ணிகண்டன் சொன்னதைக் கேட்டு, போலீஸ் கமிஷனர் ராஜகணேஷ் வியப்பு ஈஷிக்கொண்ட விழிகளோடு ஒரு நேர்க் கோட்டைப் போல் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

''ஞானேஷ் ரெண்டு நாளைக்கு முன்னாடியே சென்னை வந்துட்டாரா!''        

''ஆமா ஸார்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எதுக்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்தார்?''

''நான் காரணம் கேட்டப்ப ஒரு ஹைடெக் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணவும், அது சம்பந்தமான பார்ட்டியில் கலந்துகொள்ளவும் வந்ததா சொன்னான். வீட்டுக்கு விஷயம் தெரிய வேண்டாம்னும் கேட்டுக்கிட்டான்.''

''அந்த ஹைடெக் மீட்டிங் எங்கே நடந்துச்சு?''

''ஏதோ ஒரு ஹோட்டல் பேர் சொன்னான் ஸார். மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆகல.''

''நேத்து ராத்திரி எத்தனை மணிக்கு ஞானேஷ் உங்க அப்பார்ட்மென்ட்டை விட்டுக் கிளம்பிப் போனார்?''

''ஏழு மணியிலிருந்து, ஏழரை மணிக்குள்ளே!''

''பார்ட்டிக்குப் புறப்பட்டுப்போற நேரத்துல ஞானேஷோட செயல்பாடுகள் எப்படியிருந்துச்சு?''

''கொஞ்சம் டென்ஷனா இருந்தான். சரியான நேரத்துக்கு கால்டாக்ஸி வந்து சேராததால, அந்த டாக்ஸி டிரைவரை 'கன்னாபின்னா’னு திட்டித் தீர்த்துக்கிட்டிருந்தான். டாக்ஸி வந்ததும் என்கிட்டகூட ஒரு வார்த்தை சொல்லிக்காம வேகமா கிளம்பிப் போய்ட்டான்!''

நள்ளிரவு வானவில்!

''அந்த கால்டாக்ஸி நிறுவனத்தோட பேர் என்ன?''

''தெரியலை ஸார்... அவன்தான் புக் பண்ணினான்.''

''வாசல்ல வந்து நின்ன டாக்ஸியை நீங்க பார்த்தீங்களா?''

''ம்... ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன்...''

''அது என்ன கார்?''

''இண்டிகோ மாதிரி தெரிஞ்சுது ஸார். லைட் ப்ளூ கார். காரோட டிக்கி மேல க்ரீன் கலர்ல ஏதோ ஒரு லோகோ சிம்பல்.''

போலீஸ் கமிஷனர் யோசனையில் சில விநாடிகளைக் கழித்துவிட்டு மணிகண்டனை உன்னிப்பாக ஒரு பார்வை பார்த்தபடி கேட்டார்.

''ஞானேஷ், மீராவை பெண் பார்க்கவும் வந்திருக்கார் என்கிற விஷயம் உங்களுக்குத் தெரியுமா?''

''தெரியும் ஸார்.''

''அப்புறம் ஏன் ஞானேஷ் அவர் வீட்டுக்குப் போகாம ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து உங்க வீட்ல ஸ்டே பண்ணணும்?''

''ஸார்! நான் இதே கேள்வியைத்தான் ஞானேஷ்கிட்டேயும் கேட்டேன். அதுக்கு அவன் 'நான் இந்த ஹைடெக் மீட்’ல கலந்துக்கிறது ப்யூர்லி பர்சனல் அண்ட் கான்ஃபிடென்ஷியல். முக்கியமா என்னோட ஃபேமிலி மெம்பர்ஸுக்குத் தெரியக்கூடாதுனு சொன்னான். ஞானேஷ் பர்சனல் மேட்டர்னு சொல்லிட்டதால மேற்கொண்டு எதுவும் அவன்கிட்டே கேட்கலை.''

''சரி... பார்ட்டிக்குப் போன ஞானேஷ், ராத்திரி வீட்டுக்கு வரலைனு தெரிஞ்சதும் அவருக்குப் போன் பண்ணீங்களா?''

''பண்ணினேன் ஸார்... போன் 'ஸ்விட்ச்டு ஆஃப்’னு ரெக்கார்டட் வாய்ஸ் கேட்டது. ராத்திரி முழுக்க தூக்கம் இல்லை ஸார். அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி, போன் பண்ணிக் களைச்சுப் போயிட்டேன். என்னையும் அறியாம விடிகாலை மூணு மணிக்கு தூங்கிட்டேன். கண் முழிச்சு பார்க்கும் போது எட்டு மணி. திரும்பவும் போன் பண்ணினப்ப... அதே 'ஸ்விட்ச்டு ஆஃப்’. பயந்து போன நான் 'பரபர’னு குளிச்சு ரெடியாகி, ஞானேஷோட வீட்டுக்குப் போனேன். வீட்ல யாரும் இல்லை. வேலைக்காரங்க ரெண்டு பேர் இருந்தாங்க. அவங்க மூலமா விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டு இங்கே வந்தேன்.''

அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் கனமான கவலையோடு இருந்த பார்த்தசாரதி, அழுது சிவப்பேறிய விழிகளோடு மணிகண்டனை மெல்ல ஏறிட்டார். ''என் மகனோட ஃப்ரெண்டுனு சொல்றே... உன்னை ஒரு தடவைகூட அவனோடு சேர்ந்த மாதிரி நான் பார்த்தது இல்லையே?''

''நீங்க பார்த்திருக்க வாய்ப்பில்லை ஸார். ஏன்னா, ஞானேஷை எனக்கு அஞ்சு வருஷ காலமாய்த்தான் தெரியும். நானும் ஞானேஷும் டெல்லியில் இருக்கிற 'ஃப்யூச்சர் மிராக்கிள்’ ஐ.டி. பிராஞ்ச்சில் ஒண்ணா வேலை பார்த்தோம். ரெண்டு பேருமே 'சென்னை பேஸ்’ என்கிற காரணத்தால நெருங்கிப் பழகி ஃப்ரெண்ட்ஸ் ஆயிட்டோம். போன வருஷம்தான் எனக்கு சென்னை பிராஞ்சுக்கு மாற்றலாச்சு. ராயப்பேட்டையில் இருக்கிற அப்பார்ட்மென்ட்டில் தங்கி வேலைக்குப் போய்ட்டு வந்துட்டிருக்கேன். எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூருக்குப் பக்கத்தில் இருக்கிற தடாகம். அம்மாவும் அப்பாவும் அங்கேதான் இருக்காங்க...''  மணிகண்டன் படபடப்பாக பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர் பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டு, கமிஷனர் முன்பாக விறைப்பாக நின்றார்.

''ஸார்...! அந்த அஸ்தி சாம்பலின் ஃபர்ஸ்ட்  ரிப்போர்ட் ரெடியாயிடுச்சு... நீங்க அதை ஒரு தடவை பார்த்துட்டா, இட் வில் பி பெட்டர் ஃபார் ஃபர்தர் இன்வெஸ்டிகேஷன்ஸ்.''

''ஷ்யூர்'' என்ற கமிஷனர் ராஜகணேஷ் எழுந்து அந்த அதிகாரியைப் பின்தொடர்ந்து உள்ளே போனார். அறைக்குள்ளே மேலும் இரண்டு தடயவியல் நிபுணர்கள், உயிரோடு இருந்த கம்ப்யூட்டர்களுக்கு முன்பாக உட்கார்ந்து இருந்தார்கள். கமிஷனரைப் பார்த்ததும் எழுந்தார்கள்.

''ரிப்போர்ட் என்ன சொல்லுது?''

''ஸார்! இது மனித உடம்போட சாம்பல்தான் என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கு.''

''உங்க கெஸ் வொர்க்கா?''

''இல்லை ஸார்... ஹண்ட்ரெட் பர்சன்ட் இது ஒரு மனிதனோட சாம்பல்தான். எரிக்கப்பட்ட மனித உடலின் சாம்பலில்தான் இந்த அளவுக்கு கால்சியம், கார்பன் இருக்கும். ஒரு மரத்துண்டையோ, ஒரு பிராணியையோ எரிச்சா சாம்பல்ல இந்த அளவுக்கு இருக்காது ஸார்''

''சரி... உங்க அடுத்த ஸ்டெப் என்ன?''

''இந்த சாம்பலில் சின்னச் சின்ன எலும்புத் துணுக்குகள் நிறையவே இருக்கு. இதையெல் லாம் ஒரு டி.என்.ஏ ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, மிஸ்டர் பார்த்தசாரதியோட டி.என்.ஏவோடு ஒப்பீடு செய்தாலே, இறந்தது ஞானேஷா... இல்லை, வேற யாராவதான்னு தெரிஞ்சுடும் சார்!''

''இந்த டி.என்.ஏ. முடிவு எப்ப நமக்கு கிடைக்கும்?''

''இன்னிக்கே டெல்லியில் இருக்கிற இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃப்ரான்ஸிக் ரிசர்ச் சென்டருக்கு அனுப்பி வெச்சுடறோம் ஸார். ரிப்போர்ட் நம்ம கைக்கு வர எப்படியும் ஒரு வாரம், பத்து நாள் ஆயிரும். இந்தக் கால அவகாசத்துக்குள்ள ஞானேஷ் சம்பந்தப்பட்ட இந்த கேஸை வேற ஒரு கோணத்திலிருந்து இன்வெஸ்டிகேட் பண்ணிப் பார்த்தா சில உண்மைகள் வெளியே வர வாய்ப்பிருக்கு ஸார்!''

கமிஷனருக்குப் பக்கவாட்டில் நின்றிருந்த இன்னொரு ஃபாரன்ஸிக் ஆபீஸர் தயக்கமான குரலோடு குறுக்கிட்டார்.

''ஸார்! ரிகார்டிங் வித் திஸ்... ஒன் மோர் இன்ஃபர்மேஷன்...''

''யெஸ்!''

''ஞானேஷோட செல்போன் நெம்பரை 'ஸ்கை லிங்க்’ செல்போன் கம்பெனியின் மானிட்டரிங் செக்‌ஷனுக்கு அனுப்பி, ஸ்க்ரூட்னைஸிங் செய்து பார்த்ததில் ஒரு விஷயம் கசிந்து இருக்கிறது ஸார்.''

''என்ன விஷயம்?''

''சென்ற வாரம் ஞானேஷ் டெல்லியில் இருந்தபோது ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பருக்கு முப்பத்தி மூணு தடவை போன் பண்ணிப் பேசியிருக்கார். ஒவ்வொரு செல்போன் காலின் டியூரேஷன் இருபது நிமிஷத்திலிருந்து முப்பது நிமிஷம் வரைக்கும் நீடிச்சிருக்கு ஸார்.''

''அது யாரோட நெம்பர்?''

''அது வந்து... வந்து... மீராவோட நம்பர் ஸார்.''

கமிஷனரின் அகலமான நெற்றியில் கேள்விக் குறி ஒன்று முளைத்தது.

''மீரா...! யூ... மீன்... ஞானேஷ் பெண் பார்க்க இருந்த சந்திரசூடனோட டாட்டர் மீராவா?''

''ஆமா ஸார்...''

''அந்தப் பொண்ணு மீராகிட்ட நான் பேசிப் பார்த்ததில் ஞானேஷை தனக்கு முன்னே தெரியாதுனும், இதுவரைக்கும் ஒரு தடவைகூட பேசினதில்லைனும் சொன்னாளே!''

''நோ ஸார்... அந்தப் பொண்ணு மீரா, ஞானேஷ்கிட்டே பேசினதுக்கான ஆடியோ ஆதாரம் என்கிட்டே இருக்கு!''

''ஈஸிட்?''

''இதைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்க ஸார்''  சொன்ன அந்த ஃபாரன்ஸிக் ஆபீஸர், மேஜையில் இடம் பிடித்திருந்த மானிட்டரிங் வாய்ஸ் ரிக்கார்டரை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பட்டனைத் தட்டினார்.

சில விநாடிகள் மௌனம் சாதித்த அந்த வாய்ஸ் ரிக்கார்டர், பின் அந்தக் குரல்களை காற்றிலே கசியவிட்டது. ஏதோ ஒரு ரகசியத்தைப் பரிமாறிக்கொள்கிற தினுசில் அந்த உரையாடல் பதிவாகியிருந்தது.

''இதோ பார் மீரா...! கடைசி வரைக்கும் இந்த விஷயம் வெளியே வரவே கூடாது.''

''நீங்க என்னை நம்பலாம் ஞானேஷ்! ஒரு ரகசியத்தைக் காப்பாத்தற விஷயத்தில் நான் ஒரு சேஃப்டி லாக்கர்!''

பெங்களூருக்கே உரித்தான அந்தக் குளிரிலும் ரிதன்யாவுக்கு முன் நெற்றியும் பின் கழுத்தும் ஒரு வியர்வைக் குளியலுக்கு உட்பட்டன. செல்போன் மறுமுனையில் இருந்த டி.எஸ்.பி. நம்பெருமாளிடம் சற்றே பதற்றத்தோடு பேசினாள்.

''ஸார்..! அந்த ரூபேஷ் ரூமிலிருந்து வெளிப்பட்டு, என்னையே பார்த்தபடி வந்துட்டிருக்கான். நான் அப்புறமா பேசறேன்.''

''ரிதன்யா! நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். அந்த யோகானந்த்கிட்டேயும் சரி, அவரோட மகன் ரூபேஷ்கிட்டேயும் சரி... எந்தவிதமான ஒரு ஆர்க்யூமென்ட்டையும் வெச்சுக்க வேண்டாம். நீ உடனே அந்த இடத்தை விட்டு புறப்பட்டுரு!''

''யெஸ்... ஸார்!''  சொன்ன ரிதன்யா செல்போனை அணைக்கவும், ரூபேஷ் பக்கத்தில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

''என்ன மேடம்... டவர் கிடைச்சுதா?''

"ம்... கிடைச்சுது. பேசிட்டேன்..!''

''இங்கேயும் டவர் கிடைக்கலைனா சொல்லுங்க... மொட்டை மாடிக்குப் போயிடலாம்!''

''வேண்டாம்... நான் பேசிட்டேன்!''

''ரொம்பவும் வேர்த்து வழியறீங்களே... செல் போன்ல ஏதாவது வேண்டாத செய்தியோ?''

''நத்திங்..!'' ரிதன்யாவின் உள்ளங்கையில் இடம்பிடித்து இருந்த சிறிய பூப்போட்ட கர்ச்சீஃப் அவளுடைய நெற்றிக்கும், பின் கழுத்துக்கும் போய், அங்கே துளிர்த்திருந்த வியர்வைத்துளிகளை ஒற்றியெடுத்தது.

ரூபேஷ் இன்னமும் ஓர் அடி முன்னால் வந்தான்.

''என்ன மேடம்... உங்க 'நள்ளிரவு வானவில்’ இன்வெஸ்டிகேஷன் பாதியிலேயே நிக்குது. கண்டினியூ பண்றீங்களா, இல்லை... இன்வெஸ்டிகேஷனை 'டிராப்’ பண்ணிட்டு ஒரு கூல்டிரிங் சாப்ட்டுட்டு புறப்படறீங்களா?''

''நோ மோர் இன்வெஸ்டிகேஷன்ஸ்.''

''குட்... அப்போ... புறப்படறீங்க?''

''ஆமா..!''

''நீங்க இங்கே வந்தது இதுவே முதல் தடவையாகவும் கடைசி தடவையாகவும் இருக்கட்டும்! யாராவது எதையாவது சொன்னா, அதை வேதவாக்கா எடுத்துகிட்டு இன்வெஸ்டிகேஷன்கிற பேர்ல வந்து இம்சை பண்ண வேண்டாம்! இங்கே நள்ளிரவு வானவில்லும் கிடையாது... பகல் நேர அம்பும் கிடையாது!''

நள்ளிரவு வானவில்!

ரிதன்யாவுக்குள் ரத்தம் சூடேறி, கோபம் சுர்ர்ரென்று தலைக்கு ஏறினாலும், சட்டென்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாள்.

'இவனோடு வாக்குவாதம் செய்ய இது நேரமில்லை. பேசாமல் பின்வாங்கிக் கொண்டு பின்னொரு நாளில் வந்து கார்னர் பண்ணிட வேண்டியதுதான்!’

''என்னை யோசனை... இந்தக் கட்டடத் திலிருந்து வெளியே போக வழி தெரியலையா? அதோ... இப்படியே நேரா போய் லெஃப்ட்ல கட் பண்ணினா லிஃப்ட் இருக்கும்.''

''தெரியும்''  சொன்ன ரிதன்யா, ரூபேஷை ஓர் அமிலப் பார்வை பார்த்துவிட்டு, வராந்தாவில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். இருபதடி நடந்திருப்பாள். அவளுடைய முதுகின் பின்னால் ரூபேஷின் குரல் கேட்டது.

''ஒரு நிமிஷம்..!''

ரிதன்யா திரும்பிப் பார்த்தாள்.

''என்ன?''

"இனிமே இந்த உரசிப் பார்க்கிற வேலை எல்லாம் வேண்டாம். ஏன்னா, நீ ஒரு தீக்குச்சி... நாங்க தீப்பெட்டி. உரசினா யார் சாம்பலாவாங்கனு நீயே முடிவு பண்ணிக்கோ!''

சைபர் க்ரைம் செல்.

டி.எஸ்.பி நம்பெருமாள் முன்பாக ஒரு தீப்பிழம்பாய் உட்கார்ந்திருந்தாள் ரிதன்யா. உதட்டிலிருந்து  புறப்பட்ட வார்த்தைகளில் கோபம் வெடித்தது.

''ஸார்..! அப்பன், மகன் ரெண்டு பேருமே சரியில்லை. அவங்ககிட்டே நிறையவே தப்பு இருக்கு. அந்த ரூபேஷ் பகிரங்கமாகவே மிரட்டினான்... 'உரசிப் பாரு.. சாம்பலாயிருவே’னு சவால் விடறான். சந்தேகத்தின் பேர்ல ரெண்டு பேரையுமே அரெஸ்ட் பண்ணி நம்ம கஸ்டடிக்கு கொண்டு வந்துட்டா, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே அந்த நள்ளிரவு வானவில்லை நாம பார்த்துடலாம் ஸார்!''

நம்பெருமாள் தன்னுடைய பெரிய நரைமீசைக்குக் கீழே, சின்னதாய் புன்னகை செய்தார். முகம் ஒருவித இறுக்கத்துக்கு உட்பட்டிருந்தது.

''ரிதன்யா! இப்பத்தான் ஒரு விஷயம் எனக்கே தெரியவந்துச்சு. நீயும் சரி, நானும் சரி... தமிழ்நாட்டுக்காரங்க என்கிற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் இந்த 'நள்ளிரவு வானவில்’ கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணச் சொல்லி எஸ்.பி. உத்தரவு போட்டிருக்கார். ஏன்னா, இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கிற யோகானந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் சாதாரண நபர் கிடையாது. ஏதோ காலிமனை வாங்கிப் போடற மாதிரி, பெங்களூரில் இருக்கிற ஒவ்வொரு ஐ.டி. கம்பெனியையும் வாங்கி, தன்னோட ஐ.டி. சாம்ராஜ்யத்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா விரிவு பண்ணி, ஜெட் வேகத்துல போயிட்டிருக்கார். யோகானந்த் இவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கிறதுக்குக் காரணம், அவருக்குப் பின்னாடி மத்திய அரசில் இருக்கிற கேபினட் மந்திரிகள்தான். கர்நாடக போலீஸ் அதிகாரிகள் யாருமே இந்த 'நள்ளிரவு வானவில்’ கேஸை டீல் பண்ண முன்வரல. டெல்லி சி.பி.ஐ. பிரஷர் கொடுத்ததால, இந்தப் பொறுப்பைத் தூக்கி என்னோட தலையில் வெச்சுட்டார் எஸ்.பி. சந்திர கவுடா. ஒரு நேர்மையான போலீஸ் ஆபீஸர். குற்றம் அரசாங்கத்தின் எந்த டிபார்ட்மென்ட்டில் நடைபெற்றாலும் அங்கே எட்டிப் பார்த்து நடவடிக்கை எடுக்கக் கூடியவர்.''

ரிதன்யா அவர் பேச்சில் குறுக்கிட்டாள்.

''ஸார்! நீங்க சொல்றதை வெச்சுப் பார்க்கும்போது எஸ்.பி. சந்திர கவுடா உங்களை யும் என்னையும் கேடயங்களா பயன்படுத்தி, யோகானந்தோட மோத நினைக்கிறார்னு என்னோட மனசுக்குப் படுது!''

''அதேதான்...!''

''இப்ப என்ன ஸார் பண்றது?''

''அதுதான் எனக்குப் புரியலை. நீ யோகானந்த் கம்பெனிக்குள்ளே அடியெடுத்து வெச்ச அடுத்த நிமிஷம் 'நள்ளிரவு வானவில்’ சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஃபார்மர் இரண்டாம் நாரதன் உயிரோடு இல்லை. உன்னையும் அந்த ரூபேஷ் மிரட்டியிருக்கான். ஏதோ பொறிக்குள்ளே மாட்டிகிட்ட மாதிரி இருக்கு. எஸ்.பிகிட்டே பேசிப் பார்க்கணும்!''

நம்பெருமாள் பேசிக்கொண்டிருந்தபோதே அவருடைய செல்போன் வைப்ரேஷனில் துடித்தது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தார்.

ஏ.எஸ்.பி. மல்லிகார்ஜுன் கன்னடத்தில் பேசினார் நம்பெருமாள்.

''சொல்லுங்கள் மல்லிகார்ஜுன்!''

''சார்! ஒரு மோசமான செய்தி!''

''எ... எ... என்ன..?''

''யஷ்வந்த்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் நம்முடைய எஸ்.பி. சந்திர கவுடா ஜீப்பில் போய்க்கொண்டிருக்கும்போது யாரோ ஒரு நபர் பெட்ரோல் குண்டை வீச, ஜீப் வெடித்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி எஸ்.பி. இறந்துவிட்டார்.''

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism