Published:Updated:

கடல் அரக்கனிடமிருந்து, உயிரினங்களைக் காப்பாற்றும் ஆச்சர்ய மனிதர்!

கடல் அரக்கனிடமிருந்து, உயிரினங்களைக் காப்பாற்றும் ஆச்சர்ய மனிதர்!
கடல் அரக்கனிடமிருந்து, உயிரினங்களைக் காப்பாற்றும் ஆச்சர்ய மனிதர்!

திகாலை நேரத்தில் அந்த ஆறு பேரும் கடற்கரையில் வந்து நிற்கிறார்கள். 

"இன்னும் லிய்பர் வரவில்லையா? "

"இல்லையே... அவன் என்ன ஆனாலும், காலையில் நமக்கெல்லாம் முன்னாடியே வந்திடுவானே! "

"அது ஒன்னுமில்ல... கிழவனுக்கு வயசாயிடுச்சுல்ல, அதான் கப்பல்லயே படுத்து தூங்கிட்டிருக்கும். போய் பார்க்கலாம் வா..."

அந்த ஆறு பேரும் கப்பலுக்குள் குதிக்கிறார்கள். அந்தக் கிழவரைத் தேடுகிறார்கள். அப்போது திடீரென கப்பல் ஸ்டார்ட் ஆகி, வேகமாக ரிவர்ஸில் போகிறது. அனைவரும் நிலைத்தடுமாறி கீழே விழுகிறார்கள். கிடைக்கும் பிடிகளைப் பிடித்துக் கொண்டு, ஆளுக்கொரு பக்கமாய் உட்காருகிறார்கள்.

“அப்பவே சொன்னேன், அவனை நீ கிழவன்னு சொல்லாதே... கேட்டியா? இப்ப பாரு அந்தக் கிழவனோட வேலைய..."

"ஐயோ...."

பெரும் அலையில் அத்தனை வேகமாகப் பாய்ந்தது அந்தக் கப்பல். 

" யோவ்... லிய்பர். சாரி... மன்னிச்சிடு. சரி, சரி... நீ கிழவன் இல்லைதான்" என்று அவர்கள் சொல்லவும் கப்பல் சற்று மெதுவாக போகத் தொடங்குகிறது. 

இன்ஜின் ரூமிலிருந்து வெளிவருகிறார் கேர்ட் லிய்பர் (Kurt Lieber). 

"கய்ஸ்...இன்னிக்கு கடல் கொஞ்சம் கொதிப்பா இருக்கு. எல்லோரும் ஜாக்கிரதையா டைவ் பண்ணுங்க" என்று சொல்லி டைவ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்.

வெளிச்சம் மெதுவாகப் படரத் தொடங்கியதும், ஒவ்வொருவராக கடலில் குதிக்கிறார்கள்.  

ஒரு மணி நேரம் கழிகிறது. கப்பலின் ஒரு மூலையில் உட்கார்ந்து கடலையே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார் லிய்பர். ஒரு சிகப்பு நிற பலூன் சட்டென்று கடலிலிருந்து வெளிப்பட்டு மிதக்கிறது. அதைக் கப்பலை நோக்கி இழுக்கிறார். கூடவே, கடலுக்குள் போனவர்களும் வெளியே வருகிறார்கள். அனைவரும் கப்பலில் ஏறுகிறார்கள். அந்த சிகப்பு நிற பலூனை அனைவருமாக பிடித்து தூக்குகிறார்கள். அதன் கீழே ஒரு பெரிய இரும்புக் கூண்டு இருக்கிறது. அதை இழுத்து அதில் சிக்கியிருக்கும் நண்டுகளையும், இறால்களையும் விடுவிக்கிறார்கள். 

