித்து வைத்தவர், அழைப்பது யார் என்று செல் போனை எடுத்துப் பார்த்தார்.

மாப்பிள்ளையின் அப்பா பார்த்தசாரதி.

சந்திரசூடன் கொஞ்சம் பவ்யத் தோடும், நிறைய பதற்றத்தோடும் தன் செல்போனை எடுத்து இடது காதுக்கு ஒற்றினார். ''குட்மார்னிங் சம்பந்தி..!''

''குட்மார்னிங்... குட்மார்னிங்! என்ன, வாக்கிங் போயிட்டு வந்துட்டீங்களா?''

''ம்... வாக்கிங் போயாச்சு... காபி குடிச்சாச்சு... பேப்பர் பார்த்துட்டு இருந்தேன். உங்க போன்... என்ன, மாப்பிள்ளை டெல்லியிலிருந்து புறப்பட்டுட்டாரா?''

''ம்... புறப்பட்டாச்சு. இப்ப ஃப்ளைட்ல வந்துட்டிருப்பான். ஒன்பது மணிக்கெல்லாம் வீட்ல இருப்பான். பத்து மணிக்கெல்லாம் உங்க வீட்ல இருப்போம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி மாப்பிள்ளையோடு சேர்த்து நாங்க மொத்தம் பதினாறு பேர் வருவோம்!''

''வாங்க... வாங்க... எவ்வளவு பேர் வேணுமின்னாலும் வாங்க... நாங்க வெயிட் பண்ணிட்டிருக் கோம்!''

''அப்புறம் ஒரு விஷயம்...''

''என்ன... சொல்லுங்க!''

''பத்து மணியிலிருந்து பத்தரை மணி வரைக்கும் ரொம்பவும் நல்லநேரம். அந்த நேரத்துக்

குள்ளே நாம லௌகீகமான விஷயங்களைப் பேசிடறது நல்லது.''

''பேசிடலாம்! நேரம்தான் வேண்டப்பட்டது இருக்கே. நிச்சாந்தியாய் உட்கார்ந்து ஒரு குழப்பம் இல்லாமே எல்லாத்தையும் பேசிடலாம்.''

''ரொம்ப நல்லது! எங்க மருமகப் பொண்ணு மீராவுக்கு ஹெவியான மேக்கப்பெல்லாம் வேண்டாம். சிம்பிளா இருந்தா போதும். எங்க பையன் ஞானேஷுக்கு அப்படி இருந்தாத்தான் பிடிக்கும்.''

சந்திரசூடன் சிரித்தார்.

''நீங்க சொல்லவே வேண்டாம்... எங்க பொண்ணு மீரா பேருக்கு ஏற்ற மாதிரியே கொஞ்சம் பழங்கால டைப். பியூட்டி பார்லர் பக்கம் போனதே இல்லை. முகத்துக்கு பவுடர் போட்டுக்கவே யோசனை பண்ணுவா.''

''போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்.''

''வாங்க... வாங்க!''  வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்த வாறு சந்திரசூடன் நிமிர, எதிரில் அவருடைய மகள் மீரா கோபக்கனல் உமிழும் கண்களோடு நின்றிருந்தாள். மீராவுக்கு இருபத்தி மூன்று வயது. ஐம்பது கிலோ எடையைத் தாண்டாத ஒடிசலான உடம்புவாகு. பெரிய கரிய கண்கள். அடர்த்தியான தலைமுடி ஒற்றைப் பின்னலாய் மாறி, முதுகில் ஒரு கறுப்பு அருவியாய் வழிந்தது.

சந்திரசூடன் மகளை ஏறிட்டார் ''போன்ல மாப்பிள்ளையோட அப்பா பேசினார்ம்மா...''

