
கொங்கு நாட்டு சிவன் கோயில்களில் மிகவும் பழைமை வாய்ந்தது மஹிமாலீஸ்வரர் கோயில். இங்கே இறைவன் மஹிமாலீஸ்வரர், இறைவி மங்களாம்பிகை என்ற திருப்பெயர்களுடன் அருள் புரிகின்றனர்.
2000 ஆண்டுகள் பழைமையானது இந்தக் கோயில். ராவணனின் வம்சத்தில் வந்த மாலி, சுமாலி, மஹிமாலி ஆகிய மூவரும் இமயமலைக்குச் சென்று, கயிலைநாதனை தரிசித்துவிட்டு, இலங்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்த போது, சந்தியாவந்தனம் செய்து சிவ வழிபாடு செய்ய வேண்டிய நேரம் வந்தது. ஓரிடத்தில், பாதையில் வில்வ தளங்கள் இருப்பதைக் கண்ட அவர்கள், அருகில் சிவாலயம் இருக்கவேண்டும் என்று நினைத்தவர்களாக, அந்த வழியே சென்றார்கள்.
காவிரியின் தென் கரையில், வில்வ மரங்களுக்கு இடையில் ஈசன் சுயம்புவடிவில் இருந்தது கண்டு, பரவசத்துடன் வழிபட்டு, திருப் பணிகளும் செய்தனர். அதனால், இத்திருத்தலம் மஹிமாலீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர், அப்பர் ஆகியோரால் வழிபடப்பெற்ற இந்தக் கோயிலில் மகாலட்சுமி, துர்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனிச் சந்நிதியில் சிவனுக்கு வலப்புறமாக, திருமணக் கோலத்தில் இருப்பதுபோல் காட்சி தருகிறார். எனவே, அம்பிகையை வணங்கினால், திருமணப்

பேறும் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மஹிமாலீஸ்வரரை மனம் உருகி வேண்டினால், நம் கவலைகள் அனைத்தையும் தீர்ப்பார். இந்த ஆலயத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று திருமணத் தடைகள் நீங்குவதற்காக சிறப்பு பூஜை நடை பெறுகிறது.
தொடர்ந்து 11 வாரம் விரதமிருந்து, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு ஸ்வாமியைத் தரிசித்து பிரார்த்திக்கொண்டால், திருமணத் தடை விரைவில் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
குடும்பப் பிரச்னைகளையும், வாழ்வின் சங்கடங்களையும் தீர்க்கும் மஹிமாலீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு நகரத்தில் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் அமைந்துள்ளது.

மகா சிவராத்திரியன்று மஹிமாலீஸ் வரரை வழிபடுவதால், பலன் பன்மடங்கு அதிகம் கிடைக்குமாம். அன்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மஹிமாலீஸ்வரரை வழிபட்டு, வேண்டிய பலன்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.
கு.ஆனந்தராஜ்
படங்கள்: அ.நவீன்ராஜ்