சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு துறை, சொத்துக்களை அள்ளித்தருவதாகவோ அல்லது அழிப்பதாகவோ இருக்கிறது என்றால் அது சர்க்கரைத் துறையாகத்தான் இருக்கும். சர்க்கரை என்பது ஒரு நுகர்பொருளாகும்.  பெரும்பாலான நுகர்பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் நிலையான மற்றும் தொடர் வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.

சர்க்கரை என்பது நுகர்வோர் சந்தையில் தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்று. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 250 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. அதே அளவு தேவையும் இந்தியாவில் உள்ளது. சர்க்கரைப் பயன்பாடு என்பது ஆண்டுக்கு சராசரியாக 2-3% என்ற அளவில் வளர்ச்சி அடைகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கரைத் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் 25 நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தத் துறையில் முதலீடு செய்த சிறு முதலீட்டாளர்கள் 2006-ல் நஷ்டம் கண்டனர். என்றாலும், இதிலும் லாபமடைந்தவர் உண்டு. உதாரணமாக, 2006-ல் பங்கு விலை உச்சத்தை அடைவதற்குமுன் அதிக அளவில் பங்குகளை வாங்கியவர்கள், அவற்றை உச்சம் அடையும் போது விற்றதன் மூலம், 2-3 வருடங்களில் 500 - 1000%  லாபம் பார்த்தனர்.

செக்டார் ரிசர்ச் :  சர்க்கரைத் துறை

இந்தத் துறையின் அமைப்பு, நிறுவனங்களுக்கு ஒத்துவருகிற மாதிரி இருக்காது. அதற்கு முக்கிய மூன்று காரணங்கள்.
 
1. அரசியல்

2. தயாரிப்புத் தன்மை

3. சுழற்சிதன்மை மற்றும் கச்சா எண்ணெய்யில் இதன் பங்கு முதலில், முதல் காரணமான அரசியலை எடுத்துக் கொள்வோம். சர்க்கரைக்கான முக்கியமான மூலப்பொருள், கரும்புதான். அதனை ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயிரிடுகிறார்கள். கரும்புக்கான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மாநில அரசாங்கங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அடிப்படை விலைக்கு மட்டும் மத்திய அரசு ஆலோசனை வழங்குகிறது. ஒவ்வொரு வருடமும் மாநில அரசாங்கங்கள் தொடர்ந்து கரும்பு விலையை ஏற்றி வருகிறதே தவிர, சர்க்கரை விலையைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. சில நேரங்களில் சர்க்கரை விலை 50% குறைவில் இருந்தபோதும் கரும்பு விலையை அரசு 5-10% அதிகரித்து உள்ளது. சந்தையின் போக்கில் இந்தத் தொழில் முழுமையாக இயங்கவிடாமல்

செக்டார் ரிசர்ச் :  சர்க்கரைத் துறை

தடுக்கப்படுகிறது.

பொதுவாக, ஒரு தொழில் முனைவோரின் கட்டுப்பாட்டிலோ அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் இருக்கும்போது அந்தப் பொருளின் விலை அதன் மூலப்பொருட் களின் விலையைப் பொறுத்து மாறுபடும். அப்படி இருக்கும் போது உற்பத்தியாளருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. மாற்றங்களுக்கு ஏற்றவாறு அவர்களது வருமானம் மற்றும் லாபம் மாறும்.

ஆனால், சர்க்கரைத் துறையில் மூலப் பொருளின் விலை அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அதேசமயம், சர்க்கரையின் இறுதி விலை சந்தையின் பிடியில் சிக்கி விடுகிறது. இதனால் சர்க்கரையின் சப்ளை யானது தேவையைவிட அதிகமாக இருக்கும்போது உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

இந்தத் துறை சுழற்சியாக இயங்குவதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. பொதுவாக, கரும்பு சாகுபடியானது அக்டோபர் முதல் மார்ச் வரைதான் இருக்கும். அதிலும், நவம்பர் முதல் பிப்ரவரியில்தான் 90 சதவிகித கரும்பு அறுவடையாகிறது. நான்கு மாதங்களில் உற்பத்தி செய்யும் சர்க்கரையைத்தான் அவர்கள் ஓராண்டு காலத்துக்கு, அதாவது 12 மாதங்களுக்கு சந்தையில் வைத்து விற்க வேண்டிய நிலை உள்ளது. சர்க்கரை ஆலைகள் ஒருவேளை நான்கு மாதத்துக்குள் அனைத்து சர்க்கரையையும் விற்றுவிட்டால், சர்க்கரை விலை பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அதனால் அவர்கள் நிறைய இருப்பைச் சேமித்து விற்க வேண்டியுள்ளது. அதற்காக பல செலவுகளைச் செய்ய வேண்டி உள்ளது. இதற்கான செயல்பாட்டு மூலதனம் அதிகமாகி வட்டிச் செலவு கூடுகிறது.

செக்டார் ரிசர்ச் :  சர்க்கரைத் துறை

மேலும், சர்க்கரை விலை குறையும்போது நிறுவனங்களின் பிரச்னைகள் அதிகமாகின்றன. அவர்களுடைய இருப்புக்கு குறைந்த விலை மட்டுமே கிடைப்பதோடு, கையிருப்புக்கான வட்டி செலவும் அதிகமாகிறது. இந்த நிறுவனங்களுக்குச் சொத்துகள் மீது அதிகக் கடனும், இருப்புகளைச் சேமித்து வைத்துள்ளதில் அதிகக் கடனும் இருக்கும்போது அது பெரிய சரிவை ஏற்படுத்தும். அதனால் சர்க்கரை நிறுவனங்களில் முதலீடு செய்யும்போது, குறைந்த கடன் உள்ள நிறுவனமாகவும், அவர்களது முதலீட்டுக்கும், செயல்பாட்டு பணத் தேவைக்கும் கடன் வாங்காமல் அவர்களுடைய சொந்த பணத்தை உபயோகிக்கும் நிறுவனங்களை  தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது, கடனைவிட அதிகமாக ஈக்விட்டி முதலீடு மற்றும் ரிசர்வ் உள்ள நிறுவனங்களே முதலீட்டுக்கு உகந்தவை.  சொல்லப்போனால், கடனே இல்லாத நிறுவனம் அனைத்து சரிவுகளையும் சமாளிக்கும்.

இரண்டாவதாக கவனிக்க வேண்டிய விஷயம், தயாரிப்புத் தன்மை. கரும்பை உற்பத்தி செய்ய சராசரியாக 18 மாதங்கள் ஆகும். இதுதான் இந்தத் துறையின் சுழற்சித் தன்மைக்கு மிகப் பெரிய காரணமாக இருக்கிறது. ஜூன் 2014-ல் சர்க்கரை விலை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கும்போது, அதிக அளவில் கரும்பு விவசாயம் நடக்கும். இந்த அதிக சாகுபடி 2015 நவம்பர்-டிசம்பர் நேரத்தில் சந்தைக்கு வரும். சர்க்கரை விலையானது 2015 ஜூனிலும் அதே விலையில் இருந்தால்தான் விவசாயிகள் மீண்டும் அதிக கரும்பு சாகுபடி செய்வார்கள். அதன்பின் அடுத்த இரண்டு வருடங்கள் தொடர்ந்து (அக்டோபர் 2015 - அக்டோபர் 2016) அதிக கரும்பு வரத்தால் ஆலைகள் தங்கள் வர்த்தகத்தை அதிகமாக்க அதிக சர்க்கரையை உற்பத்தி செய்யும்.
 
ஒருவேளை அதிகக் கரும்பைப் பிழிந்து உற்பத்தி செய்ய ஆலைகள் முன்வராவிட்டால், விவசாயிகள் வேறு ஏதாவது சாகுபடி செய்ய முடிவெடுத்துவிடுவார்கள். அவர்கள் ஆலைகளுக்குக் கரும்பை விற்கவில்லை எனில், அவர்களால் சந்தையில் அதிகப்படியான கரும்பை விற்க முடியாது. விவசாயிகள் ஒத்துழைக்கா விட்டால் ஆலைகளாலும் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாது. அதனால் ஆலைகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கரும்பின் அளவும், எண்ணிக்கை யும் பெரிது என்பதால் அதனை இறக்குமதி செய்யவும் வாய்ப்பு குறைவு. இதனால் ஆலைகள் அதிக உற்பத்தி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு சர்க்கரை விலை சரிவடைந்து, நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும். அப்படி நடந்தால் நிறுவனம் விவசாயிகளுக்குத் தாமதமாகப் பணம் வழங்கும். இதனைக் காரணம்காட்டி விவசாயிகள் அடுத்த இரு ஆண்டுகளுக்கு உற்பத்தியைக் குறைப்பார்கள். அதனால் அடுத்த 18 மாதங்களில் கரும்பு சப்ளைக் குறைவால் சர்க்கரை விலை அதிகரிக்கத் துவங்கும்.

செக்டார் ரிசர்ச் :  சர்க்கரைத் துறை

ஆக மொத்தத்தில், 36 மாதங்களுக்கு ஒருமுறை (18+18 மாதங்கள்) சர்க்கரை துறை மிகப் பெரிய ஏற்றம் மற்றும் வீழ்ச்சி இரண்டையுமே சந்தித்துவிடும். இதுதான் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. எப்படி இருந்தாலும் 2006-ல் இந்தத் துறை உச்சத்தை அடைந்தபிறகு இதுவரை இந்தத் துறையில் ஏற்றத்துக்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது.  இந்த மூன்று வருட சுழற்சி கடந்த 2006-வது ஆண்டுக்குப்பின் அறுபட்டுள்ளது. இதற்கான இரண்டு காரணங்களைப் பார்ப்போம்.

பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கடந்த 10-12 வருடங்களில் தங்களது சர்க்கரை பிழியும் திறனை அதிகப்படுத்தியுள்ளன. இருபது வருடங்களுக்குமுன், 2500 டிசிடி திறனுடன் ஆரம்பிக்கப்பட்டன (டிசிடி என்பது ஒரு நாளைக்கு பிழியப்படும் கரும்பின் டன் கணக்காகும்). தற்போது ஆலைகள் ஒருநாளைக்கு 80,000 - 1 லட்சம் டிசிடி திறனில் உற்பத்தி செய் கின்றன. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் அதிக உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தியைக் குறைத்து விலையை அதிகரிக்க முயற்சி செய்தால், அவர்களுக்குப் பொருளாதார அளவுகளில் உள்ள பயனை அடைய முடியாமல் போகும்.

பொருளாதாரக் கோட்பாடுகளின்படி, ஒரு பொருள் அதிக அளவில் உற்பத்தியாகிறது என்றால், அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால்தான். மேலும், ஒரு டன்னுக்கான  நிலையான செலவுகளை அதிகரிக்கும். தவிர, மொத்த உற்பத்தியில் தேய்மானம் மற்றும் வட்டி விகிதம் என்பது ஒரு லட்சம் டன்னாக இருந்தாலும் சரி, 50,000 டன்னாக இருந்தாலும் சரி, ஒரே அளவில்தான் இருக்கும். இதனால் ஒரு யூனிட்டுக்கான தேய்மானம் மற்றும் வட்டிச் செலவு அதிகமாகும். அதனால் இந்த நிறுவனங்கள் கடந்த எட்டு வருடங்களாக விலை சரிந்தாலும் உற்பத்தியை அதிகரித்து வந்துள்ளன.  இது போன்ற பல காரணங்களால் சர்க்கரையின் விலை கடந்த எட்டு வருடங்களாக வீழ்ச்சி அடைந்து, நிறுவனங்களின் நஷ்டம் அதிகமாகி உள்ளது.

இரண்டாவதாக, சர்க்கரைக்கு கச்சா எண்ணெய் என்பது மறைமுகப் போட்டியாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின்போது மொலாசஸ் என்ற உபபொருள் கிடைக்கும். அதிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

இது சில ஆட்டோமொபைல்களுக்கு எரி பொருளாகவும், சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இப்படித்தான் சர்க்கரை கச்சா எண்ணெய்க்குப் போட்டியாகிறது.

உலக அளவில் பிரேசில்தான் மிகப் பெரிய சர்க்கரை உற்பத்தியாளர். பிரேசிலில் உள்ள ஆலைகளின் தொழில்நுட்பம், மொலாசஸ் இல்லாமல் நேரடியாக சர்க்கரை மற்றும் எத்தனாலை கரும்பிலிருந்து தயாரிக்கும்படி உள்ளது.
 
உதாரணமாக, நேரடியாக கரும்பிலிருந்து எத்தனாலைத் தயாரிக்கும்போது அதிக அளவில் உற்பத்தி இருக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும்போது ஆலைகள் சர்க்கரை உற்பத்தியில் தங்களது முழுக்கவனத்தையும் செலுத்தும்.

எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் விலை வீழ்கிறதோ, அப்போதெல்லாம் எத்தனால் விலையும் வீழும். கடந்த ஆறு வருடங்களில் இரண்டுமுறை கச்சா எண்ணெய் விலை வீழ்ந்தபோது சர்க்கரை விலையும் பிரேசிலின் அதிக உற்பத்திக் காரணமாக வீழ்ந்துள்ளது. சர்வதேச அளவுகள் விலை விழும்போது இந்திய ஆலைகள் தேவைக்கு அதிகமான சர்க்கரையை ஏற்றுமதி செய்வது என்பது சிரமாகும். அதனால் உள்நாட்டில் அதிக சப்ளை ஏற்பட்டு சர்க்கரை விலை இங்கும் குறையும்.

இந்த விஷயங்களை எல்லாம் முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவில்லை எனில், தவறான சர்க்கரை நிறுவனங்களிலோ அல்லது தவறான சமயத்திலோ முதலீடு செய்து தங்களது சொத்துக்களை இழக்கும் நிலை உருவாகும். 

இந்தப் பாடங்கள் முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில சமயங்களில் நல்ல சர்க்கரைப் பங்குகளில் சரியான தருணத்தில் முதலீடு செய்வதன் மூலம் சொத்து சேர்ப்பதற்கும் உதவும். அதனை எப்படிச் செய்வது என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

(ஆய்வு தொடரும்)