Published:Updated:

நலம் 360’ - 32

மருத்துவர். கு.சிவராமன்

ரு சின்ன இளைப்பாறுதலுக்கான சமயம் இது. 

'நலத்தின் கோணம் 360 டிகிரி; நலம் என்பது நோய்க்கும் மருந்துக்குமான தட்டையான பாலம் அல்ல...’ என்பதைப் பேசிக்கொண்டே இருந்தோம். இளங்காலையில் நாம் போடும் ஒரு தும்மலுக்கு, ரத்தத்தில் கொஞ்சம் கூடுதலாகிப்போன இம்மினோகுளோபுலின்கள் மட்டும் காரணம் அல்ல. காற்றில் கசியவிடும் அம்மோனியா முதலான பிரபஞ்சத்துக்குப் பரிச்சயம் இல்லாத ஆயிரக்கணக்கான வாயுக்களும்... கரிசனமும் காதலும் காணாமல்போய், ஆதார் அட்டையில் மட்டுமே ஒட்டியிருக்கும் குடும்பமும்கூடக் காரணமாக இருக்கும் என்ற புரிதலைச் சொல்ல எழுதியதுதான் நலம் 360 டிகிரி. 

நலம் 360’  - 32

மொத்த சமூகமும் நலமாக இருக்க நம் முன்னோர்கள் மெனக்கெட்டுப் போரிட்ட வரலாறு பெரிதினும் பெரிது. 'நோய்கள் எல்லாம் கடவுள் தந்தவை; அவற்றைப் பரிகசிக்க நினைப்பது, கடவுளை எதிர்ப்பது போன்றது’ என்ற போக்கை எதிர்த்து, 'நீ சாப்பிட்ட உணவும்... நீ வளர்க்கும் கோபம், காமம், குரோதம், மோகம், மதம், மூர்ச்சை, இடும்பை, அகங்காரம்... ஆகிய எட்டு குணங்களும்கூட நோய்க்கான காரணங்கள்’ எனச் சொன்னவர்கள் நம் சித்தர்கள். இன்றைய நவீன மருத்துவத்தின் தொடக்கப் புள்ளிகளான இங்கிலாந்தின் டார்வினும் நியூட்டனும், வங்காளத்து சூஃபிக்களும் வடலூர் வள்ளலாரும்கூட அந்த வரிசையில் உள்ளவர்கள்தான். நலத்தின் 360 கோணத்தை முதலில் நமக்குக் காட்டியவர்கள் அவர்கள்தான்!

இப்படிப் பிறந்த நம் நலப்பேணலை நெடுநாட்களாக உணவோடும் மொழியோடும் பண்பாட்டோடும் பிணைத்துவைத்திருந்தோம். 'காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய்’ என்பது அந்தப் புரிதலின் விளைவுதான்.        'நீர் கருக்கி, நெய் உருக்கி, மோர் பெருக்கி...’ என உணவுச் சூட்சமங்களைச் சொல்லி நோய் அகற்றினோம். 'காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளனுக்கு கூற்றை உதைக்கும் குரியதுவாமே’ என மூச்சுப் பயிற்சியில் அன்றாட வாழ்வில் இணைத்திருந்தோம். கூடவே, 'இது சூடு; இது குளிர்ச்சி; இது பின்பனிக் கால உணவு; இது மருதத் திணை உணவு; இது பேறுகால உணவு’ என்ற சமையலறை அக்கறைகளும் இருந்தன. எனினும், நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 37 வயதுதான். அம்மையிலும் ஊழியிலும் பிளேக்கிலும் காசநோயிலும் பல்லாயிரம் பேர் இறந்த வரலாறு உண்டு. பிறந்ததில் மூன்றில் ஒன்றை,  தொட்டிலுக்குப் பதில் பிணக் காட்டுக்குத்தான் கொடுத்தோம். ஒருவேளை, எட்வர்டு ஜென்னரும் லூயி ஃபாஸ்டரும் ராபர்ட் கோச்சும் வந்திராவிட்டால், இன்று நம்மில் எத்தனை பேர் நடமாடிக்கொண்டிருப்போம் என்பது மிகப் பெரிய கேள்வி. அப்போதைய சமூகத்தின் தொற்றுநோய் நலச் சவால்களுக்கு, தன் வாழ்வையே பணயம்வைத்து விடைதேடிய அந்த விஞ்ஞானிகள் கூட்டத்துக்கும், 'அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்’ எனப் பாடிய சித்தர்கள் கூட்டத்துக்கும் அடையாளங்கள் மட்டும்தான் வேறு வேறு. ஆனால், அக்கறை ஒன்றுதான்!

