Published:Updated:

ஹீரோக்களை நம்பாமல் பிரச்னைகளை நீயே எதிர்கொள்! #ElAmericano

சுரேஷ் கண்ணன்
ஹீரோக்களை நம்பாமல் பிரச்னைகளை நீயே எதிர்கொள்! #ElAmericano
ஹீரோக்களை நம்பாமல் பிரச்னைகளை நீயே எதிர்கொள்! #ElAmericano

‘சூப்பர் ஹீரோக்களை நம்பாமல் உங்களது திறமைமீது நம்பிக்கைவைத்து உங்கள் பிரச்னைகளை நீங்களே எதிர்கொள்ள முயலுங்கள்’ என்கிற அழுத்தமான செய்தியை வேடிக்கையான அனிமேஷன் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் திரைப்படம், El Americano. 

மெக்ஸிகன் – அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான இந்தப் படத்தின் வசனங்களிலும் காட்சிகளிலும் நிறைய ஸ்பானிஷ் வாசனை. கிளிகள்தான் பிரதான பாத்திரங்கள். மெக்ஸிகோவில் உள்ள க்யூகோ என்கிற ஆண் கிளி, அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சாகசத் தொடருக்கு அடிமை. அந்தத் தொடரில் வரும் சூப்பர் ஹீரோவை (El Americano) ரொம்பவும் பிடிக்கும். அதன் வெறித்தனமான ரசிகன், க்யூகோ. 

க்யூகோவின் தந்தை கிளி, ஒரு சர்க்கஸ் கம்பெனியின் உரிமையாளர். மரபுச் சார்ந்த சர்க்கஸ்மீது மரியாதையும் பெருமையும் உண்டு. ‘இவர்கள் பழைய சர்க்கஸ் விளையாட்டுக்களையே விளையாடி போரடிக்கிறார்களே’ என்று மகனுக்குச் சலிப்பு. தன் கனவு நாயகன் மற்றும் சூப்பர் ஹீரோவான El Americano, தொலைக்காட்சியில் செய்யும் சாகசங்களை, சர்க்கஸ் விளையாட்டிலும் முயன்று பார்க்க க்யூகோவுக்கு ஆசை. தந்தையோ, பாரம்பரிய விளையாட்டுக்களில் புதுமையைப் புகுத்தி சிதைத்துவிடக்கூடாது என்று தடுத்துவிடுகிறது. 

க்யூகோவின் தந்தைக்கு ஒரு பழைய எதிரி உண்டு. அதன் பெயர், மார்ட்டின். அது ஒரு மரங்கொத்தி பறவை. இந்த சர்க்கஸ் கம்பெனியை கைப்பற்றுவது மார்ட்டினின் நீண்ட கால லட்சியம். சர்க்கஸ் நிறுவனம் யாருக்கு உரிமை என்கிற அடையாளத்தை உறுதிப்படுத்தும் சிவப்பு நிற அங்கியைக் கைப்பற்ற நீண்ட காலமாக முயற்சி செய்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போட்டியில் அது தோற்றுவிடுட்டது. எனவே, க்யூகோவின் தந்தையைப் பழிவாங்க கொலைவெறியுடன் காத்திருக்கிறது. 

புதிய சாகசங்களை சர்க்கஸில் ஈடுபடுத்த சொல்லும் மகனின் ஆலோசனையை முயன்றுதான் பார்ப்போமே என்று மனம் மாறும் க்யூகோவின் தந்தை, ஒருநாள் அனுமதி அளிக்கிறது. உற்சாகமான க்யூகோ, அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது. சர்க்கஸ் புதிய வடிவம் பெறுகிறது. தொலைக்காட்சியில் பார்த்தே கற்றுக்கொண்ட சாகசங்களை ஒத்திகைப் பார்க்கிறது. இந்த ஒத்திகை அற்புதமாக அமையவும், க்யூகோவின் தந்தைக்கு மகிழ்ச்சி. 

இந்தப் புதிய வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் அடையும் மார்ட்டின், தனது அடியாள்களை ரகசியமாக அனுப்பி, சர்க்கஸ் அரங்கின் கட்டுமானத்தில் கோளாறை ஏற்படுத்துகிறது. சிவப்பு அங்கியையும் திருடிவரச் சொல்கிறது. அசட்டுத்தனமான அடியாள்கள் முதல் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்கள். இந்தக் கோளாறின் காரணமாக ஏற்படும் விபத்தில் க்யூகோவின் தந்தைக்கு கால் முறிந்துப்போகிறது. ‘தானே இதற்குக் காரணம்’ என வருந்துகிறது க்யூகோ. அதன் தந்தை பலவீனமாக இருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கும் மார்ட்டின், அடியாள்களுடன் வந்து சிவப்பு நிற அங்கியையும் சர்க்கஸ் கம்பெனியையும் அபகரிக்கத் திட்டம் போடுகிறது. இந்தத் தகவலை கேள்விப்படும் க்யூகோ, ‘தந்தைக்குக் காலில் அடிபட்டுள்ளது. நானோ சிறு பையன். என்ன செய்வது? சூப்பர் ஹீரோவான El Americano உதவிக்கு வந்தால், மார்ட்டினுடன் ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ என்று சண்டைப் போட்டுக் காப்பாற்றும்' என நம்புகிறது. 

ஆனால், அதற்கு ஹாலிவுட் செல்ல வேண்டுமே? என்ன செய்வது? வயதான மந்திரவாதி ஒன்றின் உதவியை நாடுகிறது க்யூகோ. ஹாலிவுட்டுக்குச் செல்வதற்கான மேப் கிடைக்கிறது. பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு தன் நண்பர்களுடன் ஹாலிவுட்டை நோக்கிச் செல்கிறது க்யூகோ. அடியாள்களுடன் வரும் மார்ட்டின், அந்தச் சிவப்பு நிற அங்கியை, க்யூகோ பயணத்தில் எடுத்துச் சென்றுவிட்டதை அறிந்து ஆத்திரம் அடைகிறது. ‘எப்படியாவது அவர்களின் பயணத்தை தடுத்து, அங்கியைக் கைப்பற்றி வாருங்கள்’ என்று உத்தரவிடுகிறது. க்யூகோ ஹாலிவுட்டுக்குச் சென்றதா? அந்தப் பயணத்தில் சந்தித்த சவால்கள் என்ன? தனது கனவு நாயகனைச் சந்தித்து உதவி பெற்றதா? - இதற்கெல்லாம் விடை சொல்கிறது இந்த அனிமேஷன் திரைப்படம். 

க்யூகோ என்கிற கிளி, தன் குடும்பத்துக்கு ஏற்படும் சிக்கலைத் தீர்க்க, ஹாலிவுட் ஹீரோவை நம்பிச் செல்லும் பயணமும், வழியில் நிகழும் சம்பவங்களும் மிக மிக சுவாரசியம். அதன் நண்பர்கள் செய்யும் லூட்டி தனி ரகம். ‘எங்கே உணவு கிடைக்கும், எங்கே தூங்க இடம் கிடைக்கும்?' என்று அனத்திக்கொண்டேயிருக்கும் நாரை, சிவப்பு அங்கி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை தன் சின்னஞ்சிறு தலையில் மறைத்து வைத்திருக்கும் பறவை என நண்பர்களின் பாத்திர வடிவமைப்புகள் அழகான நகைச்சுவை. இதுபோலவே, வில்லன் மார்ட்டினின் முட்டாள் அடியாள்கள் செய்யும் தவறுகளும் நகைச்சுவை ரகம். அதில் ஒன்று, ஜிப்ரிஷ் மொழியில் வேகமாகப் பேசுவதும், இன்னொன்று அதைச் சமாளித்து உரையாடுவதும் கலகல காட்சிகள். பார்வை சரியில்லாத எலி ஒன்று, தன்னை அசகாய சூரனாக நினைத்துக்கொண்டு, இல்லாத பார்வையாளர்களை கற்பனை செய்தவாறு, மேடையில் குத்துச்சண்டை செய்யும் தற்பெருமைக் காட்சிகள் ரகளை. 

மிகுந்த சிரமத்துடன் தன் சூப்பர் ஹீரோவைச் சந்திக்கிறது க்யூகோ. அதுவும் ஒரு கிளியே. ஆனால், அப்போது அந்த ஹீரோவுக்கு ஏற்படும் ஆபத்தையே க்யூகோதான் தடுக்கிறது. '‘நான் தொலைக்காட்சியில் செய்வதெல்லாம் போலி. உண்மையான வீரன் நீதான். என்னை மட்டுமல்லாது, உன் பயணத்தில் நேர்ந்த ஆபத்துக்களிலிருந்து உன் நண்பர்களை காப்பாற்றியதும் நீதான். எனவே, உனக்கு ஏற்பட்டிருக்கும் சவாலையும் நீயே எதிர்கொள்ள முடியும்” என்று ஹீரோ சொல்வதே திரைப்படத்தின் மையச் செய்தி. தொலைக்காட்சி தொடரில் வில்லனாக நடிப்பவரும் தன் நண்பனே என்றும் அந்த ஹீரோ சொல்வதை கேட்டு வாய் பிளக்கிறது க்யூகோ. 

Ricardo Arnaiz மற்றும் Mike Kunkel இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், அடிப்படையில் மெக்ஸிகன் படம் என்பதால், ஆங்கிலத்துடன் ஸ்பானிஷ் வசனங்களும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கலாச்சாரத்தின் இசையும் வசீகரிக்கிறது. எந்த நாட்டின் கலைஞராக இருந்தாலும் ஹாலிவுட்டின் மீது ஒரு கண் இருக்கும் என்ற உண்மையையும் இந்தத் திரைப்படம் உணர்த்துகிறது. கையினால் வரையப்பட்ட ஓவியங்களைப் போன்ற காட்சிகளின் பின்னணியில் உள்ள இந்த அனிமேஷன் திரைப்படம், அழுத்தமான வண்ணங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படங்களையே பார்த்தவர்களுக்கு, இந்த மெக்ஸிகன் திரைப்படம் வித்தியாசமான அனுபவத்தைத் தரும். 

கிளிகளுடன் ஓர் உற்சாக பயணம் செய்ய இந்தப் படத்தை குழந்தைகளுடன் கண்டு மகிழலாம்!