கமிஷனர் ராஜகணேஷ் தன் கையில் இருந்த மீராவின் செல்போன் டிஸ்ப்ளேயில் ஒளிர்ந்த வாக்கியத்தை மறுபடியும் ஒரு தடவை உன்னிப்பாக பார்த்தார்.
'உன் இதயம் பேசுகிறேன்!’
மீராவிடம் காட்டி கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'யார் இது..?'
அவளுடைய முகம் இப்போது அடியோடு மாறியிருந்தது.
''எ...எ... என்னோட ஃப்ரெண்ட் ஸார்.'
''பாய் ஃப்ரெண்ட்னு நினைக்கிறேன்..!'
'ஆமாம்’ என்பது போல் தலையசைத்தாள்.
''பேரு...?'
''ப்ரணவ்.''
சந்திரசூடனும் அபிராமியும் திகில் பரவிய முகங்களோடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொள்ள... ராஜகணேஷ், மீராவிடம் செல்போனைக் கொடுத்தார்.
'ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசு..!'

மீரா வியர்த்து வழிந்துகொண்டு ஸ்பீக்கரை 'ஆன்’ செய்துவிட்டு ஈனஸ்வரமான குரலில் 'ஹலோ' என்றாள்.
மறுமுனையில் ஆண்குரலொன்று பதற்ற மாய் கேட்டது. 'மீரா! என்னாச்சு... என்னோட போன்காலை அட்டெண்ட் பண்ண ஏன் இவ்வளவு நேரம்?'
'அது... அது... வந்து... போனை வைப்ரேஷன்ல வெச்சிருந்தேன்.'
'சரி... நீ இன்னும் கமிஷனர் ஆபீஸ்லதான் இருக்கியா..?'
'ஆமா!'
'போன காரியம் என்னாச்சு... கமிஷனர் என்ன சொல்றார்?'
'பேசிட்டிருக்கோம்...'
'உன்னோட வாய்ஸ் ஏன் டல்லடிக்குது... ரொம்பவும் பயந்துட்டே போலிருக்கு..?'
'நா... நான்... அப்புறமா பேசறேன்!'
'புரியுது...! பக்கத்துல யாரோ இருக்காங்க போலிருக்கு. நாம எப்போ மீட் பண்ணலாம்...?'
'ஒரு வாரம் போகட்டும்..!'
'போலீஸ் அமளியெல்லாம் ஓயட்டும்னு சொல்றியா? அதுவும் சரிதான். இனிமே நான் உனக்கு போன் பண்ணமாட்டேன். ஃப்ரீயா இருக்கும்போது நீயே போன் பண்ணு!' மறு முனையில் இணைப்பு அறுந்துபோக, மீராவும் செல்போனை அணைத்தாள்.
எல்லோருடைய பார்வைகளும் குத்தீட்டி களாய் மாறியிருக்க, மீரா தலைகுனிந்திருந்தாள். சந்திரசூடன் தளர்ந்த நடையோடு எழுந்து பக்கத்தில் வந்தார்.
'என்னம்மா மீரா..! போன நிமிஷம் வரைக்கும் உன்னை ஒரு குழந்தை மாதிரி நினைச்சுட்டிருந்தேன். நீயோ என்னோட முதுகுக்குப் பின்னாடி ஒரு ருத்ரதாண்ட வத்தையே நடத்தியிருக்கே! யாரம்மா அந்த ப்ரணவ்..? நீ அந்தப் பையனைத்தான் காதலிக்கறேன்னு சொல்லியிருந்தா, எனக்கும் உங்கம்மாவுக்கும் உனக்காக வரன் பார்க்கிற வேலையே இருந்திருக்காதேம்மா...'
இரண்டு கண்களிலும் பாதரசம் போல் நீர் பளபளக்க சந்திரசூடனை நிமிர்ந்து பார்த்தாள் மீரா.
