Published:Updated:

ஊர் கூடி உறி அடிப்போம்!

ஊர் கூடி உறி அடிப்போம்!

##~##

ர் கூடித் தேர் இழுப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இது ஊர் கூடி உறியடிக்கும் திருவிழா!

 கிருஷ்ண ஜெயந்தி அன்று விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பூனாம்பட்டு கிராமத்தில் உறியடித் திருவிழா! ஊருக்குள் நுழைந்ததும் மேள தாள ஒலி, கொஞ்சம் கொஞ்சமாகத் திசைகளை ஆக்கிரமித்து, அதிரவைத்து திருவிழா குதூகலத்தை உண்டாக்குகிறது.  ஊரின் மையத்தில் இருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க... சீர் வரிசையுடன் ஊர்வலம் ஆரம்பம். யாதவ இனத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இதைத் தொடங்கி வைக்க வேண்டும் என்பதால் முறைப்படி கண்ணன் என்பவரை அழைத்து வந்தனர்.

கோயில் வாசலில் நடப்பட்டு இருக்கும் கம்பத்தின் இரண்டு பக்கங்களிலும் கலயங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு இருந்தன. அந்தக் கலயத்தில் பால், தயிர், நவதானியங்கள் இருக்குமாம். கம்பத்தின் மையத்தில் தர்ப்பப் பைப் புல்லில் தேங்காய், வாழைப் பழம், வெற்றிலை, காசுகள்வைத்துக் கட்டி, அவற்றை ஒரு கயிற்றில் முடிந்து, அதன் முனையை ஒருவர் பிடித்து இழுக்க... ஆரம்பிச்சாச்சு உறியடி உற்சவம்!

ஊர் கூடி உறி அடிப்போம்!

முதலில் இளைஞர்கள் சிலர் நீளமான குச்சியால் கலசத்தை அடிக்க... 'விட் டேனா பார்’ என்று இரண்டு திசை களில் இருந்தும் தண்ணீர் ஊற்றத் தொடங்கினர். கடுமையான போராட்டத்துக்குப் பின் கண்ணன் வெற்றிகரமாக உறியை அடித்தார். வெற்றிப் புன்னகையுடன் அடுத்தவருக்குக் குச்சியைக் கைமாற்றி விட்டார். ஒருவர் பின் ஒருவர் என்று ஊரில் இருந்தவர்கள் களம் இறங்கினர். மஞ்சள் தண்ணீரை ஊற்றி உறியை அடிக்கவிடாமல் செய்வதும், உறி அடிப்பவர் மேல் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதாகச் சொல்லிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் இளம் பெண்கள் மீது தண்ணீர் ஊற்றி விளையாடுவதுமாக ஊரே உற்சாக வெள்ளத்தில் நீந்தியது.

ஊர் கூடி உறி அடிப்போம்!

''பல மாமாங்கமா நடக்குது இந்த விளையாட்டு. கிருஷ்ணர் யாதவ குலத்தில் பிறந்தார்னு மகா பாரதத்தில் சொல்லி இருக்கிறதால், அவங்களைச்  சிறப்பிக்கிறதுக்காகச் சீர்வரிசை, மேள தாளத்துடன் அழைச்சுட்டு வந்து உறி இழுக்க வைப் போம். அதற்குப் பிறகு ஊரில் இருக்குற மற்ற சாதிக்காரங்க உறியை சிறப்பிப்பாங்க. இந்த நிகழ்ச்சியோட நோக்கமே... ஊரில் இருக் கும் எல்லோரும் சாதி, மதங்களை மறந்து சந்தோஷமாக இருக்கணும்னுதான்!'' என்றார் ஊர்ப் பெரியவரான சுதர்சன் ராமனுஜதாசன்.

அதுதானே எல்லாருக்கும் வேணும்!

- காசி.வேம்பையன், படங்கள்: ஆ.நந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு