Published:Updated:

ஒயிட் காலர் ஜாப் ரெடி! வங்கிகளில் 7,000 பணியிடங்கள்

ஒயிட் காலர் ஜாப் ரெடி! வங்கிகளில் 7,000 பணியிடங்கள்
ஒயிட் காலர் ஜாப் ரெடி! வங்கிகளில் 7,000 பணியிடங்கள்

ஒயிட் காலர் ஜாப் ரெடி! வங்கிகளில் 7,000 பணியிடங்கள்

ஒயிட் காலர் ஜாப்புக்கு எப்பவுமே மவுசுதான். அதிலும் வங்கியில் வேலை என்றால் சொல்லவும் வேண்டுமா! ஐ.டி பணிகளில் இருப்பவர்கள்கூட வங்கிப் பணிக்குத் தேர்வு எழுதி வங்கி வேலையில் சேர்கிறார்கள். நல்ல வேலை, நிறைவான சம்பளம், சமூக அந்தஸ்து என்பதால், வங்கி வேலைக்கு பலரும் போட்டிபோடுகிறார்கள். 

தற்போது பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர, மற்ற வங்கிகளில் 7,875 க்ளெர்க் பணிகளுக்கான தேர்வை நடத்த, `இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலெக்‌ஷன்' (IBPS) என்ற அமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 7,875 இடங்களில், தமிழ்நாட்டில் மட்டும் 1,277 பணியிடங்கள் இருக்கின்றன. இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 03.10.2017. 

பட்டதாரி இளைஞர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பாக 20 முதல் 28 வயது வரை நிர்ணயித்திருந்தாலும், பொதுப்பிரிவைத் தவிர இதர பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு உண்டு. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு மூன்று ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரையிலும் விலக்கு வழங்கப்படுகிறது. 

IBPS தேர்வின் மூலம் அலாகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இண்டியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, சிண்டிக்கேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி போன்றவற்றில் பணி வாய்ப்பைப் பெறலாம். 

விண்ணப்பிக்க விரும்புவோர் www.ibps.in என்ற இணையதளத்தில் `CWE Clerks' என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்னர், உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும், உங்களுடைய கையெழுத்தையும் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தில் ஒருமுறை தகவல் குறிப்பிட்டால் அதை மாற்ற முடியாது என்பதால், மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். 

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கான விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாய். இதர பிரிவினருக்கான கட்டணம் 600 ரூபாய். விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்க்கிங், மொபைல் வேலட் போன்றவற்றின் மூலமும் செலுத்தலாம். 

விண்ணப்பிப்போருக்கான பயிற்சித் தேர்வை, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேங்கிங் பர்சனல் செலெக்‌ஷன் (IBPS) அமைப்பு நடத்துகிறது. இந்தத் தேர்வு,  சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது. 

முதல்நிலை தேர்வு, டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. டிசம்பர் கடைசி வாரத்தில் தேர்வுக்கான முடிவு அறிவிக்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், ஜனவரி மாதத்தில் முதன்மைத் தேர்வு எழுத வேண்டும்.  இது, சென்னை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் நடைபெறும். 

முதல்நிலை தேர்வு, ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் ஆங்கிலம் (30 கேள்விகள்), எண்ணியல் திறன் (35 கேள்விகள்), ரீசனிங் திறன் (35 கேள்விகள்) என மூன்று பிரிவுகளில் 100 கேள்விகள் கேட்கப்படும். முதன்மைத் தேர்வு 160 நிமிடம் நடைபெறும். இதில் பொது மற்றும் நிதி சார்ந்த விழிப்புஉணர்வு (50 கேள்விகள்), ஆங்கிலம் (40 கேள்விகள்), ரீசனிங் திறன் மற்றும் கணினி அறிவியல் (50 கேள்விகள்), எண்ணியல் திறன் (50 கேள்விகள்) என நான்கு பிரிவுகளில் 190 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 200 மதிப்பெண். தேர்வுகளில் தவறாக விடையளித்தால், 0.25 மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். கவனத்துடன் விடையளிக்க வேண்டும். 

* `முதல்நிலை தேர்வில், எண்ணியல் திறன் (Numeric Abilitiy) கேள்விகள் கடினமானவை' என நினைப்பவர்களும் உண்டு. இந்தக் கேள்விகள், எட்டு மற்றும் அதற்கும் குறைந்த வகுப்பு வரையிலான கணிதப் பாடங்களிலிருந்து கேட்கப்படுவதால், கூடுதல் பயிற்சி பெற்றால் எளிதில் பதிலளிக்கலாம். 

* ரீசனிங் திறன் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க, நிறைய `ஷார்ட் கட்' முறைகள் இருக்கின்றன. இதுகுறித்த புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆங்கிலம் சார்ந்த கேள்விகளும், பள்ளி அளவிலான ஆங்கில இலக்கணத்திலிருந்துதான் கேட்கப்படுகின்றன என்பதால், பள்ளிப் பாடநூல்களில் உள்ள ஆங்கில இலக்கணங்கள் குறித்து கவனம் செலுத்தலாம். 

* தேர்வுக்கு, இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. இந்த இரண்டு மாதங்களையும் முழுதாகப் பயன்படுத்தி, முறையான பயிற்சி பெற்றால் விரைவில் முதன்மையான நிலையை அடையலாம். நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப்பார்க்கலாம். இவ்வாறு செய்யும்போது, குறுகிய காலத்திலேயே வங்கித் தேர்வில் தேர்ச்சிபெற வாய்ப்புகள் ஏராளம். 

வாழ்த்துகள்!

அடுத்த கட்டுரைக்கு