'அப்பா..! நான் காதலிக்கிற ப்ரணவ்வுக்கு அப்பா அம்மா கிடையாது. ஒரு சி.எஸ்.ஐ. அநாதை விடுதியில் வளர்ந்தவர். எப்படியோ படிச்சு முன்னுக்கு வந்து இன்னிக்கு ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில் ஃபீல்ட் ஆபீஸரா வேலை பார்த்துட்டிருக்கார். எனக்கு வரப் போகும் மாப்பிள்ளை 'அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்'னு நீங்களும் அம்மாவும் பேசும்போது நான் காதலிக்கிற ப்ரணவ் அவ்வளவு உயரத்தில் இல்லையேன்னு எத் தனையோ ராத்திரிகள் மனசு உடைஞ்சுபோய் அழுதிருக்கேன். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல ப்ரணவ் பற்றி உங்ககிட்டே சொல்லிடணும்னு நினைச்சிருக்கும்போதுதான் ஞானேஷோட போட்டோவை கொண்டு வந்து என்கிட்டே காட்டி 'இவர்தான் உனக்குப் பார்த்து இருக்கிற மாப்பிள்ளை. அடுத்த மாசம் உன்னைப் பெண் பார்க்க டெல்லியிலிருந்து வரப்போறார்’னு சொன்னீங்க. அம்மாவும், நீங்களும் அப்போ ஒரு சந்தோஷமான மனநிலையில் இருந்ததால உடனடியா என்னோட எதிர்ப்பைத் தெரிவிக்க முடியலை. அம்மா தனியா இருக்கும்போது மொதல்ல அம்மாக்கிட்டே விஷயத்தை சொல்லிட்டு. அப்புறமா உங்ககிட்டே சொல்ல லாம்னு இருந்தேன். அதுக்குள்ளே டெல்லியில் இருந்து ஞானேஷ் எனக்கு போன் பண்ணிப் பேசினார்.'
மீரா பேசுவதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த கமிஷனர் ராஜகணேஷ் இடை மறித்துக் கேட்டார்.
"ஞானேஷ் எதுக்காக போன் பண்ணினார்?''
ஒரு சில விநாடிகள் மௌனம் சாதித்த மீரா, பிறகு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, பேச்சைத் தொடர்ந்தாள். 'பொதுவா அவர்க்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறதுல இஷ்டமில்லைனு சொன்னார். அப்பாவோட கட்டாயத்துக்காகத்தான் அடுத்த மாசம் பெண் பார்க்க வரப்போவதாகவும், அப்படி வரும்போது என்னைப் பெண் பார்த்துட்டு, 'பெண்ணை எனக்கு பிடிக்கலை’ன்னு சொல்லப் போறதாகவும் அவர் சொன்னபோது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருந்தது. ஞானேஷோடு கல்யாணமில்லை என்று ஊர்ஜிதமானதும் நான் வீட்ல இயல்பா இருக்க ஆரம்பிச்சேன். ஞானேஷ் வந்துட்டு போனபிறகு என்னோட காதலை அப்பா அம்மாகிட்ட டிக்ளேர் பண்ற முடிவிலும் இருந்தேன். அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வர நடுவில் ஒரு மாத காலம் இருந்ததால அடிக்கடி எனக்கு போன் பண்ணுவார். அவர் அப்படி போன் பண்றது என்னோட வீட்டுக்கோ அவரோட அப்பாவுக்கோ தெரியக்கூடாதுன்னும் கண்டிஷன் போட்டார்.'
'தினமும் போன் பண்ணுவாரா?'
'ஆமா... குறைந்தபட்சம் இருபது நிமிஷ மாவது பேசுவார். ஆரம்பத்துல எனக்கு அது ஒரு பெரிய தொந்தரவா இருந்தது. ஆனா, அவர் வரம்பு மீறாம ஒரு ஃப்ரெண்ட் கிட்டே பேசற மாதிரி நாட்டில் நடக்கிற பிரச்னைகள், அரசியல், சினிமா, இலக்கியம்னு பேசவும், எனக்கும் அது பிடிச்சிருந்தது. அவரோட போன் எனக்கு வந்ததுமே நான் வீட்ல யாருக்கும் தெரிஞ்சுடக் கூடாதுங்கிறதுக்காக மொட்டை மாடிக்குப் போயிடுவேன்...'
'அவர் உனக்கு தினமும் ஏன் போன் பண்ணணும்?'
'இதே கேள்வியைத்தான் நானும் அவர்கிட்டே கேட்டேன்.'
'என்ன சொன்னார்?'
'என்கிட்டே பேசிட்டிருந்தா அவர்க்கு ஒரு 'ரிலாக்ஸ் ஃபீல்’ ஏற்படறதா சொன்னார்.''
'ஞானேஷ் ஏதாவது மனக் குழப்பத்துல இருந்தாரா?'
'அது மாதிரி தெரியல!'
