Election bannerElection banner
Published:Updated:

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்

ன்னுடைய 16-வது வயதில் இரவெல்லாம் ஒரு பாட்டை கண்களில் கண்ணீர் வழியக் கேட்டுக்கொண்டிருப்பேன். ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாடல் எனக்காகவே எழுதப்பட்டதுபோல தோன்றும். ‘விசையுறு பந்தினைபோல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்ற வரியினைக் கேட்கும்போதெல்லாம், மனம் உடைந்து கேவத் தொடங்குவேன். நான் மகிழ்ச்சியான ஒரு குழந்தையாக இருந்த பருவம் முடிந்து, என் துயரத்தின் மலர்கள் கட்டவிழத் தொடங்கிய இளமைக் காலத்தின், அத்தனை வாசனைகளும் அந்தப் பாடலில் படர்ந்திருக்கின்றன.

குழந்தைப் பருவத்தில் மிகவும் அழகாக இருப்பேன் என்று அம்மா சொல்லியிருக்கிறாள். சிவப்பாக, கொழுகொழுவென்று இருப்பேனாம். தெருவில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் தூக்கிகொண்டு போய்விடுவார்களாம். ‘இவன் இப்பவே வீட்டில் இருக்க மாட்டேன் என்கிறானே... நடக்க ஆரம்பித்ததும் எங்கே நம்மிடம் இருக்கப் போகிறான்.’ என்று அம்மா அடிக்கடி நினைப்பாளாம். மூன்று வயதில் போலியோ தாக்கியது. தான் அப்படி நினைத்ததைச் சொல்லிச் சொல்லி அம்மா பின்னர் எத்தனையோ நாள் அழுதிருக்கிறாள். அப்போது போலியோவுக்கு மருத்துவம் இல்லை. இருந்திருந்தாலும் என் பெற்றோருக்குத் தெரியவில்லை. தர்கா தர்காவாக அம்மா அலைந்தாள். பின்னர், மருத்துவத்திற்கு அழைத்துச் சென்றபோது காலம் கடந்துவிட்டிருந்தது. என்னுடைய பால்யத்தின் முதல் நினைவு என்ன தெரியுமா? நான் ஒரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டிருக்கிறேன். காலில் வயர்கள் சொருகப்பட்டிருக்கின்றன. லேசான மின் சிகிச்சை கொடுக்கிறார்கள். குழந்தைதானே, பயத்திலும் வலியிலும் கதறுகிறேன். பிறகு, மயங்கிப்போகிறேன். கண் விழித்ததும் ஒரு குதிரை வண்டியில் அம்மா என்னை அழைத்துப் போய்க்கொண்டிருக்கிறாள்.

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்

ஒரு ஹோட்டல் வாசலில் ஒரு பெரிய யானை நின்றுகொண்டிருக்கிறது. யானையைப் பார்த்ததும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஒரு பெரிய வாளி நிறைய இட்லி வைத்துக்கொண்டு யானைக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். அது தும்பிக்கையால் வாங்கிச் சாப்பிடுகிறது. பின்னர் அம்மாவிடம் கேட்டபோது அந்த ஊர் மதுரை என்றும் அது மீனாட்சியம்மன் கோயில் யானை என்றும் சொன்னாள். இப்போதும், ஒவ்வொரு முறை மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைக் கடந்து செல்லும்போதும் இட்லி சாப்பிட்ட யானையை நினைப்பேன்.

எனக்கு பலவிதமான சிகிச்சைகளை முயன்றுபார்த்தார்கள். இடுப்பிலிருந்து கால் வரை லெதர் பூட்ஸ் அணிவித்து, இரண்டு தூண்களுக்கு நடுவே ஒரு மூங்கில் கழியைக் கட்டி, அதைப் பிடித்துக்கொண்டு நடக்கவைப்பார்கள். வலி பொறுக்க முடியாமல், அவற்றைக் கழற்றி வீசுவேன். பாட்டி வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் இடுப்பளவு ஒரு குழி தோண்டி, அதில் என்னை நிற்கவைத்து குழியை நிரப்பிவிடுவார்கள். யானையின் காலால் இடறி, சிரச்சேதம் செய்ய நிற்கவைப்பார்களே, கிட்டத்தட்ட அந்த மாதிரி. எறும்புகள் பயங்கரமாகக் கடிக்கும். சூரியன் சுள் என்று தலையில் இறங்கும். ஒரு மணி நேரம் அப்படியே இருப்பேன். ஆனாலும், என் குழந்தைப்பருவம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