இந்த விஷயங்கள் எல்லாம் நடப்பது அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் ஹண்டிங்டன் கடற்பகுதியில். 1970களிலிருந்தே ஆழ்கடல் நீச்சல் வீரராக இருந்து வருபவர் கேர்ட் லிய்பர். காலங்கள் மாற, கடல் பெருமளவு மாசுபடுவதை உணர்கிறார். குறிப்பாக, கடலில் மீன் பிடிக்கப் போகும் மீனவர்களின் வலைகள் சமயங்களில் அறுந்து கடலிலேயே தங்கிவிடுகின்றன. அவை பல உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நண்டுகளையும், இறால்களையும் பிடிக்க பெரிய கூண்டுகளைக் கடலுக்கடியில் அனுப்புவார்கள். சமயங்களில் கப்பலுக்கும், கூண்டுக்குமான கயிறு அறுந்துவிடும், பலத்த காற்றினால் அந்தக் கூண்டு பல திசைகளுக்கு மாறிப்போவதும் உண்டு. இதைத் தேடி எடுப்பது மீனவர்களுக்கு மிகவும் கடினமான வேலை என்பதால், அதை அப்படியே விட்டுவிட்டு கரைக்குத் திரும்பிவிடுவார்கள்.

கடலுக்கடியில் இருக்கும் ஒரு நைலான் வலை அழிய 650 வருடங்கள் ஆகும்.

ஒரு வருடத்திற்கு உலகம் முழுக்க இது போன்ற கூண்டுகளும், மீன்பிடி வலைகளுமாக சேர்த்து 3 லட்சத்து 60 ஆயிரன் டன் அளவிற்கு சேர்கின்றன. இதனால் பல லட்ச கடல் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இந்த வலைகள் மற்றும் கூண்டுகளினால் அமெரிக்காவில் வருடத்திற்கு சராசரியாக 10-லிருந்து 15 திமிங்கலங்கள் சிக்கி உயிரிழக்கும். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 72 திமிங்கலங்கள் இந்த வலைகளில் சிக்கி உயிரிழந்தன.

இந்தப் பிரச்னைகளைக் களைய தன்னால் இயன்ற முயற்சிகளை செய்ய வேண்டும் என்ற நோக்கில் 2000மாம் ஆண்டு "பெருங்கடல் பாதுகாப்பாளர்கள் கூட்டியக்கம்" (Ocean defenders Alliance) எனும் இயக்கத்தைத் தொடங்கினார் லிய்பர். முதலில் 6 நண்பர்கள் மட்டுமே அவரோடு கைகோர்த்தனர். ஆரம்பத்தில் அது அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. கடலின் ஏதாவது ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து அதற்குள் சென்று இதைத் தேடிப் பிடித்து எடுப்பது மிகவும் சிரமமான விஷயமாகவே இருந்தது. அந்த சிரமம் இன்று வரையிலும் தொடர்கிறது. ஆனால், இன்று அவர்கள் 6 பேர் மட்டுமே அல்ல. இந்தக் குழுவில் இன்று 200 பேர் இருக்கின்றனர். அமெரிக்காவின் பலதரப்பட்ட கடற்பகுதிகளில் தங்கள் வேலைகளைச் செய்து வருகிறார்கள். தான் செய்யும் இந்த முன்னெடுப்புகள் குறித்து இப்படிச் சொல்கிறார் லிய்பர்... 

“ஒவ்வொரு நாளும் இந்தக் கடல் அரக்கர்களிடம் சிக்கி எத்தனையோ உயிரினங்கள் இறக்கின்றன. அதில் சிலவற்றையாவது காக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் செய்வது ஏதோ உலக சாதனை எல்லாம் கிடையாது. நான் பெரிய புரட்சி செய்துவிட்டேன் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு மிகச் சிறிய மாற்றத்திற்கு நான் வித்திட்டிருக்கிறேன். இது என் கடமை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. இந்த வேலை கொஞ்சம் கடினமானதுதான். ஆனால், அந்தக் கூண்டில் சிக்கியிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றியதும், அது அத்தனை மகிழ்ச்சியோடு நீந்திப் போவதைப் பார்க்கும் போது எல்லா கஷ்டங்களும் மறைந்துவிடும்..."