Published:Updated:

“ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 35 பைசா... முட்டை திருடி பட்டம்..!” - கலங்கடிக்கும் அங்கன்வாடி டீச்சர்களின் கதை

“ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 35 பைசா... முட்டை திருடி பட்டம்..!” - கலங்கடிக்கும் அங்கன்வாடி டீச்சர்களின் கதை
“ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 35 பைசா... முட்டை திருடி பட்டம்..!” - கலங்கடிக்கும் அங்கன்வாடி டீச்சர்களின் கதை

“ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 35 பைசா... முட்டை திருடி பட்டம்..!” - கலங்கடிக்கும் அங்கன்வாடி டீச்சர்களின் கதை

பால்ய வயதில் நம்மை மகிழ்வித்த ‘பால்வாடி’ டீச்சர்களை (அங்கன்வாடி மையம்) பலருக்கும் நினைவில் இருப்பதில்லை. பலருக்குப் பால்வாடி வாழ்க்கை மறந்தே போய்விடுகிறது. முட்டைத் திருடி, சத்துமாவுத் திருடி எனப் பல பால்வாடி டீச்சர்களை அவலச் சொற்களால் அடையாளப்படுத்துவார்கள். அரசும் அங்கன்வாடி மையங்கள் மீது அலட்சியப் பார்வையே வைத்துள்ளது. அங்கன்வாடி மையத்துக்கு வரும் ஒரு குழந்தைக்கான காய்கறி செலவாக 1 ரூபாய் 35 பைசாதான் ஒதுக்கப்படுகிறது என்றால் நம்புவீர்களா? இதுபோல் இன்னும் பல அதிர்ச்சிகள் இருக்கின்றன. கொஞ்சம் நேரம் ஒதுக்கி, பால்வாடி டீச்சர்களின் துயரத்தை கேளுங்கள். 

கோயமுத்தூரில் உள்ள ஓர் அங்கன்வாடி மையத்தின் ஆசிரியர் அவர். “ஏழைக் குழந்தைகளின் அஸ்திவாரமே இந்த அங்கன்வாடி மையங்கள்தான். ஒரு குழந்தை சமூகத்தில் சந்திக்கும் முதல் படியே இதுதான். ஆனால், முதல் படியையே இந்த அரசாங்கம் மோசமாக வைத்துள்ளது. அதைப்பற்றி கேட்கவோ, பேசவோ இங்கு யாருமில்லை. இன்னைக்கு தேதியில் தக்காளி எவ்வளவு விலை விற்குது? வெங்காயம் என்ன ரேட்டு? இது எதுவும் அரசாங்கத்துக்குத் தெரியாதா? 2014-ம் வருஷத்துக்கு முன்னாடி வெறும் 56 பைசாதான் கொடுத்திட்டிருந்தாங்க. இப்போ, ஒரு அங்கன்வாடி மையத்துக்கு 20 குழந்தைகள். ஒரு குழந்தைக்கு 1 ரூபாய் 35 பைசாதான் கொடுக்கிறாங்க. 20 குழந்தைகளுக்கு 27 ரூபாய். இந்த 27 ரூபாயில் என்ன செய்ய முடியும்னு நீங்களே சொல்லுங்க.

இது மட்டுமா? சமையல் கேஸுக்கான மானியம் போக எவ்வளவோ, அந்தத் தொகையைத்தான் மாநில அரசு கொடுக்குது. ஆனால், இன்னைக்கு வரைக்கும் மத்திய அரசு ஒருமுறைகூட மானியத்தொகையை கணக்கில் செலுத்தலை. முறையான பதிலும் இல்லை. அதுக்கும் எங்களின் கையிலிருந்துதான் பணம் போட்டு வாங்கறோம். எங்களுக்குச் சம்பளமோ 6710 ரூபாய்தான். சத்துணவு மாவு விநியோகப் பணிக்காக தனியாக 3000 ரூபாய் கொடுக்கிறாங்க. முப்பது வருஷமா நான் வேலை பார்க்கிறேன். வருஷத்துக்கு 500 ரூபாய் ஏத்திருந்தாலும் என் சம்பளம் எங்கேயோ போயிருக்கும். வீட்டு வேலைக்குப் போயிருந்தால்கூட இதைவிட அதிகமா சம்பாதிக்கலாம். எங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கிறதை ஏன் இந்த அரசாங்கம் யோசிக்க மாட்டேங்குது? ஊருக்குள்ளே சிலர் எங்களுக்கு முட்டைத் திருடி பட்டம் கொடுப்பாங்க. 20 குழந்தையில் ஒண்ணு ரெண்டு குழந்தைங்கதான் வராமல் போயிடுவாங்க. அன்னைக்கு அந்த முட்டையை ஆயம்மாவோ நாங்களோ சாப்பிடுவோம். நாலு ரூபா முட்டையவெச்சு நாங்க மாடி வீடா கட்டிக்கப் போறோம்?'' என்றவர் ஆதங்கம், தொடர்கிறது.

''அதுமட்டுமா? பெரும்பாலும் வாடகை கட்டடங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு, ஆறு மாசத்துக்கு ஒருமுறைதான் வாடகைத் தொகையைப் போடுது இந்த அரசாங்கம். பில்டிங் ஓனர்கிட்ட நாங்கதான் கெஞ்சி கூத்தாடணும். ஒரு வாடகைக் கட்டடத்தை காலி பண்ணி இன்னொரு கட்டிடத்துக்கு அங்கன்வாடியை மாற்றும் சூழல் வந்துச்சுன்னா, அதுக்கான அட்வான்ஸ் தொகையையும் நாங்கதான் கொடுக்கணும். போதாத குறைக்கு, வி.ஹெச்.என் (வில்லேஜ் ஹெல்த் நர்ஸ்) அவங்க வேலைகளையும் எங்ககிட்ட தள்ளிவிட்டுடுறாங்க. வீடு வீடாக மாத்திரைகலை கொண்டுபோய் கொடுக்கிறதில் ஆரம்பிச்சு இன்னும் பல வேலைகளை எங்க தலையில் கட்டிட்டு அவங்க சொகுசா உட்காந்துப்பாங்க. அவங்களுக்குத்தான் அதிகமான சம்பளம். நாங்க எதிர்த்தும் பேச முடியாது. அப்படி கேள்விகேட்டால், புராஜெக்ட்டுக்கு சரியா ஒத்துழைக்கலைன்னு மேலிடத்தில் புகார் பண்ணிடுவாங்க.

எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை. இவ்வளவையும் கடந்து இங்கே வேலை பார்க்க காரணம், இந்தக் குழந்தைகளின் முகத்துக்காகத்தான். இங்கே வரும் முக்கால்வாசி குழந்தைகளின் பெத்தவங்க கூலி வேலை செய்யறவங்க. ரெண்டுப் பேருமே வேலைக்குப் போயிடுவாங்க. அந்த நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நாங்கதான் அம்மா, அப்பா எல்லாமே. எங்களை நம்பி ஒப்படைச்சுட்டுப் போகும் குழந்தைகளைப் பார்த்துக்கும் சந்தோஷம்தான் எங்களின் ஒரே ஆறுதல். அரசாங்கம் அங்கன்வாடி மையங்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும் எந்த வசதிகளையும் செஞ்சுகொடுக்காமல் புறக்கணிக்கிறதை நினைக்கும்போது, சில நேரங்களில் கோபத்தில் வேலைஅயி விட்டுடலாம்னு தோணும். அப்பவும் இந்தக் குழந்தைகளின் முகங்கள் மனசுக்குள் வந்து தடுக்கும்.

ஒரு நாள் கலெக்டர் ஆபிஸுக்குப் பக்கமா போயிட்டிருந்தேன். தமிழ்நாடு அரசு என எழுதியிருந்த ஒரு ஜீப்பிலிருந்து ஒருத்தர் தலையை நீட்டி, 'டீச்சர்... டீச்சர்'னு கூப்பிட்டார். நான் சுத்தி சுத்திப் பார்க்கிறேன். வேற யாருமில்லை. பெரிய ஆபிஸர் கணக்கா உட்கார்ந்திருக்கிறவர் நம்மளையா டீச்சர்னு கூப்பிடுறார். நம்மைபோய் யாருக்கு ஞாபகம் இருக்கப்போகுதுனு முழிச்சுட்டு இருக்கும்போதே, அவர் ஜீப்பிலிருந்து குதிச்சு ஓடிவந்தார். 'நான்தான் டீச்சர், விக்கி. உங்ககிட்டேதான் அங்கன்வாடியில படிச்சேன்’னு ரெண்டு, மூணு விஷயங்களைச் சொல்றார். எனக்கு ஞாபகத்துக்கு வரலை. கொஞ்சம் தயக்கத்தோடு, 'உங்களைகூட போடி... போடி’னு சொல்வேனே'னு சொன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. 'அய்யோ... அதை என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவுதான் இழுத்துப்பிடிச்சு உட்காரவெச்சு கொஞ்சினாலும், 'போடி’னு சொல்லிட்டு, எழுந்து ஓடின குட்டிப் பயல் விக்கி, எவ்வளவு பெரிய ஆளா வளர்ந்து, கவர்மெண்டு ஆபிஸரா என் முன்னால் நிற்கிறான் என நினைச்சு ஆச்சர்யம் தாங்கலை. ரொம்ப நேரம் என்கிட்டே பேசினான். வீட்டுக்குக் கூப்பிட்டான். இந்த மாதிரியான சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் எங்களை மாதிரியான பால்வாடி டீச்சர்களுக்கு பெரிய பரிசு. அந்தப் பரிசுக்காகவும் குழந்தைகளின் சிரிப்புக்காகவும்தான் இயங்கிட்டு இருக்கோம் தம்பி'' எனச் சொல்லி கலங்கும் கண்களை நாசுக்காகத் துடைத்துக்கொள்கிறார் அந்த டீச்சர். தப்பு... தப்பு... பல குழந்தைகளின் தாய்.

அடுத்த கட்டுரைக்கு