Published:Updated:

என் ஊர்!

தாராபுரத்தில் 1,000 படை வீரர்கள்!

என் ஊர்!

தாராபுரத்தில் 1,000 படை வீரர்கள்!

Published:Updated:
##~##

சூழலியல் பிரச்னைகளையும் காடுகளின் அழிவினால் ஏற்படும் பாதிப்புகள்பற்றியும் தொடர்ந்து பதிவு செய்பவர் தியோடர் பாஸ்கரன். இவரது சினிமா குறித்த வரலாற்றுப் பதிவு நூலான 'ஐ ஆஃப் தி சர்பென்ட்’ நூல் ஜனாதிபதி விருதும் 'இன்னும் பிறக்காத தலை முறைக்கு’ என்னும் சூழலியல் நூல், கனடாவில் இயல் விருதும் பெற்றுள்ளது. இவர் தனது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம், தாராபுரத் தின் நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''தாராபுரம் என்பது பௌத்தம் சார்ந்த பெயராக இருந்துள்ளது. 'தாரா’ என்பது பௌத்த தெய்வத்தின் பெயர். இங்கு ஓடுகின்ற அமராவதி நதிக்குப் பௌத்த மதத்தில், 'சொர்க்கத்தில் பாய்கின்ற நதி’ என்று அர்த்தம். வீரராகவ முதலியார் இந்த ஊரைப்பற்றிய தலபுராணத்தில் இந்தத் தகவலைப் பதிவு செய்து இருக்கிறார். அமராவதி ஒரு வற்றாத ஜீவ நதி.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

தாராபுரம் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. அப்போது திண்டுக்கல்தான் திப்பு சுல்தானின் சாம்ராஜ்யத்துக்குத் தலைநகர். 1804-ம் ஆண்டு கிழக் கிந்திய கம்பெனியின் படை தாராபுரத்தைக் கைப்பற்றியது. அதன் பின்பு தாராபுரம், இந்தியா விடுதலை அடையும் வரை ஆங்கிலேயர்களின் வசமே இருந்தது.

என் ஊர்!

இந்த ஊரில் விவசாயமும் மாட்டு வண்டி செய்யும் தொழிலும்தான் பிரதானம். அடுத்ததாக பாலில் இருந்து நெய், வெண்ணெய் தயாரிக்கும் தொழில். அமராவதி ஆற்றங்கரையில் ஒரு போர்டு ஹை ஸ்கூல் இருக்கும். அந்த ஹை ஸ்கூல் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அங்குதான் நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தேன். ஊருக்கு வெளியே ஆறு இருந்தாலே சும்மா விட மாட்டோம். படிக்கின்ற பள்ளியே ஆற்றங்கரையில் இருந்தால் விடுவோமா? தினமும் ஆற்றில் குதித்து ஆட்டம் போடாமல் வீடு திரும்ப மாட்டோம்.

நான் பள்ளியில் படித்த காலகட்டத்தில் எஸ்.வி.ராஜதுரை என் நண்பர். அவர் இன்று பெயர் சொல்லக்கூடிய சிந்தனையாளராக உயர்ந்து இருக்கிறார். 'தாமரை’ இதழ் ஆசிரியரும் எழுத்தாளருமான விஜயபாஸ்கர், மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், இந்தியா - கனடா தூதர் சிவராமகிருஷ்ணன் என்று பலரும் படித்த புகழ்பெற்ற பள்ளி அது.

1928-ம் ஆண்டு தாராபுரத்தில் வசந்தா டாக்கீஸ் என்று ஒரு டென்ட் கொட்டாயைத் துவக்கினார்கள். மௌனப் படங்கள்கூட அந்த டென்ட் கொட்டாயில் திரையிடப்பட்டது. ஆற்றங் கரையை அடுத்து எனது பொழுதுபோக்கு இடம் வசந்தா டாக்கீஸ்தான். அந்தக் காலத்திலேயே இங்கு டீசல் ஜெனரேட்டர் வைத்து இருந்தார்கள். 1945-ம் ஆண்டு எனக்கு ஐந்து வயது. அப்போது இந்தப் பக்கம் ஒரு போர் விமானம் விழுந்து நொறுங்கிவிட்டது. அதில் உயிர் பிழைத்த மூன்று ஆங்கிலேயர்கள் தாராபுரத்தில்தான் தங்கி இருந்தார்கள்.

என் ஊர்!

இதுவரை நான் எந்தக் கட்டுரையிலும் நாவலிலும் பதிவு செய்யாத ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். உலகப் போரின்போது பிரிட்டிஷ், அமெரிக்க நேச நாடுகளின் படை வீரர்கள் 1,000 பேர் தாராபுரம் முகாமில் தங்கி இருந்தார்கள். என் சிறு வயதில் அவர்கள் காய்கறி வாங்க ஊருக்குள் ராணுவ மிடுக்குடன் வந்ததைப் பார்த்து இருக்கிறேன்.

தாராபுரம் தாலுகா ஆபீஸில் முன்பு தூக்கு மேடை இருந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தத் தூக்கு மேடை பயன்பாட்டில் இருந்ததாகச் சொல்வர்கள். காலப்போக்கில் அந்த மேடையை அப்புறப்படுத்திவிட்டார்கள். இப்படி என் ஊரைப்பற்றிச் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால், என்னைச் சூழலியளாளனாக உருவாக்கியது அமரவாதி ஆற்றங்கரை... என்னை சினிமாவைப்பற்றி எழுதத் தூண்டியது வசந்தா டாக்கீஸ். இப்படி என்னை முழுமையாக உருவாக்கியது தாராபுரம்தான்!''

- கி.ச.திலீபன்