Published:Updated:

என் ஊர்!

காணாமல் போன சென்னை கிராமம்!

என் ஊர்!

காணாமல் போன சென்னை கிராமம்!

Published:Updated:
##~##

''அரசினர் தோட்டத்தை சென்னையில் உள்ள ஒரு சிறு கிராமம் என்றே சொல்லலாம். பச்சைப் பட்டு போர்த்தியதுபோல் படர்ந்து விரிந்து நிற்கும் மரங்கள், குயில்கள், மயில்கள், தடக்... தடக்... சத்தத்துடன் கடக்கும் ரயில்கள்... அவ்வப்போது எட்டிப்பார்த்துப் பயம் கிளப்பும் விஷப் பாம்புகள் என அரசினர் தோட்டம் அழகிய கிராமம்தான்!'' சென்னைக்குள் தான் வாழ்ந்த கிராமம்பற்றி கதை சொல்லத் தொடங்குகிறார் மருத்துவர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்முகத் தன்மைகொண்ட தமிழிசை சௌந்தரராஜன்!

''ஆரம்பப் பள்ளி நாட்களில் வட சென்னையில் இருந்தோம். அப்பா சட்டமன்ற உறுப்பினர் ஆனதும், இங்கு வந்து குடியேறி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வசித்தோம். ஓடுகளால் வேயப்பட்ட அழகிய... அதேசமயம் எளிமையான வீடுகள். 'கோஷன் பிளாக்’-ல் 2-ம் எண் வீட்டில் இருந்தோம். பக்கத்து வீட்டில் தி.மு.க-வைச் சேர்ந்த தங்கபாண்டியன்  இருந்தார். எங்கள் வீட்டின் பின் கதவைத் திறந்தால், பரிதி இளம்வழுதியின் வீடு. மதுசூதனன், ரகுமான்கான், தாமரைக்கனி போன்ற அரசியல் பிரபலங்கள் அருகருகே குடியிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

  தங்கபாண்டியனின் மகள் தமிழச்சியும் நானும் தோழிகள். 'தமிழும் இசையும் அருகருகே இருக்கிறார்கள்’ என எங்களைக் கிண்டல் அடிப்பார்கள். அப்போது தமிழச்சியின் சகோதரர் தங்கம் தென்னரசு பள்ளி மாணவர் என நினைக்கிறேன். இங்கு உள்ள ராஜாஜி ஹாலில் நடக்கும் கண்காட்சிகள், திரைப்படப் படப்பிடிப்புகளை வேடிக்கை பார்த்தது நினைவு இருக்கிறது. நீதிமன்றக் காட்சிகள் என்றாலே ராஜாஜி ஹால்தான். ஹாலின் உயரமான படிகளில் ஏறியும் இறங்கியும் சென்று எதிர்க் கட்சி வழக்கறிஞரிடம் சவால் விட்டுச் செல்லும் சிவாஜி, ரஜினி, கமல் என எத்தனையோ

என் ஊர்!

நடிகர்களை இங்கு பார்த்து இருக்கிறேன். 'இந்த ராஜாஜி ஹாலில்தான் எத்தனை நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது? இங்குதான் காமராஜரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது!’ என அப்பாவின் கைப் பிடித்து இந்த ஹாலின் வரலாற்றைக் கேட்டது இன்றும் நினைவு இருக்கிறது.

தலைமைச் செயலகம், மருத்துவக் கல்லூரி, சென்ட்ரல் ரயில் நிலையம், சத்தியமூர்த்தி பவன் என அனைத்தும் இங்கு இருந்து கூப்பிடும் தொலைவில்தான். சமயங் களில் அப்பா மறந்து வைத்துவிட்டுப் போகும் மூக்குக் கண்ணாடி, முக்கியமான ஃபைல்களை எடுத்துக்கொண்டு நடந்தே போய் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கு உள்ள ஆலமர விநாயகர் எனக்கு ரொம்பவே ஆதர்சம். இவரை வணங்கிவிட்டுப்போய்தான் எம்.பி.பி.எஸ்ஸில் அனாடமி, சைக்காலஜி தேறினேன். நல்ல கணவர் அமைய வேண்டும் என்ற என் வேண்டுதலையும் நிறைவேற்றித் தந்தவர் இவர்தான். இந்தக் கோயிலைக் கட்ட அரசு நிதி ஒதுக்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதே சமயம், நாங்கள் வணங்கிய 'இஷ்டலிங்கேஸ்வரர்’ ஆலயம் தலைமைச் செயலகம் கட்டுவதற்காக இடிக்கப்பட்டபோது, மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன்.

இங்கு ஒரு ஹோட்டலும் உண்டு. ஆட்சிகள் மாறும்போது எல்லாம் அந்த ஹோட்டலின் பெயரும், 'அய்யா ஹோட்டல்... அம்மா ஹோட்டல்’ என்று மாறுவதுபற்றி நகைச்சுவையாகப் பேசிக்கொள்வோம்.

சென்னையின் மையப் பகுதியான இங்கு நாங்கள் மாடுகள் வளர்த்தோம் என்றால் நம்ப முடிகிறதா? நாங்கள் வளர்த்த பசுக்களுக்கு என தனி கொட்டகையே உண்டு. அதேபோல் அப்பா வைச் சந்திக்க வருபவர்கள் அமர்வதற்காக வீட்டுக்கு முன் ஓலையால் வேயப்பட்ட குடில் ஒன்றும் இருந்தது. இங்கு பல கட்சிப் பிரபலங்கள் வந்து அமர்ந்து அப்பாவுடன் பேசிவிட்டுச் சென்றதும்,  காங்கிரஸில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்த நேரத்தில் எங்கள் வீட்டில் மூப்பனார் உள்ளிட்ட தலைவர்கள் வந்து ஆலோசனை நடத்தியதும் நினைவில் உள்ளது.

இந்த இடத்துக்கு அருகிலேயே இருந்த கலைவாணர் அரங்கில்தான் என் திருமணம் நடந்தது. பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., கலைஞர் என மூன்று முதல்வர்கள் வந்து இருந்து வாழ்த்தினர். மாற்றுக் கட்சியினரை எதிரிகள்போல் நினைக்கும் இன்றைய அரசியல் நிலைக்கு நேர் எதிர்க் காட்சி கள் அவை.

என் ஊர்!

தலைமைச் செயலகம் வந்த பிறகு இந்த இடம் முற்றிலும் தன் அடையாளத்தைத் இழந்து நிற்கிறது. இப்போது இந்தக் கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்றும் அரசின் திட்டத்தை ஒரு மருத்துவராக வரவேற்கிறேன். ஆனாலும் எனக்குள் இருக்கும் குழந்தை நான் ஓடி விளையாடிய, சுற்றித் திரிந்த தோட்டத்தை இழந்த வருத்தத்தில் அழுதுகொண்டே இருக்கிறாள்!''

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்