நிறைய அத்தைகள், சித்திகள், ஒன்றுவிட்ட சகோதரிகள் என ஏராளமான பெண்களுடன் வளர்ந்தேன். பெண்களால் வளர்க்கப்பட்டேன். எனக்கு ஒரு பிரச்னை இருக்கிறது என்று எனக்குத் தோன்றியதே இல்லை. எல்லா குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்தார்கள். என்னைச் சேர்க்கவில்லை. நான் அழுது அடம்பிடித்துப் பள்ளியில் சேர்ந்தேன். படிப்பு மேல் உள்ள ஆசையினால் அல்ல. எனக்கும் பள்ளிக்குப் போக ஆசையாக இருந்தது அவ்வளவுதான். இரண்டு ஆசிரியைகள் எனக்கு எழுத்தறிவித்தார்கள். எனது அம்மாவின் மறுவார்ப்பாக அவர்கள் இருந்தார்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே வார இதழ்களில் வரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப்களை வாசிக்கத் தொடங்கினேன். விரைவில் தொடர்கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அப்பா வாசிக்கும் பழக்கம்கொண்டவராக இருந்தார். ஏராளமான துப்பறியும் நாவல்கள், காமிக்ஸ்கள் வாங்கிக்கொடுத்தார். என் உலகம் சொற்களாலும் கதாபாத்திரங்களாலும் கற்பனைகளாலும் தீவிரமான உணர்ச்சிகளாலும் நிரம்பத் தொடங்கியது.  என் இளம்பருவத்துத் தோழிகளுக்கும் தோழர்களும் நான் வாசித்த கதைகளை தினமும் சொன்
னேன்.

அவர்கள் அவற்றை கண் இமைக்காமல் கேட்பார்கள். இப்படித்தான் நான் சொல்பவனாக மாறினேன். எனக்கு எப்போதும் என்னை, என் குரலைக்  கேட்பவர்கள் வேண்டும் என்பதாலேயே, கவிதைகளும் எழுதத் தொடங்கினேன்.சிறுவயதில் மிட்டாய்களை வைத்து சிறு வியாபாரம் செய்வேன். பிரைஸ் அட்டைகள் விற்பேன். பிறகு, நானே பிரைஸ் அட்டைகளைத் தயாரித்தேன். குழந்தைகளுக்குப் பட்டங்களும் ராக்கெட்களும் செய்துகொடுப்பேன். திருடன் போலீஸ் விளையாட்டில் எனக்கு கமிஷனர் போஸ்ட் கொடுப்பார்கள். கான்ஸ்டபிள்கள்தான் திருடனைப் பிடிக்க அங்கே இங்கே ஓட வேண்டும். கமிஷனர் இருந்த இடத்தில் இருந்து எல்லோரையும் அதிகாரம் செய்வார். கண்ணாமூச்சி விளையாட்டில், நான் எல்லோருக்கும் கண்களைக் கட்டிவிடும் பொறுப்பை எடுத்துக்கொள்வேன். எல்லா இடத்திலும் நான்தான் முக்கியமான மையமாக இருப்பேன். என்னை அதற்காகத் தகவமைத்துக்கொண்டே இருப்பேன். நிறையப் புத்தகங்களைப் படித்துக்கொண்டே இருந்தேன்.

குறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் இப்படித்தான் தாண்டி வந்திருக்கிறேன். இதற்குள் இன்னும் சொல்லாத நூறு நூறு மடிப்புகள் இருக்கின்றன. ஆனால், வாழ்க்கையில் நான் எப்போதும் அதிர்ஷ்டத்தின் பக்கம்தான் நின்றிருக்கிறேன். துரதிருஷ்டத்தின் நிழல் என் மீது விழும்போதெல்லாம், நான் வேகமாக அதிலிருந்து நகர்ந்து சென்றிருக்கிறேன். இந்த உடலிலிருந்து எது என்னை  விடுதலை செய்தது? இந்த வாழ்க்கையின் மகத்தான அன்பும் கருணையும்தான். அன்பு, நான் எடுத்துவைக்கிற ஒவவோர் அடியிலும் தன் வெளிச்சத்தை நிரப்பிக்கொண்டே இருந்திருக்கிறது.

