Published:Updated:

தேர்தல்:பணபல பிரயோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை

தேர்தல்:பணபல பிரயோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை

புதுடெல்லி, பிப்ரவரி 10, 2011

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தலில் சட்டவிரோதமாக பணபலத்தைப் பயன்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவரை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ##~~##

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் வருவான வரித் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், இதே விதமான நடவடிக்கைகள் தற்போது தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களிலும் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.

தேர்தல் நேரத்தில் விமான நிலையங்கள், முக்கிய ஹோட்டல்கள், ரயில் நிலையங்கள் மற்றும்  நிதி புரோக்கர்கள், ஹாலா புரோக்கர்கள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்துமாறும் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரை அறிவுறுத்தியுள்ளது.

சந்தேகத்திற்கிடமான வகையில் வங்கிகளிலிருந்து பணம் எடுப்பதும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். வேட்பாளர்கள் தமது ஆவணங்களில் தெரிவிக்க உள்ள சொத்து விவரங்களை சரிபார்க்குமாறும் வருமான வரித் துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய தணிக்கையாளர்கள் நிறுவனத்தை தனியாக கலந்து ஆலோசித்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கான தணிக்கை முறைகள் குறித்து விவாதித்தது. பல அரசியல் கட்சிகள் தமது கணக்குகளைத் தணிக்கை செய்வதில்லை என்றும், முறையாக கணக்குகளைப் பராமரிப்பதில்லை என்றும் தேர்தல் ஆணையம் கவலை தெரிவித்தது.

அரசியில் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு என்ற போதிலும் சில அரசியல் கட்சிகள் இவற்றை கட்சி நோக்கத்திற்காக பயன்படுத்துவதில்லை. அரசியல் கட்சிகளுக்கு ஒரே மாதிரியான கணக்கு மற்றும் தணிக்கை தர நிலைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய தணிக்கையாளர் நிறுவனத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை ஒப்புக் கொண்ட தணிக்கையாளர் நிறுவனம், அதன் உறுப்பினர்களுக்கு விரிவான அறிவுறுத்தல்களை அனுப்புவதாகத் தெரிவித்தது.

அடுத்த கட்டுரைக்கு