Published:Updated:

ஆசனம், தியானம், சமாதி... அ.தி.மு.க-வினருக்கு அமித்ஷாவின் யோகா க்ளாஸ்!

ஆசனம், தியானம், சமாதி... அ.தி.மு.க-வினருக்கு அமித்ஷாவின் யோகா க்ளாஸ்!
ஆசனம், தியானம், சமாதி... அ.தி.மு.க-வினருக்கு அமித்ஷாவின் யோகா க்ளாஸ்!

ஒரு பக்கம் லோக்கல் கேபிள் சேனலைக்கூட விட்டுவைக்காமல் யோகா வகுப்பெடுக்கிறார் பாபா ராம்தேவ். இன்னொரு பக்கம், மோடியே ஜமுக்காளம் சகிதம் களத்தில் இறங்கி யோகப்பயிற்சிகளை மேற்கொள்கிறார். இப்படி சர்வமும் யோகமயமாக இருக்கும் நிலையில் இப்போதைய பார்ட்னர்களான தமிழக அ.தி.மு.க-வின் தலைவர்களும் பா.ஜ.க-வின் தலைவரும் சந்தித்துக்கொண்டால் அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை.

அமித்ஷா: யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றால், பாரதிய ஜனதாவும் அ.தி.மு.க-வும் இப்போது எப்படி இணக்கமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு உடம்பும் மனதும் இணக்கமாக இருக்க வேண்டும். 
தினகரனோடு இருக்கும் 18 எம்.எல்.ஏ-க்களை அ.தி.மு.க-வோடு இணைக்க வேண்டுமானால்... ஸாரி, உடம்பையும், மனதையும் இணைக்க வேண்டும் என்றால் இந்த ஆசனங்கள் அவசியம். முதலில் அடிப்படையைத் தெரிந்துகொள்வோம். பதஞ்சலி யோக சூத்திரத்தில் மொத்தம் 185 சூத்திரங்கள் உள்ளன.

பழனிசாமி: ஆளுக்கு ஒரு சீட்... ச்சீ சூத்திரம்னாலும் எங்கக்கிட்ட 111 எம்.எல்.ஏ-க்கள்தான்ஜி இருக்காங்க. நீங்க கேட்கிற அளவுக்கு எம்.எல்.ஏ. வேணும்னா கர்நாடாகாவுல இருந்து காங்கிரஸ் கட்சியை உடைச்சு கொண்டுவந்தாதான் உண்டு. 

அமித்ஷா: அரசியல் கணக்கை சரியா போடணும்ன்னா அமைதியா யோசிக்கணும். அதுக்காகத்தான் உங்களுக்கு நான் இப்ப யோகா சொல்லித்தரேன். கொஞ்சம் நேரம் அரித்மெட்டிக்கை மறந்துட்டு அஷ்டாங்க யோகா பற்றி கேளுங்கள். அஷ்டம் என்றால் எட்டு. எட்டு அங்கங்கள் கொண்ட யோகா என்று பதஞ்சலி இதற்கு பொருள் கொடுக்கிறார். அதாவது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹரம், தாரானை, தியானம், சமாதி என்பதுதான் அந்த எட்டும். 

பன்னீர்செல்வம்:  இதில தியானம், சமாதி என்ற இரண்டு பற்றி எனக்கு நல்லா தெரியும். இதை நீங்க எனக்கு போன பிப்ரவரி மாசமே கத்துக்கொடுத்துட்டீங்க அமித்ஜி. மிட்நைட் வேளையில மெரினாவுல அம்மா சமாதியாண்ட திடீர்னு நான் பண்ண அந்த தியானம், டீ மாஸ்டரான என்னையே யோகா மாஸ்டர் அளவுக்கு உயர்த்துச்சே ஜி. 

அமித்ஷா:  வெரிகுட். உங்க அளவுக்கு எல்லோருமே யோகாவுல எக்ஸ்பர்ட்டா இருக்க மாட்டாங்க. ஏன்னா நீங்க, பழனிசாமின்னு ஒரு சிலருக்குத்தானே ஜெயலலிதாஜி நேரிடையாக யோகா கத்துக்கொடுத்திருக்காங்க. அதுவும் சட்டையை இரண்டா மடிக்கிறது போல நின்ற நிலையிலேயே உடம்பை அப்படியே இரண்டா மடிச்சு அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் நீங்க பண்ண பாதாங்குஸ்தாசனம் சூப்பரோ சூப்பர். சரி, இப்ப எட்டு அங்கங்களில் முதலாவதான இயமம் பற்றி பார்க்கலாம். இயமம் என்றால் உரிமை கொண்டாடாமல் இருப்பது. 

ஜெயக்குமார்: நாங்க எங்க ஜி உரிமை கொண்டாடினோம்? காவிரியில தண்ணீர் கிடையாதுன்னு சொன்னீங்க. சரின்னு சொன்னோம். காவிரி மேலாண்மை வாரியம் கிடையாதுன்னு சொன்னீங்க. ஓகேன்னு சொல்லிட்டோம். 'காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் நாடாளுமன்றம் தலையிடலாம்'னு சொன்னீங்க. டபுள் ஓ.கே.ன்னு சொல்ற மாதிரி வாயை மூடிக்கிட்டு இருக்கோம். அடுத்து தஞ்சாவூரூ மேட்டூரு எல்லாம் தமிழ்நாட்டுதே இல்லைன்னு சொன்னாலும் அதுக்கும் இரண்டு கையையும் இரண்டு தாடையில் வைச்சு மகராசனம் செய்து சரின்னுதான் தலையாட்டுவோம். ஏன்னா மகராசனம் செய்தபடியே எப்படி தலையாட்டணும்ன்னு எங்க புரட்சிதலைவி அம்மா எங்களுக்கு நல்லா கத்துக் கொடுத்துட்டு போய் இருக்காங்க. 

அமித்ஷா: சரி சரி, கூல். இந்தாங்க பதஞ்சலி பன்னீர் சோடா குடிங்க. அடுத்ததா நாம பார்க்கப் போறது நியமம்.

பன்னீர்செல்வம்: நியமனமா? ஐயய்யோ அதை மட்டும் பண்ணிடாதீங்க. நீங்க தமிழ்நாட்டுக்குனு ஆளுநரை நியமனம் பண்ணிட்டா அப்புறம் நாங்க பொழப்பு நடத்தவே முடியாது. சட்டுனு ஆட்சியைக் கலைச்சுடுவாங்க. நியமனம் எல்லாம் வேணாம் ஜி. ப்ளீஸ்!

அமித்ஷா: சரி அது வேணாம் அப்போ! நாம இப்போ ப்ராணாயாமம் பத்தி தெரிஞ்ச்சுக்கலாம். ப்ராணாயாமம்ன்னா சுவாசக் கட்டுப்பாடு. மூச்சை இழுத்துப் பிடிக்கிறது.

செங்கோட்டையன்: அட இதுல தெரிஞ்சுக்க என்ன இருக்கு எல்லாருக்கும் நல்லா தெரியுமே! நீட் இல்லைன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல கொண்டுவந்து கழுத்தறுத்தப்போவும் சரி, அதனால ஒரு உயிர் பறிபோனப்பவும் சரி, மூச்சை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு கமுக்கமாதானே இருந்தோம் நாங்க எல்லாரும்! இட்ஸ் ஆல் இன் த கேம்யா!

அமித்ஷா: அதுவும் சரிதான். அப்போ அடுத்து இருக்குற ப்ரத்யாஹாரம்ன்னா என்னனு பார்த்துடலாம். அப்படின்னா ஐம்புலன்களை அடக்கி ஆள்தல்னு அர்த்தம். இது ரொம்பக் கஷ்டமான பயிற்சி. அவ்வளவு ஈஸியா எல்லாம் பண்ணிட முடியாது.

எடப்பாடி: அட என்னா ஜி நீங்க? 'ரெய்டு'னு ஒரு வார்த்தை நீங்க சொன்னா போதும். எங்களைக் கேட்காமயே எங்களோட ஐம்புலன்களும் அடங்கிடும். இதுக்கு எதுக்கு பயிற்சி எல்லாம் கசகசன்னு?

அமித்ஷா: எல்லாத்துக்கும் இப்படி ரெடியா இருந்தா எப்படிங்க? சரி, அடுத்த அங்கம் 'தாரானை'. அப்படின்னா உள்ளங்களை ஒருங்கிணைத்தல்'னு அர்த்தம்.

பன்னீர்: ஆளுக்கு ஒருபக்கமா சிதறிக் கிடந்த எங்க எல்லாரையுமே ஒரு செகண்ட்ல ஒருங்கிணைச்சுட்டீங்க. உங்களைவிட இந்த டாபிக்கை நல்லா நடத்த யாரு இருக்கா? நடத்துங்க நடத்துங்க.

அமித்ஷா: அய்யோ இப்படிலாம் புகழ்ந்தா எனக்கு கன்டென்ட் மறந்துடுமே! அய்யோ மறந்தும் போச்சே. சரி நாம கடைசி அங்கத்துக்கு போய்டுவோம். கடைசியா ஆசனம். அதுலயும் ரொம்ப முக்கியமானது பத்மாசனம். இதில் சனம் என்ற வார்த்தை சனங்களை குறிப்பதில்லை. அதனால் அதை அமைச்சர்கள் எப்போதும் போல சுத்தமாக மறந்துவிடுவது நல்லது. இது மிகவும் முக்கியமான ஆசனம். நீட் பரிட்சையில்கூட கேட்பார்கள். காரணம் பத்மா என்றால் தாமரை. அதுதான் நம்ம பார்டியோட சிம்பல். அதனால் நீங்கள் எல்லாம் என்னதான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்களாவே இருந்தாலும் இந்த யோசனாவை பின்பற்றி ஆசனாவை செய்யவேண்டும். 

அ.தி.மு.க தலைவர்கள் கோரஸாய்: இதுவே உங்கள் கட்டளை! உங்கள் கட்டளையே ஆசனம்... ஸாரி, சாசனம்!

அடுத்த கட்டுரைக்கு