இயற்கையில் யாருக்கும் குறை ஒன்றும் இல்லை. அது மனிதர்களின் மதிப்பீடுகளாலும்  புறக்கணிப்பினாலும் அநீதிகளாலும் உருவாக்கப்படுவது.மேலோட்டமான கருணை உணர்ச்சியும் அனுதாபமும் மனிதர்களை பலவீனப்படுத்துகின்றன. நான் அந்த மோசமான கருணையிலிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருந்திருக்கிறேன். ஒரு முறை என் சிநேகிதி ஒருத்திக்கு ஒரு செய்தி அனுப்பினேன். ‘இன்று முதுகு வலி கடுமையாக இருக்கிறது’ என்று. அவள் பதிலுக்குச் செய்தி அனுப்பினாள் ‘ நீ இப்போது கொஞ்சம் அதிகம் வெயிட் போட்டுவிட்டாய்... தினமும் வாக்கிங் போ’ என்று. பத்து நிமிடங்கள் கழித்து, மறுபடியும் செய்தி அனுப்பினாள். ‘சாரி... உனக்கு நடக்க முடியாது என்று எப்போதும் நான் யோசிச்சதே இல்லை. அப்படி ஒரு சித்திரம் ஒரு நாளும் உன்னைப் பத்தி என் மனசில் இல்லை என்று.

வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகத்தில் தொடர்பியல் மாணவனாகச் சேர்ந்த நாள் அது. அப்போது, எனது துறை இரண்டாம் தளத்தில் இருந்தது. லிஃப்ட் கிடையாது. அது எனக்கு முன்னதாகத் தெரியாது. நான் என் ஸ்கூட்டியில் அந்த படிக்கட்டுகள் வரை சென்று என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக்கொண்டிருந்தேன். வீட்டுக்குப் போய்விடலாம்... இந்தப் பல்கலைக்கழகத்தில் எனது முதல் நாள்தான் கடைசி நாளும் என்று நினைத்துக்கொண்டேன். அப்போது, அந்தப்பெண் அருகில் வந்தாள். என்னுடன் அவளும் முதலாம் ஆண்டு சேர வந்திருந்தாள். அவளை நுழைவுத் தேர்வின்போது பார்த்திருக்கிறேன்.

பேரழகி. விரிந்த கூந்தலுடன் நின்றிருந்தாள். “என்ன இங்க இருக்கீங்க... வாங்க கிளாஸுக்குப் போகலாம்’’ என்றாள். “இல்ல... நிறையப் படிகள்’’ என்றேன், உடைந்த குரலில். “ஸோ வாட்..?’’ என்றாள் சிரித்துக்கொண்டே. “வாங்க போகலாம்’’ என்று என் பையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள். அது  ஓர் உத்தரவு. அது  ஓர் அழைப்பு. நான் வண்டியிலிருந்து இறங்கி ஒவ்வொரு படியாக அமர்ந்து அந்த நீண்ட படிகளில் ஏறத் துவங்கினேன். அவள் நிதானமாகப் பேசிக்கொண்டே மெதுவாக வந்தாள். தோழமை என்றால் என்னவென்று நான் ஆழமாக உணர்ந்த தருணம் அது. பிறகு, இரண்டு வருடங்கள் அந்தப் படிகளில் தினமும் நான்கு முறை ஏறி இறங்கியிருக்கிறேன். அந்த நாள், என் மனதில் பெண்கள் தொடர்பாக இருந்த அத்தனை தாழ்வுணர்ச்சியும் உடைந்த நாள்.

நான் கேட்காமலேயே எனக்கு மகத்தான பரிசுகள் கிடைத்திருக்கின்றன. தன்னையும் தன் வாழ்க்கையையும் எனக்காக ஒப்புக்கொடுத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை இந்தக் கட்டுரையில் எழுதித் தீர்க்க முடியாது.

என்னை தனியாக விட்டுவிடக் கூடாது. நான் சஞ்சலப்பட்டுவிடக் கூடாது என்று, எத்தனை எத்தனை கரங்கள் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன. நேற்றிரவு ஒரு தொலைபேசி அழைப்பு, “ஏன் இவ்வளவு தனிமையை எழுதுகிறீர்கள்? அவ்வளவு தனிமையாக இருக்கிறீர்களா?” அந்தக் குரலில் இருந்த ஆழமான பரிதவிப்பு எனக்குத் தெரியும். இந்த அன்பு என் தனிமையை ஒரு கணம் கடக்கவைக்கிறது. இப்படித்தான் ஒவ்வொரு கரமாகப் பிடித்துக்கொண்டு என் உடலை நான் கடந்தேன்.

இன்னொரு பிறவி சாத்தியம் எனில், நான் இதே உடலோடுதான் பிறக்க விரும்புகிறேன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு