##~## |
தமிழ் சினிமாவின் 'எவர்க்ரீன் ஃபேவரைட்’ ஸ்பாட்... மதுரை! ஆனால், சமீப நாட்களாக மதுரை, தேனி, போடியை அடுத்து கோலிவுட்டின் பார்வை, கரிசல் காட்டு கந்தக பூமியான விருதுநகரின் மேல் பதிந்து இருக்கிறது. மற்ற ஊர்களைப்போல பச்சைப் பசேல் வயல் எதுவும் விருதுநகரில் கிடையாது. ஆனாலும், ஆர்வமாக சினிமாக்காரர்கள் வருவதற்குக் காரணம்... சென்டிமென்ட். முன்பு எல்லாம் பக்தித் திரைப்படங்களில் மட்டும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலைக் காட்டுவார்கள். அதுதான் தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக விருதுநகரின் பங்களிப்பு. சொந்த ஊர் பாசத்தில் 'வெயில்’ படத்தின் பெரும் பகுதிகளை விருதுநகரில் படம் பிடித்தார், வசந்தபாலன். 'வெயில்’ படம் வெற்றி பெற, சினிமாக்காரர்களின் பார்வை விருதுநகரின் மேல் பதிந்தது. சமுத்திரக்கனி 'நாடோடிகள்’ படத்தை ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் படமாக்கினார். 'நாடோடிகள்’ ஹிட் ஆனதும், விருதுநகரில் ஷூட்டிங்வைத்தால் வெற்றி என்னும் சென்டிமென்ட் பரவியது. 'ரேணிகுண்டா’ படத்தில் ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் நடப்பதுபோல் காட்டப்பட்ட காட்சிகள் எல்லாம் விருதுநகரில் படம் பிடிக்கப்பட்டவையே. 'பூ’ படமும் இந்தக் கந்தக பூமியில்தான் பூத்தது. இப்போது லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடிக்கும் 'வேட்டை’ படத்தின் சண்டைக் காட்சிகள் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கோலிவுட் சென்டிமென்ட்டுகளுக்குப் போட்டியாக விருதுநகரில் இருந்தே ஒருவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துவிட்டார். நகைக்கடை அதிபர் ரங்கராஜன், புதிய அறிமுகங்களைவைத்து 'விருதுநகர் சந்திப்பு’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். படம் முழுக்க விருதுநகரைச் சுற்றிச் சுற்றியே படம் பிடிக்கப்படுகிறது. ரங்கராஜனிடம் பேசியபோது, ''பொதுவாக, தென் மாவட்டங்களில் சினிமா ஷூட்டிங் என்றால் அது காரைக்குடி பகுதியில்தான் அதிகம் நடக்கும். அதைவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை என்று படம்பிடிப்பார்கள். ஆனால், சமீப நாட்களாக விருதுநகரில் படம் எடுத்தால் அது ஹிட் ஆகும் என்று சென்டிமென்ட் பரவி விட்டது. அதனால், நானும் விருதுநகரையே மையமாகவைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன். படம் நிச்சயம் ஹிட் ஆகும். விருது நகருக்கு இன்னும் நல்ல பெயரை வாங்கித் தரும்'' என்கிறார் நம்பிக்கையோடு!
- எம்.கார்த்தி, படங்கள்: என்.ஜி.மணிகண்டன்