'ரெண்டு நாளைக்கு முன்னாடியே ஞானேஷ் சென்னைக்கு வந்து அவருடைய நண்பர் மணிகண்டனுடன் தங்கி ஒரு ஹைடெக் மீட்டிங்கில் கலந்துகொள்ள ஏதோ ஒரு ஹோட்டலுக்கும் போயிருக்கார். இந்த விவரங்கள் எல்லாம் உனக்குத் தெரியாதா?'
'தெரியாது.'
'சரி! உன்னோட காதலன் ப்ரணவ்வுக்கு போன் போட்டு இங்கே வரச் சொல்லு..!'
'இங்கே அவர் எதுக்கு?'
'விசாரிக்கத்தான்.'
'அவரை எதுக்காக விசாரிக்கணும்... ஞானேஷுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!'
'சம்பந்தம் இருக்கா இல்லையான்னு ப்ரணவ்வை விசாரிக்கும்போதுதானே தெரியும்?'
'அவர் மேல சந்தேகப்படறீங்களா?'
'கொஞ்சம்.'
'ஸார்... ஹி ஈஸ் ஹார்ம்லஸ்..!'
'இதோ பாரம்மா..! ஒரு நபர் குற்றவாளியா இல்லையா என்கிற உண்மை அந்த நபர் போலீஸ் கஸ்டடிக்குள் வரும்போது மட்டுமே தெரியவரும்! நீ ப்ரணவ்க்கு போன் பண்ணி இங்கே வரச் சொல்லு...'
மீரா தயக்கமாய் நிற்க, அபிராமி சீறினாள். 'ஏய்! என்னடி... பெரிசா யோசனை பண்ணிட்டிருக்கே! கடந்த ஒருமாச காலமா நீயே எங்களை ஏமாத்திட்டு வந்திருக்கே... அந்த ப்ரணவ் இந்த விவகாரத்துல என்ன பண்ணியிருக்கான்னு தெரிய வேண்டாமா? போன் போடு... அந்தப் பையன் இங்கே வரட்டும்!'
மீரா தன் செல்போனை உயிர்ப்பித்து ப்ரணவ் எண்ணைத் தொடர்பு கொண்டாள். உடனே ரிக்கார்டட் வாய்ஸ் கேட்டது.
'நீங்கள் தொடர்புகொள்ள நினைக்கும் எண் தற்போது 'சுவிட்ச் ஆஃப்’ செய்யப்பட்டுள்ளது!’
நான்கைந்து தடவை தொடர்புகொண்டும் அதே ரிக்கார்டட் வாய்ஸ் கேட்கவே கமிஷனரை ஏறிட்டாள் மீரா.
'போன் 'சுவிட்ச் ஆஃப்’ல இருக்கு ஸார்'
''அது எப்படிம்மா... இப்பத்தானே பேசினாரு?''
''என்னன்னு தெரியலை ஸார்.''
'நீ ப்ரணவ்வோட நம்பர் சொல்லு... நான் என்னோட செல்போனிலிருந்து ட்ரை பண்றேன்..!''
மீரா நம்பர் சொல்ல, கமிஷனர் தன்னுடைய செல்போனில் எண்களைத் தட்டினார். மறுமுனை 'சுவிட்ச்டு ஆஃப்’ என்றது.
''வேற நம்பர் இருக்கா?''
''இல்ல ஸார்... இந்த ஒரு நம்பர்தான்!''
''அவர் எங்கே வேலை பார்க்கிறார்னு சொன்னே?''
''ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியில்.''
''கம்பெனியோட பேரு..?''
''டேடூடே லைஃப் இன்ஷூரன்ஸ். இப்ப அவர் கம்பெனியில்தான் இருப்பார்.''
''கம்பெனியோட லேண்ட் லைன் டெலிபோன் நம்பர் இருக்கா..?''
''என்கிட்டே இல்ல ஸார்! நான் இதுவரைக்கும் அவர் வேலை செய்யற கம்பெனி நம்பருக்கு போன் பண்ணிப் பேசினது இல்லை...''

கமிஷனர் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த உதவியாளரிடம் திரும்பினார். ''அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியோட டெலிபோன் நம்பர்ஸை கலெக்ட் பண்ணுங்க...''
''யெஸ்... ஸார்'' என்று சொல்லி பக்கத்து அறைக்குள் நுழைந்த உதவியாளர், அடுத்த இரண்டு நிமிடத்துக்குள் டேடூடே இன்ஷூரன்ஸ் கம்பெனியின் லேண்ட் லைன் டெலிபோன் எண்களோடு வந்தார்.
''ஸார்! அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி 'க்ரீன்வேஸ்’ ரோட்ல இருக்கு. சென்னையில் வேற எங்கும் கிளைகள் கிடையாது. லேண்ட்லைன் நம்பர் மொத்தம் அஞ்சு இருக்கு!''
''அந்த நம்பர்களுக்கு போன் பண்ணி ப்ரணவ்வை பிடிங்க... உடனே கமிஷனர் ஆபீஸுக்குப் புறப்பட்டு வரச் சொல்லுங்க.''
தலையசைத்த உதவியாளர் அங்கிருந்த படியே டேடூடே இன்ஷூரன்ஸ் கம் பெனியைத் தொடர்பு கொண்டார். கம்பெனி யின் பி.ஆர்.ஓ. செக்ஷனிலிருந்து ஒரு பெண் பேசினாள்.
''திஸ் ஈஸ் டேடூடே இன்ஷூரன்ஸ் கம்பெனி.''
''கமிஷனர் ஆபீஸிலிருந்து பேசறோம்...''
''யெஸ்..!''
''வீ நீட் ஒன் இன்ஃபர்மேஷன்...''
''ப்ளீஸ்...''
''உங்க கம்பெனியில் ஃபீல்ட் ஆபீஸரா வொர்க் பண்ற ப்ரண்வ்கிட்டே கொஞ்சம் பேசணும்...''
''ப்ரணவ்..?''
''யெஸ்...''
''அந்தப் பேர்ல இங்கே யாரும் வேலை பார்க்கலையே!''
''ஃபீல்ட் ஆபீஸர்?''
''ஃபீல்ட் ஆபீஸர் என்கிற டெஸிக்னேஷனே இந்த கம்பெனியில் இல்லாதபோது ப்ரணவ் மட்டும் எப்படியிருப்பார்? ஸார்... வீ ஆர் ஹெல்ப்லஸ்!''
பெங்களூர்
ரிதன்யா அசையாமல் அப்படியே நின்றாள். திவாகரின் கையில் இருந்த பிஸ்டல் ஏதோ ஒரு பரம வைரியைப் போல் அவளையே பார்க்க... பூங்கொடி கதவைச் சாத்தி தாழிட்டுவிட்டு ரிதன்யாவை நெருங்கி, அவள் தோள் மீது கையை வைத்தாள்.
"அப்படி சோபாவில் போய் உட்கார்...''
''இப்ப... உங்க ரெண்டு பேருக்கும் என்ன வேணும்?''
''சொல்றோம்... நாங்க இந்த வீட்டுக்குள்ளே வந்தது வெறும் டீ சாப்பிட்டுப் போறதுக்காக மட்டுமில்லை. ஒரு வாரம் பத்து நாள் தங்கி டீடெய்லா சில விஷயங்களைப் பத்தி பேசிட்டு போகவும்தான் வந்திருக்கோம். மொதல்ல அப்படி போய் உட்கார்!''
ரிதன்யா வியர்த்து வழிந்துகொண்டு தயக்கமாக நடந்து போய் சோபாவின் நுனியில் உட்கார்ந்தாள். திவாகரும் பூங்கொடியும் அவளுக்கு எதிரேயிருந்த சோபாவில் சாய்ந்தார்கள். பிஸ்டல் மட்டுமே கருமமே கண்ணாய் குறி பார்த்தது. சில விநாடி மௌனத்துக்குப் பிறகு திவாகர் நிதானமான குரலில் பேசினான்.
''இதோ பார்..! இந்நேரம் உன்னோட போலீஸ் மூளை விதவிதமாய் யோசனை பண்ணி எங்களை எப்படி சமாளிக்கலாம்னு திட்டம் போட்டு கொடுத்துட்டு இருக்கும். அது மாதிரியான முட்டாள்தனத்தையெல்லாம் பண்ணிடாதே! அப்புறம் துபாயில் ஒரு ஹைடெக் அதிகாரியா வேலை பார்க்கிற உன்னோட கணவரும், ஊட்டி கான்வென்ட்டில் படிக்கிற உன்னோட ஒன்பது வயசு பையனும் இந்த ஹால் சுவர்ல போட்டோக்களா மாறி ஊதுவத்தி வாசனையோடு மாலைகளைப் போட்டுக்கிட்டு...''
ரிதன்யா பயத்திலிருந்து விடுபட்டு துணிச்சலாக குரல் கொடுத்தாள்.
''திவாகர்! எதுக்காக இந்த அராஜகம்?''
''இன்னும் முன்னுரையே முடியலை... அதுக்குள்ளே இப்படி 'முணுக்’குன்னு கோபம் வந்தா எப்படி? நாங்க யாரு... எங்க பலம் என்னான்னு தெரிஞ்சாத்தானே உன்னால எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பூங்கொடி... உன்னோட செல்போனை ஆன் பண்ணி, இப்ப துபாயில் மேடத்தோட ஹஸ்பண்ட் ஹரிகிருஷ்ணன் என்ன பண்ணிட்டிருக்கார்னு காட்டு.''
ரிதன்யா மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருக் கும் போதே பூங்கொடி தன்னிடம் இருந்த உயர்ந்த ஜாதி செல்போனின் உடம்பைத் தேய்த்துவிட்டு காதுக்கு கொடுத்து பேசினாள்.
''உமர்! இப்ப எங்கே இருக்கே..?''
''கலீதா மாலில் இருக்கிற 'செகண்ட் பாரடைஸ்’ ரெஸ்டாரன்ட்ல.''
''ஹரிகிருஷ்ணன்?''
''ரெண்டு டேபிள் தள்ளி சிக்கன் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டுக்கிட்டு இருக்கார்.''
''அவரை 'வாட்ஸ் ஆப்’ பண்ணி எனக்கு அனுப்பு'' பேசிவிட்டு செல்போனை அணைத்தாள் பூங்கொடி. ரிதன்யாவிடம் திரும்பினாள்.
''இந்த நிமிஷம் உன்னோட புருஷன் தன்னோட 'லஞ்ச் ஃபுட்’ சிக்கன் ஃப்ரைடு ரைஸை சாப்பிட்டுகிட்டு இருக்கார். ராத்திரிக்கு அவர் டின்னர் சாப்பிட உயிரோட இருப்பாரா இல்லையாங்கிறது நீ இங்கே எங்ககிட்டே நடந்துக்கிற விதத்துலதான் இருக்கு...'' பூங்கொடி சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய செல்போனில் அந்த 'வாட்ஸ் ஆப்’ படம் வந்தது.
ரிதன்யாவிடம் காட்டினாள்.
''இதோ... உன் புருஷன்! சிக்கன் லெக் பீஸை என்னமா கடிச்சு இழுக்கறாரு பாரு...''
ரிதன்யா பார்த்துவிட்டு கலக்கமாய்க் கேட்டாள். ''இப்ப உங்களுக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?''
''பொறு ரிதன்யா..! இப்படி அவசரப் பட்டா... எப்படி? எங்களோட பலம் என்னாங்கிறதை நீ முழுசா புரிஞ்சுக்க வேண்டாமா..? இந்த நிமிஷம் உன்னோட பையன் ஊட்டி கான்வென்ட்ல என்ன பண்ணிட்டிருக்கான்னு 'வாட்ஸ் ஆப்’ எடுத்து அனுப்ப சொல்லட்டுமா..?''
''வேண்டாம்... நான் இப்போ எது மாதிரியான நிலைமையில் இருக்கேன்னு எனக்கு நல்லாவே புரியுது!''
''ஸோ... இந்த நிமிஷத்திலிருந்து நீ போலீஸ்காரி கிடையாது. ஒரு சாதாரணப் பெண். நாங்க எந்த நோக்கத்துக்காக இங்கே வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறுகிற வரைக்கும் எங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கணும். நாங்க இங்கே இருக்கிறதை நீ வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த எந்த வகையில் முயற்சி பண்ணினாலும் சரி, துபாய்ல வேலை பார்க்கிற உன் புருஷனும், ஊட்டியில் படிச்சிட்டிருக்கிற உன்னோட பையனும்...''
முகம் சிவந்து ஆவேசமான ரிதன்யா தன்னுடைய இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு கத்தினாள்.
''புரியுது... புரியுது... புரியுது! உங்க டிமாண்ட் என்ன சொல்லுவாங்க..!''
''நள்ளிரவு வானவில்!'' என்றான் திவாகர்
ராஜேஷ்குமார் , ஓவியங்கள்: அரஸ்
தொடரும்