Published:Updated:

உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்

உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்
உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்

உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்... மீறினால் கொல்லப்படுவீர்கள்! - திகில் தீவு செண்டினல்

அந்தமான் பக்கத்தில் இருக்கிற குட்டித் தீவு செண்டினல். நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இத்தீவில் இருக்கிற மனிதர்கள் பற்றிய குறிப்புகளைப் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் வலை வீசித் தேடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை அவர்கள் பற்றிய ஒரு துரும்பைக் கூடக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது ஒட்டு மொத்த உலகமும். அவர்களை எப்படி அணுகினாலும் பதிலாக வருவது வில்லும் அம்புகளும்தான். தப்பிப் பிழைத்தவர்கள் வெளி உலகத்துக்குச் சொன்ன செய்திகள் ஒவ்வொன்றும் திகில் ரகம். செண்டினல் தீவு மக்கள் இந்த உலகத்துக்குச் சொல்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான் “உத்தரவின்றி உள்ளே வராதீர்கள்.”

சம்பவம் ஒன்று:

ஆவணப்படக் குழு ஒன்று படப்பிடிப்புக்காக செண்டினல் தீவுக்குப் படகில் செல்கிறது. போகும் பொழுது சில பரிசுப் பொருள்களைக் குழு கொண்டு செல்கிறது. தீவில் கரை இறங்கிய இரண்டொரு வினாடிகளில் நான்கு புறமிருந்து ஈட்டிகளும் அம்புகளும் வந்து விழுகின்றன. பதறிப் போன மொத்த குழுவும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். திரும்பி கரையைப் பார்க்கும்போது  ஒரு அம்பு படகில் வந்து குத்துகிறது. திரும்பி வரக் கூடாது என்பதற்கு எச்சரிக்கைதான் அந்த அம்பு. சம்பவம் நடந்த ஆண்டு 1974

சம்பவம் இரண்டு:

கப்பல் ஒன்று செண்டினல் தீவின் பவளப்பாறைகளில் மோதிக் கரை தட்டி நிற்கிறது. கப்பல் கேப்டன் உதவிக் கேட்டு காத்திருக்கிறார். இரண்டாவது நாள் அதிகாலையில் கரையை நோக்கி சிலர் வருகிறார்கள். உற்றுக் கவனித்ததில் வந்தவர்கள் எல்லோர் கையிலும் வில் அம்பு ஈட்டி என வைத்திருக்கிறார்கள். கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் எல்லோரும் நிர்வாணமாக இருந்திருக்கிறார்கள். ஏதோ ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்த கேப்டன் பதறிப்போய் வயர்லெஸ்ஸில் கடற்படைக்குத் தகவல் சொல்ல ஹெலிகாப்டரில் வந்து எல்லோரையும் மீட்டு வந்திருக்கிறது இந்திய கடற்படை. சம்பவம் நடந்த ஆண்டு 1981. கப்பலின் பெயர் ப்ரைம்ரோஸ். கூகுள் மேப்பில் இப்போதும் இந்த சிதிலமடைந்த கப்பலின் உருவம் தென்படுகிறது.

சம்பவம் மூன்று:

2006 ஜனவரி மாதம் இரண்டு மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு தீவின் கரையில் ஒதுங்குகிறார்கள். இரண்டு நாள்கள் கழித்து அவர்களின் இறந்துபோன உடல்கள் கரை ஒதுங்கி இருக்கின்றன. உடலெங்கும் ஈட்டி குத்திய தடயங்களுடன் கிடந்திருக்கின்றன. உடல்களை மீட்கச் சென்ற கடலோர காவல்படையினரை நோக்கி அம்புகளும் ஈட்டிகளும் வர உடல்களை மீட்காமலே திரும்பி இருக்கிறது கடற்படை.

60000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பழங்குடியினர் வசிக்கிற தீவு செண்டினல். வங்காள விரிகுடா கடலில் இருக்கிறது. உலகம் இத்தீவில் இருக்கிற மக்களை செண்டினலீஸ் என அழைத்துக்கொண்டிருக்கிறது. அந்தமான் தீவுக்கு அருகில் இருக்கும் இந்தத் தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பசுமை சூழ்ந்த காடுகள் அழகிய மணல் பரப்புகளைக் கொண்ட தீவின் மொத்த பரப்பளவு 72 சதுர கிலோ மீட்டர்கள். தீவில் எத்தனைப்  பேர் இருக்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கம் என்ன என்பது பற்றிய எந்தக் குறிப்பும் இதுவரை இல்லை. மரங்களும் செடிகளும் சூழ்ந்திருப்பதால் ஆகாய மார்க்கமாக எடுக்கப்பட்ட படங்களில் அவர்கள் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. விலங்குகள், மீன்களை வேட்டையாடுவதை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். உலகின் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கிற தீவில் 50ல் இருந்து 250 வரை மக்கள் தொகை இருக்கலாம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

2004-ம் ஆண்டு சுனாமியின்போது இந்தத் தீவு அழிந்துவிடும் என நினைத்தவர்களுக்கு எதிர்மறையான பதில்களே கிடைத்திருக்கின்றன. ஆழிப்பேரலையில் எந்தப் பாதிப்பும் நிகழாமல் இருந்திருக்கிறது. சுனாமியை முன் கூட்டியே உணர்ந்த தீவு மக்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்று தப்பித்திருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுனாமிக்கு பிறகான நாள்களில் செஞ்சிலுவைச் சங்கம் சென்டினல் தீவு மக்களுக்கு மருந்து மற்றும் உணவுகளை விமானத்தில் இருந்தபடியே போட்டிருக்கிறது. ஆனால், தீவு மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ஈட்டிகளையும் அம்புகளையும் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். விமானத்தை ஈட்டி பதம் பார்க்க, போன வழியிலேயே திரும்பி இருக்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

இந்தத் தீவுக்குச் சென்று வெற்றிகரமாகத் திரும்பியவர்களும் இருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் திருலோகிநாத் பண்டிட் என்கிறவரின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்கிறது. பல ஆண்டுகளாக அவர்களைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டு பயணித்திருக்கிறார். பல தடைகளுக்குப் பிறகு ஒரு முறை அம்மக்களை சந்தித்திருக்கிறார்கள். குழுவினர் கொடுத்த தேங்காய்களைப் பழங்குடியினர் பெற்றுக்கொண்டு அடுத்த பத்தாவது நிமிடத்தில் குழுவினரை திரும்பிப் போகச் சொல்லி சைகை செய்திருக்கிறார்கள். குழு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு திரும்பியிருக்கிறது.

அந்தமானின் ஜாரவா, கிரேட் அந்தமானிஸ், சென்டினலிஸ் போன்ற பழங்குடியின மக்களிடம்தான் உலகின் ஒட்டு மொத்த மனித வரலாறும் புதைந்து கிடக்கிறது. ஜாரவா இன மக்கள் நவீன மக்களுடன் இணைந்து வாழும்போது பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஜாரவா மக்களிடம் சில வெளிநாட்டுப் பயணிகள் பழங்களைக் கொடுத்து ஆடச் சொல்கிற காணொளி ஒன்றை யூடியூபில் காணமுடிகிறது. பல ஆயிரம் வருடப் பாரம்பர்யம் கொண்ட ஒர் இன மக்களை ஆடச் சொல்லி வேதனைப் பட வைத்திருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். செண்டினல் தீவு மக்கள் வெளி நபர்களை அனுமதிக்காமல் இருப்பதால்தான் இன்னமும் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை அனுமதித்திருந்தால் ஜாரவா இன மக்களுக்கு நேர்ந்ததைப் போல நடப்பதற்குச் சாத்தியம் இருக்கிறது.

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்தீவுக்கு யாரும் போக கூடாது என்ற உத்தரவும் இன்று வரை இருக்கிறது. தீவைச் சுற்றிய மூன்று கடல் மைல்களைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்திருக்கிறது  இந்தியக் கடற்படை. அந்தமான் அரசு 2005-ம் ஆண்டு செண்டினல் மக்களின் வாழ்வியல் மீதும் வாழ்விடங்கள் மீதும் ஒரு போதும் தலையிடப் போவதில்லை என அறிவித்திருக்கிறது.

இறுதியாக ஒரு விஷயம். செண்டினல் என்கிறப்  பெயருக்கு “காவலாளி” என்று பொருள்.

அடுத்த கட்டுரைக்கு