1953-ல் ஜோனாஸ் சால்க், தான் கண்டறிந்த போலியோ தடுப்பூசியை முதலில் தனக்கும் தன் குழந்தைக்கும் போட்டுக்கொண்டு உலகில் போலியோவை விரட்ட எடுத்த முனைப்பும், 48 நாட்கள் தொடர்ச்சியாக 24 விதமான சாறுகளை விட்டு அரைத்து, 1,000 வரட்டிகளை வைத்துப் புடமிட்டு, உலோக மூலப்பொருளை உடல் உறிஞ்சிப் பயனாக்கும் பாதுகாப்பான உப்பாக்கி, அதையும் குண்டூசி முனையில் எடுத்து தேனிலோ, மூலிகைப் பொடியிலோ குழைத்து, தான் செய்த பெருமருந்தை தானே சாப்பிட்டுப் பார்க்கும் நம் தமிழ்ச் சித்தனும் எனக்கு ஒரே புள்ளியில்தான் தெரிகின்றனர்.

நலம் 360’  - 32

ஒருபக்கம் இப்படி நீண்ட தெள்ளிய அனுபவம்கொண்ட மரபு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த உடல், பல ஆயிரம் கோடி செல்கள் ஆகும் முன்னர், முதல் ஸ்டெம் செல்லுக்குள் எப்படி இத்தனை திட்டங்கள் இருக்கின்றன என நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லும் உச்ச அறிவியலும் படைத்திருக்கிறோம். ஆனால், இரு புள்ளிகளும், நம் விளிம்பு நிலைச் சாமானியனின் நலத்தேடலுக்கு விடை சொல்லாமல் விலகிப்போவதுதான் வேதனையிலும் வேதனை. நலம் 360 டிகிரி சொல்ல நினைத்ததும் சிந்திக்க நினைத்ததும் இதை மட்டும்தான். மேற்கத்திய மருத்துவ முறை படித்து அறிந்துவிட்டதால், உள்ளூர் நீண்ட அனுபவம் எல்லாம் மடமையும் அறிவற்றதுமாக மாறிப்போய்விடுவதாக உதாசீனப்படுத்தி ஓரங்கட்டுவது ஒருபக்கம். 'நவீன அறிவியலே மொத்தமாகப் பொய்; எங்கள் பாரம்பர்யம் அவை அத்தனையையும் விஞ்சியது. உடலையும் உலகையும் ஞானக் கண்களால், முழுமையாக அறிந்துவிட்டோம். இதில் தேட இனி ஒன்றும் இல்லை. உள்ளது உள்ளபடி செய்துபோவதைத் தவிர கேள்விகள் கேட்பதோ, ஆய்வுக்கு உட்படுத்துவதோ வன்முறை’ எனக் குமுறுவது இன்னொரு பக்கம். இரு சாராரும் உற்றுக் கவனிக்கவேண்டிய இன்னொரு கோணம் இருக்கிறது.

நியூட்டனும் ஃப்ளெமிங்கும் சால்க்கும் நகர்த்திய நவீன மருத்துவ விஞ்ஞானம் இன்று மொத்தமாக, வணிகத்தின் இரும்புக் கரங்களுக்குள் சிக்கியுள்ளது. நோய் நீக்கும் மருந்து தயாராக இருந்தாலும் வணிகத்துக்காக, 'இன்னும் 15 வருடங்கள் கழித்து, இந்தப் புற்றுநோய்க்கு மருந்தை ரிலீஸ் பண்ணலாம்’ என பல மருந்துகளின் வெளியீடு தள்ளிவைக்கப்படும் அவலம், நிறைய மருத்துவர்களுக்கே தெரியாது. 'மருந்து ரெடி. நோய் எங்கே? இதற்காக இதுவரை இத்தனை மில்லியன் டாலர் கொட்டியிருக்கிறோம். குப்பையிலா போட முடியும்? நோயைப் பரப்புங்கள்’ என அலுவலக விவாதத்தில் முடிவெடுக்கும் பல நிறுவனங்கள் நம் உலகில் உண்டு.

ஐன்ஸ்டீனும் நியூகோமனும் ஃபேபரும் அறிவியலை நகர்த்திக்கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் விஞ்ஞா னத்தைக்கொண்டே, லிட்டில் மாஸ்டரை ஜப்பானிலும், ஏஜென்ட் ஆரஞ்சை வியட்னாமிலும், மஸ்டர்டு கேசை இத்தாலி ஓரக் கடற்படை தளத்திலும் தெளித்து கோடிக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த வரலாறை நாம் மறக்க முடியாது. நவீன அறிவியலை அன்று மண்வெறிக்காகப் பயன்படுத்திய கூட்டம், இன்று பணத்துக்கும் பங்குச்சந்தைக்குமாக நகர்த்தத் தயங்காது.

நலம் 360’  - 32

நோய்க்கான காரணத்தை நுண்கதிர்களால் ஆராயும்போது, 'புதிதாக இந்த மருந்து எதற்கு? இதன் சிறப்புக்குப் பின்னால் அறம் சார்ந்த விஞ்ஞானம் உள்ளதா? முந்தைய மருந்தின் காப்புரிமை வணிகம் மடிந்ததால், புது மருந்தைப் புகுத்துகிறார்களா?’ என்பதையும் சிந்திக்கும் பகுத்தறிவு நமக்கும் வேண்டும். பறவைக் காய்ச்சலும் பன்றிக்காய்ச்சலும் ஏன், ஹெச்.ஐ.வி-யும்கூட ஆய்வகங்கள் தோற்றுவித்தவை என்ற அறைகூவலை உதாசீனப்படுத்தாமல் உற்றுப்பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம்... 'நாங்கள் வாயில் குளிகைபோட்டு வானில் பறந்தவர்கள்; புஷ்பக விமானத்தில் கிரகங்களுக்கு இடையே பறந்தவர்கள். எங்களுக்குத் தெரியாததா?’ என சமூக மடமைகளுக்கு சந்தனக்காப்பு போட்டுக் கும்பிடுபவர்கள் இன்னும் உண்டு. பிறந்த பச்சைக் குழந்தையை அடைமழையில் குளிப்பாட்டி எதிர்ப்பாற்றல் கொடுப்பதும், மரணத்தின் விளிம்பில் நிற்கும் நோயாளியை 'பத்தாயிரம் ஆகும்; கொல்லிமலைக்கு மேலே கொஞ்சூண்டு மூலிகை ஒன்று இருக்கிறது. அது என் கண்ணுக்குத்தான் தெரியும். அமாவாசைக்கு அடுத்த நாள் அதைக் கொணர்ந்தால், நீங்கள் அடுத்த ஒலிம்பிக்கில் ஓடலாம்’ எனப் பொய்யுரை சொல்லி, அவரின் இறுதிமூச்சில் இளைப்பாறுவதும் இன்னும் நடக்கத்தான் செய்கிறது.

நலம் 360’  - 32

2,000 ஆண்டுக்கு முன்னரே போரிலோ, விபத்திலோ கையிழந்த வாலிபனை அதன் பின்னரும் 20 ஆண்டுகள் வாழும்வண்ணம் அறுவைசிகிச்சை செய்ததை மதுரை கோவலன்பொட்டல் அகழ்வாராய்ச்சியின் கார்பன் தரவுகள் சொல்கின்றன. ஆனாலும் சித்த மருத்துவத்தில் ஆய்வு மேற்கொள்ள அத்தனை தடைகள். அதில் கொஞ்சம்தான் பணத்தடை; நிறைய மனத்தடை. ரத்தத் தட்டுகளை உயர்த்தி சிக்குன்குனியாவையும், டெங்குவையும் கொஞ்சம் கட்டுப்படுத்திய நிலவேம்புபோல, 750-க்கும் மேற்பட்ட தமிழ் மூலிகைகள் களைச் செடிகளாக உதாசீனப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இங்கு மட்டும்தான் நடக்கும்.

'பகுத்துண்டு பல்லுயிரெல்லாம் ஓம்ப வேண்டாம். ஒரு கம்பெனி; ஒரு விதை; ஓர் அரசன் என வாழ்வதுதான் நாகரிகம்’ என உணவிலும், 'கரிசனம் எந்த சப்ஜெக்ட்? நான் படிக்கலையே? நான் மட்டும் செங்குத்தாக வளர்வதுதான் வளர்ச்சி’ எனும் நவீன கல்வியிலும் நாம் நிலைகொண்டதுதான் நோய்க் கூட்டம் சுனாமியாக நம்மைத் தாக்கக் காரணம்.இப்போதேனும் நாம் கொஞ்சம் விழிக்க வேண்டும்.

நவீன அறிவியலின் தேடலும், நீண்ட மரபின் புரிதலும் அறம் எனும் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். நானோ துகள்களைத் தேடும் நிபுணர்கள், சாணத்து வரட்டியில் புடமிட்டுச் சமைத்த மருந்துகளை மறுதேடல் செய்யவேண்டும். 'இனி வழி இல்லை. இனி காலத்துக்கும் மருந்துதான். மரணம் அடுத்த நிறுத்தத்தில்’ என இருக்கும் பல நோயாளிகளுக்கு இந்த ஒருங்கிணைப்பு மட்டுமே சிகிச்சையளிக்க முடியும். 'சார்... நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? ஏதாச்சும் தப்பாயிருச்சுன்னா அப்புறம் என்கிட்ட வரக் கூடாது, சொல்லிட்டேன்’ எனும் ஆங்கில அதட்டல்களும், 'அத்தனையும் பொய், ஆபத்து, நான் மட்டும்தான் உனக்கான ஆபத்பாந்தவன்’ என நோய் பற்றிய முழுப் புரிதல் இல்லாமல் சொல்லும் மடமையும் வேண்டாம்.

'என்னை நாடி வந்த நோயாளிக்கு, குறைந்த செலவில், கூடிய மட்டும் குறைந்த காலத்தில், முழுமையான, பக்கவிளைவு இல்லாத, மீண்டும் தலை காட்டாதபடியான மருத்துவத் தீர்வைத்தான் நான் தருகிறேன். நீங்கள் உங்கள் சூரணத்தைக் கொடுங்கள். அந்தப் பாரம்பர்ய மருத்துவர் தொட்டு உயிராற்றலை நகர்த்தட்டும். இன்னொருவர் மூச்சுக்குப் பயிற்சி அளிக்கட்டும். பாதுகாப்பான நஞ்சற்ற பாரம்பர்ய உணவை நம் இயற்கை விவசாயி ஊட்டட்டும். காதலோடு அதைப் பரிமாறும் குடும்பமும், கனிவோடு உறவாடும் நட்பும் சேர்ந்து நோய்க்கான சிகிச்சையை அளிப்போம்’ என்பதுதான் நலம் 360 டிகிரியின் நாதம்.

நலம் 360’  - 32

இப்படி கட்டுரையை எழுதி முடித்துவிட்டு, பிழை பார்த்துக்கொண்டிரும்போது, என் அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி. 'டாக்டர்... நான் நீரிழிவு நோய்க்கான நவீன மருத்துவர். என் நோயாளி ஒருவருக்கு சிறுநீரகக் கல் இருக்கிறது. அறுவைசிகிச்சை செய்ய அவசியம் இல்லை எனத் தோன்றுகிறது. அனுப்பிவைக்கிறேன். உங்கள் சித்த மருத்துவத்தில் சிகிச்சை தாருங்கள்.’

நலம் 360 டிகிரி நம்பிக்கையை விதைத்திருக்கிறது. கொஞ்சம் இளைப்பாறிவிட்டு, மீண்டும் வருகிறேன். வணக்கம்.

- நலம்