ரிதன்யா சொன்னதைக் கேட்டு அந்த ஏ.சி. அறையிலும் தன் சதைப்பிடிப்பான சதுர முகத்தில் மெலிதாய் வியர்த்தார் யோகானந்த். நெற்றியைத் தன் இடதுகையின் ஆட்காட்டி விரலால் அவஸ்தையாய்த் தேய்த்துக்கொண்டே அவளை ஏறிட்டார்.

''நள்ளிரவு வானவில்! இப்படியொரு வார்த்தையை நான் இன்னிக்குத்தான் கேள்விப்படறேன்.''

ரிதன்யா தன் இதழ்க்கோடியில் மெலிதாய் புன்னகையொன்றை நெளியவிட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒரு யானையைக் கூடையால மூடிவைக்க முடியாது மிஸ்டர் யோகானந்த்..!''

''அப்படீன்னா, நான் பொய் சொல்றேனா?''

''பொய் என்கிற வார்த்தையை நான் யூஸ் பண்ணலை. நீங்கதான் சொன்னீங்க.''

யோகானந்த் தன் இடது கையின் ஆட்காட்டி விரலை சற்றே கோபத்தோடு உயர்த்தினார்.

''லுக்... மிஸ் ரிதன்யா..!''

''ஸாரி... ஐயாம் மிஸஸ் ரிதன்யா ஹரிகிருஷ்ணன்!''

''ஓ.கே... மிஸஸ் ரிதன்யா! நான் சட்டத்தை மதிக்கிற ஆசாமி. இந்த பொய், புரட்டு, பித்தலாட்டம் என்கிற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன். நீங்க போலீஸ் டிபார்மென்ட்டிலிருந்து வந்திருக்கீங்க என்கிற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் எனக்கு முன்னால் உட்கார வெச்சு பேசிட்டிருக்கேன்...''

''ஸாரி ஸார்...! நீங்க இங்கே என்னைப் பார்த்து பேசறதைத் தவிர்த்திருந்தா நாளைக்கு நீங்க மெஜஸ்டிக் சர்க்கிளில் இருக்கிற சைபர் க்ரைம் பிராஞ்ச் ஆபீஸுக்கு வர வேண்டி இருந்திருக்கும். ஒரு ரெப்யூட்டட் ஐ.டி. கம்பெனியின் எம்.டியான உங்களுக்கு அது மாதிரியான ஒரு அசௌகரியத்தை கொடுக்கக் கூடாதுனுதான் நானே உங்களைப் பார்க்க வந்தேன்.''

''ஸோ... இது ஒரு என்கொயரி?''

''யெஸ்...''

''அபௌட் வாட்?''

''நள்ளிரவு வானவில்.''

''சத்தியமா எனக்குப் புரியலை!''

''இந்த கம்பெனியோட எக்ஸிக்யூட்டிவ் எம்.டியார்னு நான் தெரிஞ்சுக்கலாமா?''

''என்னோட சன் ரூபேஷ்..!''

''ப்ளீஸ் கால் ஹிம். அவருக்கு இந்த 'நள்ளிரவு வானவில்’ பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு!''

யோகானந்த் தன் கோபப் பார்வையால் ரிதன்யாவை ஒரு பத்து விநாடி நேரம் வரை தகனம் செய்துவிட்டு, மேஜையின் மேல் இருந்த இ்ன்டர்காம் ரிஸீவரை எடுத்து பட்டனை அழுத்தி, ''ரூபேஷ்! ஒரு பத்து நிமிஷம் என்னோட ரூம் வரைக்கும் வந்துட்டுப் போ!'' என்று இயந்திரத்தனமாகப் பேசி, ரிஸீவரை சத்தமாக வைத்துவிட்டு, வெளிநாட்டு மினரல் வாட்டர் பாட்டிலை எடுத்து ஒரு வாய்த் தண்ணீரைத் தொண்டைக்குக் கொடுத்தார்.

