Published:Updated:

என் ஊர்!

அரியாங்குப்பம் போராட்ட பூமி!

என் ஊர்!

அரியாங்குப்பம் போராட்ட பூமி!

Published:Updated:
##~##

புதுவையில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள், சுற்றுச்சூழல் போராட்டங்கள், ஈழ ஆதரவுப் போராட்டங்கள் என்றால் அங்கு கருஞ்சட்டையுடன் களம் இறங்கி நிற் பார்... லோகு அய்யப்பன்! புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவரான இவர், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இலங்கை அகதிகளுக்கு உதவியதாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஆனால், 28 நாட்களிலேயே வழக்கை முறியடித்து விடுதலையானார். பொது வாழ்க்கைக்கும் போராட்டங்களுக்கும்  தன்னை ஒப்புக் கொடுத் ததால், இதுவரை இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. போராட்டத்தை ஆடையாக அணிந்துகொண்டவர், தன் ஊரான அரியாங்குப்பம் குறித்த நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

என் ஊர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் பிறந்தது அரியாங்குப்பம், உப்புகாரத் தெரு. ஊருக்கு அரியாங்குப்பம்னு பெயர் வர முக்கியக் காரணமே பக்கத்தில் இருக்குற அரிக்கமேடுதான். அரிக்கமேடு, பண்டைக் கால தமிழர்களின் வணிகத் திறமைக்கான எடுத்துக்காட்டு. கி.பி 50-களில் ரோமானியர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சுவடுகள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள், மணிகள்னு பல தொன்மையானப் பொருட்கள் இப்பவும் இருக்கு. இதனாலேயே அரிக்கன்குப்பம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அரியாங்குப்பம் என்று மருவியது. ஊரைச் சுற்றி தென்னந்தோப்பு,  மாந்தோப்புகள் என்று பசுமை பாய் விரிக்கும். இங்கு எவ்வளவு பலத்த மழை பெய்தாலும் தண்ணீர் நிற்காமல் ஆற்றில் கலந்து விடும்படியாக இயற்கையிலேயே அமைந்து இருக்கிறது.

எனக்குப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் இல்லை. அரியாங்குப்பம் நடுநிலைப் பள்ளியில் படிக்கும்போது அம்மா கொடுக்கும் காசில் பள்ளி இடைவேளையில்,  கதவு வழியாகக் கைவிட்டு குச்சி ஐஸ், ஆரஞ்சு மிட்டாய், மாங்கா பத்தை, சீனி மிட்டாய், நெல்லிக்காய்னு வாங்கித் தின்போம். அரியாங்குப்பம் ஒரு காலத்தில் கழனிப் பகுதியாக இருந்தது. அங்கேதான் நண்பர்களுடன் விளையாடியது. ஆனால், இப்போது மிஞ்சி இருப்பது திரௌபதி அம்மன் ஆலயம் மட்டும்தான். அங்கே இருந்த தென்னந்தோப்புகளில் சின்ன வயசில் கோட்டிப் புல்லு விளையாடுவது, கூட்டாஞ்சோறு செய்வது, கிணத்தில் குதிச்சு நீந்துவது, கழனிப் பகுதியில் தவக்களை அடிக்கிறதுனு விளையாட்டா பொழுதுபோச்சு. இங்கே 350 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாதா கோயில் இருக்கு. இப்போதும் வேளாங்கண்ணி மாதாக் கோயிலுக்குப் பாத யாத்திரை போறவங்க, இந்த மாதாக் கோயிலில் தங்கிட்டுப் போவாங்க. ஒரு காலத்தில் இங்கு ஆர்டீஷியன் நீரூற்று இருந்தது. ஆனால், இப்போ கடல் நீர் நிலத்தடி நீரோடு கலந்து, பல அடிகள் ஆழத்துக்கு போர் போட்டால் தான் கொஞ்சமாவது நல்ல தண்ணீர் கிடைக்கும் நிலை.

என் ஊர்!

17 வயதில் பள்ளிப் படிப்பை முடித்த காலத்தில் பெரியார் சிந்தனைகள் மீது ஈர்ப்பு வர, முழு நேரப் பெரியாரியல்வாதியா மாறினேன். என் அப்பா, ஒரு பஞ்சாலைத் தொழிலாளி, கம்யூனிஸ்ட். இந்தக் குடும்பப் பின்னணியும் என்னைப் பெரியாரிடம் கொண்டுசேர்த்தது. நண்பர்களோடு இணைந்து 'தமிழ் தளிர்க் கழகம்’னு ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டுக்கொண்டு இருந்தேன். 1983-ல் இலங்கையில் நடந்த இனக் கலவரம் என்னை முழுமையாகப் புலிகள் ஆதரவாளனாக மாற்றியது. தீப்பந்தம் ஏந்தி ஜெயவர்த்தனாவின் கொடும்பாவியை எரித்ததுதான் என் முதல் ஈழ ஆதரவுப் போராட்டம். பிறகு, பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடியதால் என் மீது முதல் வழக்குத் தொடரப்பட்டது.

ஈழ ஆதரவாளனாக இருக்கும் காரணத்துக்காகவே இதுவரை மூன்று முறை சிறைக்குச் சென்றுள்ளேன். 'ராவணன்’ படிப்பகம் என்ற ஒன்றை ஆரம்பித்து, ஒவ்வொரு பிரச்னையை ஒட்டியும் துண்டு அறிக்கைகளை விநியோகிப் போம். பாரதியார் பல்கலைக்கழகத்தின் முறைகேடுகளில் ஈடுபட்ட கல்லூரி முதல்வருக்கு, எதிரான போராட்டம், பார்வதிஷா தன் கணவரின் தம்பியால் கொலை செய்யப் பட்டபோது நடத்திய போராட்டங்கள், பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பசு வதைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, மாட்டு இறைச்சி சமபந்தி நடத்தியது என்று தொடர்ச்சியாகப் போராட்டங்கள். வெறுமனே சமூகப் பிரச்னைகளுக்காக மட்டும் இல்லாமல், மக்கள் குடியிருப்புப் பகுதியில் கடலோரக் காவல் படைகளை விரிவாக்கம் செய்ததை எதிர்த்துப் போராடியது,

என் ஊர்!

2,700 கோடி திட்ட மதிப்பீட்டில் தேங்காய்த் திட்டுப் பகுதியில் ஆழ்கடல் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்தியது என்று சூழல் சீர்கேடுகளுக்கு எதிராகவும் போராடி வருகிறேன்.

என் ஊர்!

மக்களையும் மண்ணையும் நேசிப்பவர்கள் மட்டுமே போராட முடியும். அந்த வகையில் நான் என் மக்களையும் அரியாங்குப்பம் மண்ணையும் பெரிதும் நேசிக்கிறேன்!''

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்