''அதுதான் தெரியுதே! ஏம்பா... இப்படி கூழைக் கும்பிடு போடறீங்க? மாப்பிள்ளை வீட்டுக்காரங்கனா மரியாதை குடுக்க வேண்டியதுதான். அதுக்காக இப்படியா? நீங்களும் ஒண்ணும் சாதாரண நபர் கிடையாது. இண்டஸ்ட்ரியலிஸ்ட் சந்திரசூடன்னு சொன்னா டெல்லி வரைக்கும் தெரியற ஒரு பர்சன்.''

சந்திரசூடன் எழுந்து வந்து மகள் மீராவின் தோள் மேல் மெதுவாய் கையை வைத்தபடி சிரித்தார். ''என்ன இருந்தாலும் பெண்ணைப் பெத்தவனுக்கு இந்த விஷயத்துல உயரம் கொஞ்சம் கம்மிதான். மாப்பிள்ளையோட அப்பா பார்த்தசாரதி ரிடையர்ட் ஹைகோர்ட் ஜட்ஜ். அது எப்பேர்ப்பட்ட பதவி. அவருக்கு இல்லேன்னாலும் அவர் வகித்த பதவிக்காவது மரியாதை குடுக்கணுமா... வேண்டாமா?''

''அப்படீன்னா... ஒரு காரியம் பண்ணுங் கப்பா!''

''என்ன?''

''மாப்பிள்ளையோட அப்பா நம்ம வீட்டுக்கு வந்ததுமே அவரை நடு ஹால்ல சோபாவில் உட்கார வெச்சு பெரிய தாம்பாளத்துல தண்ணியை ரொப்பி பாதபூஜை பண்ணிடுங்க! வேணும்ன்னா நானும் அம்மாவும் கூட உங்களோட அந்த பாதபூஜையில் ஜாய்ன் பண்ணிக்கறோம்!''

''பார்த்தியா... அபிராமி உன் பொண்ணோட கேலியை?''

''அது கேலி இல்லீங்க... உண்மைதான். மாப்பிள்ளையோட அப்பாகிட்டே நீங்க ரொம்பத்தான் வழியறீங்க.''

''இதோ பார் அபிராமி! இப்ப நமக்கு கிடைச் சிருக்கிறது சாதாரண சம்பந்தம் கிடையாது. பாரம்பர்யம் மிக்க மரியாதைக்குரிய குடும்பம். மாப்பிள்ளை பையனுக்கு டெல்லியில் இருக்கிற ஒரு பெரிய மல்டிநேஷனல் கம்பெனியில் இந்த சின்ன வயசிலேயே வைஸ் பிரஸிடென்ட் போஸ்ட். மாசம் ரெண்டு லட்ச ரூபாய் சம்பளம். நம்ம மீராவுக்கு இப்படியொரு...''

மீரா தன்னுடைய இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டாள். ''அப்பா! இந்த கதாகாலட்சேபத்தை நீங்க இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கையில் ஜால்ரா கட்டை இல்லாமே பண்ணிட்டு இருப்பீங்க? போய் மொதல்ல குளிங்கப்பா!''

''அம்மாவும் பொண்ணும் ஒண்ணு சேர்த்துட் டீங்க. இனி என்னால பேச முடியாது!'' சந்திரசூடன் கிளம்பிவிட, அபிராமி மகளைப் பார்த்தான்.

''மீரா..! அந்த 'கேட்டரிங்’காரனுக்கு போன் பண்ணி எல்லா அயிட்டங்களையும் 'ஹாட் பேக்’ல வெச்சுத்தான் கொண்டு வரணும்னு சொல்லிடு. லேண்ட்லைன் டெலிபோனுக்கு கீழேயே அவனோட விசிட்டிங் கார்டு இருக்கு. நீ அவன்கிட்டே பேசறியா... இல்ல, நான் பேசட்டுமா?''

''நானே பேசிடறேன்ம்மா!'' ஹாலின் வலதுபக்க மூலையில் இருந்த லேண்ட்லைன் டெலிபோனை நோக்கிப் போனாள். போனை நெருங்கியவள் அதற்குக் கீழே இருந்த விசிட்டிங் கார்டை தேட முயன்ற விநாடி டெலிபோன் தன் தொண்டையைத் திறந்தது. மீரா ரிஸீவரை எடுத்து தன்னுடைய இடது காதுக்கு ஒற்றினாள்.

''ஹலோ..!''

''பேசறது யாரு... மீராவா?'' மறுமுனையில் ஓர் ஆண் குரல் கேட்டது.

''ஆமா... நீங்க?''

''நான் யார்ங்கிறது உனக்கு முக்கியம் இல்லை. விஷயம்தான் முக்கியம்.''

''விஷயமா... என்ன விஷயம்?''

''இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வரப் போற மாப்பிள்ளையோட பேரு ஞானேஷ்.''

''ஆமா...''

''டெல்லியில் இருக்கிற 'ஃப்யூச்சர் மிராகிள்’ ஐ.டி கம்பெனியில் வைஸ் பிரஸிடென்ட்''

''ஆமா..!''

''ஞானேஷ் டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்னை வந்துட்டாரா?''

''இல்லை! ஃப்ளைட்ல வந்துட்டிருக்கார். ஏன்... என்ன விஷயம்..?''

''அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு நேற்றைக்கே வந்துட்டாரே... அது உனக்குத் தெரியாதா?''

''என்னது... நேற்றைக்கே வந்துட்டாரா..?''

''ஆமா!''

''இருக்காதே! இன்னிக்கு காலையில் அஞ்சு மணிக்குத்தான் டெல்லி டு சென்னை ஃப்ளைட்ல புறப்பட்டு வந்துட்டிருக்கார்.''

''ஸாரி மீரா..! ஞானேஷ் நேத்திக்கே சென்னைக்கு வந்துட்டார். இப்போ எங்கே இருக்கார் தெரியுமா?''

''எங்கே..?''

''உன் வீட்டு மொட்டை மாடியில் இருக்கிற வாட்டர் டேங்க்குக்குப் பக்கத்துல வெயிட் பண்ணிட்டிருக்கார். போய்ப் பாரு..!''

மீரா திடுக்கிட்டுப் போனவளாய் நிமிர்ந்தாள். மேற்கொண்டு பேசும் முன்பு மறுமுனையில் ரிஸீவர் சாத்தப்படும் சத்தம் கேட்டது. முகம் வியர்த்துப் போன மீராவின் இதயம் ஒரு டெலிபிரின்டராய் மாறியிருக்க, அவள் நடுக்கத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தாள்.

ஹாலில் யாரும் இல்லை.

குளியலறையில் அப்பாவும், சமையலறையில் அம்மாவும் இருப்பது தீர்மானமாய் தெரிந்தது. மெல்ல நடந்தாள். கேள்விகள் மூளையை மொய்த்தன.

'போனில் பேசிய நபர் யார்?’

'அந்த நபர் சொன்னது உண்மையா?’

'மாப்பிள்ளை ஞானேஷ் எப்படி நம் வீட்டு மொட்டை மாடியில்?’

'அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்ல

லாமா வேண்டாமா?’

'வேண்டாம்! முதலில் நீ போய் மொட்டை மாடியைப் பார். இது யாராவது விளையாடும் விளையாட்டாகக் கூட இருக்கலாம்!’

அம்மா பார்க்காத ஒரு விநாடியில் மீரா சமையலறையைக் கடந்து வீட்டின் பின் பக்கமிருந்த மாடிப்படிகளுக்கு வந்து வேகமாய் ஏறினாள். மூன்றாவது மாடியின் முடிவில் மொட்டை மாடி வந்தது. குளிர்ந்த காற்று முகத்தில் மோதியது.

பரந்து விரிந்த அந்த மொட்டை மாடிப் பரப்பில் யாருமில்லை. பார்வை மாடியின் தென்மேற்குப் பகுதியில் இருந்த வாட்டர் டேங்கை நோக்கிப் போயிற்று.

யாரும் இல்லை.

'ஒருவேளை வாட்டர் டேங்குக்குப் பின்னாடி இருக்கலாமோ?’

நள்ளிரவு வானவில்!

இதயம் தடதடக்க வாட்டர் டேங்க்கை நோக்கிப் போனாள்.

'தனியா வந்தது தவறு. அம்மாவையோ அப்பாவையோ கூட்டிக்கொண்டு வந்திருக் கலாம்!’

மூளைக்குள் உற்பத்தியான கடைசி எச்சரிக்

கையை உதாசீனப்படுத்திவிட்டு வாட்டர் டேங்கை நெருங்கி பின்னால் மெல்ல எட்டிப்

பார்த்தாள்.

சின்னதாய் ஒரு மண் சட்டி தெரிந்தது. அதன்

குறுகலான வாய்ப்பகுதி மஞ்சள் துணியால் கட்டப்பட்டிருக்க, அதன் மேல் நான்காய் மடிக்கப்பட்ட ஒரு கடிதமும், ஐ.டி. கார்டு ஒன்றும் தெரிந்தது.

'என்ன இது?’

ஐ.டி. கார்டை எடுத்துப் பார்த்தாள்.

மாப்பிள்ளை ஞானேஷ் அந்த அடையாள அட்டையில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவில் டை கட்டிக்கொண்டு சிரித்தான்.

மீராவின் மொத்த உடம்பும் ஒரு வியர்வைக் குளியலுக்கு உட்பட, மண் சட்டியின் மேல் இருந்த அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்தாள்.

கோணல்மாணலான தமிழ் எழுத்துக்களோடு நான்கைந்து வாக்கியங்கள் கிறுக்கலாக எழுதப்பட்டிருந்ததன.

அன்புடையீர்!

வணக்கம்.

இத்துடன் ஞானேஷின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வசதியாக அவருடைய அஸ்தி 500

கிராம் அனுப்பியுள்ளோம். பெற்றுக்கொள்ளவும்.

பெங்களூர். பன்னர்கட்டா ரோடு.

காலை பதினோரு மணி.

'அல்டிமேட் வொண்டர்ஸ் சாஃப்ட்வேர்’ கம்பெனியின் ஏழுமாடி உடம்பும் கண்ணாடி சதுரங்களில் பளபளத்துக்கொண்டிருக்க, ஐந்தாவது மாடியில் தன்னுடைய எக்ஸ்க்யூட்டிவ் அறையில் உட்கார்ந்து கம்ப்யூட்டரின் திரையில் 'ஸ்க்ரால்’ செய்துகொண்டிருந்த கான்ட்

ராக்ட்டை உன்னிப்பாக படித்துக்கொண்டு இருந்த 50 வயது யோகானந்தை, இன்டர்காமின் இன்னிசை சற்றே அசைத்தது. கம்ப்யூட்டரின் திரையினின்றும் பார்வையை விலக்காமல் ரிஸீவரை எடுத்து ''யெஸ்'' என்றார்.

மறுமுனையில் கம்பெனி ரிசப்ஷனிஸ்ட் கல்பனா கவுடா தன் சாக்லேட்தனமான ஆங்கிலம் பேசினாள்.

''சார்! ஒன் மிஸ் ரிதன்யா ஹேஸ் கம் டு ஸீ யூ. ஷால் ஐ பர்மிட் ஹர்?''

யோகானந்த் தன் இடது கையின் ஆட்

காட்டி விரலால் தன் முன் வழுக்கையைக் கீறிக்கொண்டார்.

''ரிதன்யா?''

'''யெஸ்... ஸார்''

''ஏஜ்?''

''பிட்வீன் ட்வென்டிஃபைவ் டு தர்ட்டி''

''பர்ப்பஸ் ஆஃப் த மீட்டிங்?''

''ப்யூர்லி பர்சனல்னு எழுதிக் கொடுத்திருக் காங்க.!''

''சரி... உள்ளே அனுப்பு டைம் பவுண்ட்ரி ஃபைவ் மினிஸ்ட்தான்னு சொல்லிடு.''

''யெஸ்... ஸார்!''

இன்டர்காமின் ரிஸீவரை சத்தம் இல்லாமல் சாத்திய யோகானந்த், தன் மூளையின் சில நியூரான்களைத் தேய்த்தார்.

'யார் இந்த ரிதன்யா?’

கம்ப்யூட்டரின் திரையை இருட்டாக்கிவிட்டு காத்திருந்தார். சரியாக இரண்டு நிமிஷங்கள் கரைந்திருந்தபோது அறைக்கதவு மெலிதாக தட்டப்படும் சத்தம் கேட்டது.

''ப்ளீஸ் கெட் இன்!''

அந்த அழகான ரிதன்யா கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். நீல நிற சுடிதார். உயர்த்திப் போட்டுக்கொண்ட ஒரு அலட்சியமான கொண்டை. சராசரிக்கும் கூடுதலான உயரம்.  உதட்டின் விளிம்பில் வலுக்கட்டாயமாக உட்கார்த்தி வைக்கப்பட்ட புன்னகை.

''ஸாரி... ஃபார் த இன்கன்வீனியன்ஸ்''

''நோ பிராப்ளம்... பீ ஸீட்டட்.''

சிவப்பு வெல்வெட் நாற்காலியில் அந்த ரிதன்யா உட்கார்ந்தாள். பத்து விநாடி மௌனத்துக்குப் பிறகு யோகானந்தே பேச்சை ஆரம்பித்தார்.

''மிஸ் ரிதன்யா..! நீங்க யார்ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

''ஷ்யூர்!'' என்று சொன்ன ரிதன்யா தன் கையில் வைத்து இருந்த உத்யோக அட்டையை அவரிடம் நீட்டினாள். யோகானந்த் வாங்கிப் பார்த்தார். கார்டு ஆங்கிலம் பேசியது.

ஹெச்.ரிதன்யா... விஜிலன்ஸ் செகண்ட் கிரேடு ஆபீஸர். சைபர் க்ரைம் பிராஞ்ச். சென்னை. தமிழ்நாடு.

''ஓ! போலீஸ் டிபார்ட்மென்ட்... அதுவும் தமிழ்நாட்டு சைபர் க்ரைம் பிராஞ்ச். நான் எதிர்பார்க்காத ஒரு விசிட்டர். இட்ஸ் ஓகே! உங்களுக்கு என்ன வேணும் மிஸ் ரிதன்யா?''

''ஒரு உண்மை!''

''உண்மைகளுக்கு என்கிட்டே பஞ்சமே கிடையாது. என்கிட்டே என்ன கேட்கணுமோ, கேளுங்க!''

''இந்த 'அல்டிமேட் வொண்டர்ஸ்’ சாஃப்ட்வேர் கம்பெனிக்கு நீங்கதானே எம்.டி?''

''சந்தேகமேயில்லாமல்!''

''உங்களுக்குத் தெரியாமல் இந்த கம்பெனியில் எந்த ஒரு முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என்கிற ஒரு உண்மையை நான் நம்பலாமா?''

''தாராளமா!''

''அப்படீன்னா இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?''  சொன்ன ரிதன்யா, மேஜையின் மேல் இருந்த பேனாவை எடுத்து ஒரு துண்டு பேப்பரில் எழுதி யோகானந்திடம் நீட்ட... அவர் அதில் பார்வையைப் போட்டார்.

AMIDNIGHT RAINBOW

குழப்பமாய் ரிதன்யாவை ஏறிட்டார் யோகானந்த்.

''என்ன இது?''

''நள்ளிரவு வானவில்.''

''அப்படீன்னா..?''

''இதுக்கான பதில் உங்ககிட்டதான் இருக்கு... நீங்கதான் சொல்லணும்!''

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism