Published:Updated:

பொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்!

பொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்!

##~##

நாட்டுப்புறக் கலைகள் தமிழரின் நாகரிகம், கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. அவற்றில் ஒன்று தோல்பாவைக் கூத்து என அழைக்கப்படும் பொம்மலாட்டம் மூலம் கூத்துக் கட்டும் நாடகக் கலை. இது அரிதாகி விட்டபோதிலும் சேலத்தில் இன்றும் உயிர்ப்புடன் வைத்து இருக்கிறார்கள் பரம்பரை யாக இக் கலையைக் கட்டிக் காத்து வரும் கலைஞர் கள் சிலர்!

 ஸ்ரீ ராமவிலாஸ் கட்டபொம்மன் நாடக சபா மூன்று தலைமுறைகளாக பொம்மலாட்டம் நாடகங்களை நடத்தி வருகிறார்கள். இந்தச் சபாவைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன், ''இந்த கலையைப் பொம்மலாட்டம் என்றும் 'கட்டபொம்மைக் கூத்து’ என்றும் அழைப்பார்கள். இந்த வகையான பொம்மைகள் தமிழகத்தில் சேலத்தைத் தவிர, வேறு எங்கும் இல்லை. இந்தப் பொம்மைகளை மரக் கட்டை, மரத் தூள், புளியங்கொட்டைகளைக்கொண்டு நாங்களே செய்கிறோம். இந்த பொம்மை களுக்கான ஆடைகளையும் நாங்களே தைப்போம்.

ஒரு பொம்மைக்குக் குறைந்தது 10 ஆடைகளாவது அணிவிப்போம். இவை அனைத்தும் விலை உயர்ந்த ஆடைகள். பொம்மைகளுக்கு நெக்லஸ், தோடு, செயின், ஒட்டியா ணம் போன்றவற்றைப் போட்டு அலங்கரிப்போம். இப்படி ஒரு பொம்மைக்கு அலங்காரச் செலவு மட்டும் சுமார் 20 ஆயிரம் ஆகும். எங்க ளிடம் 150-க்கும் மேற்பட்ட பொம்மைகள் இருக்கின்றன. இவற்றை வைத்துதான் காலம் காலமாகக் கதை சொல்லி வருகிறோம்.

பொம்மைகள் அல்ல... குல தெய்வங்கள்!

பெரும்பாலும் புராண, இதிகாசக் கதை களே எங்கள் களம். ராமாயணத்தில் 15நாடகங் களும் மகாபாரதத்தில் 15 நாடகங்களும் நடத்துவோம். அத்துடன் ஏராளமான நீதிக் கதை களையும் எங்கள் பொம்மலாட்ட நாடகம் மூலம் அரங்கேற்றுவோம். லவ குசா, பக்த மார்கண்டேயன், நல்லதங்காள், அரிச்சந்திரா போன்ற நாடகங்களை இன்றும் மக்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.

கடந்த வாரம் அரியானூர் விநாயகா மெஷின் கல்லூரிக்கு அருகில் நல்லதங்காள் நாடகம் போட்டோம். அதைப் பார்த்த கல்லூரி மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள். ஒரு நாடகம் நடத்த 7,000 முதல் 10 ஆயிரம் வரை வாங்குகிறோம். ஆடியோ, ஸ்டேஜ் எல்லாம் எங்கள் செலவு. பொம்மலாட்ட நாடகத்துக்கு என்று ஒரு முறை இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் குடும்பத் தலைவியான அம்மாதான் பெண் பொம்மை களை ஆட்டுவிப்பார். அத்தை ஆண் பொம்மைகளை ஆட்டு விப்பார். அக்கா மிருதங்கம் வாசிப்பார். என்னைப் போன்ற ஆண்கள் கோமாளி, விகடகவி பொம்மைகளை ஆட்டுவிப்பார்கள். கூடவே, ஒவ்வொருவரும் பொம்மை கேரக்டருக்கு வசனம் பேசி, பாட்டுப் பாடுவோம்.

நான் நடத்தும் இந்த பொம்மலாட்டத்தைப் பார்த்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். ஆனால், இந்தக் கலையால் எங்களுக்குப் பெரிய வருமானம் எதுவும் கிடையாது. பாரம்பரியமாக நடத்துகிறோம் என்கிற பெருமைதான். தவிர, இவை எல்லாம் வெறும் பொம்மைகள் அல்ல. எங்கள் குலதெய்வங்கள். அதனால் பொம்மைகளை விற்கவும் மனம் இல்லை. என் காலத்துடன் இந்தக் கலையும் அழிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!''- வேதனை வெம்புகிறது அந்தக் கலைஞனின் குரலில்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

அடுத்த கட்டுரைக்கு