ஸ்பிலிட் ஏ.சியின் ரீங்காரம் மட்டும் சன்ன மாய்க் கேட்டுக்கொண்டிருக்க, ரிதன்யாவும், யோகானந்தும் விநாடிகள் மரணமடைவதை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மூன்று நிமிடங்கள் முழுவதுமாய் கரைந் திருந்தபோது ரூபேஷ் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். இருபத்தைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள் தோற்றம் காட்டினான். திமிறிய தோள்பட்டைகளில் முறையான உடற்பயிற்சி தெரிந்தது. காது மடல்களின் நுனிகளும், மூக்கு நுனியும் தினமும் சாப்பிடும் உயர்தர ஒயின் உதவியால் அமெரிக்க லைஃப்பை வாங்கி மினுமினுத்தன. அணிந்திருந்த 'ஸ்பெடில்வேர்’ சூட் அவனுடைய ஆறடி உயர உடம்புக்கு நேர்த்தியாய் பொருந்தியிருந்தது. ஸ்ப்ரே செய்திருந்த கோல்ட் ஃப்ளேம் சென்ட் ஏ.சியின் உதவியால் மூச்சை அடைக்கிற மாதிரி மணத்தது.

நள்ளிரவு வானவில்!

தன்னுடைய அப்பாவையும், எதிரில் உட்கார்ந்திருந்த ரிதன்யாவையும் ஒரு குழப்பப் பார்வையால் நனைத்துக்கொண்டே காலியாக இருந்த நாற்காலியொன்றில் உட்கார்ந்தான்.

''என்ன டாடி... எனிதிங்க் இம்பார்ட்டன்ட்?''

''யெஸ்... இவங்க யார்னு தெரியுதா?''

ரிதன்யாவை மறுபடியும் ஒரு தடவை பார்த்துவிட்டு தன்னுடைய தோள்கள் இரண்டையும் மெலிதாய் 'ஜெர்க்’ செய்தான்.

"

நள்ளிரவு வானவில்!

ஸாரி டாட்... யார்னு தெரியல.''

''ஷி ஈஸ் ரிதன்யா ஃப்ரம் சைபர் க்ரைம் பிராஞ்ச்.''

ரூபேஷின் புருவங்கள் சில மில்லிமீட்டர்கள் உயர்ந்து, நெற்றியின் மையத்தில் முடிச்சு கொண்டன.

''ஓ! காவல்துறை... மேடம் என்ன விஷயமா வந்திருக்காங்க?''

ரிதன்யா பேச்சில் குறுக்கிட்டாள்.

''ஒரு என்கொயரி''

''ரிகார்டிங் வித்..?''

‘‘A MIDNIGHT RAINBOW. தமிழில் சொல்றதா இருந்தா நள்ளிரவு வானவில்.''

''நள்ளிரவு வானவில்..? ஏதோ ஒரு கவிதை புத்தகத்தோட தலைப்பு மாதிரி இருக்கு!''

ரிதன்யா சற்றே குரலை உயர்த்தினாள்.

''மிஸ்டர் ரூபேஷ்! இப்படியெல்லாம் போலித் தனமா பேசி நீங்க என்னை என்கொயரியிலிருந்து டைவர்ட் பண்ண முடியாது. 'நள்ளிரவு வானவில்’ என்கிற வார்த்தைக்கும், உங்க ளுடைய ஐ.டி. கம்பெனியான 'அல்டிமேட் வொண்டர்ஸு’க்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதா எங்களுடைய சைபர் க்ரைம் பிராஞ்சுக்குத் தகவல் கிடைச்சது. அது ஒரு விபரீதமான சங்கேத வார்த்தையா இருக்கலாம்ங்கிறது இன்டலிஜென்ஸ் 'ஸ்பை விஸ்’கோட கணிப்பு. அவங்க கணிப்பு சரியா, இல்லையானு தெரிஞ்சுக்கத்தான் இங்கே வந்திருக்கேன்!''

ரிதன்யாவை ஒரு புன்னகையோடு பார்த்தான் ரூபேஷ். ''நீங்க கேட்ட இந்தக் கேள்விக்கு என்னோட அப்பா என்ன பதில் சொன்னார்?''

''தெரியாதுனு சொன்னார்.''

''அதையே ஒரு ஜெராக்ஸ் எடுத்து என்னோட பதிலா நீங்க பதிவு பண்ணிக்கலாம்!''

''மிஸ்டர் ரூபேஷ், நீங்களும் உங்க அப்பாவும் ரொம்ப நேரத்துக்கு இப்படி கேலியும் கிண்டலுமா

பேசிட்டு இருக்க முடியாது. உண்மையைச் சொல்ல வேண்டிய வேளை எந்த நிமிஷத்திலும் வரலாம்!''

''ஈஸிட்..! அப்படீன்னா அந்த நிமிஷம் வர்ற வரைக்கும் நாம வெயிட் பண்ணலாமே!''

ரிதன்யாவின் ஒட்டுமொத்த உடம்பும் ஒரு கோபத்தவிப்புக்கு உட்பட்ட விநாடி அவளுடைய கைப்பையில் இருந்த செல்போன் பியானோ வாசிப்பை ரிங்டோனாக வெளியிட்டது. எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தாள்.

சி.பி.சி.ஐ.டி. சைபர் க்ரைம் செல்லில் இருந்து டி.எஸ்.பி. நம்பெருமாள் ரிதன்யாவை அழைத்துக் கொண்டிருந்தார்.

செல்போனை காதுக்கு ஒற்றினாள்

''ஸார்! நான் ரிதன்யா...''

மறுமுனையில் அவர் சற்றே பதற்றத்தோடு பேசினார். ''ரிதன்யா, நான் இப்போ பேசறதை மட்டும் கேட்டுக்கோ. பதில் எதுவும் பேசாதே. இப்போ நீ யோகானந்த் ரூம்லதானே இருக்கே?''

''ஆமா ஸார்!''

''உபயோகமான தகவல் ஏதாவது கிடைச்சுதா?''

''இல்ல... ஸார்''

''சரி, இப்போ டவர் கிடைக்கலைனு வெளியே வந்து யாரும் கேட்டுவிடாதபடிக்கு கொஞ்சம் எச்சரிக்கையோடு பேசு. ஏன்னா, நான் இப்போ சொல்லப் போகிற விஷயம் ரொம்பவும் முக்கியம்!''

ரிதன்யா ஜாக்கிரதையானாள் 'ஏதோ விபரீதம்... இல்லையென்றால் சீஃப் இவ்வளவு டென்ஷனாக பேசமாட்டார்!’

சில விநாடிகள் மௌனமாக இருந்துவிட்டு மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் ''ஸாரி ஸார், உங்க வாய்ஸ் பிரேக் ஆகுது. சரியா டவர் கிடைக்கலைனு நினைக்கிறேன். வெளியில வந்து பேசறேன் ஸார்...''

சொல்லிக்கொண்டே எழுந்தவள், இரண்டு பேரையும் பார்த்து 'எக்ஸ்க்யூஸ் மீ’யை உதிர்த்துவிட்டு அறைக்கு வெளியே வந்து நீளமான வராந்தாவில் நடந்து சாலையைப் பார்த்தபடி இருந்த ஜன்னலுக்குப் பக்கமாய் போய் நின்றுகொண்டு இடது காதுக்கு செல்போனைக் கொடுத்தாள்.

''ஸார்! வெளியே வந்துட்டேன். என்ன விஷயம் ஸார்?''

''என்ன சொல்றாங்க அப்பாவும் மகனும்?''

''நோ... ரெஸ்பான்ஸ் ஸார். 'நள்ளிரவு வானவில்’ என்கிற வார்த்தையை நான் சொன்னதும் அவங்க எந்த ஒரு ரியாக்‌ஷனையும் காட்டல. இனிமேல்தான் கொஞ்சம் ஃபோர்ஸ் பண்ணணும்!''

''வேண்டாம் ரிதன்யா... நீ அவங்ககிட்டே என்கொயரியை ஸ்மூத்தா முடிச்சுக்கிட்டு உடனடியா அந்த இடத்தைவிட்டு புறப்பட்டுரு!''

''ஏன் ஸார்?''

''நள்ளிரவு வானவில் மேட்டரை நமக்கு இன்ஃபார்ம் பண்ணின கலியுகம் டி.வி. ரிப்போர்ட்டர் இரண்டாம் நாரதர் இப்போ உயிரோட இல்லை.''

''எ... என்னாச்சு ஸார்?''

நள்ளிரவு வானவில்!

''சென்னையிலிருந்து இப்பத்தான் தகவல் வந்தது. அரைமணி நேரத்துக்கு முந்தி ஓ.எம்.ஆர். சாலையில் பைக்கில் போய்க்கிட்டு இருந்த இரண்டாம் நாரதரை, ஒரு மர்ம கும்பல் வழி மறிச்சு அரிவாளால் சரமாரியா வெட்டியிருக்காங்க... ஆள் ஸ்பாட்லயே இறந்துட்டார்!''

ரிதன்யாவின் காதோடு ஒட்டியிருந்த செல்போன் மெலிதான ஒரு நடுக்கத்துக்கு உட்பட்டது. நெற்றியும், புறங்கழுத்தும் வியர்வையில் பொடித்தன.

'இது சாதாரண விவகாரம் போல் தெரியவில்லை!’ பயம், கவலை கலந்த யோசனையோடு பார்வையை மெல்ல திருப்பினாள். விழிகள் நிலைத்தன.

சற்றுத் தொலைவில் ரூபேஷ் தெரிந்தான். அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

சென்னை.

போலீஸ் கமிஷனர் அலுவலகம். காலை பதினோரு மணி.

கமிஷனர் ராஜகணேஷ் தனக்கு எதிரில் அரைவட்டம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த சந்திரசூடன், அபிராமி, மீரா, பார்த்தசாரதி எல்லோரையும் பொதுப் பார்வை பார்த்துக் கொண்டு பேசினார்.

''மண் சட்டியில் வைக்கப்பட்டிருந்த சாம்பல் உண்மையிலேயே மனித உடலின் சாம்பலா அல்லது வேறு ஏதாவது ஒரு பொருளோட சாம்பலான்னு... ஃபாரன்ஸிக் எக்ஸ்பர்ட்ஸ் ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. அதனுடைய ரிசல்ட் வந்த பிறகுதான் போலீஸாலே ஒருமுறையான விசாரணையைத் தொடங்க முடியும்.''

முகம் இருண்டு போயிருந்த ரிட்டையர்ட் ஜட்ஜ் பார்த்தசாரதி, கண்கள் வெகுவாய் கலங்கிப் போயிருக்க, குரல் தழுதழுத்தார்.

''இன்னிக்குக் காலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு ஃப்ளைட் ஏறுறதுக்கு முன்ன என்னோட சன் ஞானேஷ் பேசினானே! ஒன்பது மணிக்குள்ளே சென்னை வந்துருவேன். பத்து மணிக்கெல்லாம் மீராவை பெண் பார்க்க போயிடலாம்ன்னு சொன்னானே?''

''அது ஞானேஷோட வாய்ஸ்தானா?''

''சந்தேகமேயில்லை... அது என் சன்னோட வாய்ஸ்தான்!''

''ஞானேஷ் அந்தக் குறிப்பிட்ட டெல்லி ஃப்ளைட்ல டிராவல் பண்ணியிருந்தா ஃப்ளைட்டோட ட்ரிப் ஷீட்டில் அவரோட பேர் இருந்திருக்கணுமே?''

''இப்ப என்னோட குழப்பமே அதுதான்!''

''மீராவோடு டெலிபோனில் பேசின அந்த நபர், ஞானேஷ் நேற்றைக்கே டெல்லியிலிருந்து சென்னை திரும்பிட்டதா சொல்லியிருக்கான். அது உண்மையா இருக்கும்பட்சத்தில், ஞானேஷ் அதை உங்ககிட்டே மறைக்க வேண்டிய அவசியம் என்ன?''  கமிஷனர் ராஜகணேஷ் கேட்கவும்... பார்த்தசாரதி தீர்க்கமாய் தலையாட்டினார்.

''இதுநாள் வரைக்கும் ஞானேஷ் என்கிட்டே எந்த ஒரு விஷயத்தையும் மறைச்சது கிடையாது. சின்ன வயசிலேயே அம்மாவை இழந்துட்ட அவனை, கண்ணும் கருத்துமா வளர்த்தவன் நான். விளையாட்டுக்குக்கூட என்கிட்டே பொய் பேசினது இல்லை. மீராவை பெண் பார்க்க புரோக்கர் ஏற்பாடு பண்ணினபோது நான் ஞானேஷுக்கு போன் பண்ணி 'நீ டெல்லியில் எந்தப் பெண்ணையாவது காதலிக்கிறியா... அப்படி ஏதாவது இருந்தா இப்பவே சொல்லிடு'னு கேட்டப்ப, 'அப்பா! நீங்க பார்த்து எந்தப் பெண்ணை கட்டி வெச்சாலும் எனக்கு ஓ.கேதான்'னு சொன்னான்.''

சந்திரசூடன் இப்போது கமிஷனரை ஏறிட்டார்.

''ஸார்! மாப்பிள்ளை ஞானேஷ்கிட்டே நானும் ரெண்டு தடவை பேசியிருக்கேன். அவர் பொய் பேசுகிற நபராகவோ, தப்பான நபராகவோ இருக்க வாய்ப்பில்லை!''

கமிஷனர் ஏதோ பேச முயற்சித்த விநாடி அவருடைய உதவியாளர் பக்கத்தில் வந்து நின்றார்.

''ஸார்...! உங்களைப் பார்த்து பேசறதுக்காக மணிகண்டன்னு ஒருத்தர் வந்து வெயிட் பண்ணிட்டிருக்கார்.''

''விஷயம் என்னான்னு கேட்டீங்களா?''

''கேட்டேன் ஸார்... ஞானேஷைப் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னார்!''

கமிஷனர் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

''மொதல்ல அவரை உள்ளே அனுப்புங்க!''

உதவியாளர் அங்கிருந்து வேகமாக நகர, பார்த்தசாரதியிடம் திரும்பினார் கமிஷனர்.

''யார் அந்த மணிகண்டன்?''

''தெரியலையே!''

எல்லோரும் காத்திருக்க அந்த மணிகண்டன் ஒரு தயக்கமான நடையோடு உள்ளே வந்தான்.

இளைஞன். முப்பது வயதுக்குள் இருந்தான். சிரத்தையாக 'ட்ரிம்’ செய்யப்பட்ட தாடியும் மீசையும் லேசான ஒரு கறுப்பு கோட்டிங்குக்கு உட்பட்டு அவனுடைய சிவப்பு நிறத்தை இன்னமும் வெளிச்சம் போட்டுக் காட்டின. கமிஷனரைப் பார்த்து தயக்கமாக 'விஷ்’ செய்துவிட்டு கலக்கம் நிறைந்த சன்னமான குரலில் சொன்னான்.

''ஸார்! எம்பேரு மணிகண்டன். ஞானேஷோட ஃப்ரெண்ட். ராயப்பேட்டையில் இருக்கிறதென்றல் அப்பார்ட்மென்ட்டில் ஸ்டே பண்ணியிருக்கேன். கொஞ்ச நேரத்துக்கு முந்திதான் ஞானேஷ் சம்பந்தப்பட்ட அந்த விபரீதமான விஷயம் தெரிய வந்து அதிர்ந்துட்டேன். நேத்து ராத்திரி அவன் அந்த பார்ட் டிக்குப் போயிருக்கக்கூடாது ஸார். நான் வேண்டாம்னு சொல்லியும் அவன் கேட்கல!''

எல்லோரும் திடுக்கிட்டுப் போனவர்களாய் மணிகண்டனைப் பார்த்தார்கள்.

''என்னது! ஞானேஷ் நேத்தைக்கு சென்னையில் இருந்தானா?''

''ஆமா ஸார்! ரெண்டு நாளைக்கு முன்னாடியே டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்துட்டான். என்கூடத்தான் 'ஸ்டே’ பண்ணியிருந்தான்.''

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism